Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மே 24 முதல் ஜுன் 6 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

மே 24 முதல் ஜுன் 6 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

துணிச்சல் மிக்கவர்கள் நீங்கள்! உங்கள் பாக்கியாதிபதி குருபகவான் 5-ம் வீட்டில் நீடிப்பதால், நினைத்த காரியம் முடியும். பணவரவு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். ராகுவும் 5-ல் நிற்பதால், அவ்வப்போது பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்பீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.

சூரியன் 2-ல் நிற்பதால், பேச்சில் தடுமாற்றம் இருக்கும். கேது லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், வெளிநாட்டில் இருப்பவர், அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்களின் கடின உழைப்பால் நிர்வாகத்தின் லாபம் உயரும். கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும்.

எதிர்பார்ப்புகளில் சில நிறைவேறும் காலம் இது.

ராசிபலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொன்ன சொல் தவறாதவர்கள் நீங்கள்! ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். மனோபலம் அதிகரிக்கும். வீடு மாறவேண்டிய நிர்பந்தம் உண்டாகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். கண்டகச் சனி தொடர்வதால், முன்கோபம் வரும். வாழ்க்கைத் துணையிடம் அனுசரணை தேவை.

4-ல் குருவும், ராகுவும் தொடர்வதால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கும். வழக்கின் மூலம் நிம்மதி இழப்பீர்கள். அடுத்தடுத்த வேலைச்சுமைகளால் சோர்வடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கலைத்துறையினரே! யதார்த்தமான உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

சமயோசிதமாக நடக்க வேண்டிய வேளை இது.

ராசிபலன்

அனுபவ அறிவு அதிகம் உள்ளவர்கள் நீங்கள்! செவ்வாய் 6-ல் நிற்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். முன்பணம் தந்து முடிக்காமல் இருந்த வீடு, மனையை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

 சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதால், திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபகாரியச் செலவுகள் அதிகமாகும். நீண்ட காலமாக செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால், மன இறுக்கம், வீண் பதற்றம் வந்து போகும். ராகு வலுவாக இருப்பதால், வேற்றுமொழியினரால் உதவிகள் கிடைக்கும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கலைத்துறையினரே! அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும்.

எதிர்ப்புகளை கடக்கும் தருணம் இது.

ராசிபலன்

இடைவிடாமல் உழைப்பவர்கள் நீங்கள்! சூரியனும், சுக்கிரனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். அரசாங்க அதிகாரிகளின் தொடர்பு கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வங்கிக் கடன் கிடைக்கும். புது வேலை அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணையின் வழியில் நற்செய்தி வரும். உங்களை கிள்ளுக் கீரையாக நினைத்தவர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுப்பீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், யதார்த்தமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களை கட்டும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடனான புதிய ஒப்பந்தங்களால் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

அனைவராலும் மதிக்கப்படும் நேரம் இது.

ராசிபலன்

நெஞ்சுறுதி கொண்டவர்கள் நீங்கள்!  ராசிநாதன் சூரியன் 10-ல் கேந்திரபலம் பெற்று நிற்பதுடன், சுக்கிரனும் 10-ம் இடத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். பரபரப்பான முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். புதிய நட்பு மலரும்.

ராசிக்குள் குருவும், ராகுவும் தொடர்ந்துகொண்டிருப்பதால், சில நேரங்களில் ஏமாற்றங்களை உணருவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், அநாவசியச் செலவுகளை தவிர்த்துவிடுங்கள். கை, கால், மூட்டு, முதுகு வலி வந்து போகும். உத்தியோகத்தில் காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டிவரும். கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களைத் தேடி வரும்.

இங்கிதமான பேச்சால் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

மனசாட்சி உள்ளவர்கள் நீங்கள்!  புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர் வீட்டு கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள். நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். கேது 6-ல் நிற்பதால், கல்யாணம், கிரகப்பிரவேசம் என வீடு களைகட்டும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். கோயில் கும்பாபிஷேகத்துக்கு உதவுவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் நன்மை உண்டு.

சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், வீண் பதற்றம், மருத்துவச் செலவுகள் வந்து போகும். 12-ல் ராகுவும், குருவும் மறைந்திருப்பதால், வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். 3-ல் சனியும், செவ்வாயும் நிற்பதால், திடீர் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் ஆதாயமடைவீர்கள்.

