Published:Updated:

27 நட்சத்திரங்கள்... ஆயுஷ் ஹோமம்!

விழாக்கள்... விசேஷங்கள்!

27 நட்சத்திரங்கள்... ஆயுஷ் ஹோமம்!

விழாக்கள்... விசேஷங்கள்!

Published:Updated:

சுமார் 35 வருஷங்களுக்கு முன்பாக காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்திருந்தார் புஷ்பவனம் என்னும் பக்தர். அவரை ஆசிர்வதித்த மஹாஸ்வாமிகள், ‘ஏன் கஷ்டப்படறே? நீ போற இடத்துலயே கணபதிக்கும் ஒரு கோயில் உண்டாகும். அந்தக் கோயிலில் கணபதி சுந்தரவிநாயகர் என்ற பெயருடன் சுவாமிநாத கணபதியாக அருள்புரிவார். அங்கே உன்னால் முடிந்த சத்காரியங்களைச் செய்’ என்று அனுக்கிரஹம் செய்தார். தன்னுடைய சொந்த ஊரான கணபதி அக்ரஹாரத்தையும், மகா கணபதியையும் பணியின் காரணமாகப் பிரியவேண்டி இருக்கிறதே என்று சஞ்சலப்பட்ட புஷ்பவனத்துக்கு மஹாஸ்வாமிகளின் ஆசிமொழிகள் மிகுந்த மனநிறைவைத் தந்தன.

மஹாஸ்வாமிகளின் அனுக்கிரஹத்தின்படி புஷ்பவனம் குடியேறிய சென்னை சின்னப்போரூர் செந்தில்நகர் பகுதியில் ஆலயம் தோன்றியது. தெற்கு பார்த்த அந்தக் கோயிலில் விநாயகர்  சந்நிதி கிழக்கு பார்த்து அமையவேண்டும் என்பதற்காக ஆலயத்தின் தென்மேற்கு பகுதியில் விநாயகர் சந்நிதி அமைத்தனர். சில வருஷங்களுக்குப் பிறகு ஆலயத்துக்கு வந்த ஸ்ரீதுர்கை சித்தர் விநாயகர் சந்நிதியைப் பார்த்துவிட்டு, ‘‘விநாயகர் சந்நிதி  தெற்கு பார்த்து அமைந்திருந்தால் மிகவும் சாந்நித்யம் ஏற்பட்டிருக்கும். அப்படி அமைந்தால் இங்கே ஆயுஷ் ஹோமம் செய்வது நல்ல பலனைத் தரும்’’ என்றார். அங்கே இருந்த ஒருவர், ‘‘விநாயகர் சந்நிதி தெற்கு பார்த்து இருக்கலாமா?’’ என்று கேட்டார். அதற்கு துர்கை சித்தர், ‘‘தாராளமாக இருக்கலாம்.

27 நட்சத்திரங்கள்... ஆயுஷ் ஹோமம்!

சுவாமிமலையில்கூட விநாயகர் தெற்கு பார்த்துத்தான் அமைந்திருக்கிறார்’’ என்றார். அதைக் கேட்டதும்தான் புஷ்பவனத்துக்கு மஹாஸ்வாமிகள் சுந்தர விநாயகர் சுவாமிநாத கணபதியாக அருள்வார் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. ஆலயம் கட்டி முடித்துவிட்டபடியால் அப்போதைக்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. சில வருஷங்களுக்கு முன்பு ஆலயம் பழுதுபட்டு, புதியதாகக் கட்டப்படுவதற்கான பணிகள் தொடங்கியபோது மஹாஸ்வாமிகள் கூறியபடியே  சுந்தர விநாயகர் சந்நிதியை தெற்கு பார்த்து அமைத்ததுடன், வள்ளி தேவயானையுடன் முருகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, துர்கை, ஆஞ்சநேயர், சாயிபாபா, குருவாயூரப்பன், கிருஷ்ணன், நவக்கிரக சந்நிதிகளையும் ஏற்படுத்தி  கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதுமுதல் இங்கே தினமும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். சுந்தர விநாயகர் தெற்கு பார்த்து அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் ஆயுஷ் ஹோமம் செய்வது விசேஷம் என்பதால் ஆயுஷ்ஹோமமும் செய்துகொள்கின்றனர். உலக மக்களின் நன்மைக்காக வரும் 29-ம் தேதி இந்த ஆலயத்தில் 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் நலனுக்காகவும் ஆயுஷ் ஹோமம் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

