Published:Updated:

மாணவர்கள், அதிக மதிப்பெண்களுடன்...

தேர்வில் வெற்றிபெற ஜோதிட வழிகாட்டல்!ராம்திலக்

மாணவர்கள், அதிக மதிப்பெண்களுடன்...

தேர்வில் வெற்றிபெற ஜோதிட வழிகாட்டல்!ராம்திலக்

Published:Updated:

தேர்வு காலம் துவங்கிவிட்டது. பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்கள், அதிக மதிப் பெண்களுடன் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.   

10ம் வகுப்பு மற்றும் 2 மாணவர்களுக்கு, அவர்களது எதிர் காலத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்த தேர்வுகாலம்... அதாவது மார்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களும் எப்படி அமையப் போகின்றன? கோசாரப்படி நவகிரகங்களும் அவர்களுக்கு பக்க பலமாக இருக்குமா அல்லது பலவீனமாக அமையுமா? பலவீனமாக அமைந்தால்

பரிகாரம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கெல்லாம் தீர்வாக, மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரு ராசிகளைச் சார்ந்த மாணவர்களுக்கும், ஜோதிட அடிப்படையிலான விளக்கங்களை, எளிய வழிகாட்டல்களைப் பார்ப்போமா?

முதலில் படிப்புக்கு அடிப்படையாக ஜோதிடம் விவரிக்கும் சில கிரக நிலைகளை அறிவோம்.

ஜாதகத்தில் 4ஆம் இடம் என்பது பள்ளிப் படிப்பையும், 9ஆம் இடம் என்பது உயர் கல்வியையும் குறிக்கும் ஸ்தானங்கள் ஆகும். புதன் வித்யாகாரகன் ஆவார். குரு பகவான் மூளைக்கும் பேரறிவுக்கும் காரகன் ஆவார்.

ஆக 4ஆம் இடமும், 4ஆம் வீட்டோனும், புதனும், குருவும் வலுப்பெற்ற ஜாதகர்களுக்குப் பள்ளிப்படிப்பு சிறப்பாக அமையும். எல்லாப் பாடங்களிலும் 60 சதவிகிதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று, பள்ளியிலும், மாவட்ட அளவிலும் அல்லது மாநில அளவிலும் முதலிடம் பெற வாய்ப்பு உண்டு.

மாணவர்கள், அதிக மதிப்பெண்களுடன்...

4ஆம் இடம் வலுக்குறைந்து, 4ஆம் வீட்டோனும் வலுக்குறைந்து (நீசம், பகை, அஸ்தமனம்), 4ஆம் இடமானது பாவக் கிரகங்களின் சேர்க்கைப் பெற்று, 4ஆம் இடத்துக்கு முன்னும் பின்னும் பாபக் கிரகங்கள் பாபகர்த்தரி யோகத்துடன் இருந்தால், பள்ளிப் படிப்பே சரியாக இல்லாமல் போய்விடும். படிப்பைப் பாதியிலேயே முடித்துக்கொள்ளவும், குடும்ப நிலை காரணமாகவும், படிப்பு சரியாக வராமல் போவதாலும் சிறு வயதிலேயே வேலைக்குச் சென்று பொருள் திரட்டவேண்டிய சூழல் உண்டாகும்.

9ம் இடம், 9ம் வீட்டோன், புதன், குரு ஆகியோர் வலுப்பெற்ற ஜாதகர்களுக்கு உயர் கல்வி நன்கு அமையும். பள்ளிக் கல்வியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜாதகத்தில் 9ஆம் இடமும் 9ஆம் வீட்டோனும் வலுக்குறைந்து இருந்தால், உயர் கல்வியில் சோபிக்க முடியாது திணறவேண்டி வரும்.

பொதுவாக லக்னம், 4, 9 ஆகிய இடங்கள் வலுப்பெற்று புதனுக்கும் குருவுக்கும் அதிபலம் இருப்பவர்களுக்கே பள்ளிப் படிப்பும், கல்லூரிப் படிப்பும் நன்கு அமையும். 2ஆம் இடம்

தன ஸ்தானமும், வாக்கு ஸ்தானமும் ஆகும். 5ஆம் இடம் என்பது பூர்வ புண்ணியம், புத்தி, யூக சக்தி ஆகியவற்றைக் குறிப்பிடும். 10ஆம் இடம் தொழில் ஸ்தானமாகும். 11ஆமிடம் ஆதாய ஸ்தானமாகும். அதாவது லக்னம், 2, 4, 5, 10, 11ஆம் இடங்களில் எந்த இடம், எந்தக் கிரகம் அதிக பலம் பெற்றிருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கான படிப்பைத் தேர்வு செய்வதன் மூலம் கல்வியில் ஜொலிக்க முடியும்.

