Published:Updated:

மன்மத வருட சனி பலன்கள் !

‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

மன்மத வருட சனி பலன்கள் !

‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

Published:Updated:

கரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி சனி ஆவார். கும்பத்தில் ஆட்சி, மூலத்திரிகோணம் பெறுவார். கும்பத்தில் முதல் 20 டிகிரிகள் மூலத்திரிகோண பலம் பெறுவார். துலாம் சனிக்கு உச்ச வீடாகும். ரிஷபம், மிதுனம், கன்னி நட்பு வீடுகளாகும். கடகமும்,  சிம்மமும், விருச்சிகமும் பகை வீடுகளாகும். மேஷ ராசியில் நீசமாவார். பலம் குறையும். சனி கொடிய பாபக்கிரகம் என்றாலும், நீதிமான் ஆவார். அவரவர் செய்த பாவச் செயல்களுக்குத் தக்க தண்டனையையும் துன்பதுக்க பலன்களையும் அளிப்பவர். 

சனி கோசாரப்படி அதாவது சந்திர ராசிக்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் நலம் புரிவார். சனி பலம் (ஜாதகத்திலோ, கோசாரத்திலோ) உள்ளவர்களுக்கு ஆயுள் பலம் கூடும். எண்ணெய் வகையறாக்கள், கறுப்பு நிறப்பொருட்கள், இரும்பு, எஃகுப் பொருட்கள், பழைய கச்சாப் பொருட்கள், பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்கள், கறுப்பு நிறத் தானியங்கள், ஆகியவை மூலம் ஆதாயம் கிடைக்கும்.

மன்மத வருட சனி பலன்கள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறுக்கு வழிகளில் பணம் சேரும். சனி பலம் இல்லாதவர்களுக்கு ஆயுள் பலம் குறையும். கெட்ட காரியங்களில் ஈடுபட நேரும். நரம்புத் தளர்ச்சி, வாத நோய், பால்வினை நோய், காச நோய், புற்று நோய் ஆகியவை ஏற்படும். நாலுகால் பிராணிகளால் சங்கடம் உண்டாகும்.

பிறருக்கு அடிமையாகத் தொழில் செய்ய வேண்டிவரும். கீழ்த்தரமான நீசத் தொழில்களில் ஈடுபட வைப்பார். பிறரை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்க நேரும். மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவான வேலைகளைச் செய்ய வேண்டிவரும். சனிக்கு அதிதேவதை யமதர்மராஜன் ஆவார். ஆஞ்சநேயர், ஐயப்பன் என்றும் சொல்லப்படுவதுண்டு. சனி பலம் குறைந்திருக்கும்போது, ஆஞ்சநேயர் மற்றும் ஐயப்பன் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதன் மூலம் நலம் உண்டாகும்.

இந்த மன்மத வருஷத்தில் கோசார ரீதியாக ஒவ்வொரு ராசிக்காரருக்கும் சனி பகவான் அளிக்கக்கூடிய பலாபலன்கள் என்னென்ன என்று விரிவாக அறிந்துகொள்வோம்.

சனி  சில தகவல்கள்:

அதிதேவதை : யமன்

திசை : மேற்கு

ரத்தினம் : நீலம்

கிழமை : சனி

எண் : 8

உலோகம் : இரும்பு

தானியம் : எள்

பாலினம் : அலி

மலர் : கருங்குவளை

     (கருநீலநிற சங்கு புஷ்பம்)

சமித்து : வன்னி

தசா காலம் : 19 வருஷங்கள்.

குணம் : தாமச குணம்.

நட்பு கிரகங்கள் : புதன், சுக்கிரன்

பகை கிரகம் : சூரியன், சந்திரன், செவ்வாய்

சமமான கிரகம் : குரு

மன்மத வருட சனி பலன்கள் !

