Published:Updated:

ராசிபலன்

பிப்ரவரி 17 முதல் மார்ச் 2 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

பிப்ரவரி 17 முதல் மார்ச் 2 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:

எதிர்நீச்சல் போடுபவர்களே!  

ராசிபலன்

லாப வீட்டில் சூரியன் நிற்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். மகளுக்கு திருமணம் ஏற்பாடா கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விலை உயர்ந்த ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். ராகு வலுவாக இருப்பதால், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பால்ய நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள்.

முக்கிய கோப்புகளில் கையெழுத் திடுவதற்கு முன்பாக சட்ட நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது. ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 12ல் மறைந்திருப்பதால், வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, முன்கோபம், ரத்த அழுத்தம், சகோதர வகையில் பிரச்னைகள் வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள், விற்றுத் தீரும். உத்தியோகத் தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள்.

போராடி வெற்றி பெறும் காலம் இது!

முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சுக்ரன், சப்தமாதிபதி செவ்வாய் மற்றும் கேது ஆகிய கிரகங்கள் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.

ஷேர் மூலமாக பணம் வரும். என்றாலும், ராசிநாதன் சுக்ரன் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால், வேலைச்சுமை, சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். கண்டகச் சனியும் தொடர்வதால், மனைவிக்கு ஹார்மோன் பிரச்னை, இடுப்பு வலி, தலைச்சுற்றல் வந்து நீங்கும். அவருடன் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும்.

சூரியனும் சாதகமாக இருப்பதால், பதவிகள் தேடி வரும். புது வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். குரு 3ல் தொடர்வதால், பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும்.

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்தி புதிதாக கொள்முதல் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும். உத்தியோகத் தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு.

புதிய பாதையில் பயணிக்கும் வேளை இது!

முற்போக்குவாதிகளே!

ராசிபலன்

உங்களின் பூர்வ புண்யாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் உங்கள் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். சூரியன் 9ம் வீட்டில் நிற்பதால், தந்தைக்கு நெஞ்சு வலி, முழங்கால் வலி வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். செவ்வாய் 10ல் நிற்பதால், புது பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.  

உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சனிபகவான் வலுவாக நிற்பதால், தைரியம் கூடும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்குப் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்களுக்காக பரிந்து பேசுவீர்கள்.

விட்டுக்கொடுத்துப் போவதால், வெற்றி பெறும் நேரம் இது!

மனசாட்சிப்படி நடப்பவர்களே!

ராசிபலன்

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புத்துணர்ச்சி பெருகும். கணவன்மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தைச் சரிசெய்வீர்கள். நீண்ட நாட்களாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். 8ல் சூரியன் நிற்பதால், பெற்றோரின் உடல் நலம் பாதிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். 3ம் வீட்டில் ராகு வலுவாக இருப்பதால், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள்.

ஜென்ம குரு தொடர்வதால், அவ்வப்போது பலவீனமாக உணர்வீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத் தில் உங்கள் ரசனைக்கேற்றபடி கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளப் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அலுவலக ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பலம்  பலவீனத்தை உணரும் காலம் இது!

துணிச்சல் மிக்கவர்களே!

ராசிபலன்

சுக்ரன் ஓரளவு சாதகமாக இருப்பதால், போராட்டங்களைச் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். பணவரவு உண்டு என்றாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். புது வேலை கிடைக்கும். புதன் 6ல் மறைந்திருப்பதால், தொண்டை வலி, சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்து நீங்கும். சூரியன் 7ல் அமர்ந்திருப்பதால், உடல் உஷ்ணம் அதிகமாகும். வேனல் கட்டி, அடிவயிற்றில் வலி வரக்கூடும்.

கணவன்மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ராகு 2ல் தொடர்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. பல் வலி, காது வலி, பார்வைக் கோளாறு வந்து நீங்கும். கேதுவும், செவ்வாயும் 8ல் நிற்பதால், சொத்துப் பிரச்னை விஸ்வ ரூபமெடுக்கும்.

வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். சகோதர வகையில் மனவருத்தம் ஏற்படும். எதிர்காலம் பற்றிய பயம் வரும். பழைய கடன் பிரச்னையால் அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள்.

வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். பங்குதாரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. உத்தியோகத்தில் வேலைச் சுமை இருந்துகொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்.

பக்குவமாகச் செயல்படவேண்டிய நேரம் இது!

வாரி வழங்கும் வள்ளல்களே!

ராசிபலன்

குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். டி.வி, ஃப்ரிஜ் புதிதாக வாங்குவீர்கள். தூரத்துச் சொந்தங்களால் ஆதாயம் உண்டு. சூரியன் 6ல் நிற்பதால், பேச்சில் கம்பீரம் பிறக்கும்.

அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், உற்சாகமடைவீர்கள். வீட்டில் தள்ளிப் போன சுப காரியங்கள் ஏற்பாடாகும். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். ராசிக்குள் ராகு நிற்பதால், யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திடாதீர்கள்.

வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்குவீர்கள். வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதித்துச் செயல்படுவார். எப்போதும் உங்களை எதிரியாக நினைத்து செயல்பட்டு வந்த சக ஊழியர்கள், வலிய வந்து நட்புறவாடுவார்கள்.

தொலைநோக்குப் பார்வையால் சாதிக்கும் தருணம் இது!

களங்கமில்லாத பேச்சுக்குச் சொந்தக்காரர்களே!

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட யோசனைகள் மனதிலே உதிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். 5ல் சூரியன் நிற்பதால், பிள்ளைகள் கோபப்படுவார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ராசிநாதன் சுக்ரன் 6ல் மறைந்திருப்பதுடன், கேதுவுடன் சேர்ந்து நிற்பதால், சளித் தொந்தரவு, தொண்டை வலி, காய்ச்சல், வேலைச்சுமை, வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், கவனம் தேவை. கேது 6ல் நிற்பதால், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டு நிறுவனத்தில் சிலருக்கு வேலை கிடைக்கும். பாதச் சனி தொடர்வதால், பல் வலி வந்து நீங்கும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்த புதிய சலுகைகளை அறிமுகப் படுத்துங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.

தன் கையே தனக்கு உதவி என்பதை உணரும் வேளை! இது.

சொன்ன சொல் தவறாதவர்களே!

ராசிபலன்

குருபகவான் வலுவாக இருப்பதால், நினைத்த காரியங்கள் நிறைவேறும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் கல்யாணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 5ல் நிற்பதால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. புதன் சாதகமாக இருப்பதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். நீண்ட நாட்களாகச் சந்திக்க வேண்டுமென்று நினைத்த உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

சுக்ரன் சாதகமாக இருப்பதால், மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீட்டை அழகுபடுத்து வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஜென்மச் சனி தொடர்வதால், செரிமானக் கோளாறு, நெஞ்சு எரிச்சல்  வந்து நீங்கும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துகொள்வது நல்லது. வியாபா ரத்தில் புது தொடர்பு கிடைக்கும். நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

தொட்ட காரியம் துளிர்க்கும் நேரம் இது!

மனவலிமை மிக்கவர்களே!

ராசிபலன்

3ம் வீட்டில் சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால், பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். தடைப்பட்ட வேலைகள் முழுமையடையும். கணவன்மனைவிக்குள் அந்நி யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வர். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மூத்த சகோதரிக்கு திருமணம் முடியும். புதன் சாதகமாக இருப்பதால், பணவரவு அதிகரிக்கும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுவார்கள். அவர்களிடம் அளவாகப் பழகுவது நல்லது. சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், ஆடை, ஆபரணம் சேரும். புது வண்டி வாங்குவீர்கள். ராசிநாதன் குருபகவான் 8ல் தொடர்வதால், வீண் விரயம், தாழ்வுமனப்பான்மை போன்றவை வந்து நீங்கும்.

ராசிக்கு 4ல் கேதுவும், 10ல் ராகுவும் நிற்பதால், ஏமாற்றம், வீண் பழி, ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை வந்து செல்லும். உடல் ஆரோக்கியமும் சிறிதளவு பாதிக்கப்படக்கூடும்.

வியாபாரத்தில் உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகா ரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

அனுபவ அறிவால் வெற்றி பெறும் வேளை இது!

தயாள குணம் கொண்டவர்களே!

ராசிபலன்

கேதுவும், செவ்வாயும் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், குழம்பியிருந்த உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள்.

பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்த வர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால், மழலை பாக்யம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வாகன வசதி பெருகும்.

சூரியன் 2ல் நிற்பதால், யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். தந்தைவழி உறவுகளால் பிரச்னைகள் உண்டாகும். பார்வைக் கோளாறு வந்து நீங்கும். வழக்கில் அவசரம் வேண்டாம்.

வியாபாரத்தில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

விடாமுயற்சியால் இலக்கை எட்டும் வேளை இது!

லட்சியக் கனவுடன் வாழ்பவர்களே!

ராசிபலன்

சுக்ரன் சாதகமாக இருப்பதால், இனி எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. நல்ல செய்தி உண்டு. நவீன மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், நீண்ட நாளாகத் தள்ளிப் போன சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். நட்பு வட்டம் விரியும். ராசிக்குள் சூரியனும், 2ல் செவ்வாயும் நிற்பதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் உஷ்ணம், கண் எரிச்சல் வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும்.

உடன்பிறந்தவர்களால் அலைச்சல் வரும். வாகனம் பழுதாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குரு 6ல் மறைந்திருப்பதால், வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னை, எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்து செல்லும்.

வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.  சிறிய அளவில் பதவி உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு.

காத்திருந்து காய் நகர்த்தும் காலம் இது!

கற்பனைவாதிகளே!

ராசிபலன்

ராசிநாதன் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், பணம் வரும். வி.ஐ.பி.களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். உறவினர்கள், நண்பர்கள் வகையில் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

12ல் சூரியனும், ராசிக்குள் செவ்வாயும் நிற்பதால், முன்கோபம், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் சிலநேரங்களில் மனத்தாங்கல் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் நிதானம் அவசியம். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், வீண் சந்தேகம், மனைவிக்கு அறுவைச் சிகிச்சை, எதிர்மறை எண்ணம், காய்ச்சல், அசதி வந்து நீங்கும்.

புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தி யோகத்தில் பெரிய பொறுப்புக்கள் தேடி வரும். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

சத்தமில்லாமல் வளரும் வேளை இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism