வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்
வீடு மனை குறித்தும் கட்டடங்கள் கட்டுவது குறித்தும் ஜோதிட சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட தகவல்களை சென்ற அத்தியாயங்களில் படித்தறிந்தோம். இந்த அத்தியாயத்தில் சகுனம் மற்றும் நிமித்தங்கள் என்ன சொல்கின்றன என்பதை விரிவாக அறிவோம்.
சர்வார்த்த சிற்ப சிந்தாமணி எனும் நூலில் கடவுள் வாழ்த்தை அடுத்து சிற்பர் இலக்கணம் என்று சிற்பியின் தன்மைகளைக் குறித்தும், தொடர்ந்து சகுனங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டைய நாட்களில் மக்கள் தாங்கள் செய்யப்போகும் நிகழ்ச்சிகளை தொடங்குமுன் குறிப்பாக திருமணத்துக்கும், வீடு கட்டுவதற்கும் நாள் கோள் நோக்கியும், பல்வகை நிமித்தங்களை ஆராய்ந்தும் செயல்பட்டுள்ளனர். இதில் நிமித்தங்கள் என்றால் என்ன, சகுனங்கள் என்றால் என்ன, அவற்றில் வகைப்பாடுகள் உண்டா, நிமித்தங்கள் மற்றும் சகுனங்களுக்கு என்னென்ன பலன்கள் என்பதையெல்லாம் நாம் அறிவது அவசியம்.
சகுனம் என்பது எதிர்பாராமல் நிகழ்வது; நிமித்தம் என்பது எதிர்பார்த்து பலனை அறிவது.
சகுனங்களின் வகைகளாக... மக்கள் வசிக்கும் இடங்களில் நிகழ்வது, காட்டில் நிகழ்வது, நீரில் நிகழ்வது, நிலத்தில் நிகழ்வது, வானில் நிகழ்வது, பகலில் நிகழ்வது, இரவில் நிகழ்வது என்றும் வகைப் பிரித்து பலன் கண்டனர். இத்தகைய சகுனங்களில் நல்லவையும் உண்டு தீயவையும் உண்டு. உதாரணத்துக்கு சிலவற்றை தெரிந்துகொள்வோம்.

சுவர் பல்லியின் ஒலி, மனையின் உச்சியில் அமர்ந்து குயில் கூவுவது, புதரில் சூழ்ந்திருக்கும் வண்டுகள் ரீங்காரம் செய்வது, முன் கைவளையும் தோள் வளையும் இறுக்கம் அடைதல், ஆயர்களின் குழலோசை இவை யாவும் நல்லன.
எட்டு திசைகளில் ஒன்றில் எரிநட்சத்திரம் விழுவதைப் பார்த்தல், பெரிய மரம் ஒன்றின் இலைகள் இல்லாத கொம்பு தீப்பிடித்து எரிதல், அச்சம் விளைவிக்கும் கூகை போன்ற பறவைகளின் ஒலி, இரவு வானத்தில் தும்பிகள் ஒலியெழுப்புவது, வீட்டில் ஏற்றப்படும் விளக்கு எரியாமல் அணைவது ஆகியன தீய சகுனங்களாகக் கருதப்பட்டன.
சகுனங்களைப் போன்று நிமித்தம் பார்த்து பலன் அடைந்த தகவலும் பண்டைய இலக்கியங்களில் உண்டு.
தலைவனைப் பிரிந்த தலைவி அவனது வருகைக்காகக் காத்திருக்கிறாள். இந்த நிலையில் அவளது பிரிவுத் துயரை போக்குவது போன்று நன்னிமித்தமாக பல்லி ஒலித்ததாம். அது அவளுக்கு ஆறுதல் தந்தது. அகநானூற்றுப் பாடல்களில் ஒன்றில் இப்படியான தகவல் காணக் கிடைக்கிறது.
இப்படி பல்லி, பறவையினங்கள் மூலம் நிமித்தம் கண்டது போன்று, விரிச்சி கேட்டல் என்ற வழக்கும் இருந்துள்ளது. 'விரிச்சி’ என்பது நல்ல சொல்லைக் குறிக்கும். விரிச்சி கேட்போர் வீட்டில் உள்ள வயதான பெண்கள், ஊரின் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சொல்வார்கள். அல்லது தங்களின் வீட்டில் மணல் பரப்பிய பந்தலில் அவர்கள் அமர்ந்திருக்க, ஊரார் அங்கு வந்து விரிச்சி கேட்பது உண்டு.
