Election bannerElection banner
Published:Updated:

ஆரோக்கிய ரேகை!

உள்ளங்கையில் சில உண்மைகள்‘சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ரு மனிதனின் வாழ்க்கையில் செல்வமும் வசதிகளும், செல்வாக்கும் புகழும் எவ்வளவு அவசியமோ, அவற்றைவிட அவசியமானது தேக ஆரோக்கியம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என ஆன்றோர்கள் கூறியது, இதை வலியுறுத்தத்தான். 

நம் உள்ளங்கையில் உள்ள ஆரோக்கிய ரேகையானது, ஒருவரது உடல் ஆரோக்கியம் குறித்து நுணுக்கமான விஷயங்களையும் மிகத் தெளிவாக உணர்த்தும்.

ஆரோக்கிய ரேகை உள்ளங்கையில் எங்கு வேண்டுமானாலும், எந்த மேட்டில் இருந்தும் ஆரம்பமாகலாம். ஆனால், அது புதன் மேட்டில்தான் முடியும். அப்படி அது புதன் மேட்டில் முடிவுற்றால்தான், அதை ஆரோக்கிய ரேகை எனக் கூற முடியும்.

பொதுவாக, ஆரோக்கிய ரேகையானது குரு, சனி மற்றும் செவ்வாய்  மேடுகளில் துவங்கி, புதன் மேட்டில் முடிவடையும் (படங்கள் முறையே 1,2,3). சிலருக்கு ஆயுள் ரேகை, இருதய ரேகை, விதி ரேகை, மணிக்கட்டு ரேகைகள் ஆகியவற்றில் இருந்தும் ஆரம்பித்து புதன் மேட்டில் முடியலாம்.

இந்த ரேகையின் பலன்களைச் சொல்லும்போது, மிகவும் கவனமாகப் பார்த்துச் சொல்ல வேண்டும். ஏற்கெனவே நாம் பார்த்தபடி ஆயுள் ரேகை, இருதய ரேகை ஆகியவற்றின் அமைப்பையும், அவற்றில் உள்ள குறிகளையும், அவற்றால் தெரிவிக்கப்படும் உடல்நலம் பற்றிய பலன்களையும் ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்த்து, அதன் பிறகே ஆரோக்கிய ரேகைக்கான பலன்களைத் துல்லியமாகச் சொல்லவேண்டும்.

ஆரோக்கிய ரேகை!

ஆரோக்கிய ரேகை தெளிவாக, ஆழமாக, அறுபடாமல், ஒரே கோடாக அல்லது வளைகோடாக அமைந்தால், அது பரிபூரணமான உடல் பலத்தையும் சிறப்பான உடல் ஆரோக்கியத் தையும் குறிக்கும்.

ஒருவரது ஆரோக்கிய ரேகை பின்னல் அல்லது சங்கிலி போல் அமைந்திருந்தாலும், ஆங்காங்கே அறுபட்டிருந்தாலும், ஒழுங்கீனமாகவோ, இரட்டைக் கோடுகளாகவோ சென்றாலும், அது உடல் பலவீனத்தையும், அடிக்கடி நோய்வாய்ப்படும் தன்மையையும், ஆரோக்கியக் குறைவையும் எடுத்துக்காட்டும்.

சிலரின் உள்ளங்கைகளில் ஆரோக்கிய ரேகை இல்லாமல் இருக்கலாம். அதாவது, எந்த ரேகையும் புதன் மேட்டைத் தொட்டிருக்காது. இதற்கு தவறாக அர்த்தம்கொள்ளக்கூடாது. ஆரோக்கிய ரேகை இல்லாமல் இருப்பதும், ஒருவரது உடல் வலுவையும், புஷ்டியான தேக ஆரோக்கியத்தையும்தான் குறிக்கும். அவர்களுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்புச் சக்தியும், உடல் பலமும் மனோபலமும் இருக்கும்.

ஆரோக்கிய ரேகை இல்லாதவர்களுக்கு ஆயுள் ரேகை தீர்க்கமாகவும் பலமாகவும் இருக்கிறதா என்பதைப் பார்த்தே, மேற்கூறிய பலன்களைக் கூற வேண்டும்.

ஆரோக்கிய ரேகை மிக அகலமாகவும் நீளமாகவும் இருந்தால், அது பாதகமான பலனைக் காட்டும். அவருக்கு ஏதாவது ஒரு நீண்ட கால நோயால் உபாதை இருக்கும்.

பஞ்சாங்குலி என்பது நமது உள்ளங்கையைக் குறிக்கும். பஞ்ச என்றால் ஐந்து; அங்குலி என்றால் விரல். ஐந்து விரல்கள் கொண்ட நமது உள்ளங்கையில் உள்ள ரேகைகள்தான் நமது தோற்றம், குணாதிசயங்கள், செயல்திறன், அறிவுத்திறன், ஆற்றல் திறன், வாழ்க்கை முறை ஆகியவற்றை விளக்கும் சங்கேதங்கள்.

ஆரோக்கிய ரேகை!

ஒவ்வொருவர் உள்ளங்கையிலும் ஆதிபராசக்தியின் அம்சமான பஞ்சாங்குலி எனும் தேவதை வாசம் செய்கிறாள். அவளை விதி நாயகி என்று கூறினால் மிகையாகாது. இந்த தேவதையை உபாஸித்துதான் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் ஜோதிட, ஆரூட ரேகை சாஸ்திர வல்லுநனாக விளங்கினான் என்பது மஹாபாரத வரலாறு.

தோல்வி மனப்பான்மை, மனச்சோர்வு, செயலின்மை, சோம்பேறித்தனம் இவை நீங்கி, புதிய உற்சாகம், செயல்படும் திறன், தன்னம்பிக்கை, வெற்றிக்காக உழைக்கும் ஊக்கம் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொண்டு, 'தன் கையே தனக்குதவி’ என திட சித்தத்துடன் முன்னேறவும், ஓரளவு நமது எதிர்காலத்தை நாமே ஊகித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ளவும் பஞ்சாங்குலி தேவதை அருள்புரிகிறாள்.

அவள் அருளால் நாமும், நம் உள்ளங்கை உணர்த்தும் உண்மைகளை அறிந்து வருங்காலத்தை வளமாக்குவோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு