Published:Updated:

வளம் தரும் வாஸ்து!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வளம் தரும் வாஸ்து!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:

வாஸ்து பகவான் குறித்து புராணங்கள் சொல்லும் கதைகளை தகவல்களை சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில், மனிதனின் வாழ்விடங்கள் குறித்த பரிணாமத்தையும், அவற்றை ஒரு வரையறைக்குள் குறிப்பிட்ட நியதிகளுக்கு இணங்க அமைக்க வேண்டிய அவசியத்துக்கு அவன் ஆளான காரணங்களையும் சற்று விரிவாகவே காண்போம். ஆதியில், கைகால்களை ஆட்டி முகத்தில் அறிகுறி காட்டி, சைகைகளால் எண்ணங்களை வெளிப்படுத்திய மனிதன், பின்னர் வெவ்வேறு விதமான ஒலிகளையும் எழுப்பினான். ஒலி பல்வேறு சூழ்நிலையில் பல்வேறு விதமாக பக்குவப்பட்டு மொழியானது. அதேபோன்று, கற்களிலும் குகைச் சுவர்களிலும் அவன் கிறுக்க ஆரம்பித்த சித்திரங்கள், எண்களும் எழுத்துக்களுமாகப் பரிணமித்தன.

வளம் தரும் வாஸ்து!

 அவனுக்கான வாழ்விடங்கள் வளர்ச்சிபெற்றதும் இப்படியான ஒரு பரிணாமத்தில்தான். ஆதியில் காடுகளில் அலைந்துதிரிந்தவன் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள குகைகளை நாடினான்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காடுகளில் வேட்டையாடிய நிலையில் கல்லையும், கழிகளையும், விவசாயம் செய்ய முற்பட்டபோது களைபிடுங்க களைக்குச்சிகளையும் பயன்படுத்தியவன், கருவிகளின் பயன்களை நன்கு உணர்ந்தான். பல்வேறு கருவிகளை உருவாக்க முனைந்தபோது அவனது செயல்திறனும் சிந்தனை திறனும் இன்னும் மேம்பட்டன.

ஆதியில் உணவைத் தேடி உண்டு வாழ்ந்தவன், ஓரிடத்திலேயே தங்கி வாழ்வதற்குத் தலைப்பட்ட பிறகு, விவசாயமே அவனுக்கு முதல் தொழிலாக அமைந்தது. இந்தத் தொழில் அவனை விவேகம் உள்ளவனாக மாற்றியது என்றே சொல்லலாம். விளைச்சலுடன் தன் இனத்தையும் பெருக்கினான். கூட்டம் கூட்டமாக வசிக்க ஆரம்பித்தான். தனக்கான வசிப்பிடத்தையும் உருவாக்கத் துவங்கினான்.

விவசாயத் தொழில் மனிதனுக்கு ஏற்பட்டதிலிருந்து மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு உயர்ந்தது. இயற்கையைக் கூர்ந்து கவனித்தான். வெயில் காலம், காற்றுக் காலம், மழைக் காலம், பனி ஆகியவற்றை உற்று நோக்கி உரிய காலத்தில்... அதாவது, ஆடிப் பட்டத்தில் தேடி விதைத்தான். மழைக்கு முன்பாக நிலத்தை உழுது உரமிட்டு பக்குவப்படுத்தி, மழை வந்ததும் விதைத்து, மழையிலேயே பயிர்களை வளரச் செய்து, தை, மாசியில் அறுவடை செய்து சேமித்துக் கொண்டான். அறுவடை செய்த தானியங்களையும் பாதுகாக்க வேண்டும். மிருகங்களிடமிருந்து தானும் தப்பிக்க வேண்டும். இதற்காகவே வசிப்பிடத்தை உருவாக்கினான். குச்சல்களும் குடிசை வீடுகளும் உருவாக்கப்பட்டன. அப்போது அவனுக்கு நேர்ந்த அனுபவங்கள் அவனைச் செம்மைப்படுத்தின. பள்ளமான இடத்தில் மண் வீடு கட்டியதில், நீர் தேங்கி மண் வீடு சரிந்தது. எனவே, மேடான பகுதிகளில் வீட்டை அமைத்தான்.

வளம் தரும் வாஸ்து!

உலோக காலத்துக்குப் பிறகு மனிதனின் நாகரிக வளர்ச்சி இன்னும் மேம்பட்டது. குச்சல் வீடு, குடிசை வீடாகியது. குடிசை வீடு, ஓட்டு வீடாகியது. இதற்கிடையே அவன் வசித்த இடங்களில் ஓரிருவர் அனுபவத்தைக் கொண்டு ஆராய்ச்சி செய்திருப்பார்கள்.

ஒருகாலத்தில், குகையின் பள்ளத்தினுள் சென்று வசித்தபோது, மேற்குத் திசையில் பள்ளத்தில் இறங்கி வாசம் செய்த குகையில் வசித்த ஆண்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஆனால், கிழக்கு திசை பள்ளத்தில் வசித்த ஆண்கள், ஆரோக்கியமாக திகழ்ந்தனர். தேவைக்குத் தக்கவாறு காய், கிழங்குகளும் வேட்டையில் கொழுத்த மிருகங்களும் அவர்களுக்கு நிறைய கிடைத்தன. ஆண் வாரிசுகள் பெருகியது.

தெற்கு திசை நோக்கி உள் இறங்கிய குகையில் பெண்களுக்குப் பிணியும் அதனால் மரணமும் நேரிட்டது. மிருகங்களாலும் இயற்கைச் சீற்றங்களாலும் உயிரிழப்புகள் நேர்ந்தன. அதேநேரம், வடக்கு நோக்கி உள் இறங்கிய குகையில் வசித்த பெண்கள் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும், பட்டினியின்றியும் வாழ்ந்தனர். பெண் சந்ததி பெருகியது.

தென்மேற்கு திசை நோக்கி உள் இறங்கிய குகைகளில் பெரியவர்கள் பாதிக்கப்பட்டார்கள். மிருகங்களாலும், சூறாவளி மற்றும் இடிமின்னலாலும் முதியவர்கள் இறந்துபட்டனர்.

வளம் தரும் வாஸ்து!

மனிதனின் வாழ்விடங்கள் சமவெளிப் பகுதிகளுக்கு நகர்ந்தபோதும் இதுபோன்ற அனுபவங்கள் வாய்த்தன.

தெற்கில் பள்ளம் உள்ள இடங்களில் வசித்தபோது, முன்னேற்றம் இல்லை. சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டன. குடிசைக்கு வடக்கில் பள்ளம் இருக்க, அந்த குடிசையில் சுபமே நிலவியது. மேற்கில் பள்ளம் இருக்க குடிசை போட்டு வாழ்ந்த வீட்டில், ஆண்களுக்கு விசேஷம் இல்லை. கிழக்குப் பக்கம் பள்ளம் உள்ள குடிசை வீட்டில் ஆண்கள் வீரியத்துடனும், திடகாத்திரமாகவும் இருந்தனர்.

வாசல் அமைப்பிலும் சில அனுபவங்களைச் சந்தித்தனர். குடிசையில் தெற்கு, தென்மேற்கில் வாசல் உள்ள வீடுகளில் குடும்பத் தலைவிக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. மேற்கு, தென்மேற்கில் வாசல் உள்ள வீட்டில், குடும்பத்தலைவனுக்கு புலியால் ஆபத்து நேர்ந்தது. வடக்கு வாசல் வைத்து கட்டிய குடிசையில், ஒரே சண்டைக்காடு; பட்டினியும் இடமாற்றமும் ஏற்பட்டது. கிழக்கில் வாசல் வைத்துக் கட்டிய குடிசையில் தீ விபத்தும், களவும் நிகழ்ந்தன. வடக்கு, வடகிழக்கில் வாசல் உள்ள குடிசையில் பெண்கள் அந்தஸ்தோடும், குறைவில்லாமலும் சந்தோஷமாக வாழ்ந்தனர். அதேபோன்று, வடகிழக்கு வாசல் உள்ள வீட்டில் ஆண்கள் ஆரோக்கியமாகவும், உண்ண குறைவில்லாமலும், கவிபாடும் திறன் மற்றும் தலைமைப் பண்புடன் விளங்கினர்.

முன்பே சொன்னபடி யாரோ ஓரிருவர் இந்த அனுபவங்களை எல்லாம் கூர்ந்து கவனித்து, எந்தெந்த அமைப்புகள் எல்லாம் சுகத்தை அல்லது துக்கத்தை தருகின்றன என்பதை ஆராய்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தனியொரு கூட்டம் என்ற நிலை மாறி, பல பிரிவுகள் ஒன்றிணைந்து இனமாக விஸ்தரிக்க நகரம், நாடு என்று  மனித இனத்தின் வாழ்க்கை நிலை பரிணமித்தது. உடைமைகள் யாவும் தனியுரிமை, பொதுவுடமை என்று பகுக்கப்பட்டன. பொதுவில் உள்ளவை அரசனாலும் அவன் தலைமையிலான அரசாங்கத்தாலும் நிர்வகிக்கப்பட்டன. வளம் பெருக, வரிகள் பெருகியது பொருளாதாரமும் வளர்ந்தது. இவ்வாறு வளர்ச்சி கண்ட மனித இனம், தங்களின் வசிப்பிடத்தையும் வீடுகளையும் பெரிதாக்கியது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப ஓட்டு வீடு, கல் வீடு, அரண்மனை, ஆலயம் என்று கட்டடக்கலை வளர்ந்தது.

இந்த நிலையில்... முன்னோரில் சிலர், வசிப்பிடத்தின் அமைப்பை அதன் நிறைகுறைகளை ஆராய்ந்து வந்தார்கள் என்று பார்த்தோம் அல்லவா? அவர்கள், தாங்கள் கண்ட அனுபவங்களின் அடிப்படையில் இன்னின்ன அமைப்புகள் குறையுள்ளன, வசிப்பிடங்களை இன்னின்ன அமைப்புகளுடன் கட்டப்படுவது சிறப்பு என்று சில அறிவுரைகளை யும், வழிமுறைகளையும் தொகுத்து வைத்தனர்.

அதுகுறித்து அடுத்த இதழில் காண்போம்.

-தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism