Published:Updated:

வீட்டு மனை விருத்தியாக...

மயன் சொல்லும் வழிமுறைகள்!வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வீட்டு மனை விருத்தியாக...

மயன் சொல்லும் வழிமுறைகள்!வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:

புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டத் துவங்கும் போது, அந்த நிலத்தை அகழ்ந்து ஆராய்ந்து பார்க்காமல், சட்டென்று கட்டடப் பணிகளை ஆரம்பித்துவிடக் கூடாது. ஒருவேளை நிலத்தின் குறைபாடுகள் என்னென்ன என்பது தெரியாமல் கட்டிமுடித்துவிட்டோம் என்றால், தொடர்ந்து நிகழும் சில நிகழ்வுகளைக் கொண்டு குறைபாடு களை அறிய முடியும் என்கிறது மனை நூல். 

புது வீட்டுக்குச் சென்ற பிறகு, மாடுகள் முன்பு போல் பால் கறக்கவில்லை என்றாலோ, அவை அடிக்கடி நோய்வாய்ப்பட்டாலோ, அந்த மனையில் கிழக்கு மூலையில் சிறு குழந்தையின் எலும்பு புதைந்திருக்க வாய்ப்பு உண்டு. புதுமனை புகுந்தபிறகு அரசாங்க கோபத்துக்கு ஆளாக நேர்ந்தால் தென் கிழக்கு மூலையில் குதிரை எலும்பு இருக்கும். மனைக்கு உரியவன் நித்ய நோயாளியாகத் துன்புற்றால்,  மனையின் தென்புறத்தில் யானையின் எலும்பு புதைந்திருக்க வாய்ப்பு உண்டு. துர்மரணம் ஏற்பட்டால், தென்மேற்கு பகுதியில் பன்றி எலும்பு இருக்கலாம் என்கிறது மனை நூல்.

மேலும், மனையின் மேற்குப் புறத்தில் எருதின் எலும்பு கிடந்தால், அந்த மனைக்குச் சொந்தக்காரர் பிறருக்கு ஆரூடம் சொல்லும் தொழிலில் இருப்பார். மனையில் எப்பகுதியிலாவது கழுதையின் எலும்பு இருக்க நேர்ந்தால், மனைக்குச் சொந்தக்காரர் தொடர்ந்து நாசத்தைச் சந்திப்பார். மனைக்கு வடக்கில் ஆட்டின் எலும்பு கிடக்குமானால் அண்டைஅயலாரின் விரோதம் நிகழும். வடகிழக்கு மூலையில் நாயின் எலும்பு கிடந்தால், இல்லத்தில் கலகம் தொடரும் என்கிறது மனைநூல். இங்ஙனம், நாம் தொடர்ந்து சந்திக்கும் நிகழ்வுகளைக் கொண்டு நிலத்தில் உள்ள குறைபாடுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

வீட்டு மனை விருத்தியாக...

வீடு கட்டத் துவங்குமுன், மனையை அளந்து அளவீடு செய்து, அதன் நான்கு மூலைகளிலும் முளைக்குச்சி அடித்து, அந்த நான்கையும் இணைக்கும்விதமாகக் கயிறு கட்டிவைப்பார்கள். அந்த இடத்தில் உரிமையாளருடன் கட்டடம் கட்டித் தருபவரும் இருக்கும் நிலையில்... கோழி ஒன்று கயிற்றைத் தாண்டி மனைக்குள் நுழைந்தால், மனையின் கிழக்குப் பக்கத்தில் ஏதேனும் ஒரு பறவையின் எலும்பு புதைந்திருக்குமாம்.

கயிற்றைத் தாண்டி பூனை நுழைந்தால், மனையின் தென்கிழக்கில் பூனையின் எலும்பு புதைந்திருக்கும். எருமை நுழைந்தால் நிலத்தின் வடகிழக்கில் முயலின் எலும்பும், கயிற்றை தாண்டி பசுமாடு உள்ளே வந்தால், நிலத்தின் மேற்கு பாகத்தில் ஒரு பசுவின் எலும்பு புதைந்திருக்கும். கழுதை உள்ளே வந்தால், நிலத்தின் வடமேற்கில் கழுதையின் எலும்பு புதைந்து இருக்கும். அறிமுகம் இல்லாத புதிய மனிதர் ஒருவர் கயிற்றைத் தாண்டி உள்ளே வந்தால், மனையின் மத்திய பகுதியான பிரம்ம ஸ்தானத்தில் மனித எலும்பு புதைந்து இருக்கும். இவ்வாறான விஷயங் களை அறிந்து, எளிய பரிகாரங்கள் மூலம் குறைகளை நிவர்த்தி செய்த பிறகு கட்டடப் பணியை ஆரம்பிக்கலாம்.

வீடு அமையவிருக்கும் இடத்தில் 6 அங்குல அளவு ஆழம் மண்ணை அப்புறப்படுத்திவிட்டு, வேறு மண்ணைப் பரப்பி, குறிப்பிட்ட இடத்தில் நவதானிய தாவரங்களை வளர்க்கவேண்டும். அவை வளர்ந்ததும் 7 நாட்கள் தொடர்ந்து பசுவும் கன்றுமாக சேர்த்து மேயவிட வேண்டும். இதன் மூலம் மனையின் குறைகள் நீங்கும்.

முற்காலத்தில் மக்கள் அடியார்களுக்கு உணவு அளித்தபிறகே தாங்கள் உண்ணும் வழக்கம் வைத்திருந்தனர். உணவு தயார் செய்ததும் காகத்துக்கு உணவு வைப்பார்கள். அதை எடுக்க வரும் காகம் கரைந்து தன் இனத்தை அழைக்கும். கூட்டமாக வரும் காகங்கள் கரையும் ஒலியின் மூலம் இனம் கண்டு அந்த இல்லத்துக்கு அடியார்கள் உணவருந்த வருவார்கள். காகங்கள் வீட்டின் அசுத்தங்களையும் சுத்தம் செய்துவிடும். இப்படித்தான் நம் முன்னோர் வகுத்துவைத்த ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருந்தது.

சகுன நிமித்தங்களும் அப்படித்தான்; அவர்கள், அனுபவித்து ஆய்ந்து சொன்ன உண்மை விளக்கங்கள் அவை. அவற்றைப் பின்பற்றிச் செயல்பட்டால், எதிர்பார்க்கும் பலனை அடையலாம். இனி, வாஸ்து குறித்து மய மதம் சொல்லும் சில விஷயங்களைக் காண்போம்.

மய மதத்தின்படி தேவர்களும், மனிதர்களும் எந்தெந்த இடத்தில் வசிக்கின்றார்களோ, அந்த இடங்கள் வஸ்து எனப்படுகின்றன. அந்த வஸ்துவனாது பூமி, பிரஸாதம், யானம், சயனம் என நான்கு வகையாகும். பூமியின் மீதுள்ள கட்டடங்களும் பிற பொருட்களும் வஸ்துவாகவே திகழ்கின்றன.

மய மதம் முதல் பாகம் 3வது அத்தியாயத்தில், கிரகிக்கத்தக்க பூமிகள் (நிலங்கள்), இகழத்தக்க பூமிகள், புகழத்தக்க பூமிகள் குறித்தான தகவல்கள் விவரிக்கப் பட்டுள்ளன.  

அதாவது, இடத்தின் (பூமி) நிறம், மணம், சுவை, வடிவம், திசை, ஒலி, தொடு உணர்ச்சி ஆகியவற்றின் தன்மைகளை அறிந்து, நல்ல இடத்தை தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்கிறது மய மதம்.

அனைவருக்கும் ஏற்புடைய நிலம்...

நிறம்: மஞ்சள், சிவப்பு, வெளுப்பு, கறுப்பு.

மணம்: தாமரைப்பூ, தானியம், பசு ஆகியவற்றின் மணத்துக்கு ஒப்பான வாசனை.

சுவை: கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, உப்பு, இனிப்பு.

வடிவம்: தெற்கு, மேற்குப் பகுதிகள் உயரமாகவும், கிழக்கு மற்றும் வடக்கு தாழ்வாகவும்

வீட்டு மனை விருத்தியாக...

அமைந்து, அங்கு நீரூற்றும் அமைவது சிறப்பு. திசை கோணலாக இல்லாமலும், நீள்சதுரமாகவும், சம அளவு உடையதாகவும் உள்ள நிலம் அனைவருக்கும் ஏற்றதாகும்.

மேலும் மனித எலும்பு, பாறை, புழு, புற்று, பொந்து, எறும்பு போன்றவை இல்லாமலும், சிறுமணல் நிறைந்ததும், மரங்களின் வேர்கள், பாழ்கிணறுகள், கூழாங்கற்கள், சாம்பல், உமி போன்றவை இல்லாததும், அனைத்து வகை விதைகளும் முளைக்கக்கூடியதுமான பூமி சகலருக்கும் நன்மை பயப்பதாகும்.

தவிர்க்கக்கூடிய நிலங்கள்...

ரத்தம், சவம், இறைச்சி, மீன், பறவை ஆகிய வற்றால் ஏற்படும் துர்நாற்றம் கொண்ட பூமி தகாதது. சபை, நாற்சந்தி, அரண்மனை (தற்கால அரசாங்க அலுவலகங்கள்) தோல் பதனிடும் இடம் அருகில் (மண்ணின் தன்மை, நீரின் தன்மை மாறிவிடும்) உள்ளவை, ஒழுங்கற்ற வடிவம் கொண்ட மனைகள், நான்கு புறமும் வழிகள் கொண்டது அல்லது தெளிவான வழி இல்லாத நிலம், பல பாதைகள் ஒன்றுசேரும் இடம், ஆகியன தவிர்க்கப்பட வேண்டும் என்கின்றன மயன் குறிப்புகள்.

'ஸங்கிரஹ விதி’ என்னும், பூமி தேர்வு முறையிலான மண் பரிசோதனை ஒன்றும் உண்டு. இது, மண் வளம் குறித்த தகவல்களைத் திரட்டுதல் தொடர்பானது. வீடு கட்டும் நிலத்தில் இருக்கும் மண்ணின் தன்மை, தாங்குதிறன், அதன் இயற்கையான கனிமக் குணங்கள் ஆகியவை குறித்து அறிய உதவும் தொழில்நுட்பம் பற்றியது எனலாம்.

'மேதாவியான ஸ்தபதியானவன் உருவம், நிறம், ஒலி முதலான குணங்களுடன் கூடிய பூமியில் முறையாக பூஜைகள் செய்து, மங்கள வாத்திய சப்தங்களுடன், 'இந்த பூமியில் வசிக்கக்கூடிய பூதங்களும், தேவதைகளும், ராட்சஸர்களும் இந்த பூமியிலிருந்து விலகி வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும். இந்த பூமியை நான் எடுத்துக்கொள்ளப் போகிறேன்’ என்று மந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்யவேண்டும்’ என்கிறார் மயன்.

இவ்வாறு பிரார்த்தனை செய்யப்பட்ட இடத்தை உழுது, பசுஞ்சாணம் கலந்த விதைகளை விதைக்கவேண்டும். அந்த இடத்தில் பசுக்கள், கன்றுகள், காளைகள் ஆகியவற்றை வளர்க்க வேண்டும். பசுக்களின் குளம்படி பட்டதும், அவற்றால் முகர்ந்துபார்க்கப்பட்டதுமான பூமி பரம பவித்திரமாகிறது. கன்றுகளின் வாயில் இருந்து சிந்திய நுரையாலும் பசுக்களின் பால்பெருக்கினாலும் அந்த பூமி சுத்தம் செய்யப் படுகிறது. கோமியத்தில் நனைந்தும், பசுஞ்சாணத்தில் மூழ்கியும், பசுக்களின் அசைவுகளால் மணம் பெற்றதுமான அந்த பூமி, பசுக்களின் குளம்படிகளால் கெளதுபந்தனம் (காப்பு கட்டுதல்) செய்யப்பட்டதாகிறது.

இத்தகைய பூமியில், ஜோதிட சாஸ்திரப்படி நிச்சயிக்கப்பட்ட சுபமுகூர்த்த சுபநாளில் வெள்ளை புஷ்பங்களால் பலிஹரணம் செய்ய வேண்டும் என்றும் மயன் அறிவுறுத்துகிறார். வீடு கட்டும்போது கவனிக்கவேண்டிய வேறொரு முக்கியமான அம்சமும் உண்டு. மனையில் ஜீவன் இருக்கிறதா என்று ஆய்ந்தறியவேண்டும்!

மனையின் ஜீவனை அறிவது எப்படி? அதுபற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

தொடரும்...