நாளை நமக்காக!திருப்பூர் கிருஷ்ணன்
##~## |
நண்பர் ஒருவர், 'தன் தாய்க்கு ஆண்டுதோறும் திதி கொடுக்கும் போது, அந்தச் சடங்குக்குத் தன் மகன் வருவதில்லை’ என்று அங்கலாய்த்தார். வீட்டிலேயே இருந்தாலும்கூட, மாடியில் அவன் அறையில் அவன் இருப்பானேயன்றி, கீழே சடங்கு நடக்கும் இடத்துக்கு வந்து, அதில் கலந்துகொள்வதில்லையாம்.
'அவன் பாட்டிக்கு அவன் மேல் எத்தனை பாசம்? பேரன் பேரன் என்று அவன்மேல் பேரன்போடு அல்லவா வாழ்ந்தாள்? திவசம் கொடுப்பது அவன்மேல் வற்றாத பாசம் செலுத்திய அந்த முதியவளுக்கல்லவா? அவன் அதில் கலந்துகொள்ள வேண்டாமா? வரவர இளைஞர்களுக்கு இதிலெல்லாம் அக்கறையோ நம்பிக்கையோ இல்லாமல் போய்விட்டதே!’ என்பது அவர் வருத்தம்.
இதுபோன்ற சடங்குகளில் நம்பிக்கையுடன் இருப்பது அல்லது நம்பிக்கை இல்லாமலிருப்பது என்பது அவரவர் விருப்பம்; அவரவர் மனப்போக்கு!
ஆனால், அந்த இளைஞர் தன் தந்தையின் மனத் திருப்திக்காகவாவது அந்த நீத்தார் சடங்கில் கலந்து கொண்டிருக்கலாம். இறந்துபோன பாட்டிக்கு அதனால் என்ன பயன் கிடைக்கிறது என்பதில் வாதப் பிரதிவாதங்கள் இருக்கக்கூடும். ஆனால், அவர் அந்தச் சடங்கில் கலந்து கொள்வதால், கண்ணுக்கு நேரே உயிரோடிருக்கும் தந்தைக்கு அளவற்ற மனநிறைவு ஏற்படுகிறதே? அதை அவருக்கு வழங்குவதில் அந்த இளைஞருக்கு என்ன தயக்கம்?

எத்தனையோ முரண்பாடுகளை நாட்டில் நாம் பார்க்கத்தானே செய்கிறோம்! பல்வேறு காரணங்களுக்காக அதையெல்லாம் சகித்துக்கொள்கிறோமல்லவா? வீட்டில் அத்தகைய முரண்பாடு இருப்பதாக அந்த இளைஞர் கருதினால், அதையும் சகித்துக்கொண்டு இணக்கமாக வாழ்வதில் அவருக்கு என்ன சிக்கல்?
நாத்தழும்பேற நாத்திகம் பேசிய தலைவர்கள் நம்மிடையே இருந்தார்கள். சிலை வழிபாட்டை எதிர்த்த அவர்களுக்கே பல இடங்களில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அத்தகைய தலைவர்களது நினைவு தினங்களில் அந்தச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செய்கிறார்கள். நீத்தார் சடங்கில் இது ஒரு வகை அல்லாமல் வேறென்ன?
நீத்தாரை நினைவுகூர்வது சிறப்பானது என்றால், அதற்குப் பற்பல வழிகள் இருக்கின்றன. நாத்திகத் தலைவரின் சிலைக்கு அவரது நினைவு தினத்தன்று மாலையிட்டு நினைவுகூர்வது ஒரு வழி என்றால், ஆன்மிகச் சடங்கு மூலம் நம் குடும்பத்து முன்னோர்களை நினைவுகூர்வது இன்னொரு வழி. அவ்வளவுதானே?
இறந்தவர்களின் உடல் எரிக்கப்படுகிறது அல்லது புதைக்கப்படுகிறது. அவர்களின் உடல் சாம்பலாகிறது அல்லது மண்ணோடு மண்ணாய் மக்கிவிடுகிறது. ஆனால், அவர்கள் வாழ்ந்தபோது, அவர்களின் மனத்தில் எழுந்த நினைவுகள் என்ன ஆகின்றன?

அவை ஒருபோதும் அழிவதில்லை. நினைவுகளுக்கு அழிவே இல்லை. மனிதன் தன் வாழ்நாளில் கடும் உழைப்பின் மூலம் அடைந்த சூட்சுமமான ஆற்றல் காற்றில்தான் கலந்திருக்கிறது. அது தன்னை வேண்டுவோரைத் தேடிவரக் காத்திருக்கிறது.
கானகத்தில் யாருமற்ற இடத்தில் பல்லாண்டுகள் அமர்ந்து தவம் செய்து, ஓர் அரிய உண்மையைக் கண்டுபிடிக்கிறார் ஒருவர். தான் கண்டுபிடித்த உண்மையை உடனே பகிர்ந்துகொள்ள அங்கு யாரும் இல்லை. தனது தவ முயற்சியால் விளைந்த சோர்வின் காரணமாக யாரையும் சந்திப்பதற்கு முன், அவர் இறந்துபோகிறார்.
என்றால், அவர் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்த அந்த உண்மையும் அவரோடு அழிந்துவிடுமா? அழியாது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அந்த உண்மை காற்றில் அலைந்துகொண்டிருக்கும். அதே துறையில் இன்னொருவர் உழைக்கும்போது, முந்தையவருக்குத் தேவைப்பட்ட கடின உழைப்பும் காலமும் தேவைப்படாமலே, இவருக்கு அந்த உண்மை சட்டென மனத்தில் தோன்றிவிடும்.
கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் யாருக்குப் புகழ் அளிப்பது என்பதற்காகக் காத்திருப்பதில்லை. இன்னாருக்குத்தான் தங்களைக் கண்டுபிடித்ததற்கான புகழ் போய்ச் சேரவேண்டும் என்று அந்த உண்மைகள் கருதுவதுமில்லை. தங்களை விரைவில் யார் மூலமாவது வெளிப்படுத்திக் கொள்ளவே அவை துடிக்கின்றன.
சில இளம் மேதைகளைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். வீணை காயத்ரி, மாண்டலின் ஸ்ரீநிவாஸ் போன்றோர் மிக இளம் வயதிலேயே அபார திறமை காட்டியதையும் பார்க்கிறோம். பலர் வாழ்நாள் முழுதும் உழைத்தும் பெறமுடியாத மாபெரும் ஆற்றலை அவர்கள் இளம்வயதிலேயே வெளிப்படுத்த முடிந்தது எப்படி?
விஞ்ஞானம் இதற்கு விடைதெரியாமல் தவிக்கிறது. மெய்ஞ்ஞானம் இதற்கு விடை சொல்கிறது. 'அவர்கள் பரம்பரையில் முந்தைய தலைமுறைகளில் யாராவது பெரிய சங்கீத கலைஞர் இருந்திருக்கலாம். அவர்களின் ஆற்றல் ஜீனிலேயே இவர்களை வந்து அடைந்திருக்கலாம்!’ என்பது சாதாரணமாகச் சொல்லப்படும் ஒரு விளக்கம்.
அந்த இளம் மேதை, முற்பிறவியில் ஓர் இசைக் கலைஞராக இருந்திருக்கலாம். முன்ஜென்ம வாசனை இந்தப் பிறவியிலும் தொடர்ந்திருக்கலாம் என்பது இன்னொரு விளக்கம்.
எப்படியானாலும் ஒரு மனிதனின் ஆற்றல்கள், அவன் மனத்தில் தோன்றிய பாசம் உள்ளிட்ட உணர்வுகள் ஒருபோதும் அழிவதில்லை என்பதும், அவை காற்றில் கலந்துவிடுகின்றன என்பதும்தான் இந்த விளக்கங்களின் சாரம்.
சிரத்தையோடு ஒருவன் குருவை வழிபடுகிறபோது, ஸித்தி அடைந்த குருவின் அருளாற்றல் அவனில் ஊடுருவுகிறது. அது அவனைக் காக்கிறது. தன் குடும்பத்து முன்னோரை ஒருவன் வழிபடுகிறபோது, காற்றில் கலந்திருக்கும் முன்னோரின் ஆசீர்வாதம், அவனைத் துன்பங்கள் தாக்காமல் கவசமாய்ப் பாதுகாக்கிறது. அவனது வாழ்வை மேம்படுத்துகிறது.

திறமையிலும், புகழிலும், செல்வ வளத்திலும் தன் மகன் மேலோங்க வேண்டும் என்று நினைத்தாள் ஒரு தாய். ஒரு தவம் போல், தான் வாழ்ந்த காலத்தில் இதே நினைவாக தன் மகனை அளவு கடந்த பாசத்தோடு நேசித்தாள். அவள் இப்போது காலமாகிவிட்டாள்.
நாள்தோறும் தன் தாயை மானசீகமாக நினைத்து வழிபடுகிறான் அந்த மகன். அவனது ஆற்றல், புகழ் ஆகியவை முன்னைவிட இப்போது பல மடங்கு பெருகுவதையும், அவனைத் தேடிச் செல்வம் ஓடோடி வந்து குவிவதையும் அவனால் உணர முடிகிறது. இதெல்லாம் தன் தாயின் அருளாசியே என்று உணர்ந்து, அவன் அடக்கத்தோடு வாழ்ந்து வருகிறான். இப்படிப்பட்ட ஒரு மகனை நான் அறிவேன்.
இந்த மகன் ஆன்மிக விஞ்ஞானத்தை நன்கு அறிந்தவன். அதன் சூட்சுமத்தைத் தன் வாழ்வில் பிரயோகித்துப் பலன் அடைந்துவிட்டான்.
ஆன்மிகமும் ஒரு விஞ்ஞானம்தான். உளவியல் விஞ்ஞானம்! அதனால்தான் 'நம்பினவர்களுக்கு நடராஜன்’ என்கிறோம். அதாவது, நம்பாதவர்களுக்கு நடராஜன் அருள் இல்லை என்பது பொருள். கடவுள் நம்பிக்கை என்கிறோமே, கடவுள்தான் நம்பிக்கை; நம்பிக்கைதான் கடவுள்! உண்மையைவிட நம்பிக்கை வலுவானது என்ற உண்மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நீத்தார் சடங்கின் மூலம் நல்லது நடக்கும் என்று நம்புபவர்களுக்கு நல்லது நடக்கிறது; நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், நீத்தார் சடங்கே செய்யாதவர்களுக்கும் அது நடப்பதில்லை.

மகாகவி பாரதிக்கு மகன் இல்லை. மகள்தான் இருந்தாள். தந்தை காலமானதும் மகனுக்குத்தான் தர்ப்பணம் செய்யும் உரிமை வரும். பாரதியார் காலமானவுடன், அவருக்கு மாதந்தோறும் எள்ளும் தண்ணீரும் இறைத்து யார் தர்ப்பணம் கொடுப்பார்கள் என்று கலங்கியது மகாகவியின் அன்பரான திரிலோக சீதாராமின் உள்ளம். தானும் அவருக்கு மகன் போலத்தானே என்றெண்ணிய அவர், தான் இருக்கும்வரை பாரதியாருக்குத் தர்ப்பணம் கொடுத்து வந்தார்.
பாரதிக்கு மகனாய்ப் பிறந்தால்தான் மகனா? மகன் என்ற உணர்வு உடையவர்கள் எல்லோரும் மகன்தானே? ஒருவகையில் இன்றுள்ள எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் பாரதியாரின் வாரிசுகள்தானே?
தாய்- தந்தை மேல் அக்கறையில்லாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் தவிக்கவிடும் மகன்களும் இப்போது இருக்கிறார்கள். பிறப்பால் மகன்களாக இருந்தாலும், பெற்றோரைக் காப்பாற்றும் தார்மிகக் கடமையைச் செய்யாததால், அவர்களை மகன் என்று ஒப்புக்கொள்ளமுடியுமா? தாய்- தந்தை உயிரோடிருக்கும்போதே கவனிக்காத பிள்ளைகள், அவர்கள் இறந்த பிறகு தர்ப்பணம் செய்தால் அதை இறைவன் ஏற்பானா? அப்படிப்பட்ட நீத்தார் சடங்கால் என்ன பயன்?
சரி... முற்றிலும் வித்தியாசமான ஒரு மகனையும் பார்ப்போம். அவன் நாத்திகன். ஆனால், அவன் தந்தை பழுத்த ஆத்திகர். மகன் இப்படி நாத்திகனாக இருக்கிறானே என்று அவன் தந்தையும் தாயும் வருத்தப்பட்டார்கள். ஆனால், அவன் தன் தாய்- தந்தையரை அன்போடு காப்பாற்றி வந்தான். ஒரு நாள், தந்தை இறந்தார். முன்னோர் ஆராதனையில் தந்தை எவ்வளவு ஈடுபாடு காட்டி வந்தார் என்பதை அறிந்திருந்த மகன், தனக்குத் தர்ப்பணம் செய்வதை அப்பா விரும்புவாரே என்று யோசித்தான். மாதந்தோறும் அமாவாசையன்று தந்தைக்குத் தர்ப்பணம் கொடுக்கலானான். 'அடடா! இவன் இவ்வளவு சிரத்தையோடு அழகாகத் தர்ப்பணம் செய்வதைப் பார்க்க, இவன் தந்தைக்குக் கொடுத்து வைக்கவில்லையே!’ என்று புலம்பினாளாம் அவன் தாய்!
(சிறகு விரிப்போம்)