தொடர்கள்
Published:Updated:

மேலே... உயரே... உச்சியிலே..! - 2

பூனைக்கு எவ்வாறு மணி கட்டுவது?வெ.இறையன்பு, ஓவியங்கள்: அனந்த பத்மநாபன்

மேலே... உயரே... உச்சியிலே..! - 2
##~##

டினமான பிரச்னைகளுக்கு எளிதான விடைகளை அளிப்பது சகஜம். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது இயலாத காரியம் என்பதை வலியுறுத்துவதற்கு நம்மிடம் பல கதைகள் உண்டு. திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கு, வழியிலே செல்பவர்கள் ஆயிரம் விதமான யோசனைகளைக் கூறுவது வழக்கம். எதையும் விமர்சிப்பது சுலபம். நடைமுறைப்படுத்துவது எளிதல்ல.

இன்று நாட்டின் பல பிரச்னைகளுக்கு யார் யாரோ யோசனை சொல்கிறார்கள். அவர்கள் வீட்டிலிருக்கும் சின்னப் பிரச்னையைத் தீர்க்க முடியாமல்தான் அவர்கள் திண்டாடுகிறார்கள். அவர்களது சட்டை பிரிந்திருப்பது தெரியாமல், பாராளுமன்றக் கட்டடத்தின் ஓட்டைகளைப் பற்றியும், அதில் ஒட்டடை படிந்திருப்பதைப் பற்றியும் மணிக்கணக்கில் விவாதிக்கிறார்கள்.

இதுகுறித்த பழங்கதை ஒன்று உண்டு...

ஒரு வீட்டில் இருந்த எலிகள், அடிக்கடி பூனைத் தொந்தரவால் புண்பட்டன. தலைதப்பத் தாவி ஓடுவதிலேயே அவற்றின் இதயத் துடிப்பு எகிறியது. ஒருநாளும் நிம்மதியாக தானியங்களைத் தின்னவும் முடியவில்லை, பத்திரமாகக் கொண்டு சென்று பதுக்க வும் முடியவில்லை. 'இப்படியே போனால் என்ன செய்வது?’ என்று நடுங்கி, இதுகுறித்து அவை வட்டமேசை மாநாடு கூட்டின!

எந்த வட்டமேசை மாநாடும் உருப்படியான தீர்வில் முடிந்ததாகச் சரித்திரம் இல்லை. எலிகள் மாநாட்டில் ஓர் எலி, 'இந்தப் பூனை திடீரென்று ஓடிவந்துவிடுகிறது. அதன் மென்மையான பாதங்களால், வருகிற சத்தமும் நமக்குக் கேட்கவில்லை. எனவே, அது தொலைவிலே வரும்போதே அறிய முடிந்தால் நாம் தப்பித்து ஓடிவிடலாம்' என்று ஆலோசனை சொன்னது.

மேலே... உயரே... உச்சியிலே..! - 2

உடனே, மற்ற எலிகளெல்லாம் அந்த யோசனை சரி என்று ஆமோதித்து, பூனை தூரத்தில் வருவதை எப்படிக் கண்டு கொள்வது என்று விவாதிக்கத் தொடங்கின.

ஓர் எலி, 'பூனையின் கழுத்தில் மணி இருந்தால் அது ஒலிக்கும். எனவே, பூனை தொலைவில் வரும்போதே கண்டுபிடிக்கலாம்' என்று தீர்வைச் சொன்னது. எல்லா எலிகளும் ''ஆகா! அருமையான யோசனை!' என்று அந்த எலியைப் பாராட்டின. ஆனால், பூனையின் கழுத்தில் யார் போய் தைரியமாக மணி கட்டுவது என்பதுதான் பிரச்னையாகி விட்டது. அதனால் இன்னமும் எலிகள் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றன என்று அந்தக் கதை கூறுகிறது. உண்மையிலேயே பூனையின் கழுத்தில் மணியே கட்ட முடியாதா?. இதற்குத் தீர்வே இல்லையா என்று யோசிப்போம்.

ஒரு மாணவன் சிந்தித்தான். 'பூனையின் கழுத்தில் மணி கட்ட முடியாது என்பதை எலிகள் உணர்ந்துகொண்டன. ஆனால், பூனை குட்டி போட்டிருக்கிறது. அந்தக் குட்டி இன்னும் கண் விழிக்கவில்லை. அதன் கழுத்தில் மணியைக் கட்டலாம் என்று எலிகள் முடிவு செய்தன. அதன்படியே, தாய்ப் பூனை வேட்டையாடச் சென்றிருக்கும் போது, எலிகள் ஒன்றுசேர்ந்து கண் விழிக்காத குட்டியின் கழுத்தில், சிறியதொரு மணியைக் கட்டின. இப்போது, பூனை குட்டியோடு வரும்போது மணிச் சத்தம் கேட்டு தப்பி ஓடிவிடுகின்றன’ என்று இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொன்னான்.

இன்னொரு இளைஞன் இதுகுறித்துச் சிந்தித்தான். 'பூனையின் கழுத்தில் யார் மணி கட்டுவது என்று எலிகள் விவாதித்தன. பெரிய எலிகள் மணி கட்டுவதை நினைத்தே பயந்து நடுங்கின. அப்போது, ஒரு குட்டி எலி, ''நாளைக்குள் நான் கட்டிவிடுகிறேன்'' என்று சொன்னது. மற்ற எலிகள் அதைப் பார்த்து கை கொட்டிச் சிரித்தன. அடுத்தநாள் பூனை வரும்போது மணியோசை கேட்டது. எலிகள் ஓடி ஒளிந்தன. பூனைக்கு ஏமாற்றம். அதற்குப் பிறகு, பூனையால் அந்த வீட்டில் ஓர் எலியைக்கூட பிடிக்க முடியவில்லை. எல்லா எலிகளும் வியந்தன. யாரால் இந்தச் செயலைச் செய்ய முடிந்தது என்று அவற்றுக்கு ஆச்சரியம். அப்போது குட்டி எலி சொன்னது:

'நான்தான் மணியைக் கட்டினேன்.'

மற்ற எலிகள், ''எப்படிக் கட்ட முடிந்தது?' என்று கேட்டன.

'நான் இரவு நேரத்தில் பக்கத்து மருந்துக்கடையிலிருந்து தூக்க மாத்திரைகளை எடுத்து வந்தேன். பூனை குடிக்கும் பாலில் அவற்றைப் போட்டேன். அது, அயர்ந்து தூங்கும்போது மணியைக் கட்டினேன்' என்று சொன்னது.

எந்தப் பிரச்னைக்கும் தீர்வு உண்டு. இன்று பூனையின் கழுத்தில் மணியைக் கட்டிவிட்டு, எலிகள் சுதந்திரமாக எல்லாவற்றையும் அபகரித்து பதுக்கிக்கொண்டிருப்பதுதான் நாம் அன்றாடம் காμம் காட்சி.

மேலே... உயரே... உச்சியிலே..! - 2

எந்த ஒரு நிறுவனத்திலும், ஒரு புது யோசனையை யாராவது தெரிவித்தால், அது சாத்தியமில்லை என்றே முதலில் சொல்லப்படுகிறது. ஏனென்றால், புதியன செய்வதற்கு நிறைய சிந்திக்க வேண்டும், திட்டங்கள் வகுக்க வேண்டும். மனத்தயாரிப்புகள் தேவை. என்னென்ன மாதிரி இடைஞ்சல்கள் வரும் என்பதை முன்கூட்டியே யோசிக்க வேண்டும். அதற்கு உழைப்பும், பொறுமையும், முயற்சியும் தேவை. புதிய நடைமுறையை அமல்படுத்தினால் சிலநேரங்களில் இழப்புகள் ஏற்படும். அதைத் தாங்கிக்கொள்ளும் துணிச்சல் எல்லோருக்கும் இருப்பதில்லை.

எனவே, பழக்கப்படாத புதிய ஒன்றைச் செயல்படுத்து வதைவிட, வழக்கமான ஒன்றைச் செயல்படுத்தி சராசரியாக வாழ்வதையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். எடுத்த எடுப்பில் 'இது சிரமம்’, 'இது சாத்தியமில்லை’, 'இது வெள்ளை யானை’, 'இது யுடோபியா’ என்று சொல்வதுதான் நாம் சந்திக்கின்ற பதில்கள்.

நம்மைத் தாண்டி யாரும் வித்தியாசமாகச் சிந்திக்க முடி யாது என்பதில் நாம் திடமாக இருக்கிறோம். நல்ல கருத்துகள் கடைநிலை ஊழியரிட மிருந்துகூட வர முடியும் என்பதை அறிந்தவர்கள், யார் யோசனை கூறுகிறார் என்று ஆராயாமல், யோசனை எப்படிப் பட்டது என்பதை மட்டுமே சிந்திக்கிறார்கள்.

எதற்கும் வழியுண்டு என்பதற்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் உண்டு.

பேராசிரியர் நியூக்லிட், தன் பேராசிரிய நண்பர்களுடன் எகிப்து நாட்டிலுள்ள பிரமிடுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் ஒரு நண்பர், 'நியூக்லிட்! எல்லோரும் உங்களை அறிஞர் என்று சொல்கிறார்கள். இந்த பிரமிட் சரியாக எவ்வளவு உயரம் என்று சொல்ல முடியுமா? உங்களிடம்தான் அளவு நாடா உள்ளதே!'' என்றார்.

யாராலும் பிரமிட் மேல் ஏறி உயரத்தைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், அதன் அடிப்பகுதி மிகவும் அகலமாகவும், போகப்போகக் குறுகியும் செல்கிறது. அங்கிருந்து நாடாவை தொங்கவிட்டு அளக்க முடியாது என்பது நியூக்லிட்டுக்குப் புரிந்தது. எல்லோரும் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள்.

உடனே நியூக்லிட், 'நண்பர்களே! இயலாத செயல் என்று எதுவும் இல்லை. எதற்கும் ஒரு சுலபமான வழி உண்டு' என்றார். பிறகு அவர், தன் கையிலிருந்த அளவு நாடாவினால் பிரமிட்டின் நிழலை அளந்தார். அதைக் குறித்துக்கொண்டார். பிறகு, தனது நிழலை அளந்தார். தன் நிழலையும், தன் உயரத்தையும் வைத்துக் கணக்கிட்ட அவர், பிரமிட்டின் உயரத்தைக் கணக்கிட்டுச் சொன்னார்.

நியூக்லிட் சொன்னது பிரமிட்டின் துல்லியமான உயரமாக இருப்பதைக் கண்டு, அவருடன் வந்த பேராசிரியர்கள் யாவரும் வியப்படைந்து, அறிஞர் நியூக்லிட்டை பாராட்டினார்கள்.

எல்லாப் பிரச்னைகளையும் ஒரே மாதிரி அμக முடி யாது. சிலவற்றை பிரித்துப் பார்க்க வேண்டும், சிலவற்றை ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும். எவற்றைப் பிரித்துப் பார்ப்பது, எவற்றை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது என்பதில்தான் ஒருவரின் நிபுணத்துவம் அடங்கியிருக்கிறது.

ஒரு மருத்துவர், உடலை ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும். காலின் வலியை மட்டும் அகற்றுவதற்காக அவர் தருகிற ஆன்ட்டி பயோடிக் மிகச் சக்தி வாய்ந்ததாக இருந்தால், காலின் வலி உடனே சரியாகிவிடும். ஆனால், அது சிறுநீரகத்தை பழுதாக்கிவிடக்கூடும். அதனால்தான் இன்றைய மருத்துவம், அறிகுறிகளை வைத்து மட்டும் நோயைத் தீர்க்க முயற்சி செய்வதில்லை. அடிவேரையே அறிந்து கொள்ள ஆசைப்படுகிறது.

மேலே... உயரே... உச்சியிலே..! - 2

பொறியாளர் ஒருவருடைய பணியே வேறுவிதமானது. அவர் ஒவ்வொரு பொருளிலும் உறுதி இருக்கவேண்டும் என்று விரும்புவார். பலவீனமான செங்கல்லை பலமான சிமென்டால் ஈடுகட்ட அவர் ஒருபோதும் நினைப்பதில்லை. ஒரு நீண்ட பணியை கையிலெடுக்கும்போது, அவர் அதிலிருக்கும் சிறு சிறு பணிகளை, தனித்தன்மை உடையவையாகப் பிரிக்கிறார்.

ஒவ்வொரு சிறு பணிக்கும் எவ்வளவு நாள் ஆகுமென்று முடிவு செய்கிறார். இதில் எந்தப் பணிகள் ஒரே நேரத்தில் செய்யப்படக் கூடியவை... எவற்றை, வேறொரு பணி முடிந்தபிறகுதான் தொடங்க முடியும் என்று வரையறுக்கிறார்.

உதாரணமாக, கூரை வரை கட்டுமானம் ஆனபிறகுதான் முட்டடிக்க முடியும். ஆனால் கட்டுமானம் நடக்கிறபோதே கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றைச் செய்துவிட முடியும். சுற்றுச்சுவர் எழுப்பிவிட முடியும், தோட்டத்தில் மரங்களை நட்டுவிட முடியும். இவ்வாறு அவர் திட்டமிடும்போது, எந்தப் பணிகள் ஒட்டுமொத்த பணியின் காலஅளவை தீர்மானிக்கின்றன என்பதை அறிந்து, அதை முடுக்கிவிடுவதில் முயற்சியையும், மும்முரத்தையும் காட்டுகிறார்.

இப்போது கட்டுமானத்தை விரைவு படுத்துவதற்கு, ஏற்கெனவே முன் வடிவமைக்கப் பட்ட பொருட்களைக் கையாளலாம் என்பது மாறுபட்ட சிந்தனை. இவ்வாறு செய்வதன் மூலம் மொத்த கட்டடத்தையே பத்துப் பதினைந்து நாட்களில் எழுப்பிவிடும் வசதி வந்துவிட்டது.

எனவே, எதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதில், அந்தப் பணியின் தன்மையும், அதில் உள்ள நுμக்கங்களும் முற்றிலுமாக யோசிக்கப்படவேண்டியவை. அப்போதுதான் நமது முயற்சிகள் விரைவில் பலனைத் தரும். சிரமத்தைக் குறைக்கும்.

(இன்னும் மேலே...)