Published:Updated:

ராசி பலன்கள்

ஜூலை 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜூலை 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை

Published:Updated:

பாராட்டு குவியும்!

ராசி பலன்கள்

மேஷம்: சீர்திருத்த சிந்தனை அதிகம் உள்ளவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், இங்கிதமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். சனி வக்கிரமாகி இருப்பதால்... முன்கோபம், வேலைச்சுமை அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வரவு உயரும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொலைநோக்கு சிந்தனையால் சாதிக்கும் நேரமிது.

புத்திசாலித்தனம் வெளிப்படும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: இலவசங்களை விரும்பாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். தோழிகள், உறவினர்களின் பாசமான விசாரிப்புகள் மகிழ்ச்சி தரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். ராகு சாதகமாக இல்லாததால்... அசதி, தூக்கமின்மை வந்து செல்லும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களுடனான பிரச்னை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

புதிய நட்பால் முன்னேறும் நேரமிது.

பிரச்னைகள் தீரும் வேளை!

ராசி பலன்கள்

மிதுனம்: வளைந்து கொடுத்து சாதிப்பவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பிரச்னைகளை சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். 4-ல் ராகு சாதகமாக இல்லாததால்... வீண் செலவு, வாகனப் பழுது வந்து செல்லும். உறவினர் வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் விரைவில் கிடைக்கும்.

அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டிய காலமிது.

பாசமழையில் நனையும் நேரம்!

ராசி பலன்கள்

கடகம்: நல்லவற்றை பாராட்டிப் பேசுபவர்களே! ராசிக்குள் நிற்கும் சூரியன் உங்களை அவ்வப்போது டென்ஷனாக்கினாலும்... ராகுவும், குருவும் வலுவானதால்... சொத்துப் பிரச்னை தீரும். வாழ்க்கைத் துணைவர் பாசமழை பொழிவார். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு, மழலை பாக்கியம் கிட்டும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள்.

புதுத் திட்டங்கள் தீட்டும் வேளையிது.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை!

ராசி பலன்கள்

சிம்மம்: பேச்சுத்திறன் மிகுந்த வர்களே! சமயோஜிதபுத்தி கிரகமான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், சவாலான விஷயங்களைக்கூட சாதுர்யமாக முடிப்பீர்கள். பூர்வீகச்சொத்தை சீர் செய்வீர்கள். சூரியன் மறைந்திருப்பதால்... வேலைச்சுமை, தூக்கமின்மை வந்து போகும். ஜென்மகுரு தொடர்வதால், ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில், `கடினமாக உழைத்தும் பலன் இல்லையே’ என்று ஆதங்கப்படுவீர்கள்.

சிக்கனம் தேவைப்படும் தருணமிது.

அனுபவம் கைகொடுக்கும்!

ராசி பலன்கள்

கன்னி: அனைத்தையும் அறிந்துகொள்ள ஆர்வப்படுபவர்களே!  செவ்வாயும், சூரியனும் சாதகமாக இருப்பதால், வர வேண்டிய பணம் உங்கள் கைக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பள்ளி, கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். ராகுவும் ராசிக்குள் நிற்பதால், தேவையற்ற விஷயங்களை நினைத்துக் குழம்புவதைத் தவிருங்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் அதிக லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க நீங்கள் கொஞ்சம் போராட வேண்டி இருக்கும்.

அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரமிது.

செல்வாக்கு கூடும்!

ராசி பலன்கள்

துலாம்: பழி, பாவத்துக்கு அஞ்சுபவர்களே! குரு சாதகமாக இருப்பதால், ஓரளவு பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைக் கொடுத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் ஆக்கபூர்வமாக செயல்படுவார்கள். உறவினர், தோழிகள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். ஜென்மசனி தொடர்வதால், உடல்நலம் சார்ந்த பயம் வந்து போகும். உறவினர்களை அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும்.

சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும் காலமிது.

அலட்சியம் தவிருங்கள்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: `தான் உண்டு தன் வேலை உண்டு’ என்றிருப்பவர்களே! லாப வீட்டில் ராகு நிற்பதால், ராஜதந்திரத்தால் சில விஷயங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். 12-ல் சனி நிற்பதால், மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புதுக் கிளை தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம்... பகையும் வேண்டாம்.

குடும்ப ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது. 

உற்சாகம் பொங்கும்!

ராசி பலன்கள்

தனுசு: தன்னம்பிக்கையால் எதையும் சாதிப்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், நீங்கள் உற்சாகமடைவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். 8-ல் சூரியன் நிற்பதால், அவ்வப்போது கோபப்படுவீர்கள். தந்தையாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். வியாபாரத்தில், கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவீர்கள்.

விருப்பங்கள் நிறைவேறும் வேளையிது. 

எதிர்பார்ப்புகள் கைகூடும்!

ராசி பலன்கள்

மகரம்: கொள்கை, கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காதவர்களே! கேது 3-ல் நிற்பதால், உங்களின் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். திடீர் பணவரவு ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். குரு சாதகமாக இல்லாததால், வாகனம் பழுதாகும். உறவினர், தோழிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் நீங்கள் எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.

பழைய பிரச்னைகளில் ஒன்று தீரும் நேரமிது.

புது வாய்ப்புகள் தேடி வரும்!

ராசி பலன்கள்

கும்பம்: கொடுத்து உதவும் குணம் கொண்டவர்களே! சுக்கிரனும், குருவும் சாதகமாக இருப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், வேலைச்சுமை அதிகரிக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்படலாம். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

`மறப்போம் மன்னிப்போம்' என்றிருக்க வேண்டிய காலமிது.

சகிப்புத்தன்மை தேவை!

ராசி பலன்கள்

மீனம்: வித்தியாசமான சிந்தனை கொண்டவர்களே! சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால், ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். குரு மறைந்திருப்பதால், சில விஷயங்களை இரண்டு, மூன்று முயற்சிகளில் முடிக்க வேண்டி வரும். சுக்கிரன் 6-ல் நிற்பதால், பணப்பற்றாக்குறை ஏற்படும். உடல் உபாதை வந்து போகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களைக் குறைகூறுவார். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரமிது.

`ஜோதிட ரத்னா’ கே.பி. வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism