வாரத்தில் ஒரு நாளேனும், ஏதேனும் ஒரு வகையில் மோசடி குறித்த செய்திகள் வருகின்றன. எத்தனை முறை ஏமாந்தாலும், மீண்டும் மீண்டும் ஏமாந்துதான் தீருவோம் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு வாழ்பவர்களும் இருக்கின்றனர்.
எல்லா ஏமாற்றத்தின் அடிநாதமாகவும் ஒளிந்திருப்பது என்ன? பேராசை! 'எப்படியேனும் பணம் சம்பாதித்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் சுகமாக இருக்கலாம்' என்று, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிச் சம்பாதித்ததை எல்லாம் எவரையோ நம்பிக் கொண்டுபோய்க் கொட்டிவிட்டு, மொத்தமாக இழந்து நிற்பவர்கள் பலர்.
சிறுவயது முதல், பழமொழிகள் பலவும் நமக்குச் சொல்லித் தரப்படுகின்றன. அவற்றில் மகிழ்ச்சிக்கான உபாயங்கள் ஒளிந்தி ருக்கின்றன. எது உண்மையான மகிழ்ச்சி என்பதை அறிய, எளிய வழி உண்டு. அந்த நேரத்தில் மட்டுமே மகிழ்ச்சி யைத் தந்துவிட்டுப் பிறகு உபத்திரவம் தரும் எதுவும் உண்மையான மகிழ்ச்சியே இல்லை; இன்னும் 20 வருடங்கள் கழிந்தாலும் நினைத்து இன்புறத்தக்க நிகழ்வு எதுவோ... அதுவே பேரானந்தம்! சில செயல்களைச் செய்யும் அந்தத் தருணத்தில், அவை சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். பின்னர், அவற்றை நினைவுகூரும் போது, நீங்காத வலியையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்தும்.
பேராசையால் ஏமாறுகிறவர்கள் குறித்து எனக்கு எந்த வருத்தமோ, பரிதாபமோ இல்லை. ஒருவேளை... பணம் அவர்கள் கைக்கு வந்திருந்தால், ஏமாற்றுபவர்களாக அவர்களே இருந்திருப் பார்கள். இது, இரண்டு பேராசைக்காரர்களுக்கு இடையேயான கயிறு இழுக்கும் போட்டி... அவ்வளவுதான்! அதே நேரம், புதுப்புது வகைகளில் மக்களைச் சிக்க வைக்கும் மாய வலைகளைக் கண்டுபிடிக்கும் மனிதர்களை நினைத்தால்... 'இவர்கள் ஏன் தங்களின் சாமர்த்தியத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தக் கூடாது?!' எனத் தோன்றும். 'மாட்டிக்கொள்வோம்' என்பது தெரிந்தும் துணிச்சலாக இறங்கும் இவர்கள், மசால் வடைக்கு ஆசைப்பட்டு எலிப்பொறிக்குள் எட்டிப் பார்க்கும் சுண்டெலிகளைப் போன்றவர்கள்!
நாம் சம்பாதிக்கும் பணம், வியர்வையால் அழுக்குப்படும்போது தான் அதற்கான மதிப்பு உதயமாகிறது. அது ஒருபோதும் குற்ற உணர்வால் நம்மைக் குன்றவைக்காது. அதனைச் செலவு செய்யும்போது, விழிப்பு உணர்வு கூடுகிறது. தேவையற்றதைத் தவிர்க்கவும், அவசியமானவற்றை நுகரவும் மனமானது கண் காணிப்பாளராக மாறுகிறது.
உலகில் எல்லாரும் எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். சிற்சில தடங்கல்கள் நேரலாம். ஆனால், அது சளியைப்போல நீங்கிவிடுமே தவிர, சனியைப்போல முடக்காது! தற்காலிக மகிழ்ச்சிக்காகத் தனது வாழ்நாளையே காவு கொடுப்பவர்களுக்காக நம் கண்களின் விளிம்பில் அரும்பும் நீரும் ஆவியாகிவிடும்.
ஏமாற்ற நினைப்பவர்களே ஏமாந்து போகின் றனர் என்பதற்குச் சிறிய சம்பவம் ஒன்று...
|