வியாச முனிவரின் மகன் சுக முனிவர். அவரை எல்லோரும் 'சுக பிரம்ம மகரிஷி' என்றே அழைப்பர்.
ஒருநாள் தன் தந்தையிடம், ''பிரும்ம ஞானம் பெற எனக்கு வழி சொல்லுங்கள்'' எனக் கேட்டார் சுக முனிவர்.
''மிதிலைக்குச் செல். அரசர் ஜனகரே உனக்குப் பிரம்ம ஞானம் வழங்கத் தகுதி உடையவர்'' என்றார் வியாசர்.
அதன்படி மிதிலை அரண்மனையை அடைந்தார் சுக முனிவர். காவலர்களிடம், ''உங்கள் அரசரிடம் போய் சுக பிரம்ம மகரிஷி வந்திருக்கிறார் என்று சொல்லுங்கள்'' என்றார்.
காவலாளிகளும் ஜனகரிடம் சென்று, சுக பிரம்ம மகரிஷி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். அதற்கு ஜனகர், ''அவருடன் வந்திருக்கும் மற்ற இருவரை விட்டுவிட்டு, அவரை மட்டும் தனியாக வரச் சொல்லுங்கள்'' என்றார்.
''அரசே! அவர் தனியாகத்தான் வந்திருக்கிறார்'' என்றார்கள் காவலாளிகள்.
ஜனகர், ''நான் சொன்னதை மட்டும் அவரிடம் சொல்லுங்கள்!'' என்றார் கண்டிப்புடன்.
சுக முனிவரிடம் வந்த காவலர்கள், அரசர் கூறியதை அப்படியே அவரிடம் தெரிவித்தனர்.
அதைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார் சுக முனிவர். பின்னர், காவலாளிகளுடன் சென்று அரசரைச் சந்தித்து, ''நான் சுக பிரம்மம் வந்திருக்கிறேன்'' என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இப்போது ஜனகர் என்ன சொன்னார் தெரியுமா? ''உங்களைத் தனியாகத்தானே வரச் சொன்னேன்..! இப்போதும் துணைக்கு ஒருவரை வைத்துக்கொண்டிருக்கிறீரே?'' என்று கேட்டாராம்.
சுகருக்கு இப்போதுதான் தனது தவறு புரிந்தது. அவர் சொன்னார்... ''மன்னிக்கவும். நான் சுகன் வந்திருக்கிறேன்!''
ஆம்... பிரம்ம ஞானத்தை அடைய விரும்புபவர்களுக்கு, அகங்காரம் அறவே கூடாது!
- சு. கண்ணகி, மிட்டூர்
விவேகானந்தரை சோதித்த பரமஹம்சர்!
|