Published:Updated:

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? நிவர்த்திக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள்! #Astrology

திருமணத் தடைக்கு 'செவ்வாய் தோஷம்' காரணமா?
திருமணத் தடைக்கு 'செவ்வாய் தோஷம்' காரணமா?

`செவ்வாய் தோஷம் என்றால் என்ன, அதற்கான பரிகாரங்கள், வழிபாடுகள் என்னென்ன?’ என்பதைப் பற்றி ஜோதிடர் ஞானரதத்திடம் கேட்டோம்.

ப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ முனிவருக்கும் தேவகன்னிகைக்கும் பிறந்த செவ்வாய் பகவான், பூமித்தாயால் வளர்க்கப்பட்டவர். இதனாலேயே இவர் பூமிக்கு உரிய நாயகராக விளங்குகிறார். மங்களங்களை மட்டுமே அருளும் செவ்வாய் பகவான் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைக்கொண்டே பலன்களை அளிக்கிறார். பூமிகாரகன், அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன், வீரபுத்ரன் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் செவ்வாய் பகவான், தன்னை வணங்குவோருக்கு மங்களங்களை அருளும் இரக்கக் குணம் கொண்டவர். 


செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருக்கிறது என்பதை அறிந்தவுடன் நாம் தவித்துப்போகிறோம். `செவ்வாய் தோஷம் கொண்டவர்களுக்கு திருமணமே அமையாது, அமைந்தாலும் நிலைக்காது’ என்றெல்லாம் சொல்லி, அவர்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கிவிடுகிறோம்.

`செவ்வாய் தோஷம் என்றால் என்ன, அதற்கான பரிகாரங்கள், வழிபாடுகள் என்னென்ன?’ என்பதைப் பற்றி ஜோதிடர் ஞானரதத்திடம் கேட்டோம்.

``செவ்வாய் தோஷம் என்பது மிகவும் நுட்பமான அறிவியல். திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தாம்பத்யத்தைக் குறிக்கும் கிரகம்.

ஒருவரின் மணவாழ்க்கையில் செவ்வாய்க் கிரகம், இன்ப வாழ்வை தீர்மானிக்கும் சக்தி படைத்தது. செவ்வாய்க் கிரகம் மனித உடலின் எலும்பு மஜ்ஜையுடன் தொடர்புடையது. மஜ்ஜையிலிருந்துதான் ரத்தம் உருவாகிறது; ரத்தம்தான் இனவிருத்திக்கான அடிப்படையாக அமைகிறது. எல்லாவற்றையுமே நேரிடையாகச் சொல்லிவிட முடியாது என்ற காரணத்தால்தான் நம் முன்னோர் இலை மறைவு, காய் மறைவாக `தோஷம்' என்ற பெயரில் இந்த அறிவியல்நுட்பத்தைக் கூறினார்கள். ஒருவரது உடலில் ஏற்படும் அதிர்வலையும் செவ்வாய் கிரகத்தின் அதிர்வலையும் பலமாகப் பொருந்திவந்தால் அவர் செவ்வாய் தோஷம் கொண்டவராகக் கருதப்படுகிறார். அவருக்கு அதே செவ்வாய் தோஷமுள்ள இணையை திருமணம் செய்துவைத்தால் திருமணம் இனிமையாகி தாம்பத்யம் சிறக்கும் என்பதே ஜோதிடம் சொல்லும் உண்மை. அரைகுறையாக ஜோதிடத்தைத் தெரிந்துகொண்டு, இந்த இடத்தில் செவ்வாய் இருந்தால் ஆபத்து என்பதெல்லாம் தவறானது. முழுமையாகக் கற்றறிந்த ஜோதிடர்கள், ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வு செய்து பலன்களைச் சொல்வதே நல்லது. 


செவ்வாயைப் பொறுத்தவரை ஒருவரின் ஜாதகத்தில் பல விதிவிலக்குகள் உள்ளன. செவ்வாய் தோஷம் என்பதை ஓர் அறிகுறியாக வைத்துக்கொண்டு அதற்கேற்ப பரிகாரங்களை மேற்கொண்டால் சிறப்பான வாழ்வைப் பெறலாம். திருமணம் தவிர, வீண் செலவு, கோபம் போன்ற விளைவுகளையும் செவ்வாய் பகவானே தீர்மானிப்பதால் அவரை வணங்கிப் பலன் பெறவேண்டும். 
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பல வழிகளில் தோஷநிவர்த்தி செய்துகொள்ளலாம். செவ்வாய்க்கான தலமான வைத்தீஸ்வரன் கோயிலிலிருக்கும் செவ்வாய் பகவானுக்கு செவ்வாய்க் கிழமையன்று விளக்கேற்றி விசேஷ பூஜைகள் செய்து வணங்கலாம். செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். குறிப்பாக திருச்செந்தூர் செல்வது நன்மையளிக்கும். எல்லா சிவாலயங்களிலும் செவ்வாய்க்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து வணங்குவது நல்ல பலனைத் தரும். 


செவ்வாய்க்கிழமை துர்கை அம்மனை வணங்கி விரதம் இருப்பதும் நல்லது. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு செவ்வாய் ஆதிக்கம் குறையும் என்றால் அதன் பிறகு திருமணம் செய்துகொள்ளலாம். பவள மோதிரம் அணிவது செவ்வாயின் வீரியத்தைக் குறைக்கும். பைரவர், அனுமன் வழிபாடும் செவ்வாய் பகவானுக்கு விருப்பமானவை. 
கிரகங்களில் செவ்வாய் நெருப்பு வடிவமானது. சகல தேவர்களுக்கும் ஆகுதியைக் கொண்டு செல்லும் நெருப்பு உடனடியாகப் பலன்களை வழங்கக்கூடியது. வேண்டியவரைக் கலங்காமல் காப்பவர் செவ்வாய் பகவான். இவரது புகழைப் பாடித் துதிக்கும் பக்தர்களை இவர் கைவிடுவதே இல்லை. ஒன்பது வாரங்கள் செவ்வாய் விரதம் இருந்தால், எந்த தோஷத்தையும் நிவர்த்தி செய்துவிடலாம். தகுந்த ஜோதிடர்களை ஆலோசித்த பிறகே உங்கள் தோஷங்களை அறிந்து, அதற்கு நிவர்த்தி தேட வேண்டும் என்பது முக்கியமானது" என்றார்.


நல்ல செயல்களும், தரும சிந்தனையும், மனமுருகிச் செய்யும் பிரார்த்தனையும் நிச்சயம் எந்த தோஷத்தையும் விலக்கிவிடச் செய்யும். தேவையற்ற பயமும் குழப்பமும் நீங்கி நலமுடன் வாழ செவ்வாய் பகவானை பிரார்த்திப்போம். 


"ஓம் வீரத்வஜாய வித்மஹே 
விக்ன ஹஸ்தாய தீமஹி 
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத் 
ஓம் அங்காரகாய வித்மஹே 
சக்திஹஸ்தாய தீமஹி 
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத் 
ஓம் அங்காரகாய வித்மஹே 
சக்திஹஸ்தாய தீமஹி 
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத் 
ஓம் லோஹிதாங்காய வித்மஹே 
பூமிபுத்ராய தீமஹி 
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்."

 

அடுத்த கட்டுரைக்கு