Published:Updated:

வளம் தரும் வாஸ்து!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வளம் தரும் வாஸ்து!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:

அயனும் எழுதி விட்டான் தலைவிதி
     பயனை யறியா மாந்தர் தமக்கு
மயனும் தந்தான் மனையடி சாத்திரம்
     வியத்தகு முறையில் விமோசனம் பெறவே
சாத்திரம் வழுவா மனையில் வாழ்ந்து
     நித்திய சுகமும் நீடித்த யோகமும்
புத்திர நலனும் புகழும் பூத்திட
     சித்தி விநாயகரருளைப் பெறுவோம்.

வாஸ்து சாஸ்திரம் எனும் கட்டடக்கலை இந்தியக் கலை ஆகும். இது கி.மு.3000க்கு முன்பாகவே இருந்ததாகக் கருதுகின்றனர். பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானதே வாஸ்து சாஸ்திரம். அவற்றுள்ளும் நிலம், நீர், நெருப்பு ஆகிய மூன்றுக்கும் முக்கிய பங்கு உண்டு.

மனிதன் படைத்த வசதி வாய்ப்புகளை இயற்கை சக்திகளோடு ஒருங்கிணைக்கும் ஓர் அறிவியல் என்றும் வாஸ்து சாஸ்திரத்தைச் சொல்லலாம். ஐம்புலன்களால் அறியக்கூடியதும் அறிய முடியாத துமான இயற்கை சக்திகளை, மனித வாழ்வுக்குப் பயன்படும் வகையில் அமைத்துக்கொள்வதே, வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைக் குறிக்கோள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாஸ்துவுக்கான தெய்வத்தை வாஸ்து புருஷன் என்று வணங்குகிறோம். வாஸ்து புருஷன் என்பவர் பகவான் நாராயணனின் அம்சம். இந்தப் பூவுலகம் அவரது உடலேயாகும். இந்த உலகில் கட்டப்படும் அனைத்துக் கட்டடங்களும் அவரது அனுமதி பெற்றே செய்யப்பட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வாஸ்து என்றால், பொருட்கள் அதாவது வஸ்துக்கள் இருக்கும் இடங்கள் என்பது பொருள். வாஸ்து முறைப்படி வஸ்துக்களை அமைத்தால் வாஸ்து புருஷனின் ஆசிகள் பெற்று வளமோடு வாழ்வார்கள் என்பதே வாஸ்து சாஸ்திரத்தின் சாரம் ஆகும்.

வளம் தரும் வாஸ்து!

வரலாற்றுப் பின்னணி...

நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தின் 'ஸ்தாபத்திய வேதம்’ என்ற பகுதியில், 'வாஸ்து சில்ப சாஸ்திரம்’ என்ற தலைப்பில் வீடுகளை, கட்டடங்களை வடிவமைப்பதும் கட்டுவதும் தொடர்பான அறிவியல் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

வேதங்களின் ஆழ்ந்த ஞானமும் கண்ணோட்டமும் பலராலும் பாராட்டப்பட்டவை. மேலை நாட்டினர் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயத் துவங்குவதற்கு முன்பே நம் முன்னோர் அதுபற்றிய உயர்வான ஞானத்தைப் பெற்றிருந்தனர். அவற்றில் ஒன்றே வாஸ்து சாஸ்திரம் ஆகும். அனைத்து மக்களும் தங்கள் இருப்பிடங்கள் மூலமாக வாழ்க்கையில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதே வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கமாகும். இகலோக சுகத்தையும் பரலோக சுகத்தையும் இந்த சாஸ்திரங்களின் மூலம் எளிதில் பெறலாம் என (வராஹமிஹிரர் வாஸ்துவில்) மகரிஷி நாரதர் கூறுகிறார்.

அனேன விதின சமயாக
வாஸ்து பூஜாம்கரோதி; யா
ஆரோக்யம் புத்ரலாபாம்
சாதனம் தான்யம் லபேன்நர:

எவன் ஒருவன் வாஸ்வை முறையாக மதிக்கிறானோ அவன் திரண்ட செல்வத்தையும், குடும்ப வாரிசுகளையும், சொத்துக்களையும், இகபர இன்பங்களையும் தவறாமல் அடைகிறான். வாஸ்து சாஸ்திரத்தை கடைப்பிடிக்காதவர்களுக்கு மனைவியின் மூலம் துன்பங்கள், வாரிசு இழப்புகள், சொத்துகள் அழிதல், மனக்குழப்பம், நோய்கள் என எண்ணற்ற துன்பங்கள் தாமே வந்து சேரும் என்று நாரத மகரிஷி விளக்குவதாக வராஹமிஹிரரின் வாஸ்து சாஸ்திரம் விவரிக்கிறது.

தகுந்த விகிதாசாரத்திலான பஞ்சபூதங்களின் சேர்க்கையே வாஸ்து.

இதில் நம்மால் செயல்படுத்த சாத்தியமான நிலம், நெருப்பு, நீர் ஆகியவற்றையாவது முறைப்படி சேர்த்து, வாஸ்து முறைப்படி கட்டடங்களை அமைத்துப் பலன் காண வேண்டும்.

'விஸ்வகர்மா பிரகாஷ்’ என்னும் பழைமையான நூல் கீழ்க்காணும் விளக்கத்தைத் தருகிறது...

இதம் பவித்ரம் பரம்
ரகஸ்யம் ய: படேன்னர:
ஸ்யாத ஸ்யாவித தா வாணி
சத்யம் சத்யம் வதாப்யஹம்.

மனிதர்கள் இந்த அற்புதமான, நிச்சயமாக பலன் கொடுக்கும் வாஸ்து சாஸ்திரத்தை, சாஸ்திரப் புத்தகங்களை நன்கு படிப்பதன் மூலமும், முறையாக அனுஷ்டிப்பதன் மூலமும் தெரிந்து கொள்ளலாம். அப்படி படித்தறிந்து கடைப்பிடிப்பவர்களின் வாக்குகள் நிச்சயம் பலிக்கும். அவை, அவர்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். ஒருபோதும் அவர்களுக்கு தாழ்மை வராது.

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு பெரிய கடல். அதில் ஆசையுடன் மூழ்கித் தேட ஆரம்பித்தால், முத்துக்கள், ரத்தினங்கள் ஏராளமாகக் கிடைக்கும். நாம் அதில் தேடத் தேட வாஸ்துவின் ரகசியங்கள் புரியும். நாமும் அந்த சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுப் போம். அதற்கு முன்னர் வாஸ்து பகவானின் கதையைத் தெரிந்து கொள்வோம். வாஸ்து குறித்து வெவ்வேறு கதைகள் சொல்லப்படுவது உண்டு.

வாஸ்து என்பவன் ஓர் அரக்கன். தேவர்களுக்கும் இவனுக்கும் தீராப்பகை. ஒருமுறை, மேலுலகில் நிகழ்ந்த போரின்போது, வாஸ்துவைத் தோற்கடித்த தேவர்கள் அவனை மேலிருந்து கீழே தள்ளிவிட்டனர். பூவுலகில் விழுந்த வாஸ்து, ஈசான்ய பகுதியில் தலைவைத்து பூமியை முழுவதுமாக வியாபித்துப் படுத்தான். அப்போதும் தேவர்கள் அவனை விடுவதாக இல்லை. வாஸ்துவின் பரந்துவிரிந்த அவயவங்களில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டார்கள். இப்படி தேவர்கள் அமர்ந்ததால், வாஸ்துவுக்கு தேவாம்சம் கிடைத்தது; பூஜிக்கத் தகுந்தவர் ஆனார்.

வாஸ்துவின் மேனியில் 53 தேவர்கள் குடிகொண்டுள்ளனராம்.  வாஸ்துபகவானுக்கு கிழக்கு பாகத்தில் சர்வஸ்கந்தன், மேற்கில் ஜ்ரும்பகன், வடக்கில் பிரிபஞ்சன், தெற்கில் அர்யமா, வடகிழக்கில் ஷரகி, தென்கிழக்கில் விதார்யன், வடமேற்கில் பாபராட்சசி, தென்மேற்கில் புனநீகன் ஆகிய எட்டு பேர் குடியிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிரவும் வாஸ்துவைச் சுற்றி 32 தேவர்களும், வாஸ்துவை ஒட்டிய பகுதிகளில் 12 தேவர்களும், நடுவில் ஒரு தேவருமாக உட்கார்ந்திருக்கின்றனர் என்கின்றன புராணங்கள். ஆக, வாஸ்துவை வழிபடுவதன் மூலம் இந்த 53 தேவர்களையும் திருப்திப்படுத்தி நாம் நலம் பெறலாம் என்பார்கள்.

வளம் தரும் வாஸ்து!

வாஸ்து பகவான் குறித்த இன்னொரு கதையையும் அறிந்துகொள்வோம். இந்தப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள சகல உயிர்களையும் உருவாக்கிய பிரம்மன், புதிதாக ஒரு ஜந்துவையும் படைக்க எண்ணினார். அதன்படியே மிகப்பெரிய ஓர் உயிரியை அவர் சிருஷ்டித்தார். பூமியெங்கும் உலா வந்த அந்த ஜந்து பிரமாண்டமாக வளர்ந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில், சூரியனின் கிரணங்கள் பூமியில் விழாத வண்ணம், அந்த ஜந்துவே முழுவதும் மறைத்து இருந்தது. அதன் அகோரப் பசிக்கு எவராலும் தீனி போட முடியவில்லை. கண்ணில் பட்ட உயிர்களை எல்லாம் பிடித்துத் தின்றது அந்த ஜந்து.

இந்த நிலையைக் கண்ட சிவனாரும் விஷ்ணுவும் பிரம்மனிடம் சென்றார்கள். ''பிரம்மதேவனே... பூமியில் உயிர்கள் பல்கிப்பெருகினால்தான் தர்மமும் சாஸ்திரமும் செழித்தோங்கும். ஆனால், நீ சிருஷ்டித்த ஜந்து மற்ற எல்லா உயிர்களையும் அழித்துவிடும் போல் இருக்கிறது. நீ உடனே அதை அடக்கு!'' என்றனர். பிரம்மனும் இசைந்தார். அஷ்டதிக் பாலகர்களையும் அழைத்து, ஜந்துவுடன் போரிட்டு வென்று வாருங்கள் என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அந்த விநோத ஜந்துவுடன் போரிட்டு வென்றார்கள்.   அந்த ஜந்து மிகவும் சோர்ந்திருந்த நிலையில், அதன் உடலின் மையப் பகுதியில் பிரம்மன் போய் அமர்ந்துகொண்டார். அவரிடம், ''என்னைப் படைத்ததே தாங்கள்தான். இப்போது என்னை அழிக்க முயற்சிப்பதும் நீங்கள்தான். பிறகு ஏன் என்னைப் படைத்தீர்கள்? எனக்கு வாழ்வு கொடுங்கள்'' என்று வேண்டியது ஜந்து.

மனம் இரங்கிய பிரம்மதேவன், ''இன்றிலிருந்து நீ இறவாத தன்மையை அடைவாய். பூமியில் விழுந்த நீ, இந்த பூமியையே ஆக்ரமித்துப் படுத்திரு. இங்கு கட்டடம் கட்ட முனையும் எவரும், உனக்கு உரிய பூஜைகள் செய்து பலி கொடுப்பார்கள். அதைச் சாப்பிட்டு உயிர் வாழ்'' என்று அருள் புரிந்தார். அந்த ஜந்துவே வாஸ்து பகவான் என்கிறது இந்தக் கதை.

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism