மனிதனின் கண்டுபிடிப்புகள் மகத்தானவை. விண்ணில் பாயும் ராக்கெட், கடலுக்குள் விரையும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற அரிய, அற்புதமான, பிரமாண்டமான படைப்புகளை விடுங்கள். சாதாரணமாகத் தெரியும் குண்டூசிகூட மனிதனின் அசத்தல் கண்டுபிடிப்புதான்.

``கண்டுபிடிப்புகளைவிடச் சிறந்தது, உயர்ந்தது வேறு எதுவும் இருக்க முடியாது’’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியலாளரும், இயற்கை ஆர்வலருமான இ.ஓ.வில்சன். `மிர்மிகாலஜி’ (Myrmecology) எனப்படும் எறும்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் துறையில் இவர் நிபுணர்.
சிலவற்றை மனிதன் எப்படி, ஏன் கண்டு பிடித்தான் என்கிற கேள்விகூட நமக்கு அவ்வப்போது எழும். அப்படிப்பட்ட ஒன்று தலையில் அணியும் தொப்பி.
இந்தப் பெயரைக் கேட்டதுமே காந்தி குல்லாய், எம்.ஜி.ஆர் தொப்பி, கோமாளி அணிந்திருப்பது, மேஜிக் வித்தைக்காரர் அணிந்திருப்பது, கிறிஸ்துமஸ் தாத்தா மாட்டியிருப்பது... என பல வண்ணங்களில், பல வடிவங்களில் தொப்பி நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. தொப்பி பிரியர்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் இருக்கிறார்கள்.
பருவகாலங்களில் பாதுகாப்புக்கு, விழாக்காலங்களைக் கொண்டாடுவதற்கு, குறிப்பதற்கு, ஸ்டைலுக்கு... என பல காரணங் களுக்காக அணியப்படும் தொப்பி கி.மு 3,000-ம் ஆண்டுக்கு முன்பே கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமளிக்கும் உண்மை. ஆஸ்திரியா வுக்கும் இத்தாலிக்கும் நடுவே உறைந்த நிலையில் ஓர் ஆணின் உடல் கண்டெடுக்கப் பட்டது. வெண்கலக் காலத்தைச் சேர்ந்த அந்த மனிதர் கி.மு 3250-ல் வாழ்ந்திருக் கலாம் என்றும், அவர் தலையில் கரடித் தோலாலான தொப்பி இருந்தது என்றும் குறிப்பிடுகிறார்கள் தொல்லிய லாளர்கள்.
அரசர்களின் தலையை அலங்கரித்த கீரீடத்தைக்கூட ஒருவகை தொப்பி என்றே சொல்லலாம். ராணுவ வீரர்கள், காவல் துறையினரெல்லாம் அணிவது அவர்கள் வகிக்கும் துறையின் அடையாளம். கிரிக்கெட் வீரர்கள் அணிவது, போப்பாண்டவர் தலையில் இருப்பது, கௌபாய் படங்களில் பார்த்திருப்பது என ஒவ்வொரு தொப்பியும் ஒவ்வொரு தினுசு.
தொப்பியின் வரலாறு மிக நீளமானது. எனவே இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டும் இங்கே... ஒன்று, தொப்பி என்றாலே நம் நினைவுக்கு வருவது `குல்லாய் வியா பாரியும் குரங்குகளும்’ கதை. மற்றொன்று, அமெரிக்காவைச் சேர்ந்த ரோஜர் பக்கி லெக்ரீட் என்பவர் உலகம் முழுக்கத் தேடி விதவிதமான தொப்பிகளைச் சேகரித்தே கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இவரிடமிருக்கும் தொப்பிகளின் எண்ணிக்கை 1,00,336. அம்மாடியோவ்..!
ஆசிரியர் ஒருவர் கேட்டார்:
``ராணுவத்துல இருக்குறதுலயே பெரிய தொப்பியை யார் அணிஞ்சிருப்பாங்க... சொல்லுங்க?’’
ஒரு துடுக்கு மாணவன் சொன்னான்:
``இருக்குறதுலயே யாரோட தலை பெருசோ, அவங்கதான் சார் பெரிய தொப்பி போட்டிருப்பாங்க!’’