உங்கள் ராசிக்கு 8ல் சனி உலவும் நேரம் இது. மன்மத வருடம் முழுவதும் சனியின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால், துன்பங்களும் துயரங்களும் ஏற்படும். செய்யாத குற்றத்துக்குத் தண்டனை பெற வேண்டிவரும். அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி என்பார்கள். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். எதிலும் அலட்சியம் கூடாது. மதிப்பையும் அந்தஸ்தையும் காத்துக் கொள்ளலாம். தொழில் ரீதியாகப் பிரச்னைகள் ஏற்படும். ஆதாயம் குறையும். என்னதான் உழைத்தாலும் அதற்கான முழுமையான பயன் கிடைக்காமல் போகும். மனதில் நிம்மதி குறையும். உடன்பிறந்தவர்கள் நலம் பாதிக்கும். தந்தை நலனிலும் கவனம் தேவைப்படும்.

சுப காரியங்கள் நிகழத் தடைகளும் குறுக்கீடுகளும் உண்டாகும். குடும்பத்தில் அமைதி குறையும். புத்திர, புத்திரிகளின் முன்னேற்றம் தடைப்படும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். அன்றாடம் செய்து வரும் காரியங்களிலும்கூட அதிகம் கவனம் தேவை. ஜனனேந்திரியம், கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மருத்துவ மற்றும் தண்டச் செலவுகள் ஏற்படும். கோர்ட், கேஸ், வழக்கு என்று வீண் செலவுகள் கூடும். ஜனன கால ஜாதகப்படி யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் இந்த ஆண்டில் நடக்குமேயானால், அஷ்டமச் சனியால் அதிகம் பாதிப்புகள் ஏற்படாது. ஜாதக பலமும் குறைந்திருப்பவர்களுக்குக் கெடுபலன்கள் அதிகரிக்கும். சனிப் பிரீதி செய்துகொள்வது அவசியமாகும்.

மன்மத வருட சனி பலன்கள் !

உங்கள் ராசிக்கு சனி முழு முதல் யோககாரகன் ஆவார். அவர் ராசிக்கு 7ம் இடத்தில் உலவும் நேரத்தில் மன்மத  ஆண்டு பிறக்கிறது. பொதுவாக கோசாரப்படி 7ல் சனி உலவுவது சிறப்பாகாது என்றாலும், சனி யோககாரகனாகி, 7ல் திக் பலத்துடன் உலவுவதால், நண்பர்கள், கூட்டாளிகள் ஆகியோரால் அனுகூலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். பயணத்தால் நலம் ஏற்படும். பழைய நண்பர்களின் தொடர்பு ஏற்படும். அதனால் அனுகூலமும் உண்டாகும். மேற்குத் திசையிலிருந்து நல்ல தகவல் வரும். எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். நல்ல காரியங்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள்.

7ல் சனி இருப்பதால், சில இடர்ப்பாடுகளும் அவ்வப்போது ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. ஜூன் 12ம் தேதி முதல் செப்டம்பர் 4 வரை உள்ள காலத்தில் சனி  6ம் இடத்தில் உலவும் நிலை அமைவதால், செய்துவரும் தொழில் வளர்ச்சி பெறும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.

மன்மத வருட சனி பலன்கள் !

மன்மத வருடம் முழுவதும் சனியின் சஞ்சாரம் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், வெற்றி வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 6ல் உலவும் சனி, தொழிலில் முன்னேற்றம் காண வழிவகுப்பார். பண வரவு அதிகமாகும். உழைப்பு வீண்போகாது. எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், சுரங்கப் பணியாளர்கள், தோட்டப் பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் லாபம் தரும்.

பிறருக்கு உதவி செய்வீர்கள். சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும். தொண்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு மதிப்பு கூடும். உடல் நலம் சீராக இருக்கும்.மூத்த சகோதர சகோதரிகளின் நலம் பாதிக்கும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு விலகும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை. செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. 12.6.15 முதல் 4.9.15 வரை சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். வயிற்று உபாதைகள் உண்டாகும். 5.9.15 முதல் சனி நேர்கதியில் 6ம் இடத்தில் உலவத் தொடங்குவதால், நலம் பல உண்டாகும். பிரச்னைகள் தீரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். தொழிலில் லாபம் காணலாம். தந்தையால் நலம் உண்டாகும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும்.

மன்மத வருட சனி பலன்கள் !

புத்தாண்டு ஆரம்பத்தில் சனி 5ல் உலவுகிறார். கோசாரப்படி சிறப்பானதாகாது என்றாலும், ஒரு பாபக்கிரகம் திரிகோண ஸ்தானத்தில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதால், அதிகம் கெடுதலான பலன்களைத் தராது என்ற வகையில் நிம்மதி பெறலாம். சனி 7ம் வீட்டோனாகி 5ல் அமர்ந்து 7ம் இடத்தைப் பார்ப்பதுடன் குருவும் பார்ப்பதால், திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி உறவு சீராகவே அமையும். மக்கள் நலனிலும் முன்னேற்றம் காணலாம். உங்கள் ராசிக்கு 8ம் வீட்டுக்கு அதிபதியான சனி 5ல் இருப்பதால், மனதில் ஏதேனும் சலனம் ஏற்படும். கெட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது. தீய எண்ணங்களுக்கு இடம் தரலாகாது.

குறுக்கு வழிகளில் சென்றால் சங்கடங்கள் உண்டாகும்; எச்சரிக்கை தேவை. செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். ஜூன் 12 முதல் சனி 4ம் இடத்துக்கு மாறுவதால், அலைச்சல் கூடி, உழைப்பு அதிகரிக்கும். 4.9.15க்குள் சிலருக்கு சொந்தவீடு, வாகனம் சேர்க்கை நிகழும். அதன்பிறகு சனி 5ம் இடத்துக்கு இடம் மாறுவதால், சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத பொருள் சேரும். கூட்டாளிகளாலும், நெருங்கிய நண்பர்களாலும் நலம் உண்டாகும். மருத்துவச் செலவுகள் சற்று கூடும். தர்ம காரியங்களிலும் தெய்வ காரியங்களிலும் ஈடுபடுவதன் மூலம் கெடுபலன்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

மன்மத வருட சனி பலன்கள் !

புத்தாண்டு ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் சனி உலவுவது சிறப்பாகாது. 6, 7ம் இடங்களுக்கு அதிபதியான சனி 4ல் உலவுவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கும். மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். நண்பர்களே விரோதிகளாவார்கள். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். எதிர்ப்புகள் இருக்கும். தாய் நலம் பாதிக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களை வாங்கும்போதும், விற்கும்போதும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்துவரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம்.

தெய்வ காரியங்கள் தாமதமாகும். செலவுகள் கூடும். மூத்த சகோதர சகோதரிகளின் நலம் பாதிக்கும். புத்திர, புத்திரிகளை விட்டுச் சில காலம் பிரிந்திருக்க நேரலாம். வாகனங்களால் பராமரிப்புச் செலவுகள் கூடும். ஜூன் 12 முதல் செப்டம்பர் 4 வரை, சனி 3ம் இடத்தில் உலவுவதால், வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் விருத்தி அடையும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். எதிரிகள் அடங்குவார்கள். மாஸ்  கம்யூனிகேஷன் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் சுபிட்சம் காண்பார்கள். 5.9.15 முதல் சனி 4ம் இடம் மாறுவதால், அலைச்சல் அதிகமாகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

மன்மத வருட சனி பலன்கள் !

உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சனி உலவும் நேரத்தில், இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. சனியைக் குரு பார்ப்பதும் சிறப்பாகும். இதனால், வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் விருத்தி அடையும். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். மக்களாலும், வேலையாட்களாலும் அனுகூலம் உண்டாகும். தொழிலாளர்களது நிலை உயரும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் லாபம் தரும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும்.

புத்திர, புத்திரிகளால் நலம் ஏற்படும். உடல் நலம் சீராகும். 6ம் வீட்டோன் சனி 3ல் இருப்பதால் மார்பு, நுரையீரல் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். ஜூன் 12 முதல் சனி 2ம் இடம் மாறுவதால், பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். கடனாகவும் பணம் கிடைக்கும். முக்கியத் தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு விலகும். பேச்சில் நிதானம் தேவை. செப்டம்பர் 5 முதல் சனி 3ம் இடம் மாறுவதால், மீண்டும் சுப பலன்கள் உண்டாகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். உழைப்பு வீண்போகாது. புதிய முயற்சிகள் கை கூடும். வேலையாட்கள் உதவி புரிவார்கள். தொழிலாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள்.

மன்மத வருட சனி பலன்கள் !

புத்தாண்டு  ஆரம்பத்தில் சனி உங்கள் ராசிக்கு 2ல் உலவுகிறார். ஏழரைச் சனியின் கடைசிக் காலம் இது. சனி உங்கள் ராசிக்கு யோககாரகன் என்பதால், நலமே புரிவார். மேலும், சனியைக் குரு பார்க்கும் நிலையும் அமைவதால், பொருளாதார நிலை சீராக இருந்து வரும். குடும்ப நலம் சிறக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். மக்களால் அனுகூலம் ஏற்படும். சனி 4ம் வீட்டோனாகி 4ஆம் வீட்டையே பார்ப்பதால், சொத்துக்களின் சேர்க்கை நிகழும். புதிய பொருட்களும் சேரும். குடும்பத்தார் உங்களுக்கு உதவுவார்கள். 5ம் வீட்டோன் 2ல் இருப்பதால், மகன் அல்லது மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்குப் பண உதவியும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியமும் நிறைவேறும்.

ஜூன் 12 முதல்  4.9.15 வரை உங்கள் ஜன்ம ராசியில் சனி உலவும் நிலை அமைவதால், மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். அயல்நாட்டுத் தொடர்பால் நலம் உண்டாகும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். 5.9.2015 முதல் சனி 2ம் இடம் மாறுவதால், பொருளாதாரத்தில் வளர்ச்சி காணலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களில் கலந்துகொள்வீர்கள். புதிய பொருட்சேர்க்கை நிகழும். மக்களால் நலம் கூடும். வாழ்க்கைத் துணைவரால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். தந்தை நலனில் அக்கறை தேவைப்படும். உடன்பிறந்தவர்களால் செலவுகள் கூடும்.

மன்மத வருட சனி பலன்கள் !

மன்மத ஆண்டின் ஆரம்பத்தில் சனி உங்கள் ஜன்ம ராசியில் உலவுகிறார். ஏழரைச் சனியில் ஜன்மச் சனியின் காலம் இது. அலைச்சல் அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிவரும். உடல்நலம் ஒருநாள் போல் மறுநாள் இராது. இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். ஜன்மச் சனியை குரு பார்க்கும் நிலை அமைவதால், அதிகம் சங்கடங்கள் ஏற்படாமல் இருக்கும். மறைமுக நோய் நொடிகள் ஏற்படும். கண் உபத்திரவமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் தக்க தருணத்தில் முன்வந்து உதவுவார்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். சோர்வுக்கு இடம் தராமல் கடுமையாகப் பாடுபட்டால், ஓரளவு பயன் பெறமுடியும்.

ஜூன் 12 முதல் செப்டம்பர் 4 வரை சனி உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் உலவும் நிலை அமைவதால், இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். அயல்நாட்டுத் தொடர்பு ஓரளவு பயன்படும். செப்டம்பர் 5 முதல் சனி உங்கள் ஜன்ம ராசிக்கு மாறுவதால், வேலைப்பளு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். உடன்பிறந்தவர்களாலும், நண்பர்களாலும் ஓரிரு நன்மைகள் உண்டாகும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் அதிகம் உழைத்தாலும் அதற்கான முழுப்பயன் கிடைக்காமல் போகும். எதிரிகள் இருப்பார்கள் என்பதால், யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகவேண்டாம். சனிப் பிரீதி செய்துகொள்வது அவசியமாகும்.

மன்மத வருட சனி பலன்கள் !

புத்தாண்டு ஆரம்பத்தில் சனி உங்கள் ராசிக்கு 12ல் உலவும் நிலை அமைகிறது. ஏழரைச் சனியின் ஆரம்ப காலம் இது. சனி உங்கள் ராசிக்கு 2, 3ம் இடங்களுக்கு அதிபதியாகி 12ல் உலவுவதால், குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படும். வீண் செலவுகளும் இழப்புகளும் உண்டாகும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் செலவுகள் அதிகமாகும். நிம்மதி குறையும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரும். மக்கள் நலனிலும் வாழ்க்கைத் துணைவரின் நலனிலும் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் அதிக பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எண்ணங்கள் ஈடேற அரும்பாடுபட வேண்டிவரும்.

கடுமையாக முயற்சித்தும் சில காரியங்கள் நிறைவேறாமல் போகும். ஜூன் 12 முதல் செப்டம்பர் 4 வரை சனி உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் உலவும் நிலை அமைவதால், பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.  உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும், உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். முயற்சி வெற்றி பெறும். தொழிலாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். செப்டம்பர் 5 முதல் சனி 12ம் இடம் மாறுவதால், சோதனைகள் சூழும். செலவுகள் அதிகரிக்கும்.

மன்மத வருட சனி பலன்கள் !

மன்மத வருட ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் சனி உலவுவது விசேஷமாகும். ராசிக்கும் 2ம் இடத்துக்கும் உரிய சனி 11ல் உலவுவதால், மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். மன மகிழ்ச்சி பெருகும். முக்கியமான எண்ணங்கள் இனிது நிறைவேறும். செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி வருவீர்கள். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் லாபம் தரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். கறுப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.

ஜூன் 12 முதல் செப்டம்பர் 4 வரை உள்ள காலத்தில் சனி 10ம் இடத்தில் உலவும் நிலை அமைவதால், தொழிலில் வளர்ச்சி காணலாம். புதிய முயற்சிகள் கைகூடும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். செல்வ நிலை உயரும். கலைத்துறையினருக்கு செழிப்பான சூழ்நிலை உருவாகும். பொருள் கொடுக்கல்வாங்கல் லாபம் தரும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பேச்சின் மூலம் தொழில் புரிபவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். செப்டம்பர் 5 முதல் சனி 11ம் இடம் மாறுவதால், நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கவே செய்யும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள வாய்ப்புகள் கூடி வரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும்.

மன்மத வருட சனி பலன்கள் !

புத்தாண்டு ஆரம்பத்தில் சனி உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் உலவுவதால், தொழில்ரீதியாக நல்ல மாற்றங்கள் உண்டாகும். பொதுநலப்பணிகளில் ஈடுபாடு கூடும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் லாபம் தரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் நிச்சயம் கிடைக்கும். பிறருக்கு உதவி புரிய முன்வருவீர்கள். போட்டியாளர்கள், பொறமைக்காரர்கள் இருப்பார்கள் என்றாலும், சமாளிப்பீர்கள். புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்வாங்கல் ஒழுங்காகும். திரவப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். கடுமையாக உழைப்பவர்களுக்குப் பயன் கூடுதலாகக் கிடைக்கும்.

ஜூன் 12 முதல் செப்டம்பர் 4 வரையிலும் சனி 9ம் இடத்தில் உலவும் நிலை அமைவதால், தொலைதூரத் தொடர்பு பயன்படும். பிறருக்கு உதவி புரிவீர்கள். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு கூடும். செப்டம்பர் 5 முதல் சனி 10ம் இடம் மாறுவதால், தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். சிலருக்கு இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். மருத்துவர்களது நிலை உயரும்.  பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகள் கூடிவரும். பகுதி நேர உத்தியோகமும் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும்.

மன்மத வருட சனி பலன்கள் !

மன்மத வருட ஆரம்பத்தில் சனி உங்கள் ராசிக்கு 9ல் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவது சிறப்பாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். மூத்த சகோதர, சகோதரிகளின் நலம் சீராக இருந்துவரும். தான, தர்மப்பணிகளுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். இளைய சகோதர, சகோதரிகளால் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும், சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் தொல்லைகள் சூழும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை. செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

ஜூன் 12 முதல் செப்டம்பர் 4 வரையிலும் சனி 8ல் உலவுவதால், மனக்குழப்பம் உண்டாகும். உடல்நலனில் அக்கறை தேவைப்படும். வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். எக்காரியத்திலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. உடன்பிறந்தவர்களாலும் வேலையாட்களாலும் மன வருத்தம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். செப்டம்பர் 5 முதல் நல்ல திருப்பம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். நற்காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். குடும்ப நலம் சீராகும். புதியவர்களின் தொடர்பு பயன்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism