ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

புதியதோர் உலகம் செய்வோம்!

புதியதோர் உலகம் செய்வோம்!


இளைஞர் சக்தி
வள்ளுவன் வழியில்...
புதியதோர் உலகம் செய்வோம்!
புதியதோர் உலகம் செய்வோம்!
புதியதோர் உலகம் செய்வோம்!
புதியதோர் உலகம் செய்வோம்!

ரசன் ஒருவனுக்கு, அமுதத்தைப் பருகவேண்டும் என்று நீண்ட காலமாக ஆசை! அமுதத்தை உண்டால், பல காலம் வாழலாம்; மரணமே நேராது என்றெல்லாம் அவன் எண்ணிக்கொண்டிருந்தான்.

ஒருநாள்... படைகளுடன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். அப்போது வழிதவறியதால், படைகளைப் பிரிய நேரிட்டது. காட்டில் தனித்துவிடப்பட்டவன், இரண்டு நாட்கள் கடும்பசியிலும் தாகத்திலும் வாடினான். இனி ஓரடிகூட எடுத்துவைக்க முடியாது எனும் நிலையில், அப்படியே மயங்கிச் சரிந்தான். இதைக் கவனித்த, அருகில் இருந்த குடிசைவாசி ஒருவர் ஓடோடி வந்து, அரசனின் முகத்தில் தண்ணீர் தெளித்தார்; கண்விழித்த அரசனுக்கு குவளை நிறையத் தண்ணீர் கொடுத்தார். அதேநேரம், அரசனின் படைகளும் வந்து சேர்ந்தன. மயக்கத்திலிருந்து மீள உதவி செய்தவருக்கு நன்றி கூறிவிட்டு, அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

மறுநாள், காட்டில் தனக்கு உதவியவரை அரசவைக்கு அழைத்துவரப் பணித்தான் மன்னன். அதன்படி, அவர் அழைத்துவரப்பட்டதும், ''இவர்தான் எனக்கு அமுதம் அளித்தவர்'' என்று அவையினருக்கு அறிமுகப்படுத்தினான் அரசன். அவருக்கு நிறைய சன்மானமும் அளித்து கௌரவித்தான். உடனே அவர், ''மன்னா, தங்களுக்கு வெறும் தண்ணீரைத்தானே தந்தேன்... அமுதம் என்கிறீர்களே..!'' என்று கேட்டார்.

மன்னன் சிரித்துக்கொண்டே, ''அந்த ஒரு குவளை தண்ணீர்தானே என் உயிரைக் காப்பாற்றியது! எனவே, அது அமுதம்தான்!'' என்றான்.

உலக வாழ்க்கைக்கு முதல் காரணம் இறைவன்; துணைக் காரணம் மழை. மழையால்தான் உலகில் உயிர்கள் நிலைபெற்று வாழ்கின்றன. அந்த மழை நீரை, மரணத்தைத் தடுக்கும் மருந்தாகிய அமுதம் என உணரவேண்டும்.

'வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று'
என்கிறார் திருவள்ளுவர்.

அன்றாட வழிபாட்டில், அமிர்தம் என நீரைத்தான் இறைவனுக்குப் படைக்கிறோம்.

மழையின் சிறப்பு அளவிடற்கரியது. மழையானது, உண்பவர்களுக்கு நன்மையைத் தரக்கூடிய உணவை உற்பத்தி செய்து, தானும் உணவுப் பொருளாகிறது. தண்ணீர் இல்லை யெனில், உணவுப்பொருளை உற்பத்தி செய்ய முடியாது; சமைக்கவும் இயலாது. உணவை ஜீரணிப்பதற்கும் தண்ணீர் தேவை!

மழை, கடவுளின் வெளிப்பாடு. இறைவனை உண்மையாக நேசிப்பவர் கள், இயற்கையைப் போற்றி வணங்குவார் கள். இறைவனது திருவுடலாக இந்த உலகைக் கருதும் நாம், மண்ணையும் செடி- கொடிகளையும் மதிக்கிறோம்; பூமியை நேசிக்கிறோம்; மழையை வரவேற்கிறோம். அனைத்துத் தெய்வங் களும் தண்ணீரில் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது வேதம். வேதம், மழையை துதிக்கிறது. மழை நீரில் ஓடக்கூடாது, நீர் நிலைகளில் அசுத்தம் செய்யக்கூடாது என்றெல்லாம் அறிவுறுத்துகிறது.

முன்பெல்லாம், புனிதத் தீர்த்தங்களிலும் குளங்களிலும் தாமரையும் அல்லியும் பூத்துக்குலுங்கும். இப்போதோ... மனிதனின் அலட்சியப் போக்கால் பிளாஸ்டிக் குப்பைகளே மிதக்கின்றன.

''உயிர்கள், உணவில் இருந்து தோன்றுகின்றன. உணவு, மழையில் இருந்து தோன்றுகிறது. மழை, முறையான வாழ்க்கை முறையில் இருந்து தோன்றுகிறது. முறையான வாழ்க்கைமுறை, வேதத்தில் இருந்து தோன்றியது. வேதம், பரம்பொருளிடம் இருந்து தோன்றியது...'' என ஓர் அழகிய சுழற்சியின் மூலம், நமது வாழ்க்கைக்கும் மழைக்குமான தொடர்பை, பகவத்கீதையில் விளக்குகிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

மனம் போன போக்கில் வாழ்ந்தால், மழை சரியாகப் பெய்யாது. மழை சரியாகப் பெய்யவில்லையெனில், ஊருக்கே உணவு கிடைக்காது. மழைக்கும் நமது வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை, ஆழ்ந்து சிந்தித்துப் புரிந்து கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

மழை என்பது இறைவனின் பரிசு; மாபெரும் கொடை! சரியான நேரத்தில், சரியான அளவு மழை பெய்ய வேண்டும் எனில், நாம் சரியான செயல்களை முறையாகச் செய்யவேண்டும்.

'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை' என்று

நல்வினைக்கும் மழைக்குமான தொடர்பை எடுத்துக் கூறுகிறது மூதுரை.

நமது வாழ்வின் வழிபாடு, ஒழுக்கம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது மழை. மழையைப் போற்ற வேண்டுமெனில், ஆண்டவனைச் சார்ந்திருந்து, அறத்தைப் பின்பற்ற வேண்டும்.

புதியதோர் உலகம் செய்வோம்!

வாழ்க்கையில், இறைவனின் ஆணையால் நாம் பெறக்கூடிய உறுதிப் பொருட்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை அடைவதற்கு மழையே துணைபுரிகிறது. உலகைக் கடல் நீர் சூழ்ந்துள்ளது. இருப்பினும், மழையின் ஒரு துளி, பூமியை ஸ்பரிசிக்காவிட்டால், ஒரு புல்கூட முளைக்காது; உயிர்களைப் பசி வாட்டியெடுத்து விடும். மழை இல்லையெனில், உழவர் ஏர் கொண்டு உழவுத் தொழிலை மேற்கொள்ளமாட்டார். வருங்கால சந்ததியினர், மழையையும் உழவுத் தொழிலையும் வீடியோவில்தான் பார்க்க முடியும்!

நம்மில் பலர், தமக்குப் பயன்படாத எதுவும் வீண் என நினைக்கின்றனர். கடலில் பெய்யும் மழை வீணல்ல; மழையில்லையேல் கடலிலும் நீரின் அளவு குன்றிவிடும்; கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் முக்கியமானது மழை. மழை பெய்யவில்லை எனில், கோயில்களில் வழிபாடுகளும் நிகழாது; திருவிழாக்களும் இருக்காது. வாழ்வின் ஜீவாதாரமான மழை இல்லையெனில், இல்லறத்தான் தனக்கு உரிய கடமைகளை முறையே நிறைவேற்ற முடியாது. துறவிகளால் தவம் செய்யவும் முடியாது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

நீர் இல்லாமல் உலகில் உயிர் வாழ்க்கை நடைபெறாது. மக்களிடம் ஒழுக்கம் இல்லையென்றால், வான்மழை பெய்யாது என்கிறார் திருவள்ளுவர். இயற்கைச் செல்வங்களுள் முதன்மையான தண்ணீரை வீணாக்காமலும் மாசுபடுத்தாமலும் இருக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை.

'தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் என்ன? காசு கொடுத்து பாட்டிலில் வாங்கிக் குடிக்கலாம்' என நினைக்கிறோம். ஆனால், தண்ணீர் பாட்டில்கள்தான் மழை வராமல் இருப்பதற்கும் தடுப்பதற்கும் மறைமுகக் காரணம் என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்?!

வறண்டு கிடக்கிற நதியையும் ஏரியையும் கண்டு, நாவறட்சியில் இறந்து போகும் விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. பசுமையான மரங்களை வெட்டி, கான்கிரீட் காடுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மரங்கள் இல்லாமல், பருவ மழையே பொய்த்துப் போகிறது. பனிச்சிகரங்கள் வேகவேகமாக உருகத் துவங்கியுள்ளன. பூமிப்பந்தின் வெப்பம், அதிகரித்தபடியே இருக்கிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அரிய பொருளாக தண்ணீர் ஆகிவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர். ஒரு துளி நீரின் அருமையைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கும் நம் தேசத்தில்... ஒரு குடம் நீருக்காகப் பல மைல் தூரம் நடப்பவர்கள் குறித்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீரின்றி நமது வாழ்க்கை இல்லை; இந்த உலகமே இல்லை எனும் விழிப்பு உணர்வு ஒவ்வொரு நாளும் நமக்குள் இருப்பது அவசியம்!

உலகின் மீதும், வருங்காலத் தலைமுறையின் மீதும் நமக்கு உண்மையான அக்கறை இருக்கு மானால், நீரையும் இயற்கைச் செல்வங்களையும் போற்றிப் பாதுகாப்போம்; விழிப்பு உணர்வுடன் அறநெறியைப் பின்பற்றி வாழ்வோம். நீர் நிறைந்த புதியதோர் உலகம் படைப்போம்!

- தொடரும்...
படம் எஸ். கிருஷ்ணமூர்த்தி