தன்னம்பிக்கை
Published:Updated:

ராசி பலன்கள்

செப்டம்பர் 9-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை

அறிவுத் திறன் கைகொடுக்கும்!

ராசி பலன்கள்

மேஷம்: தடம் மாறாமல் பயணிப் பவர்களே! செப்டம்பர் 17-ம் தேதி வரை சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால், முன் கோபம் வந்து போகும். ஆனால், 18-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால், அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். சனி சாதகமாக இல்லாததால், சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சமயோஜித புத்தியால் சாதிக்கும் தருணமிது.

குடும்பத்தில் மதிப்பு!

ராசி பலன்கள்

ரிஷபம்: தவறுகளைத் தயங்காமல் தட்டிக் கேட்பவர்களே! 5-ல் நிற்கும் ராகுவால் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். 7-ல் நிற்கும் சனியால் வாழ்க்கைத் துணைவர் கோபப்படுவார். கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், குடும்பத்தினர் உங்களின் ஆலோசனைகளையும், புதிய திட்டங்களையும் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.
 
திடீர் செலவுகளால் திணறும் காலமிது.

ரசனைக்கேற்ற வீடு அமையும்!

ராசி பலன்கள்

மிதுனம்:  முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! உங்களின் ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், உங்கள் ரசனைக்கேற்ற புது வீட்டுக்கு மாறுவீர்கள். 17-ம் தேதி வரை சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால், இழுபறியாக இருந்த அரசாங்க வேலைகள் உடனே முடியும். ராகு 4-ல் நிற்பதால், உடல் உபாதை ஏற்படலாம். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கஷ்டம் மற்றவர்களுக்குப் புரியவில்லையே என வருந்துவீர்கள்.

திடீர் வெற்றி தரும் வேளையிது.

நல்ல சேதி வரும்!

ராசி பலன்கள்

கடகம்: வளைந்து கொடுத்து செல்பவர்களே! ராசிக்குள் சுக்கிரன் செல்வதால்... அழகு, இளமை கூடும். எதிர்பார்த்த பணம் வரும். 17-ம் தேதி வரை செவ்வாயும் ராசிக்குள் நிற்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். 2-ம் வீட்டில் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

நாவன்மையால் வெல்லும் தருணமிது.

உங்கள் கை ஓங்கும்!

ராசி பலன்கள்

சிம்மம்: பட்டறிவும், பகுத்தறிவும் மிகுந்தவர்களே! செப்டம்பர் 17-ம் தேதி வரை செவ்வாய் 12-ல் மறைவதால், வீண் அலைச்சல், தூக்கமின்மை, வந்து செல்லும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொணர்வீர்கள். உறவினர் வகையில் மதிப்பு கூடும். வியாபாரத்தில், சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய வேளையிது.

பெரிய திட்டங்கள் நிறைவேறும்!

ராசி பலன்கள்

கன்னி: எல்லோரையும் எளிதில் நம்புபவர்களே! சனி வலுவாக 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு விரைவில் கூடி வரும். குரு 12-ல் மறைந்திருப்பதால், வேலைச்சுமை அதிகமாக இருக்கும். திடீர் பயணங்கள் உண்டு. சுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால், தாமதமான பல காரியங்களை உடனடியாக முடித்துக்காட்டுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை உயரதிகாரிகள் பாராட்டுவார்கள்.

சிக்கனம் தேவைப்படும் நேரமிது. 

சவால்களை சமாளிக்கும் வேளை!

ராசி பலன்கள்

துலாம்: `குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பதை உணர்ந்த வர்களே! கேது வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்ப தால், சவால்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால், இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும், மேலதிகாரி குறைகூறுவார். 

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வேளையிது.

கனத்த மனசு லேசாகும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: `சுத்தம் சோறு போடும்’ என்பதை உணர்ந்தவர்களே! சுக்கிரன் 9-ல் நிற்பதால், கனத்த மனசு லேசாகும். வீட்டைப் புதுப்பிப்பீர்கள். 18-ம் தேதி முதல் சூரியன் லாப வீட்டில் அமர்வதால், சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். ஜென்மச் சனி தொடர்வதால், வாகனங்களில் செல்லும்போது வேகம் வேண்டாம். வியாபாரத்தில், ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
 
சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

மகிழ்ச்சியான மணவாழ்க்கை!

ராசி பலன்கள்

தனுசு:  மனசாட்சிக்கு மதிப்பளிப்பவர்களே! ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், ராஜதந்திரமாகப் பேசி பல நெருக் கடிகளிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வாழ்க்கைத் துணைவர் பாசமழை பொழிவார். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். 17-ம் தேதி வரை செவ்வாய் 8-ல் மறைவதால், மனக்குழப்பம், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறியும் நேரமிது.

தைரியம் கூடும்!

ராசி பலன்கள்

மகரம்: நன்றி மறவாதவர்களே! கேது 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், தைரியம் கூடும். குடும்ப வருமானத்தைப் பெருக்க நீங்கள் சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். 7-ல் சுக்கிரன் அமர்ந்திருப்பதால், சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். 17-ம் தேதி வரை சூரியன் 8-ல் மறைந்திருப்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் பெருகும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும், உயரதிகாரியின் ஆறுதல் வார்த்தையால் நிம்மதி கிட்டும்.

சமய சந்தர்ப்பம் அறிந்து காய் நகர்த்தும் வேளையிது.

இல்லம் களைகட்டும்!

ராசி பலன்கள்

கும்பம்: எந்த ஒரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகு பவர்களே! குரு பகவான் 7-ல் நிற்பதால்... மதிப்பு, மரியாதை கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், வீண் செலவு ஏற்படும். ஆனால், செவ்வாய் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தோழிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் முடங்கிக் கிடந்த வேலைகளை நீங்கள் விரைந்து முடிப்பீர்கள்.

தைரியமான முடிவுகளெடுக்கும் காலமிது.

நீண்ட நாள் விருப்பங்கள் கைகூடும்!

ராசி பலன்கள்

மீனம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுபவர்களே! சுக்கிரன் 5-ல் அமர்ந்ததால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். 18-ம் தேதி முதல் சூரியன் 7-ம் வீட்டில் நிற்பதால், உடல் உபாதை வந்து செல்லும். குருவும், 18-ம் தேதி முதல் புதனும், 6-ல் மறைந்திருப்பதால்... வேலைச்மை அதிகமாக இருக்கும்.  வியாபாரத்தில் தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

`வெளுத்ததெல்லாம் பால் இல்லை’ என்பதை உணரும் தருணமிது.

`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்