காசி ராஜாவின் மூன்று புதல்விகளுக்கும் சுயம்வர வைபவம் விமரிசையாக நடந்தது. இதில் கலந்துகொண்ட பீஷ்மர், தன்னுடைய வீரத்தால் மூவரையும் கவர்ந்து, நாடு திரும்பினார்; மூவரையும் சத்தியவதியிடம் ஒப்படைத்தார். இவளின் மகனான விசித்திரவீர்யனுக்கு மணம் செய்து கொடுப்பது என்பது பீஷ்மரின் திட்டம். அதன்படியே செயல்பட ஆயத்தமானாள் சத்தியவதி.
மூன்று பெண்களில் மூத்தவள் பெயர் அம்பா. அவள் பீஷ்மரிடம் சென்று, தான் ஸால்வ அரசனைக் காதலிக்கும் விவரத்தைச் சொன்னாள். உடனே பீஷ்மர், அவளது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், நம்பிக்கையான அந்தணன் ஒருவனின் துணையுடன், அவளை ஸால்வ மன்னனிடம் அனுப்பிவைத்தார் பீஷ்மர். ஆனால், அம்பாவை ஏற்க மறுத்தான் ஸால்வன்.
'சுயம்வரத்தில், தனது வீரத்தைப் பணயமாக்கி அவளைத் தனதாக்கிக்கொண்டார் பீஷ்மர். ஆக, பிறருக்குச் சொந்தமானவளை ஏற்பது அதர்மம். காதலை எண்ணி, அறத்தை அலட்சியப்படுத்துதல் கூடாது' என்பது ஸால்வ மன்னனின் எண்ணம். அதேநேரம், அவளை பீஷ்மரும் ஏற்க முடியாது. ஏனெனில், திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என சத்தியவதிக்கு சத்தியம் செய்து தந்திருக்கிறாரே?!
ஒருவரை மனதார விரும்பிய நிலையில், மற்றொருவரை மணப்பதை தர்மசாஸ்திரம் ஏற்கவில்லை. விருப்பம் ஓரிடம், திருமணம் வேறொரு இடம் என்பதை ஜோதிடமும் குறையாகப் பார்க்கிறது; 'புனர்பூ' என அவளை இரண்டாவது முறை, மறுமணம் செய்ததாகச் சித்திரிக்கிறது.
அறத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பீஷ்மர், ஸால்வன் இருவராலும் அலைக்கழிக்கப்பட்ட அம்பா, காட்டில் தவம் இருக்கும் முனிவர்களைச் சரணடைந்தாள். அம்பாவின் அவல நிலையைக் கேட்ட முனிவர்கள், அவளுக்கு உதவும்பொருட்டு, அவளைப் பரசுராமரிடம் அனுப்பி வைத்தனர்.
நடந்தவற்றைக் கேட்ட பரசுராமர், ''உனக்குத் தீங்கு இழைத்தது பீஷ்மரா, ஸால்வனா?'' என்று கேட்டார். உடனே அவள், ''பீஷ்மர் என்னைக் கவர்ந்து செல்லாமல் இருந்தால், ஸால்வனுடன் இணைந்திருப்பேன். திருமணம் செய்துகொள்ள எண்ணாதவர், சுயம்வரத்தில் கலந்துகொண்டதே தவறு. தனக்குச் சொந்தமானவளை, பிறருக்கு விட்டுக்கொடுப்பது அபசாரம்; காப்பாற்ற வேண்டியவளை பொறுப்பின்றி அலைக்கழிப்பது கேவலம். ஆகவே, தெரிந்தே தவறு செய்த பீஷ்மருக்குத் தகுந்த தண்டனை தரவேண்டும்'' என்றாள்.
அதையடுத்து பீஷ்மருடன் போர் புரிய, பரசுராமர் முடிவு செய்தார். போரும் நிகழ்ந்தது. வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வந்தன. ஆனால், போர் நின்றபாடில்லை. அப்போது, நாரதர் முதலான முனிவர்களும், கங்கை மற்றும் தேவதைகளும் தோன்றி, ''உடனே போரை நிறுத்துங்கள்'' என வேண்டினர். ''பயனற்ற போர் இது. இதில் வெற்றி, தோல்வி இரண்டுமே இருக்காது. முடிவற்ற ஒன்றில் முனைந்து செயல்படுவது அழகல்ல!'' என வலியுறுத்தினர். அதை உணர்ந்த இரண்டு பேரும், போரைக் கைவிட்டனர். தனது இயலாமையை ஒப்புக்கொண்டு, அம்பாவிடம் மன்னிப்புக் கேட்டார் பரசுராமர்.
அதையடுத்து, பீஷ்மரை வெல்வதற்கான திறனைப் பெற, கடும் தவம் இருந்தாள் அம்பா. அவளது தவத்தில் மகிழ்ந்த பரமேஸ்வரன், ''துருபத அரசனின் மகளாகப் பிறப்பாய். தருணம் வரும்போது, போர்க்களத்தில் பீஷ்மரைச் சந்திப்பாய். அப்போது ஆண்மையுடன் திகழும் உனது தோற்றத்தால், பீஷ்மரை வெல்வாய்!'' என வரம் அளித்தார். அதில் மகிழ்ச்சியுற்ற அம்பா, மறுபிறவிக்காகத் தன்னை மாய்த்துக் கொண்டாள். அதன்படி, துருபதனின் மகளாகப் பிறந்து, பின்னாளில் ஆணாக மாறியவள்தான் அம்பா. இப்போது இவளின் பெயர் சிகண்டி!
பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டிக்குப் போர்க்களம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. பெண்ணுடன் போர் புரியமாட்டார் பீஷ்மர். சிகண்டி இப்போது ஆணாக இருந்தாலும், பெண்ணாகப் பிறந்தவள்தானே! எனவே, சிகண்டியுடனும் யுத்தம் செய்ய மாட்டார் அவர். அதையறிந்த அர்ஜுனன், யுத்தத்தில் சிகண்டியை முன்னிறுத்தி, எவராலும் வீழ்த்த முடியாத பீஷ்மரை, அவர் நிராயுதபாணியாக இருந்த வேளையில் வீழ்த்தினான்.
மகாபாரத யுத்தத்தில், சிகண்டியின் பங்கு முக்கியமானது. பரசுராமரிடம் தோல்வியுறாத பீஷ்மரை, சிகண்டி வென்றான். இவனது வரவு, பாண்டவர்களுக்கு வெற்றியைத் தந்தது. போரில் சிகண்டி பங்கேற்கவில்லையெனில், போரின் முடிவு வேறுவிதமாக மாறியிருக்குமோ என்னவோ?!
சுயம்வரத்தில், வீரம் காட்டி வென்ற பீஷ்மரும், காதலுக்கு முன்னுரிமை அளிக்காத ஸால்வனும் அம்பாவைக் கலங்கடித்தனர். உதவிக்கரம் நீட்ட எவரும் முன்வரவில்லை. முனிவர் கூட்டமும், பரசுராமரைச் சுட்டிக்காட்டிவிட்டு ஒதுங்கியது. பரசுராமர் போரில் இறங்கினாலும், தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுப் பின்வாங்கினார். இத்தனைச் சங்கடங்களால், மனச்சிதைவுக்கு ஆளானாள் அம்பா.
|