Published:Updated:

சூரியனுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? - ஜோதிடம் அடுக்கும் காரணங்கள்! #Astrology

சூரியனுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? - ஜோதிடம் அடுக்கும் காரணங்கள்!  #Astrology
சூரியனுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? - ஜோதிடம் அடுக்கும் காரணங்கள்! #Astrology

சூரியனுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? - ஜோதிடம் அடுக்கும் காரணங்கள்! #Astrology

தைத் திருநாள், தமிழர் திருநாள். உலகுக்கெல்லாம் ஒளி தருபவரான சூரியனைப் போற்றி வழிபடும் நாள். வாழ்வாதாரத்துக்கு முக்கியமானவர் சூரியன். விவசாயிகளின் கண்கண்ட தெய்வமாகத் திகழும் சூரிய பகவான், `ஆத்மாவுக்குக் காரகத்துவம் வகிக்கிறார்' என்கிறது ஜோதிடம்.

ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது பற்றி ஜோதிடர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம். ''சூரியன், காலச் சுழற்சியில், தென்திசை நோக்கிப் பயணம் செய்யும் காலமான ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயனமாகவும் வடதிசை நோக்கிப் பயணம் செய்யும் காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயன காலமாகவும் கணக்கிடப்படுகிறது. ஆடிமாதத்தின் முதல் நாளில் புண்ணிய நதிகளில் நீராடுவதையும், தை மாதத்தின் முதல்நாளில் சூரியனை வழிபடுவதையும் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகிறோம். மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலமானதால் 'மகர சங்கராந்தி' என அழைக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒரு ராசியில் பிரவேசிக்கும் காலம் `சங்கராந்தி' என அழைக்கப்படுகிறது. மழைக் காலம் தொடங்கும் காலத்துக்கு முன்பாக விதைகளைத் தூவி, தை மாதப் பிறப்புக்கு முன்பாக அறுவடை செய்த நெல்லில் இருந்து பெறப்படும் பச்சரிசியைப் புதுப் பானையில் பொங்கலிட்டு, வயலில் விளைந்த கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பொருள்களைப் படையலிட்டு, குடும்பம் குடும்பமாக சூரியனுக்கு நன்றி தெரிவிக்கிறோம். சூரியனுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? என்பதை ஜோதிடரீதியாகப் பார்ப்போம்.

மனித உடலில் ஆன்மாவைப் பிரதிபலிப்பவர் சூரியன். அதனால்தான் அவருக்கு 'ஆத்ம காரகன் ' என்றே பெயர். `ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டுமானால், ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருக்க வேண்டும்' என்று ஒற்றைவரியில் சொல்லிவிடலாம்.

ஜாதகத்தில் சூரியன் நன்றாக அமையப்பெறாதவர்கள், சூரியனை வணங்கி ஆதித்திய ஹிருதய மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்ரீராமர் அப்படி வழிபட்டுத்தான் ராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றார்.

வேதங்களில் தலைசிறந்த மந்திரம், 'காயத்ரி மந்திரம்'. காயத்ரி மந்திரத்துக்கு உரியவர் சூரியன். காஸ்யப கோத்திரம் உடையவர். ஜன்ம நட்சத்திரம் விசாகம். ஜாதகத்தில் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு உரியவர்.

சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷமானது. சூரிய வழிபாடு நம் ஆன்மிகத்தின் சிறப்பம்சம். சூரிய வழிபாடு செய்வதால் ஆன்ம பலமும், உடல் வலிமையும் நமக்குக் கிடைக்கும்.

சுயநிலை, சுயஉயர்வு, செல்வாக்கு, கௌரவம், ஆற்றல், வீரம், பராக்கிரமம், இனிய தாம்பத்யம், நன்னடத்தை, கண், உடல் உஷ்ணம், ஒளி, அரசாங்க ஆதரவு ஆகியவற்றுக்கு சூரியனே பொறுப்பு வகிக்கிறார்.

சூரிய பகவான், அக்கினியை அதிதேவதையாகக் கொண்டவர். கதிரவன், ரவி, பகலவன், ஞாயிறு, அருக்கன், அருணன், ஆதவன், புண்டரீகன், ஆதித்யன், செங்கதிர், தினகரன், பரிதி, பாஸ்கரன், பிரபாகரன், திவாகரன் எனப் பல பெயர்கள் இவருக்கு உண்டு.

சூரியனுக்குச் சொந்த வீடு சிம்மம். உச்ச வீடு மேஷம். நீச்ச வீடு துலாம். தகப்பனைக் குறிக்கக்கூடிய கிரகமும் சூரியன்தான். சூரியன் பலமாக ஜாதகத்தில் நின்றால், ஜாதகரின் தந்தைக்கு ஆயுள் நன்றாக இருக்கும்.

சிம்மத்தில் ஆட்சி பெற்று இருந்தாலும், மேஷத்தில் உச்சம் பெற்று இருந்தாலும், ஜாதகர் அதிகாரம், ஆணவம் எதையும் எதிர்கொள்ளும் குணமுள்ளவராக இருப்பதுடன், மற்றவர்களை அரவணைத்துச் செல்பவராகவும் இருப்பார்.

அரசியல் அதிகாரம், தலைசிறந்த நிர்வாகம், அரசியலில் தலைமைப் பதவி, முதல்வராகும் தகுதி , புகழ், செல்வாக்கு, கெளவரம் ஆகியவை இருக்கும். முக்கியமாக அரசியல் தலைவர்களின் ஜாதகங்களை உற்று நோக்கினால், அவர்களின் ஜாதகங்களில் சூரியன் மிக பலமாக இருப்பார்.

ஜாதகரின் கம்பீரமான தோற்றத்துக்கும், உடலில் உள்ள எலும்புகளுக்கும், தலைப் பகுதிக்கும், வலது கண்ணுக்கும் சூரியனே காரகம் பெறுகிறார்.

ஜாதகத்தில் சூரியன் பலமானால் ஒற்றைத் தலைவலி வரும் வாய்ப்பு உண்டு. பலவீனமானால் உடலில் புத்துணர்ச்சி குறைவாக இருக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்திருந்தாலும், நீச்சமாக இருந்தாலும், சூரியன் அந்த ஜாதகருக்கு பலவீனமாக இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளலாம். சூரியன் பலவீனமாக இருக்கும் ஜாதகர்கள், பித்தளை வாளியில் நீர் நிரப்பிக் குளிப்பது நல்லது. பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தினமும் 'சூரிய நமஸ்காரம்' செய்வது நல்லது.

சூரியன் லக்கின பாவத்தில் பலவீனமானால், கோயில்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் குடிநீர் வசதி செய்து கொடுப்பது நல்ல பரிகாரமாகும்.

இரண்டாம் பாவம் எனும் தனஸ்தானத்தில் பலவீனமானால், நல்ல எண்ணெயையும், தேங்காயையும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்குக் கொடுக்கலாம்.

மூன்றாம் பாவத்தில் பலவீனமானால், நெற்றியில் சந்தனம் வைப்பது நல்லது. தனிக்குடித்தனம் கூடாது. ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மிகவும் நல்லது.

நான்காம் பாவத்தில் பலவீனமானால், பார்வை குறைந்தவர்களுக்கு கண்ணாடி வாங்கிக் கொடுப்பது. கண் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வது நல்லது. மாமிச உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஐந்தாம் பாவத்தில் பலவீனமானால், வாக்கு நாணயம் தவறக் கூடாது. குரங்குகளுக்கு வாழைப்பழம், வெல்லம் கொடுப்பது நல்லது. பிரதோஷ காலத்தில் அர்ச்சனை செய்வதும் நல்ல பலனைத் தரும். சர்க்கரைப் பொங்கல் தானம் செய்வதும் நல்லது.

ஆறாம் பாவத்தில் பலவீனமானால், ஏழு வகையான தானியங்களைப் பறவைகளுக்குத் தருவது நல்லது.

ஏழாம் பாவத்தில் பலவீனமானால், நண்பர்களிடம் விரோதம் பாராட்டாமல் இருப்பதும், எருமை மாட்டுக்கு ஆகாரம் கொடுப்பதும், சிவப்புச் சந்தனத்தை கோயில் அபிஷேகத்துக்கு வாங்கித் தருவதும் நல்ல பலன்களைத் தரும்.

எட்டாம் பாவத்தில் பலவீனமானால், உடன் பிறந்தவர்களைக் கஷ்டப்படவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. வீட்டின் வாசல் தெற்கு வாசலாக இருக்கக் கூடாது. கோதுமை, வெல்லம், வெண்கலப் பாத்திரங்களை கோயிலுக்குத் தானம் செய்வது நல்லது. பிரதோஷ நாளில் அபிஷேகத்துக்கு பன்னீர் வாங்கித் தருவது நல்லது.

ஒன்பதாம் பாவத்தில் பலவீனமானால் தந்தையைக் கவனித்துக்கொள்வது நல்லது. மற்றவர்களிடம் எதையும் இரவல் வாங்கக் கூடாது.

பத்தாம் பாவத்தில் பலவீனமானால் மேற்குப் பக்கம் வாசல் கூடாது. ஏழைகளுக்கு பொங்கல், தயிர் சாதம் அன்னதானம் செய்வது நல்லது.

பதினோராம் பாவத்தில் பலவீனமானால், குலதெய்வ வழிபாடு நல்லது. கோயில்களில் அபிஷேகத்துக்குப் பால் வாங்கித் தருவதும் நல்லது.

பன்னிரண்டாம் பாவத்தில் பலவீனமானால், கிழக்கு வாசல் நல்லது. 'சிவ அஷ்டோத்ர பாராயணம்' செய்வதும் பித்ரு காரியங்களை விடாமல் செய்வதும் நல்லது.

அனைவருமே நம் தமிழ் நாட்டில் உள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நல்லது'' என்று கூறுகிறார் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.

அடுத்த கட்டுரைக்கு