புதிய முயற்சிகள் வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்

மேன்மையானவர்கள் நீங்கள்! பாக்கியாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், அனுபவ அறிவு உங்களை முன்னேற்றும். வி.ஐ.பி.களுக்கு நெருக்கமாவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தந்தை வழியில் இருந்த மோதல்கள் விலகும். குருவும், ராகுவும் லாப வீட்டில் வலுவாக நீடிப்பதால், பழைய மனையை விற்று உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையின் வழியில் மதிப்பு, மரியாதை கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

சுக்கிரனும், சூரியனும் 8-ல் நிற்பதால், திட்டமிடாத செலவுகளைப் போராடி சமாளிப்பீர்கள். பணம் வாங்கித் தரும் விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். பழைய கடனைப் பற்றி யோசிப்பீர்கள். பாதச் சனி தொடர்வதால், பேச்சில் கவனம் தேவை. சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

உழைப்பால் உயரும் நேரம் இது.

ராசிபலன்

நேர்மையாளர்கள் நீங்கள்!  7-ல் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத் திறமை கூடும். வழக்கு சாதகமாகும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்ப்பீர்கள். சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். 7-ல் சூரியனும் இருப்பதால், அவ்வப்போது வேலைச்சுமை வந்து செல்லும்.

2-ம் தேதி வரை புதன் 6-ல் மறைந்திருப்பதால், செலவுகள் துரத்தும். சொந்தங்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். ராசிக்குள் சனியும், செவ்வாயும் நிற்பதால், தயக்கம், தடுமாற்றம், நிம்மதியின்மை, முன்கோபம், வயிற்றுப் புண், வந்து செல்லும். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லவேண்டாம். மன அமைதிக்கு தியானம் செய்வது நல்லது. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்களைப் பற்றிக் குறைகூற வேண்டாம். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

இழுபறி நிலை மாறி ஏற்றம் பெறும் தருணம் இது.

ராசிபலன்

தோல்வி கண்டு துவளாதவர்கள் நீங்கள்! கேது 3-ம் இடத்திலும், சூரியன் 6-ம் வீட்டிலும் நிற்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் திடீர் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதன் 2-ம் தேதி வரை 5-ல் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் மதிப்பு கூடும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள்.

சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துப் போவது நல்லது. குரு 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், சொத்து வாங்குவதும், விற்பதும் சாதகமாக அமையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 12-ல் சனியும், செவ்வாயும் மறைந்திருப்பதால், மறைமுக எதிர்ப்புகள், எதையோ இழந்ததைப் போன்று ஒருவித கவலை வந்து செல்லும். வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

துணிவே துணை என்று நினைக்கும் காலம் இது.  

ராசிபலன்

சிந்தனைவாதிகள் நீங்கள்! சனியும், செவ்வாயும் லாப வீட்டிலேயே வலுவாக தொடர்வதால், எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வேற்று மாநிலத்தவர்களின் நட்பு கிடைக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சுக்கிரன் 5-ம் இடத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். ஆனால், 5-ல் சூரியனும் நிற்பதால், பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்கள் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், வீண் விரயம், அலைச்சல் உண்டாகும். எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக்காட்டுவதை ஏற்றுக்கொள்ளுங்கள். கலைத்துறையினரே! விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

சவால்களில் வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்

வாரி வழங்குபவர்கள் நீங்கள்! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய எண்ணங்கள் தோன்றும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த பட்ஜெட்டில் வீடு, மனை அமையும். உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். செவ்வாய் 10-ல் நிற்பதால், வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சூரியன் 4-ல் நிற்பதால், வேலைச்சுமை இருந்துகொண்டே இருக்கும்.

ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் தொடர்வதால், உடல்நலத்தில் கவனம் தேவை. சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை அனுதினமும் மேற்கொள்வது நல்லது. மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவது பற்றி ஆலோசனை செய்வீர்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும்.

தொடர் முயற்சியால் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

தர்மத்தின் வழி நடப்பவர்கள் நீங்கள்! 3-ல் சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். விவாதங்களில் வெற்றியடைவீர்கள். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு வேலை அமையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சுக்கிரனும் 3-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதிலும் ஈடுபாடு வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், வாழ்க்கைத் துணையின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செவ்வாய் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குரு 6-ம் வீட்டில் நிற்பதால், அலைச்சலும், பதற்றமும் உண்டாகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்கக் கொஞ்சம் போராட வேண்டிவரும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.

சாதிப்பவர்களின் பட்டியலில் இடம் பெறும் நேரம் இது.