நாளை நமக்காக! திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்
##~## |
உதவி செய்பவர்களாக நாம் இருக்க வேண்டுமே தவிர, உதவி பெறுபவர்களாக இயன்றவரை இருக்கக் கூடாது. சுயமரியாதை நிறைந்த மனிதர்கள் உதவி செய்வார்களேயன்றி, மற்றவர்களிடம் இருந்து தங்களுக்கென எந்த உதவியும் பெற்றுக்கொள்ளத் தயங்குவார்கள்.
உதவி செய்வதில் உள்ள ஆனந்தம், உதவி பெறுவதில் ஒருபோதும் கிடைப்பதில்லை. ஆனால், இன்றைய சமூகத்தில், இத்தகைய மனப்பான்மை சிறிது சிறிதாக மாறி வருவதுபோல் தெரிகிறது. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அடுத்தவர்களின் உதவியை உரிமையுடன் எதிர்பார்க்கும் எண்ணம் பலரிடம் தோன்றிவிட்டது. சுய கம்பீரத்தை மெள்ள மெள்ள இழந்து, பலவீனமான மனிதர்களாக மாறிவருகிறோம் என்பதற்கு இந்தப் போக்கு எடுத்துக்காட்டு!
காலையில் நாம் எழுவதற்குள், வீட்டில் அழைப்பு மணி ஒலிக்கிறது. வெளியே பக்கத்து ஃப்ளாட் அம்மாள், 'கொஞ்சம் காபி பவுடர் கிடைக்குமா?’ என்று கேட்டு நிற்கிறார்.
சரி, போகட்டும். முதல்நாள் வாங்கி வைக்க மறந்திருக் கலாம். அல்லது, அன்று காலையில்தான் ஊரிலிருந்து வந்து இறங்கியிருக்கலாம். கொஞ்சம் காபித் தூள் கொடுப்பதால் ஒன்றும் குறைந்துவிடாதுதான். ஆனால், ஒரே ஒரு வேளை காபி குடிக்காமல் இருந்தால்தான் என்ன? அல்லது, சில மணி நேரங்களுக்குப் பிறகு குடித்தால் என்ன? காபி என்ன பிராண வாயுவா? அதைக் குடிக்கா விட்டால் உயிரா போய்விடும்?

முன்பதிவு செய்து, ரயிலில் பயணிக்கிறோம். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறோம். திடீரென்று ஒரு குரல் நம்மை வேண்டுகிறது... ''ஐயா! நான் உங்களின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொள்ளவா?'
இந்தத் திடீர் வேண்டுகோளால் நமக்குத் திகைப்பு! 'ஏன், உங்களுக்கு ஏதேனும் உடல் நலம் சரியில்லையா? வாந்தி வருவதுபோல் உணர்வா? எதன்பொருட்டு இந்த வேண்டுகோள்?’ என சந்தேகத்தோடு விசாரிக்கிறோம்.
''அதெல்லாம் இல்லை சார், இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டு வரலாமே என்று பார்த்தேன்!'' என்கிறார் அவர்.
ஏன்? அவர் ரசிக்கும் இயற்கைக் காட்சிகளை நாம் ரசிக்கக் கூடாதா?
அவசியமே இல்லாமல் அடுத்தவர்களிடம் தலையைச் சொறியும் இந்த அற்பத்தனத்தை எப்படிச் சகித்துக்கொள்வது?
ரயிலில் இரவுப் பயணம். கீழ் இருக்கையில் படுத்திருக்கிறோம். ஒரு முதியவர் வருகிறார். ''ஐயா! எனக்கு அப்பர் பெர்த்துதான் கிடைத்தது. என்னால் மேல் இருக்கையில் ஏறிப் படுக்க இயலாது. உங்கள் கீழ் இருக்கையை எனக்குத் தர இயலுமா?'' என்று கேட்கிறார்.
அவர் வேண்டுகோளில் நியாயம் உள்ளது. எனவே, மகிழ்ச்சியோடு அந்த முதியவருக்கு உதவி செய்கிறோம். செய்ய வேண்டும். அவருக்கு சௌகரியம்; நமக்கும் மன நிறைவு!
இன்னொரு நாள்; இன்னொரு ரயில் பயணம். முன்போலவே, கீழ் இருக்கையில் படுத்திருக்கிறோம். சில இளைஞர்கள் நம்மை உரிமையோடு தட்டி எழுப்பி, மேல் இருக்கைக்குச் சென்று உறங்குமாறு சொல்கிறார்கள்.

ஏன் என்று கேட்கிறோம். அவர்கள் கீழ் இருக்கையில் அமர்ந்து, இரவெல்லாம் சீட்டாடப் போகிறார்களாம். அதற்கு, மேல் இருக்கை வசதிப்படாதாம்! இந்த வேண்டுகோளில் நியாயம் உண்டா?
அதட்டுகிற இளைஞர்களின் குரலுக்குச் செவிசாய்த்து நாம் கீழ் இருக்கையை விட்டுக் கொடுத்து, மேல் இருக்கையில் படுத்தால், அதன்பின் என்ன நடக்கும் தெரியுமா? அவர் களின் காட்டுக் கூச்சலோடு கூடிய இரவுச் சீட்டாட்டத்தால் அந்தப் பெட்டியில் உள்ள அத்தனை பேரின் இரவுத் தூக்கமும் பாழாகும்!
நாள்தோறும் சாலையில் நின்று, வலது கை கட்டைவிரலை உயர்த்தி, உதவி கேட்டு, வாகனங்களை நிறுத்தி, பின்னிருக்கை யில் இலவசமாக அமர்ந்து பயணம் செய்வதையே சிலர் தொழிலாக வைத்திருக்கிறார்கள். தினம் தினம் இப்படி உதவி கேட்டுப் பயணம் செய்வதில் அவர்களுக்கு எந்த விதத் தயக்கமோ குறுகுறுப்போ ஏற்படுவதில்லை. முன்பின் தெரியாத அடுத்தவர்களிடம் இத்தகைய சலுகைகளை உரிமையோடு தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் இந்த மனப்பான்மையை என்னென்பது?
இன்று, உடல் நலமின்றி யாரேனும் உண்மையிலேயே சாலையோரம் விழுந்து கிடந்தால்கூட, குடிகாரன் என்றெண்ணி மக்கள் ஒதுங்கிப் போகிறார்கள். பற்பல தெருக்களில் பற்பல குடிகாரர்கள் படுத்துக் கிடப்பதாக இருக்கிறது, இன்றைய காலம். அதுபோல், உண்மையிலேயே அவசர உதவிவேண்டி யாரேனும் நம் வாகனத்தை நிறுத்தினால்கூட, அவர்களையும் இலவச சவாரி செய்யும் அற்பர்களாக எண்ணி, நிற்காமல் போகச் சொல்கிறது நம் மனம். முன்பெல்லாம் மனிதர்கள் இப்படி இருந்ததில்லை. அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே உதவி வேண்டுவார்கள்; தொட்டதற்கெல்லாம் அடுத்தவர்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அன்றைய மனிதர்களின் மனப்போக்கில் கொஞ்சம் நாகரிகம் இருந்தது.

கடினமான அஞ்ஞாதவாசத்தின்போதுகூட, பாண்டவர்கள் யார் உதவியையும் பெறவில்லை. தாங்களேதான் தங்கள் வாழ்க்கையை சுயமாக எதிர்கொண்டார்கள். கம்பீரத்தோடு மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து, நிறைவாக வாழ்ந்தார்கள். அஞ்ஞாதவாசத்தின்போதுதான், ஏகசக்ர நகரம் என்ற கிராமத்து மனிதர்களை நாள்தோறும் சாப்பிட்டுவந்த பகாசுரனை பீமன் அழித்து, அந்தக் கிராம மக்களுக்குப் பேருதவி செய்தான்.
ராமாயண வனவாசத்தில், லட்சுமணன் தங்களுக்குத் தேவையான குடிலை, எந்த உதவியையும் யாரிடமிருந்தும் பெறாமல், தானே நிர்மாணித்தான். முனிவர்களான மற்ற ஆஸ்ரமவாசிகள் பலர் இருந்தாலும், லட்சுமணன் எவர் உதவியையும் நாடவில்லை. 'வீடு கட்டும் கலையை எங்கு கற்றாய் லட்சுமணா?’ என்று தன் தம்பியை வியந்து பாராட்டுகிறான் வீடுபேறு தரும் ஸ்ரீராமன்.
தனக்குத் தேவையான செயல்களைத் தானே செய்துகொள்ளும் கம்பீரம் அன்றைய இதிகாச புருஷர்களிடம் இருந்தது. இன்றைய புருஷன்மார்களோ, குளியலறைக்குப் போனபின்பு, மனைவியிடம் சோப்புக்கும் துண்டுக்கும் குரல் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.
ராமன் தன்னுடன் பிறந்த மூவரைத் தவிர, உடன்பிறவாத மூவரைச் சகோதரர்களாக ஏற்கிறான். மனிதனான வேடன் குகன், குன்றுசூழ்வான் மகனான வானரம் சுக்ரீவன், ராவணனின் தம்பியான அரக்கன் விபீஷணன் என்ற மூவரில், சுக்ரீவன் ஸ்ரீராமனுக்குச் செய்தது உபகாரம் அல்ல; பிரதி உபகாரம். தன் அண்ணன் வாலியை ராமன் வதம் செய்து உதவியதால், சீதா தேவியைத் தேட உதவுகிறான் சுக்ரீவன். விபீஷணன் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவன் ஸ்ரீராமனுக்குச் செய்த உதவிக்குப் பிரதிபலனாக அவன் தலையில் இலங்கை மகுடம் ஏறிவிடுகிறது.
ஆனால், குகன்? தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த அந்த மாபெரும் மனிதன், எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் அல்லவா ஸ்ரீராமனுக்கும் பரதனுக்கும் ஓடம் ஓட்டினான்? எதையும் எதிர்பாராது கடவுளுக்கே உதவி செய்த குகனின் பெருமையை எப்படிப் புகழ்வது?
கீழ் குலத்தார் எனப்படுபவர்கள், சமுதாயம் என்கிற கடவுளின் மேன்மைக்காக, எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் எத்தனையோ கீழ்நிலை வேலையையெல்லாம் செய்து, தொடர்ந்து நம் நாட்டின் மேம்பாட்டுக்கு உதவி வருகிறார்களே! அவர்களின் ஒட்டுமொத்த உருவகம்தானோ குகன்?
உதவி பெறுபவராக அல்ல; கம்பீரமாக உதவி செய்பவராக, நாம் எப்போது குகன்களாக மாறப் போகிறோம்? குகன் வழியில் நாம் எப்போது நடக்கிறோமோ, அன்றுதான் நம் பாரத சமுதாயம் மேம்படும்!
(சிறகு விரிப்போம்)