மணி ஒலித்துக்கொண்டிருக்க, நாழியில் (முகத்தல் அளவை பாத்திரம்) நெல் இட்டு நீரும் ஊற்றி, சிறிது முல்லைப் பூக்களையும் போட்டு கையில் ஏந்திய வண்ணம் விரிச்சியை (அசரீரியை) எதிர்பார்த்து நிற்பர். அப்போது காதில் விழும் சொற்களைக் கொண்டு, செய்யும் காரியத்தின் நன்மை தீமைகளை அறிந்தனர்.
விரிச்சி கேட்பது போன்றே

வேலன் கழங்கு குறிகேட்டல்' எனும் வழக்கமும் நடைமுறையில்

இருந்ததை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதில் குறிசொல்பவரை வேலனாகவே கருதினர். முருகக்கடவுளின் முன் சிறு பை ஒன்றில் கழற்றிக் காய்களைப் போட்டு வைத்திருப்பார்கள். வேலன் அதாவது குறிசொல்பவர், அந்த பையில் இருக்கும் காய்களை தன் கைகளால் அள்ளி எடுக்கும்போது நேரிடும் குறிப்புகளைக்கொண்டு நன்மைதீமைகளை அறிந்தனர்.
இவ்வாறு சகுனங்களாலும் நிமித்தங்களாலும் தீங்கு ஏற்படுமாறு நேர்ந்தால்,

படிமத்தான்' எனப்படும் ஜோதிடரான வேலனை அழைத்து பரிகாரம் செய்துகொண்டனர்.
வேலனின் இடத்தில்... அதாவது, இந்த இடம் பெரும்பாலும் வீட்டின் முற்றமாக அமைந்திருக்கும்; அதற்கு வெறியர் களம் என்றும் பெயர் உண்டு. அந்த காலத்தில் ஒரு பக்கத்தில் முருகனுக்கு உரிய சேவற்கொடியை நட்டுவைத்து பூமாலைகளுடன் அலங்கரித்து, தூபங்கள் காட்டி பூஜைகளும் செய்திருக்கிறார்கள். பலியிடுதலுடன் கூடிய இவ்வகை வழிபாடுகள் இரவுப்பொழுதில் நிகழ்ந்தனவாம். அதேபோல், குறமகளிர் முருகனுக்கு வெறியாட்டு எடுத்து வழிபட்ட நிகழ்ச்சியை முருகாற்றுப்படை விவரிக்கிறது. இன்றும் சிலர் புதுமனை புகுமுன் 'தச்சுக் கழித்தல்’ என்ற சடங்கினைச் செய்வது வழக்கத்தில் உண்டு.
இனி, சிற்ப சாஸ்திரம் கூறும் சகுன விளக்கங்கள் குறித்து அறிவோம்.
நல்ல சகுனங்கள்...
காக்கை இடமிருந்து வலமாக பறப்பது, பருந்து வலப்புறம் இருந்து இடப்புறமாக பறப்பது, இறைச்சியுடன் கூடிய கழுகு, பசு, தயிர் குடம், குழந்தையுடன் பெண், உணவுப் பொருள், சிவனடியார், ஜ்வாலையுடன் கூடிய நெருப்பு, நீர்க் குடம், அலங்கரிக்கப்பட்ட யானை
ஆகிய விஷயங்களை நல்ல சகுனங்களாகக் குறிப்பிடுகிறது சிற்ப சாஸ்திரம்.
தீய சகுனங்கள்..
கொள்ளிக்கட்டை விழுதல், பெருத்த காற்று, அவிழ்ந்த கூந்தல் உடைய பெண், நிர்வாண நிலையில் இருப்பவர், காலி மட்பாண்டம், எண்ணெயுடன் கூடிய பாண்டம், மூக்கு காது அறுபட்டவர், உறுப்பு குறைந்தோர்,உறுப்பு கூடியவர், கைம்பெண்கள், அதிக தீனி தின்பவன்... தீய சகுனங்களாம்.
மேலும், கட்டடம் அல்லது மனையின் உரிமையாளரும் கட்டட கலைஞரும் மனையில் போய் நிற்கும்போது ஏற்படும் நிமித்த பலன்களும் உண்டு.
உரிமையாளரும், கட்டட கலைஞரும் நிற்கும் இடத்துக்கு வலது பக்கமாக பல்லி செல்வது நல்லது. வலப்புறம் சென்று தொடர்ந்து இடப்புறமும் செல்லுமானால், உரிமையாளர் அரசுக்கும் ஆள்வோருக்கும் மிக வேண்டியவனாகவும் நல்வாழ்வு வாழ்பவனாகவும் திகழ்வார்.
அவர்கள் இருவரும் மனையில் நிற்கும்போது வெண்புறா, வெள்ளைப் பசு, வெள்ளை காளை ஆகியவற்றைக் காண்பதும் விசேஷம்.
படிமனையில் நிற்கும்போது எறும்புகள் சாரை சாரையாக செல்லாமல் தேங்கி நிற்பது, கரையான்கள் பரவியிருப்பது, வண்டுகள் கண்டபடி மண் பரப்பைத் துளைத்துக்கொண்டு இருப்பது, ஓணான் எதிரில் ஓடி வருவது போன்ற சகுனங்கள் நிகழ்ந்தால் மனைக்கோலுவதைத் தவிர்க்கவேண்டும்.
மேலும், மனையில் நிற்கும்போது குடியன், வலையன், சுடுகாட்டு ஆண், முடமானவன், செக்கு ஆட்டுபவன், அந்தகன் ஆகியோரைக் காண நேர்ந்தால் குடி சீரழியும். எனவே, மனைகோலுவதைத் தவிர்க்க வேண்டும்.
மனைக்கோலுதல் நிகழவேண்டிய நிலத்தைத் தோண்டிப் பார்க்கும்போது தவளை, அரணை, பல்லி, சிலந்தி, நண்டு ஆகியவை தென்பட்டால் வீடு சிறப்படையும். பசுவின் கொம்பு, பல தானியங்கள், செங்கல் பஞ்சலோகம் இவற்றுள் எது கிடைத்தாலும் செல்வம் மேன்மேலும் பெருகும். பொன், வெள்ளி, செம்பு இவற்றில் யாதொன்று அகப்பட்டாலும் நன்மையே. புதையல் கிடைத்தால் மிகப்பெரிய இன்பம் விளையும். இரும்பு, ஈயம், பித்தளை இவற்றில் ஏதேனும் ஒன்று கிடைத்தால் நற்பலன் குறைந்த அளவே விளையும். தோண்டிப் பார்த்த மனையில் உடும்பு, பாம்பு, தேன் கூடு, ஆமை, பூரான், வண்டு, ஆகியவை தென்பட்டால் வீடு தீவிபத்துக்குள்ளாகும்.
எறும்பு, தேள், கரையான், மரக்கட்டை, முட்டை, நகம், ரோமம், மண்டை ஓடு, எலும்பு இவற்றுள் ஏதேனும் தென்படுமாயின் பெருந்தீங்கு நேரிடும். கரியோ கட்டையோ தோன்றினால் பிணியும், உமி தோன்றினால் செல்வக்கேடும், விறகு தோன்றினால் குல அழிவும் நேரிடும் என்கிறது மனை நூல். கருங்கல்லோ, எலும்போ தென்பட்டால் மனைவிக்கு உயிர்ச் சேதமும், மனைக்கு உரியவருக்கு நோயும் நலிவும் ஏற்படும்.
ஆகவே, நிலத்தை அகழ்ந்து பார்க்காமல் வீடுகட்ட முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு ஆராயாமல் கட்டடம் கட்டிவிட்டால், அங்கு நடக்கும் தீய நிகழ்வுகளைக்கொண்டே கட்டப்பட்ட மனையின் எந்தெந்த பகுதியில் என்னென்ன குறை உள்ளது என்று உய்த்துணர முடியும் என்கிறது மனை நூல். அதுபற்றி தொடர்ந்து காண்போம்.
தொடரும்...