நிகழும் 2015ம் வருடம் மார்ச் மாதம் துவங்கவுள்ள தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் யோகம், கோசாரப்படி மிதுன, கன்னி, விருச்சிக, மகர, மீன ராசிக்காரர்களுக்கு அமையும்.

மேலும், அவரவர் ஜாதகப்படி லக்னம், 2, 4, 5, 9, 10, 11ம் இடத்து அதிபர்கள் வலுத்து, அவர்களது தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறும் ஜாதகர்களும் இந்த தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற வாய்ப்பு உண்டாகும். ஜாதக பலமே இன்றியமையாதது. ஜாதகத்தில் புதன், குரு ஆகியோர் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்றிருப்பது விசேஷமாகும். 2, 4, 5, 9, 10,  11ஆம் வீட்டு அதிபர்களும் பலம் பெற்றிருந்தால் விசேடமான நன்மைகள் உண்டாகும்.

இனி, ஒவ்வொரு ராசிக்குமான பலாபலன்களைத் தெரிந்துகொள்வோம்.

மாணவர்கள், அதிக மதிப்பெண்களுடன்...

சனி வழிபாடு

சந்தோஷம் தரும்!

மேஷ ராசிக் காரர்களுக்கு 4ல் குரு, பள்ளிக் கல்வி ஸ்தானத்தில் இருப்பது நல்லது. புதனும், சூரியனும்கூட அனுகூலமான நிலையில் இருப்பதால், பள்ளிக் கல்வியில் வெற்றி பெற முடியும். என்றாலும், சனி 8ல் இருப்பது சிலாக்கியம் ஆகாது. இதனால், குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். சோர்வும் மனதில் கவலையும் உண்டாகும். சோர்வை அகற்றிச் சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது.

கெட்ட நண்பர்களின் தொடர்பை விலக்கவும். படிப்பில் அதிக கவனம் செலுத்தினால், தேர்ச்சி பெற்றுவிட முடியும். சனிக்கிழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவது நல்லது. உடல் நலம் சீராக அமைய முருகனையும் வழிபடவும். அதேபோல், ஹனுமன் சாலீஸா சொல்வதும் கேட்பதும் நல்லது. கல்லூரிகளில் படிப்பவர்கள் வெற்றி பெற, அதிகம் சிரமப்பட வேண்டிவரும். அரியர்ஸ் வைக்க நேரலாம். ஜாதக பலம் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை.

துர்கையின் திருவருள் துணை நிற்கும்!

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பலம் இல்லை. 5ஆம் இடமான புத்தி ஸ்தானத்தில் ராகு இருப்பதும் விசேஷமாகாது. சனி ஜன்ம ராசியைப் பார்ப்பதும் குறை ஆகும். இதனால் சோர்வு, கவனமின்மை, மறதி ஆகியவை ஏற்படும். விசேஷமான வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. என்றாலும், படிப்பில் அதிக கவனம் செலுத்தினால், ஓரளவு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறலாம். குரு 9ம் இடத்தையும், 9ம் வீட்டோன் சனியையும் பார்ப்பதால், உயர்கல்வியில் வெற்றி காணமுடியும்.

டெக்னாலஜி சம்பந்தப்பட்ட படிப்பு சிறப்பாக அமையும். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறை சார்ந்த படிப்பும் நன்கு அமையும். ஆராய்ச்சி மாணவர்களது எண்ணம் ஈடேறும். கடல் சார்ந்த படிப்பிலும் வெற்றி காணலாம். ராகுவுக்குப் பிரீதி செய்வது அவசியமாகும்.  துர்கை அம்மனை வழிபடுவதன் மூலம் நலம் பெறலாம்.

சிறப்பான கல்வியாண்டு!

மிதுன ராசிக் காரர்களுக்கு குரு பலமும் புத பலமும் சிறப்பாக இருப்பதால் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வாய்ப்பு உண்டாகும். சனியும் சாதகமாக இருப்பது குறிப்பிடத் தக்கது. 4ல் ராகு இருப்பது ஒன்றே குறை. ராகுவுக்குப் ப்ரீதியாக துர்கை அம்மனை வழிபட்டால், அந்தக் குறையும் நீங்கிவிடும். பொதுவாகவே இந்த ராசிக்கு அதிபதி புதன் என்பதால், படிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். அதேநேரத்தில் விளையாட்டிலும் இசையிலும்கூட ஆர்வம் அதிகம் உண்டாகும். பிறருக்குப் பாடம் சொல்லித் தருவதில் கெட்டிக்காரர்கள். ஆன்மிகம், தியானம், யோகா ஆகியவை சம்பந்தப்பட்ட இனங்களிலும் ஈடுபாடு உண்டாகும். குறிப்பாக இந்தக் கல்வி ஆண்டு இவர்களுக்கு மிகச் சிறப்பாக அமையும். ஜாதக பலமும் கை கொடுத்தால், மிக அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிப் பெற முடியும். பலரது பாராட்டுகளும் கிடைக்கும்.

நினைவாற்றல் பெருக தியானம் அவசியம்!

கடக ராசிக்காரர்களுக்கு ஜன்ம குருவும், 5ல் சனியும் இருப்பது சிறப்பாகாது. மந்தப் போக்கே ஏற்படும். இடமாற்றம், நிலை மாற்றம் ஆகியவற்றால் படிப்பில் அதிக ஆர்வம் இல்லாமல் போகும். மேலும் மறதியும் ஏற்படும். படிப்பில் முழுக் கவனம் செலுத்தினால்தான் தேர்ச்சிப்

பெற முடியும் என்பதை உணர்ந்து, இதர விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியமாகும். ஆஞ்சநேயரையும், தட்சிணாமூர்த்தியையும் தொடர்ந்து வழிபடவும். அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. எழுதிப் பார்ப்பதன் மூலம் பாடம் மனதில் ஆழமாகப் பதியும்.

நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள தியானமும் யோகாவும் செய்வது சிறப்பாகும். குரு, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங் களைச் செய்துகொள்ளவும். ஜாதக பலம் இருக்குமானால் நிலைமையைச் சமாளித்து விடமுடியும். ஜாதக பலமும் இல்லாதவர்களுக்கே சங்கடங்கள் அதிகம் உண்டாகும்.

கவனமான செயல்பாடு வெற்றி தரும்!

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் தற்சமயம் சிறப்பாக இல்லாததால், எதிலும் ஆர்வம் இராமல் போகும். மனதில் ஏதேனும் சலனம் இருந்துவரும். உண்மையை மறைத்துப் பேச வேண்டிவரும். படிப்பு தடைபடும்; கவனம் சிதறும்.

தேர்வின்போது அதீத கவனத்துடனும் அக்கறையுடனும் செயல்பட்டால்தான் ஓரளவாவது வெற்றி காண முடியும். படிப்பில் முழுக் கவனம் என்பது அவசியமாகும். இதர பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்க்கவும். நல்லவர் அல்லாதவர்களின் நட்பு அடியோடு கூடாது. பெரியவர்களையும், ஆசிரியரையும் மதித்து நடப்பது அவசியமாகும். ஜாதக பலம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். கோசாரம் சாதாரணமாகவே உள்ளது. கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். ருத்ர ஜபம் செய்யலாம்; கேட்கலாம். உடல் நலனி லும் கவனம் தேவைப்படும் காலம் இது. எதிலும் அலட்சியம் கூடாது.

மூன்றில் சனி...

வெற்றி கனிந்து வரும்!

கன்னி ராசிக்காரர்களுக்கு குருவும் புதனும் சிறப்பாக இருப்பதாலும் சனி 3ல் உலவுவதாலும் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். படிப்பதில் இயற்கையாகவே ஆர்வம் உள்ள உங்களுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமையும். அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள். ஞாபக சக்தி கூடும். படித்ததை, ஆசிரியர் சொல்லிக் கேட்டதை நினைவு கூர்ந்து அதைத் திறம்பட வெளிப்படுத்தி வெற்றி காண்பீர்கள்.

எனினும், ஜன்ம ராசியில் ராகுவும் 7ல் கேதுவும் இருப்பது குறை ஆகும். சர்ப்ப சாந்தி செய்துகொள்வது நல்லது. நாக வழிபாடு நலம் தரும். காளஹஸ்தி சென்று வருவதும் சிறப்பு. நல்ல நண்பர்களை பெருக்கிக்கொள்வது நல்லது. தீய சகவாசம் வேண்டாம். அதேபோல், எதிலும் அவசரப் படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியம். புதன் உச்சம் பெறும் ராசியில் பிறந்த உங்களுக்கு தற்சமயம் கோசார பலம் சிறப்பாக இருப்பதால், வெற்றிக் கனியை எளிதில் பெறுவீர்கள்.

புதன் கிழமை திருமாலை வழிபடவும்!

துலாம் ராசிக்காரர்களுக்கு கோசாரப்படி குரு, சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால், பேச்சில் நிதானம் இருக்காது. கல்வியில் ஆர்வம் குறையும். எனினும் குருவும், யோக காரகன் சனியும் 4ம் இடத்தைப் பார்ப்பதால் பள்ளிப்படிப்பு சீராக அமையும். தேர்வில் அளவோடு வெற்றியும் கிடைக்கும். பொறியியல் சம்பந்தமான படிப்பில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். புதன் கிழமைகளில் திருமாலையும், விஷ்ணு துர்கையையும் வழிபடுவது நல்லது. ஹயக்ரீவர் ஸ்லோகம் சொல்வது சிறப்பாகும். வீண் வம்புகளைத் தவிர்க்கவும். இந்தக் கல்வியாண்டில் விவசாயம், கால்நடை சம்பந்தமான படிப்பு நன்கு வரும். அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறவும் வாய்ப்பு உண்டு. பரம்பரையாகச் செய்து வரும் தொழில் சம்பந்தமான படிப்பும் கைகொடுக்கும்.

மாணவர்கள், அதிக மதிப்பெண்களுடன்...

குரு பலம் துணை நிற்கும்!

விருச்சிக ராசிக் காரர்களுக்கு குரு, புதன் இருவரும் சிறப்பாக உலவும் நேரம் இது. படிப்பு நன்கு வரும். பள்ளிப்படிப்பு ஆனாலும், கல்லூரிப் படிப்பு ஆனாலும் வெற்றி காண முடியும். வெளிநாடு சென்று படிக்கும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு அமையும். அதற்கு ஜாதக பலம் கைகொடுக்க வேண்டும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், ஆராய்ச்சி சம்பந்தமான படிப்பு சிறப்பாகும். நிர்வாகத் துறை கல்வியும் சிறப்பானது.

தற்போது ஜென்ம ராசியில் சனியும், புத்தி ஸ்தானமான 5ல் கேதுவும் இருப்பது குறை ஆகும். சனிக்கும் கேதுவுக்கும் ப்ரீதி, பரிகாரங்களைச் செய்துகொள்ளவும். சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. வியாழக்கிழமைகளில் கணபதியைத் தொழுவது சிறப்பாகும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். என்றாலும் படிப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முடியும்.  

நவகிரக வழிபாடு நன்மை அளிக்கும்!

தனுசு ராசிக்காரர் களுக்கு, சோதனையான காலம் இது. படிப்பில் வெற்றி காண அரும்பாடுபட வேண்டிவரும். படிப்பில் தடையும், குறுக்கீடுகளும் உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். மனக்கவலையும் இருக்கும். இதனால் படிப்பில் ஆர்வம் குறையும்.

ஏழரைச் சனியில் விரயச் சனியின் காலம் இது என்பதாலும் அஷ்டமத்தில் குரு இருப்பதாலும் 4ல் கேது உலவுவதாலும் கவனக் குறைவு ஏற்படும். குடும்பத்தில் சதா பிரச்னைகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடியும் உண்டாகும். ஜாதகப்படி இந்த நேரத்தில் யோக பலனைத் தரக்கூடிய தசை, புக்திகள் நடந்தால்தான் படிப்பில் வெற்றி காணமுடியும். ஜாதக பலமும் இல்லாதவர்கள் கிரக வழிபாட்டிலும், இறை வழிபாட்டிலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. தகவல் தொடர்பு, போக்குவரத்து சம்பந்தமான படிப்பிலும் தேர்ச்சி பெறலாம். பெறமுடியும்.

இரட்டிப்பு வெற்றி உண்டு!

மகர ராசிக்காரர்களுக்கு, விசேஷமான காலம் இது. குரு, புதன், சனி செவ்வாய், கேது ஆகிய கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும் நேரம் இது என்பதால், கல்வியிலும் கேள்வியிலும் சிறந்து விளங்க முடியும். அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவும் சந்தர்ப்பம் சாதகமாக அமையும். கணிதம், விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், பூமி சம்பந்தமான இனங்கள், துணிச்சலான இனங்கள், ஆராய்ச்சித்துறை ஆகியவற்றில் வெற்றி காணலாம். மருத்துவத்துறையிலும் வெற்றி காணலாம். உடல்நலமும் மன நலமும் சிறப்பாக இருக்கும்.

எண்ணங்களில் மலர்ச்சி ஏற்படும். ஜாதக பலமும் சாதகமாக இருந்தால் இரட்டிப்பு வெற்றி கிடைக்கும். குறிப்பாக இந்தக் கல்வி ஆண்டு மகர ராசிக்கு விசேடமான நன்மைகளைத் தரும் என்பதில் ஐயமில்லை. பிரீதி, பரிகாரங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இயற்கையாகவே உங்களுக்கு வெற்றிகள் குவியும் நேரம் இது.

பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்க்கவும்!

கும்ப ராசிக்காரர்களுக்கு, சுமாரான நேரம் இது. ராசிநாதன் சனி 10ல் இருப்பதால் ஓரளவு வெற்றி கிடைக்கும். குரு, புதன் ஆகியோரது பலம் குறைவாக இருப்பதால், படிப்பதில் அதிக கவனம் தேவை. இதர பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்க்கவும். டெக்னாலஜி சம்பந்தமான படிப்பு பயன்படும். உடல் ஆரோக்கியக் குறைவால், படிப்பில் அதிக அக்கறை செலுத்த முடியாமல் போகும்.

குடும்பத்தில் நிகழும் சச்சரவுகளும் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும். பேச்சைக் குறைத்து, படிப்பில் கவனம் செலுத்தினால் ஓரளவாவது மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறமுடியும். விவசாயம், கலைத் துறை சம்பந்தமான படிப்பு கைகொடுக்கும். வெளிநாடு சென்று படிப்பவர்களுக்குத் தடைகளும், குறுக்கீடுகளும் ஏற்படும். நினைத்ததைப் பெற முடியாமல் போகும். ஜாதக பலம் சாதகமாக இருந்தால் மோசமான நிலை ஏற்படாது. ஜாதக பலமும் இல்லைபென்றால், அதிக மதிப்பெண்களைப் பெற இயலாமல் போகும். படிப்பு தடைப்படவும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அந்நியர்களின் தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது. கிரக வழிபாட்டிலும், இறை வழிபாட்டிலும் ஈடுபடுவது அவசியமாகும். சரஸ்வதி, ஹயக்ரீவர் ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

குருவருளும் திருவருளும் துணைபுரியும்!

மீன ராசிக்காரர் களுக்கு, விசேஷமான நேரம் இது. குரு பலம் கூடியிருக்கிறது. புத்திசாலித்தனம் பளிச்சிடும். கடல் சார்ந்த படிப்பு பயன்படும். திரவம், தண்ணீர் சம்பந்தப்பட்ட இனங்களிலும் வெற்றி காணலாம். பள்ளிக் கல்வி சுமாராகவே இருக்கும். உயர் கல்வியில் வெற்றி காணலாம். டெக்னாலஜி சம்பந்தமான இனங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறமுடியும்.

புதன், ராகு, கேது ஆகியோரது நிலை சிறப்பாக இல்லாததால், தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்படும். சர்ப்ப சாந்தி செய்துகொள்வது நல்லது. திருமாலை வழிபடவும். பிள்ளையாருக்கும், துர்கைக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடுவது நல்லது. குரு பலம் இருப்பதால் தடைகளையும், குறுக்கீடு களையும் கடந்து வெற்றி பெற குருவருளும் திருவருளும் துணைபுரியும். டென்ஷனையும் கோபத்தையும் குறைத்துக்கொள்ளவும். நன்கு படித்தவர்களிடம் உங்கள் சந்தேகங்களைச் சொல்லி, விளக்கம் பெறுவது நல்லது. ஆசிரியர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களை நம்பவேண்டாம். சுயமாக சிந்தித்துச் செயல்படுவது நல்லது. ராசி அதிபதி குரு வலுத்திருப்பதால், நீங்கள் எடுக்கும் முடிவு நல்ல விதமாகவே அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism