பிசினஸில் ஜெயிக்க ஜோதிடத்தின் டிப்ஸ்!காந்தி முருகேஷ்வர்
'தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்; தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்’ என்பது அனுபவ மொழி. புதிய தொழில் தொடங்குவதற்குமுன், தொழிலை கற்றுக்கொண்டு, அனுபவ அறிவால் திட்டமிட்டு செயல்பட்டால்தான் லாபம் கிடைக்கும். அதேபோல் திறமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சியும் வேண்டும். உழைப்பின்றி எந்த தொழிலிலும் எளிதாக வெற்றி பெற முடியாது.
அத்துடன் நமது ஜாதக நிலையும் நமக்குத் துணையாக இருக்கவேண்டும். ஜாதகப்படி நாம் என்ன தொழில் துவங்கலாம், நமக்கு லாபம் தரும் தொழில் என்ன, எந்த காலத்தில் தொழில் துவங்கினால் வெற்றிபெற முடியும் என்பதை அறிந்து செயல்படுவது சாலச் சிறந்தது.
ஜாதகத்தில் லக்னத்துக்கு 10ம் இடம் தொழில் ஸ்தானம். இந்த பத்தாம் இடத்தில் இருக்கும் கிரகங்கள், 10ம் இடத்துக்கு அதிபதியாய் திகழும் கிரகத்துடன் இணைந்த கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள், கூட்டு கிரகங் களின் பலத்தைப் பொறுத்து தொழில் அமையும். ஆக, 10ம் இடத்தின் நிலையைப் பொறுத்தே தொழிலில் வெற்றி, நிலையான தன்மை, லாபம் கிடைக்கும். 10ம் இடத்தின் அதிபதி ஆட்சி, உச்சம், கேந்திர, திரிகோண இடங்களில் இருந்தால்தான் அரசு அதிகாரியாகவும், புகழ்பெற்ற தொழில் அதிபராகவும் ஆக முடியும்.

பத்தாம் இடம்... 9 கிரகங்கள்!
சூரியன்: 10ம் இடத்தில் சூரியன் இருக்க அரசாங்க நன்மை கிடைக்கும். அரசியல், மருத்துவம், சமூக சேவை, மக்கள் சேவை, மின்னணு துறை ஆகியவை தொடர்பான பணி அமையும். பஞ்சு மில், துணி, ஆடை தயாரிப்பு நிறுவனங்களிலும் பணி செய்ய வாய்ப்பு அமையும்.
சந்திரன்: உணவு, திரவப்பொருட்கள் விற்பனை செய்தல், கடல் கடந்து செல்வது, வியாபாரம், வேளாண்மை தொழில், மக்களுக்கு உபதேசம் செய்தல், ஏற்றுமதி இறக்குமதி தொழில், பூமி, வீடு போன்றவற்றை சார்ந்த தொழில் யோகம் கிடைக்கும்.
செவ்வாய்: விவசாயம், ரியல் எஸ்டேட், நவீன பொறியியல் துறை, இரும்பு, நெருப்பு, மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள், தொல்பொருள் ஆய்வு, அரசு வேலை, காவல், ராணுவம், தீயணைப்பு துறை, மருத்துவம் சார்ந்த தொழில் அமையும்.
புதன்: பல்கலை வித்தகர், கணக்கர், தணிக்கை, எழுத்துப்பணி, மளிகை, சில்லறை வர்த்தகம், தரகு, ஒற்றர், புலனாய்வுத் தொழில், செய்தி மற்றும் தகவல் தொடர்பு, விண்வெளி, கல்வி, தபால் தந்தி, பதிப்பகம், கணிதம், சட்டம், பொறியியல், ஆலோசனை மையங்கள் நடத்துவது போன்றவை தொழிலாக அமையும்.
வியாழன்: கல்வித் துறை, ஆன்மிகம், நீதி, நிதி, சட்டம், தர்ம ஸ்தாபனம், அறநிலையத் துறை, தூதரகம், வங்கி, ஆலயப் பணி, மத போதனை, கடற்படை, மரபியல், யோகா, ஜோதிடம், பொருளாதாரத் துறை, உயிர் பாது காப்புப் பணி ஆகியவற்றைச் சார்ந்து உங்களின் தொழில் அல்லது உத்தியோகம் அமையும். குரு வலுப்பெற்றால், மன்னருக்கு ஒப்பான வாழ்க்கையும் அதற்கேற்ற தொழிலும் அமையும்.
சுக்கிரன்: பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், அழகுப் பொருட்கள், சொகுசுப் பொருட்கள் விற்பனை, வங்கி, வட்டி, ஆயுள் காப்பீடு, தரகுத் தொழில், நிதி, நீதித் துறை, இயல், இசை, நடனம், நாடகம், பாட்டு போன்ற கலைத்தொழில், கேளிக்கை, தங்கும் விடுதி, இனிப்பு, சுவையான உணவு சார்ந்த தொழிலகங்கள், கருவூலங்கள் ஆகியவற்றில் பணிபுரிய நேரிடும்.
சனி: பொறியியல், தொல்பொருள் ஆய்வு,சுரங்கப் பாதை, வெடிகுண்டு தயாரிப்பு, சுங்க இலாகா, உளவுத் துறை, கால்நடை, இறைச்சிக் கடை, கட்டட பணி, பழைய பொருள் வியாபாரம், ஆராய்ச்சி, ஆலோசனை, விமானத் துறை, வாயு பொருட்கள் விற்பனை, உணவு விடுதி, உரம் மற்றும் தோல் தொடர்பான கடின வேலைகள் அமையும்.
ராகு: ரசாயனப் பொருட்கள் விற்பனை, தொழுநோய் மருத்துவம், மாந்திரீகம் செய்தல், ராணுவம், காவல் துறை, புலனாய்வு துறை, வாகனம் ஓட்டுநர், சினிமாத் தொழில், பழைய பொருள்கள் விற்பனை, சட்டத்துக்கு புறம்பான தொழில் ஆகியவை சார்ந்த தொழில் அல்லது பணி அமையும்.
கேது: ஜோதிடம், மருத்துவம், ஆன்மிகம், சட்டத்துறை, தையல் கடை, மின் கம்பிகள் சம்பந்தமான தொழில், நூற்பாலை பணி, மதபோதகர், துறவறம், மந்திர சக்தியால் சிகிச்சை அளித்தல் போன்ற தொழில்கள் அமையும்.
இனி, யார் யாருக்கு அரசாங்கம் சார்ந்த தொழில் அமையும், எப்படியான ஜாதகக்காரர்கள் சொந்தத் தொழில் துவங்கலாம், கூட்டுத் தொழில் சரிப்படுமா என்பது குறித்த விவரங்களை அறிவோம்.
அரசாங்கத் தொழில் யாருக்கு?
குரு மங்கள யோகம் அதாவது குருவுக்கு கேந்திரம், திரிகோணத்தில் செவ்வாய் இருந்தால் அரசுப் பணிகள் எளிதாகக் கிடைக்கும். 10ம் அதிபதி பலம் பெற்றாலும், 10ம் அதிபதியுடன் குரு, சூரியன், சனி பலம் பெற்று அமைந்தாலும் அரசு வேலை கிடைக்கும். குரு, செவ்வாய் பலத்தைப் பொறுத்து மத்திய மாநில அரசு பணி, பதவி அமையும். செவ்வாயுடன் சனி சேர்க்கை பெற்று ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பட்டம் பெறுவதுடன் அதன் மூலம் உயர்பதவிகள் வாய்க்கும். குரு சந்திர யோகத்துடன் செவ்வாய் பலம் பெற்றால், அரசாங்க பதவி எம்.எல்.ஏ, எம்.பி ஆகும் யோகம் கிட்டும்.

சொந்தத் தொழில் வாய்க்குமா?
லக்னாதிபதி 10ம் இடத்தில் இருந்தால் சுய தொழில் செய்யலாம். 10ம் இடத்தில் குரு மற்றும் லக்னாதிபதி பலம் பெற்றிருந்தால், செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். 10ம் அதிபதி ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் 9, 11ம் அதிபதி இணைவு, சுபக் கிரக இணைவு... இப்படியான அமைப்பு இருந்தால் தலைசிறந்த தொழிலதிபர்களாக உருவாக வாய்ப்பு உண்டு.
கூட்டுத் தொழில் சரிப்படுமா?
கூட்டுத் தொழில் தொடங்க வேண்டும் என்றால் முதலில் கூட்டாளிகளின் ஜாதகத்தைக் கணக்கிட வேண்டும். அவர்களுடைய ஜாதக நிலையையும் நமது ஜாதக நிலையையும் பார்த்து, கூட்டுத் தொழிலில் இணைவதா, வேண்டாமா என்று முடிவு செய்வது நல்லது.
11ம் அதிபதி 3, 6, 8, 12ல் இருந்தாலும், சுபக்கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தாலும் நண்பர்கள், கூட்டாளிகளால் நன்மை பெற முடியாது. 10, 11ம் அதிபதி இணைவு, செவ்வாய் சேர்க்கை, சுபக்கிரகப் பார்வை இருந்தால்தான் கூட்டுத்தொழில் வெற்றியைத் தரும். 10ம் அதிபதி நீசம் பெற்றாலோ, 10ம் அதிபதி பாவக் கிரக சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தாலோ, பலன் இல்லை; தொழில் பாதிப்பு அடையும். 10ம் அதிபதி மறைவிடத்தில் (3, 6, 8, 12ல்) இருந்தாலும் விரயங்களை அதிகம் செய்வார்.
10ல் நின்ற கிரகம், 10ம் அதிபதியான கிரகம், செய்யும் தொழில் காரக கிரகத்தின் நிலையைக் கண்டறிந்து தொழில் செய்தல் வேண்டும். 6, 8ம் அதிபதி, பாவக் கிரகங்களுடன் தொழில் ஸ்தானத்தில் இணைந்து பார்த்தால், சுய தொழில் செய்யக்கூடாது.
தொழிலில் மேன்மை அடைய வழிமுறைகள்...
செய்யும் தொழிலுக்கு காரகத்துவமான கிரகத்தைக் கண்டறிந்து கிரகத்தை வலுப்படுத்திக் கொண்டால், தொழிலில் பணி உயர்வு, தொழில் லாபம் பெறலாம். 10ம் அதிபதி, லக்னாதிபதி வலுப் பெற்றிருந்தால் மட்டுமே சுயதொழில் செய்வது நல்லது.
10ம் அதிபதி, லக்னாதிபதி, ராசி அதிபதிகள் வலுப்பெறும் காலங்களிலும், நல்ல தசா காலங்கள் நடக்கும்போதும் தொழில் துவங்குவது லாபம் தரும்.
சொந்தத் தொழில் தொடங்குவதற்கு முன், ஜாதககப்படி லாபம் தரக்கூடிய தொழிலை தேர்ந்தெடுத்து, ராசியின் கோசார அடிப்படையிலும், லக்னத்தின் திசையை அறிந்தும் தொழில் தொடங்க வேண்டும்.
ஜாதகத்தில் 11ம் இடம் லாப ஸ்தானம். ஆகவே, 10ம் இடத்து கிரகநிலைகளுடன்,
11ம் இடத்தின் கிரக நிலைகளையும் ஆராய்ந்து செயல்பட்டால் தொழிலில் வெற்றி பெறலாம்.
3, 6, 8, 12ம் அதிபதிகளின் தசை மற்றும் ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகங்களின் தசை நடக்கும் காலங்களில் தொழில் துவங்காதீர்கள்.
அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமத்து சனி, ஏழரைச் சனி நடக்கும் காலங்களையும் தவிர்க்கவும்.
ஒவ்வொருவருக்கும் தசை மாறும்போது வாழ்க்கை, தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்படும். ஆகவே, நடப்பு தசை முடியும் தருணம் அல்லது அடுத்த தசை துவங்கும் காலத்தில் புதிய தொழில் துவங்குவதைத் தவிர்க்கவும்.
உயர்கல்வியைத் துவக்கும்போதே, ஜாதகத்தில் 10ம் இடத்தை ஆய்வு செய்து, உங்களுக்கு உகந்த தொழில் உத்தியோகத்தை கண்டறிந்து, அதற்கேற்ற கல்வியைத் தேர்ந்தெடுக்கலாம்.
தொழில் செய்யும் இடத்தில் கிழக்கு, வடக்கு நோக்கி அமர்வதும், ஈசான்ய மூலை, கன்னி மூலையில் பணப்பெட்டியை வைத்துக் கொள்வதும் சிறப்பு. அதேபோல் அவரவர் ராசிக்கு ஏற்ற வாசற்படி உள்ள திசையை நோக்கியபடி அலுவலக வாயிலையும் அமைத்துக்கொண்டால் தொழிலில் பெருத்த லாபத்தை அடையலாம்.