Published:Updated:

சுக்கிர விரல்!

உள்ளங்கையில் சில உண்மைகள்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

சுக்கிர விரல்!

உள்ளங்கையில் சில உண்மைகள்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:
சுக்கிர விரல்!

ஞ்சாங்குலியின் இந்த அத்தியாயத்தில், கைகளில் உள்ள ஐந்து விரல்களின் அமைப்பு பற்றியும், அவற்றின் பலன்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

முன்னதாக உள்ளங்கையில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் உரிய மேடுகள் குறித்து அறிவது அவசியம் (படம் 1- ஐ பார்க்க). நமது உள்ளங்கை சூரியன் முதலான ஒன்பது கிரகங்களுக்கு உரிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நடுவில் பிரம்ம ஸ்தானமும் உள்ளது. விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மேட்டில் இருந்து ஆரம்பமாகிறது. அவற்றுக்கு அந்தந்த கிரகத்தை ஒட்டிய பெயர் உண்டு (விவரம் கீழ்க்காணும் அட்டவணையில்).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரி! இனி, விரல்களின் வகைகளை அறிவோம். முதலில் கட்டைவிரல் பற்றி அறிவோம்.

கையின் ஆணிவேரான கட்டைவிரல்...

கையின் ஆணிவேர் என்பது கட்டை விரல். அதனால்தான் கையெழுத்துப் போட முடியாதவர்கள், கட்டை விரலில் மை தடவி கைநாட்டு போடும் பழக்கம் இருக்கிறது. உலகில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முகஜாடையில் ஒன்றாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், விரல் ரேகைகள் ஒன்றாக இருக்காது. அதனால்தான் சரியான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் கட்டைவிரல் ரேகைகள் பயன்படுகின்றன. கட்டை விரல் ரேகைகளை மட்டும் வைத்து, கையிலுள்ள மற்ற ரேகைகளின் அமைப்பையும், ஜாதகத்திலுள்ள கிரக நிலையையும் கூட, குறிப்பிட முடியும்.

சுக்கிர விரல்!

தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும்போது, கட்டை விரலை மடித்து உள்ளங்கை மீது வைத்து, அதை மற்ற விரலால் அழுத்தி, கையை மூடிக்கொண்டிருக்கும். இதனால் கையிலுள்ள மொத்த ரேகைகளின் பிரதிபலிப்பும் கட்டைவிரலில் பதிவாகிவிடுகின்றன.

கட்டை விரல், சுக்கிர மேட்டுப்பகுதியில் ஆரம்பிக்கிறது. இதற்கு சுக்கிர விரல் என்று பெயர். இது இரண்டு எலும்புத்துண்டுகளின் சேர்க்கையால் அமைகிறது. கையை ஒட்டிய கீழ்ப்பகுதி மனோ பாவத்தையும், நகமுள்ள மேற்பகுதி புத்தி பலத்தையும் குறிக்கிறது.

இந்த விரல் வடமொழியில் 'அங்குஷ்ட’ எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரு மனிதனின் மனோபாவம், உணர்ச்சிகள், சிந்தனைத்திறன், எண்ணங்கள், செயல்படும் திறன், இவற்றைக் கட்டை விரல் கட்டுப்படுத்துகிறது. மற்ற விரல்கள் செயல்படும் திறமைக்கும் கட்டை விரலே உதவுகிறது. கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையே அமைந்துள்ள கோணத்தை வைத்து, கட்டை விரல் அமைப்பை மூவகைகளாகப் பிரிக்கலாம்.அவை: விரிகோணக் கட்டை விரல், செங்கோணக் கட்டை விரல், குறுங்கோணக் கட்டை விரல்

சுக்கிர விரல்!

விரிகோணக் கட்டை விரல்: விரல்களை நன்றாக விரித்த நிலையில், கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே உள்ள கோணம் 90 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய அமைப்பை உடையவர்கள் நேர்மையானவர்கள், அமைதியை விரும்புபவர்கள், கலைஞர்கள், பழகுவதற்கு இனியவர்கள். இளமையில் கஷ்டப்பட்டாலும், சுய முயற்சியாலும் உழைப் பாலும், முன்னேறுபவர்களாகத் திகழ்வார்கள். இவர்களுக்கு தீவிரமான திடச்சித்தமும், வைராக்கியமும் உள்ளவர்கள். ஆசிரியர்கள், சமயத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், இசை மேதைகள் ஆகியோர் இத்தகைய அமைப்பை உடையவர்கள்.

செங்கோணக் கட்டை விரல்: விரல்களை நன்றாக விரித்த நிலையில், கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையேயுள்ள கோணம் சரியாக 90 டிகிரியாக இருக்கும். இத்தகைய அமைப்புள்ளவர்கள் கடுமையான உழைப்பாளிகள்; சகலகலா வல்லவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய வர்களாகவும், பிறருக்கு நன்மை செய்பவர்களாகவும் விளங்குவர். இவர்கள் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் திகழ்வார்கள். உறுதியும், விடாமுயற்சியும் உள்ளவர்கள். தலைவர்களாக இருக்கும் தகுதி மிக்கவர்கள். டாக்டர், இன்ஜீனியர், தொழிலதிபர்கள், வியாபாரிகள், நுணுக்க மான கலைகளில் வல்லுநர்கள் ஆகியோர் இந்த வகையில் அடங்குவர்.

குறுங்கோணக் கட்டை விரல்: விரல்களை நன்றாக விரித்த நிலையில், கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே உள்ள கோணம் 90 டிகிரிக்குக் குறைவாக இருக்கும். இத்தகைய கட்டை விரல் அமைப்புடையவர்கள் சோம்பேறிகளாகவும், குறுக்கு வழியில் செளபாக்கியத்தைத் தேடுபவர்களாகவும் விளங்குவார்கள். பிறரை குறை கூறுபவர்கள், நீதி  ஒழுங்குக்குக் கட்டுப்படாதவர்கள், சிற்றின்பப் பிரியர்கள், அதிகம் கல்வி அறிவில்லாதவர்கள், குற்றம் புரிவதில் விருப்பம் உள்ளவர்கள், வெறும் உடல் உழைப்புள்ள -  திறமை அதிகம் தேவைப்படாத தொழில்களை மட்டும் செய்பவர்கள், இவ்வகையில் அடங்குவர்.

சுக்கிர விரல்!

கட்டைவிரலின் நீளமும் பகுதிகளும்!

கோண அமைப்புடன், கட்டை விரலின் நீளமும் மிக முக்கி யமான அம்சம். கட்டை விரல், ஆட்காட்டி விரலின் கீழ் முதல் எலும்பின் எல்லைக்குள் இருந்தால், அது உயர்ந்த வகை மனிதர்களைக் குறிக்கும். கட்டை விரல் மிக நீளமாக அமைந்து, ஆட்காட்டி விரலின் இரண்டாவது எலும்பு வரை நீண்டிருந்தால், அவர்கள் பிடிவாத குணமுடையவர்களாக வும், திறமைகளைத் தவறான வழிகளில் செலவிடுபவர்களாகவும் இருப்பார்கள்.

கட்டை விரலை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று நகம் இருக்கும் மேல் பகுதி; 2-வது எலும்பினால் உள்ளங்கைகள் சேரும் விரலின் கீழ்ப்பகுதி. உத்தமான உயர்ந்த மனிதர்களுக்கு  விரலின் மேல்பகுதி, கீழ்ப்பகுதியைவிட நீளமாக இருக்கும்.

மேல் பகுதியும், கீழ் பகுதியும் சமமாக உள்ளவர்கள் நிதானமாகவும், பொறுமையாகவும் நடந்துகொள்வார்கள். அவர்கள் மனோபாவமும், புத்தியும், சமநிலையில் செயல்படும். பொறுப்பான பதவியில் உள்ளவர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் போன்றவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும்.

மேல் பகுதி கீழ்ப்பகுதியை விட குட்டையாக இருந்தால், அது உணர்ச்சிவசப்படும் மனிதர்களையும், நடுத்தரமான திறமை உள்ளவர்களையும், ஒழுக்கம் மற்றும் நேர்மை இல்லாதவர்களையும் குறிக்கும்.

கட்டை விரல் போன்று மற்ற விரல்களின் அமைப்புகளும் நமது குணாதிசயங்களை, பலாபலன்களை எடுத்துரைக்கும். அதுபற்றி அடுத்த இதழில் காண்போம்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism