
ஏப்ரல் 12 முதல் 25 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்
ஆக்கபூர்வமாக செயல்படுவதில் வல்லவர்களே!

சுக்ரன், புதனின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கல்யாண விஷயங்கள் உடனே முடியும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். ராசிக்கு லாப வீட்டில் கேது தொடர்வதால், வேற்றுமொழிக்காரர்கள் உதவு வார்கள். ஷேர் மூலம் பணம் வரும்.
சூரியன் 14-ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால், டென்ஷன் அதிகரிக்கும். அடிவயிற்றில் வலி, நீர்ச் சுளுக்கு வந்து நீங்கும். 5-ல் ராகு நீடிப்பதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் குறித்த கவலைகள் வந்து போகும். ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், வீட்டு மனை வாங்குவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். ஆனால், 8-ல் சனியும் தொடர்வதால், உங்கள் பலவீனத்தைப் பயன்படுத்தி சிலர் தவறான வழியில் சம்பாதிக்க உங்களைத் தூண்டுவார்கள். வியாபாரத் தில் விளம்பர யுக்திகளால் லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால், பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத் துறையினரின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும்.
கடமைகளைத் தவறாமல் செய்பவர்களே!

ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். இழுபறியான வேலைகள் உடனே முடியும். புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். நண்பர்கள் உதவுவார்கள்.
பூர்வீகச் சொத்தை செலவு செய்து சீர்படுத்துவீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். 7-ல் சனி நிற்பதால், வீண் சந்தேகம் வரும். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்துவிடுவது நல்லது. ராகுவும், குருவும் சாதகமாக இல்லாததால், யாரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். செவ்வாய் 7-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.
14-ம் தேதி முதல் ராசிக்கு 12-ல் சூரியன் மறைவதால், வேலைச்சுமையால் மனஇறுக்கம் வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் நேரம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். கலைத் துறையினரின் கலைத்திறன் வளரும்.
அமைதியாக இருந்து சாதிப்பவர்களே!

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பொறுப்புகள் தேடி வரும். சிலருக்கு, நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். 3-ல் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும்.
9-ல் கேது நிற்பதால், கை, கால் வலி, தந்தையாருடன் மோதல்கள் வந்து போகும். சேமிப்புகள் கரையும். ஆனால் 6-ல் செவ்வாய் நிற்பதால், சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண முயற்சிகள் நல்ல விதத்தில் அமையும். 6-ம் வீட்டிலேயே சனி தொடர்வதால், வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில், புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில், வேலைப்பளு அதிகரிக்கும். கலைத்துறையினரே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டுகள் கிடைக்கும்.
எடுத்த காரியத்தை முடிக்கும் சக்தி கொண்டவர்களே!

குரு ராசிக்கு 2-ல் நிற்பதால், தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத பயணம் உண்டு. 14-ம் தேதி முதல் சூரியன் 10-ல் அமர்வதால், புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சனி 5-ல் நிற்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.
பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. ராகுவும் கேதுவும் சாதகமாக இல்லாததால், திடீர் செலவுகள், முன்கோபம், பல் வலி, கண் எரிச்சல் வந்து செல்லும். யாருக்கும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். புதனும் சுக்ரனும் சாதகமாக இருப்பதால், உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில், லாபம் கணிசமாக உயரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பார்கள். கலைத் துறையினருக்கு, வருமானம் உயர வழி பிறக்கும்.
ஏமாற்றங்களைப் பொருட்படுத்தாதவர்களே!

யோகாதிபதி செவ்வாய் கேந்திரபலம் பெற்று அமர்ந்திருப்பதுடன், ராசிநாதன் சூரியனும் 14-ம் தேதி முதல் உச்சமாவதால் எதிலும் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். ஓரளவு பணவரவு, அரசால் ஆதாயம் உண்டு. வேலை கிடைக்கும். தந்தைக்கு அசதி, சோர்வு, வீண் செலவுகள் வந்து போகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், வீடு கட்ட வங்கி லோன் கிடைக்கும்.
அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், உங்கள் கொள்கை கோட்பாடுகளை விட்டுக்கொடுக்க வேண்டி வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடிய வில்லையே என நினைப்பீர்கள். கால் வலி, முதுகுத் தண்டில் வலி, ஹார்மோன் பிரச்னைகள் வந்து போகும். ராசிக்குள் குருவும், ராகுவும் தொடர்வதால் நெஞ்சு எரிச்சல், ரத்த சோகை, கை, கால் மரத்துப் போதல் போன்ற உடல்நலக் குறைபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிக ளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி குறையும். சக ஊழியர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் ஆதாயமடைவீர்கள்.
பாரம்பரிய பெருமையைக் காப்பவர்களே!

3-ம் வீட்டில் சனியும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். தேவையான பணம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புறநகரில் வீட்டு மனை வாங்குவீர்கள். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
ராசிக்கு 12-ல் குருவும் ராகுவும் நீடிப்பதால், சில விஷயங்களை மூன்று, நான்கு முறை போராடி முடிக்க வேண்டி வரும். அலைச்சல், டென்ஷன் ஏற்படும். புதன் 8-ல் நிற்பதுடன், 14-ம் தேதி முதல் சூரியனும் 8-ல் நுழைவ தால், திடீர் பணவரவு உண்டு. மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுங்கிச் செல்வீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். கேது 6-ல் தொடர்வ தால், வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில், உயரதிகாரிகள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார் கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
நீதி தவறாமல் நடப்பவர்களே!

புதன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், வேகம் காட்டுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் நண்பர்களாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வழக்கு சாதகமாகும். குருவும் ராகுவும் லாப வீட்டிலேயே தொடர்வதால், ஷேர், கமிஷன் மூலம் பணம் வரும். வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
14-ம் தேதி முதல் சூரியன் 7-ம் வீட்டில் நுழைவதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். வாழ்க்கைத் துணையின் உடல் நலம் பாதிக்கும். அரசு காரியங் கள் தாமதமாகும். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால், கடன் தொல்லை, தொண்டை வலி, சிறுசிறு விபத்துகள் வந்து செல்லும். கணவன்-மனைவிக் குள் விட்டுக் கொடுத்துப் போகவும். பாதச் சனி தொடர்வதால், பேச்சில் கவனம் தேவை. வியாபாரத்தில், வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில், உங்களின் பரந்த மனதை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்கு பிரபலமாவீர்கள்.
துயரங்களைக் கண்டு துவளாதவர்களே!

14-ம் தேதி முதல் சூரியன் 6-ல் நுழைவதால், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். அரசால் அனுகூலம் உண்டு. வேலை கிடைக்கும். பணவரவு கணிசமாக உயரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால், சளித் தொந்தரவு, நரம்புச் சுளுக்கு, உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் எழலாம்.
சுக்ரன் சாதகமாக இருப்பதால், மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி தங்கும். புறநகர் பகுதியில், வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். குரு, ராகு மற்றும் கேது சரியில்லாததால், சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். பண விஷயத்தில் யாருக்கும் ஜாமீன் தர வேண்டாம். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.
தராதரம் அறிந்து பழகுபவர்களே!

ராசிநாதன் குருபகவான் 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், நினைத்த காரியம் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்தமாக வீடு கட்டி குடிபுகுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். செவ்வாய் 12-ம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், புது சொத்து வாங்குவீர்கள்.
14-ம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால், டென்ஷன் வந்து போகும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். புதனும் சுக்ரனும் சாதகமாக இருப்பதால், மனதுக்கு இதமான செய்திகள் வரும். 3-ம் வீட்டில் கேது நிற்பதால், புது வேலை, பொறுப்புகள் தேடி வரும். அயல்நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஏழரைச் சனி தொடர்வதால், பண விஷயத்தில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத் துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.
தன்மான உள்ளம் கொண்டவர்களே!

லாப வீட்டில் செவ்வாயும், சனியும் தொடர்வதால், வருமானத்தை உயர்த்த புது வழி யோசிப்பீர்கள். புது வேலை அமையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு மாறுவீர்கள். மனைவிவழி உறவினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். புதன் சாதகமாக இருப்பதால், தள்ளிப் போன விஷயங்கள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், வீண் பகை, பொருள் இழப்பு, ஏமாற்றம் வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பயணங்கள் அலைச்சல் தருவதாக அமையும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். குரு 8-ல் மறைந்திருப்பதால், மனஇறுக்கம், வீண் அலைச்சல், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில், மேலதிகாரி சில நேரங்களில் எரிந்து விழுவார். பணியில் நிரந்தரமற்ற சூழல் உருவாகும். சக ஊழியர்களிடம் உஷாராகப் பழகவும். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும்.
இங்கிதமான பேச்சால் மற்றவர்களைக் கவர்பவர்களே!

14-ம் தேதி முதல் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்வதால், எதிர்பார்ப்பு கள் நிறைவேறும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டட வரைபடத்துக்கு அரசு அனுமதி கிடைக்கும். சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால், போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.
வாழ்க்கைத் துணை வழியில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். ராகு, கேது சாதகமாக இல்லாததால், எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்ட பெயர்தான் மிஞ்சுகிறது என ஆதங்கப்படுவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரைக் கலந்து பேசுவது நல்லது. ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். 10-ல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.
தோல்வியும் வெற்றிக்கு அறிகுறி என்பவர்களே!

6-ல் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். 9-ல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். வீட்டில் நிம்மதி உண்டாகும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புதனும் சுக்ரனும் சாதகமாக இருப்பதால், உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சூரியன் சாதகமாக இல்லாததால், பார்வைக் கோளாறு, வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்தைவிட லாபம் அதிகரிக்கும். பழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.