- மோகனா சத்தியமூர்த்தி

ஸ்ரீஅதிருத்ர

ஸ்ரீசதசண்டி மஹா யக்ஞம்

சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் அமைந்துள்ள நாம சங்கீர்த்தன சம்ரக்ஷண டிரஸ்டின் 15-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, டிசம்பர் மாதம் 2-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை, அம்பத்தூர்-ரெட்ஹில்ஸ் சாலை, கங்கை நகரில் உள்ள ஸ்ரீவாரி சேஷ மஹாலில் ஸ்ரீஅதிருத்ர ஸ்ரீசதசண்டி மஹா யக்ஞம் நடைபெற உள்ளது. மேலும் பல சிறப்பு யாகங்களும் பூஜைகளும் நடைபெற இருப்பதுடன், ஒவ்வொரு நாளும் முறையே ஸ்ரீபூர்ணா புஷ்கலா சமேத சாஸ்தா திருக்கல்யாணம்; ஸ்ரீசீதா திருக்கல்யாணம், ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம், ஸ்ரீராதா திருக்கல்யாணம், ஸ்ரீருக்மணி திருக்கல்யாணம் போன்ற வைபவங்களும் நடைபெற இருக்கின்றன. நிறைவாக ஆஞ்சநேயர் உற்ஸவமும் நடைபெற இருக்கிறது இறையன்பர்கள் யாவரும், இவ்விழாவில் கலந்து கொண்டு இறையருள் பெற்றுச் சிறக்கலாம்.

27 நட்சத்திரங்கள்... ஆயுஷ் ஹோமம்!

பிரதிஷ்டாபிஷேக விழா!

சென்னை தேனாம்பேட்டை நாட்டு முத்து தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவிளையாட்டு விநாயகர் ஆலயத்தில், வரும் டிசம்பர் மாதம் 2-ம் தேதி ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீகுருவாயூரப்பன், ஸ்ரீமகாலக்ஷ்மி ஆகிய பஞ்சலோக விக்கிரஹங்களுக்கு பிரதிஷ்டாபிஷேகமும், 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஸ்ரீஹரிஹர புத்ர சேவா சங்கத்தின் 16-ம் ஆண்டு சம்வத்ஸரோற்ஸவமும் நடைபெற இருக்கிறது. மூன்று நாட்களும் சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் ஸ்ரீவிளையாட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்ரீஐயப்பன் நிர்மால்ய தரிசனம், ஸ்ரீஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

- ரா.வளனரசு

பிரம்மோத்ஸவ விழா!

சென்னை, மடிப்பாக்கத்திலுள்ள ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் 38-ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா இந்த மாதம் 17-ம் தேதி முதல் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 24-ம் தேதி இரவு கர்நாடக  இசைக்கச்சேரியும், 25-ம் தேதி இரவு பள்ளிவேட்டையும், 26-ம் தேதி மாலை ஆராட்டும் அதன் பின்னர் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

27 நட்சத்திரங்கள்... ஆயுஷ் ஹோமம்!

மேலும் வருகிற ஜனவரி 1-ம் தேதி மஹா அன்னதானமும், ஏகதின லக்ஷார்ச்சனை மற்றும் 18 திருப்படிகளுக்கு கனகாபிஷேகமும் நடைபெறும்.

- ம.மாரிமுத்து