Published:Updated:

ராசிபலன்

‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்மார்ச் 3 முதல் 16 வரை

ராசிபலன்

‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்மார்ச் 3 முதல் 16 வரை

Published:Updated:
ராசிபலன்

அதிமேதாவியாக இருந்தாலும் அமைதியாகக் காய் நகர்த்துபவர்களே! 

ராகு 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உறவினர்கள் உங்கள் ஆலோ சனையை ஏற்பார். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். கோயில் விழாக்களுக்கு நன்கொடை வழங்குவீர்கள். 14ம் தேதி வரை சூரியன் 11ம் வீட்டில் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு. புது பொறுப்புக்கள் தேடி வரும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 15ம் தேதி முதல் சூரியன் 12ல் மறைவதால், அலைச்சல், திடீர் பயணம், முன்கோபம் வந்து செல்லும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 12ல் நிற்பதால், மனஇறுக்கம், செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகத் தொந்தரவுகள் வந்து போகும்.

இழுபறி நிலை மாறி ஏற்றம் பெறும் தருணம் இது.

ராசிபலன்

பனி, மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்களே!

புதன் சாதகமாக இருப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள்.

செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால், பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

வீடு கட்ட லோன் கிடைக்கும். ராசிநாதன் சுக்ரன் 13ம் தேதி முதல் கேதுவை விட்டு விலகுவதால், ஆரோக்கியம் சீராகும். பழுதான வாகனம், மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். கண்டகச் சனி தொடர்வதால், கணவன்மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதியாகும். உதாசீனப்படுத்திய உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.

புது பொறுப்பும், வாய்ப்புகளும் கதவைத் தட்டும் தருணம் இது.

ராசிபலன்

தன்னை எதிர்ப்பவர்களுக்கும் நல்லதே செய்பவர்களே!

செவ்வாய் 10ல் நிற்பதால், உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக் கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் உறவினர், நண்பர்கள் மத்தியில் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். நிலப் பிரச்னைகள் தீரும்.

15ம் தேதி முதல் சூரியன் 10ல் நுழைவதால், புது பதவிகள் கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தாய்வழியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் உங்களை ஆதரிப்பார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும்.

அனைவராலும் மதிக்கப்படும் நேரம் இது.

ராசிபலன்

உதவும் கரங்கள் உடையவர்களே!

ராகு வலுவாக அமர்ந்திருப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். தடைப்பட்ட வேலைகளை வி.ஐ.பி.களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டில் இருப்பவர் களால் அனுகூலம் உண்டு. சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், அழகு, ஆரோக்கியம், தைரியம் கூடும்.

பணப் பற்றாக்குறையை சாமர்த் தியமாகச் சமாளிப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். புதன் சாதகமாக இருப்பதால், நட்பால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சூரியன் சாதகமாக இல்லாததால், மறைமுக எதிர்ப்புகள், காரியத் தாமதம், வீண் டென்ஷன், செலவுகள், தந்தையுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.

அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 5ல் சனி தொடர்வதால், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். வியாபாரத் தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களுடன் பிரச்சனைகள் வெடிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப் படுவீர்கள்.

சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறும் நேரம் இது.

ராசிபலன்

விழுவதெல்லாம் எழுவதற்கே என நினைப்பவர்களே!

7ல் புதன் நிற்பதால், ஓரளவு நிம்மதி கிட்டும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள்.

கேது, செவ்வாய் மற்றும் சூரியனின் போக்கு சாதகமாக இல்லாததால், வாகன விபத்து, வீண் டென்ஷன், அலைச்சல், குழப்பம் ஏற்படக்கூடும். மனைவியுடன் மோதல்கள் வந்து நீங்கும். முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். ராகு 2ல் தொடர்வதால், குடும்பத்தில் சலசலப்பு, கண் எரிச்சல், பேச்சால் பிரச்னைகள் வந்து போகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், பணப்பற்றாக்குறை, வீண் பழி வந்து செல்லும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும்.

முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய காலம் இது.

ராசிபலன்

கலங்கி வருபவர்களின் கண்ணீரைத் துடைப்பவர்களே!

14ம் தேதி வரை சூரியன் 6ம் வீட்டில் நிற்பதால், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். தாயாரின் உடல் நலம் சீராகும்.

மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆனால் 15ம் தேதி முதல் சூரியன் 7ம் வீட்டில் நுழைவதால், மனைவியுடன் கருத்து மோதல்கள், முன்கோபம், உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி வந்து நீங்கும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு.

விலையுயர்ந்த தங்க நகைகள் சேரும். செவ்வாய் 7ல் நிற்கும் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால், மனைவிக்கு மருத்துவச் செலவுகள், சொத்துப் பிரச்னைகள், சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். 3ம் வீட்டில் சனியும், 11ல் குருவும் வலுவாக இருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டில் இருப்ப வர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

மனோபலத்தால் வெற்றி பெறும் காலம் இது

ராசிபலன்

சுற்றுப்புறச் சூழலுக்குக் கட்டுப் படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்களே!

கேது வலுவாக இருப்பதால், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 14ம் தேதி வரை சூரியன் 5ல் நிற்பதால், பிள்ளைகளால் செலவுகள் வரும்.

15ம் தேதி முதல் சூரியன் 6ம் வீட்டில் செல்வதால், திடீர் திருப்பம் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

12ம் தேதி வரை ராசிநாதன் சுக்ரன் 6ல் மறைந்திருப்பதால், டென்ஷன், மனைவியுடன் மனஸ்தாபம், வாகனப் பழுது வந்து போகும். 13ம் தேதி முதல் சுக்ரன் கேதுவை விட்டு விலகி 7ல் அமர்வதால், சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன்மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். ஏழரைச் சனி தொடர்வதால், யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும்.

அறிவைப் பயன்படுத்தி முன்னேறவேண்டிய வேளை இது.

ராசிபலன்

ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே!

ராகு வலுவாக இருப்பதால், உங்கள் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புதன் சாதகமாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். குருபகவான் வலுவாக இருப்பதால், தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். மழலை பாக்யம் கிடைக்கும். 13ம் தேதி முதல் சுக்ரன் 6ல் மறைவதால், தொண்டை வலி, சளித் தொந்தரவு, சிறுசிறு விபத்துகள், வீண் செலவுகள் வந்து போகும். கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

14ம் தேதி வரை 4ம் வீட்டில் சூரியன் நிற்பதால், அரசு காரியங்கள் உடனே முடியும். ஜென்மச் சனி தொடர்வதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பழைய பகை, கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். ராசிநாதன் செவ்வாய் 5ல் நிற்கும் கேதுவுடன் சேர்ந்திருப்பதால், முடிவுகள் எடுப்பதில் குழப்பம், தடுமாற்றம், முன்கோபம் வந்து செல்லும். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புது ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் திறமைகளை அறிந்துகொள்வார்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.

கடின உழைப்பால் முன்னேறும் தருணம் இது.

ராசிபலன்

தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணுபவர்களே!

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் தொடர்பு கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். செவ்வாயும் சாதகமாக இருப்பதால், வீடு, மனை வாங்குவது லாபகரமாக முடியும்.  

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்வார்கள். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். குரு பலவீனமாக இருப்பதால், இனம்தெரியாத கவலைகள், சோர்வு வந்து நீங்கும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால், மனக்குழப்பம், திடீர்ப் பயணம், தலைச்சுற்றல் வந்து போகும்.

ஏழரைச் சனி தொடர்வதால், கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். தூக்கம் குறையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். சில சலுகை திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயரும். சம்பளம் கூடும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.

மாறுபட்ட யோசனையால் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

அருகில் இருப்பவர்களின் குறை, நிறைகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே!

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. குருபகவான் சாதகமாக இருப்பதால், புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று, காணிக்கை செலுத்துவீர்கள்.

பூர்வீக சொத்து கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ராசிக்கு 3ம் வீட்டில் கேது நிற்பதால், அண்டை மாநிலத்தவர்கள், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

14ம் தேதி வரை சூரியன் 2ல் நிற்பதால், கண் வலி, பணப் பற்றாக்குறை வந்து செல்லும். வெளி வட்டாரத்தில் தனிநபர் விமர்சனங்களை தவிர்க்கப்பாருங்கள். 15ம் தேதி முதல் 3ம் வீட்டில் சூரியன் நுழைவதால், தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்கள்.

தன்னம்பிக்கையால் தலைநிமிரும் தருணம் இது.

ராசிபலன்

காலச்சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் தன்னை மாற்றிக் கொள்பவர்களே!

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால்,  எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். எதிர்பார்த்த பணம் வரும். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்வார்கள். அரை குறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க பணம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

ராசிக்கு 2ல் செவ்வாயும், கேதுவும் இருப்பதால், சேமிப்புகள் கரையும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. சகோதரரின் வருங்காலம் குறித்த கவலை வந்து நீங்கும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சூரியனால் கண், பல் மற்றும் வயிற்று வலி, முன்கோபம் வந்து செல்லும்.

குரு 6ல் மறைந்திருப்பதால், சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயல்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொண்டு லாபம் ஈட்டப் பாருங்கள். வேலையாட்கள், பங்குதாரர்களிடையே சலசலப்பு வந்து நீங்கும். உத்தியோகத்தில் வேலைச் சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும்.

தட்டு தடுமாறி கரையேறும் வேளை இது.

ராசிபலன்

அழுத்தமான கொள்கையாலும், ஆழமான பேச்சாலும் அடுத்தவர்கள் மனதில் இடம் பிடிப்பவர்களே!

ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டுக்கு மாறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால், பணவரவு திருப்தி தரும்.

ராசிக்குள் செவ்வாய் நிற்பதால், பணம் பலவழிகளில் வந்தாலும் பற்றாக்குறைதான் நீடிக்கும். உடன்பிறந்தவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். சூரியனால் மனஉளைச்சல், வீண் டென்ஷன், அடிவயிற்றல் வலி, தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கேதுவும் ராசிக்குள் நிற்பதால், வெறுப்பு, விரக்தி வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் காலம் இது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism