Published:Updated:

`விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பொதுப்பலன்கள்! #Astrology

`விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பொதுப்பலன்கள்! #Astrology
`விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பொதுப்பலன்கள்! #Astrology

`விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பொதுப்பலன்கள்! #Astrology

ஹேவிளம்பி வருடம் முடிந்து சீரும் சிறப்புமாக விளம்பி வருடம் பிறக்கிறது. மங்களரகமான விளம்பி வருடம் வசந்தருதுவுடன், உத்தராயண புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை காலை 6 மணி 55 நிமிடத்துக்கு 14.4.2018 கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறக்கிறது.தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள் பற்றி பார்ப்போம்.

சிவனுடைய ஆதிக்கமுள்ள திரயோதசி திதி சனிப் பிரதோஷ நாளில், இந்த வருடம் பிறப்பதால், மக்களிடையே ஆன்மிக உணர்வு அதிகரிக்கும். உத்திரட்டாதி நட்சத்திரம் காமதேனுவினுடைய நட்சத்திரம். அதனால், பழைய பூர்வீகத் தொழில்கள் சிறப்பாக செழிக்கும். இயற்கை விவசாயப் பொருள்கள், மூலிகைப் பொருள்களின் பயன்பாடுகள் அதிகரிக்கும். மீன ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் நாட்டு மக்களுக்கு தேசபக்தி அதிகரிக்கும்.

மேலும் விளம்பி வருடம், மேஷ லக்னத்திலும், நவாம்சத்தில் சிம்ம லக்னம், சிம்ம ராசியிலும் மாஹேந்திரம் நாமயோகம், வணிசை நாம கரணத்திலும், சனி பகவான் ஓரையில் இந்த வருஷம் பிறப்பதால், எல்லா விஷயங்களும் தாமதமாகவே முடியும். 

நேத்திரம், ஜீவன் மறைந்த நாளில் பிறப்பதால், ஒரு வேலையை, இரண்டு முறை அல்லது மூன்று முறை திரும்பத் திரும்பச் செய்யவேண்டியிருக்கும்.

பஞ்ச பட்சிகளில் மயில் ஊண் செய்யும் காலத்திலும், சனி மகாதசையில், சனி புத்தி, கேது அந்தரத்தில் விளம்பி வருடம் பிறக்கிறது. பொதுவாக, இந்த வருடத்தில் சனி பகவானின் ஆதிக்கம் அதிகமிருக்கும்.

இந்த ஆண்டின் ராஜாவாக சூரியன் வருவதால் மத்தியில் எதிர்க்கட்சிகள் வலுவடைவதுபோலத் தெரியும். ஆனால், மீண்டும் ஆளுங்கட்சியின் கையே ஓங்கும். பணத்தட்டுப்பாடு குறையும்.

ராஜாவாக சூரியனும், மந்திரியாக சனி பகவானும் இருப்பதால், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கும் 'ஈகோ' பிரச்னை அதிகரிக்கும். பனிப்போர் நடந்துகொண்டேயிருக்கும்.

அர்க்காதிபதியாகவும், சேனாதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சுக்கிரன் வருவதால், மக்களிடையே சொகுசுத் தன்மை அதிகரிக்கும். கலையுணர்வும், குறுக்குவழியில் சம்பாதிக்கும் குணமும், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கில் ஆர்வமும் அதிகரிக்கும்.

சனிபகவானின் ஆதிக்கமிருப்பதால், திருநங்கைகள் பெரிய பதவிகளுக்கு வருவார்கள். பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ளவர்கள் கடின உழைப்பால் மேலான நிலைக்கு வருவார்கள்.

விளம்பி வருடத்தில், 'விளைச்சல் குறைவாக இருக்கும்' என்கிறார் இடைக்காடர். அவர் எல்லா வருடங்களின் பலன்களையும் பாட்டாகத் தொகுத்துப் பாடியிருக்கிறார். இந்த வருடத்தில் மழை விட்டுவிட்டு திட்டுத்திட்டாகப் பொழியும்.

சனிக்கிழமையில் இந்த ஆண்டு பிறப்பதால், ஒரு சில இடங்களில் நெற்பயிர், வேர்க்கடலை போன்ற பயிர்கள் பூவைத்துக் காய்க்கும் தறுவாயில் மழையின்றி பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. பூச்சி, எலி மற்றும் காட்டுப்பன்றி தொல்லையாலும் விவசாயம் பாதிக்கும்.

விழுந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் ஓரளவுக்கு சூடுபிடிக்கும். மணல் தட்டுப்பாடு நீங்கும். கட்டுமானத் தொழில் மீண்டும் சூடுபிடிக்கும். மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருப்பவர்களுக்கு சவால்கள் அதிகரிக்கும். காவல்துறையிலுள்ள குறைகள் களையப்படும்.

மந்திரியாக சனி பகவான் வருவதால், மலைக் காடுகள் அழியும். வனவிலங்குகளின் எண்ணிக்கை குறையும்.

மேகாதிபதியாக சுக்கிரன் வருவதால், புயல் சின்னம் அதிகம் உருவாகும். புயலுடன் அதிக மழை பொழியும். சாம்பல் நிற மேகங்கள் திரளும். மேலும் சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்திருப்பதால், பருவ மழை சீராக இருக்காது. பருவம் தவறி மழை பெய்யும். நதிகளை இணைக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி, குளங்கள் மற்றும் நீர்நிலைகள் இனங்கண்டறியப்பட்டு ஆழப்படுத்தப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப்பொழிவு அதிகமிருக்கும். ஸஸ்யாதிபதியாக செவ்வாய் வருவதால், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். தட்பவெட்ப நிலை மாறி மாறி வரும்.

சேனாதிபதியாக சுக்கிரன் வருவதால் நாட்டின் பாதுகாப்புக்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் தந்து, பட்ஜெட்டில் பெருமளவு நிதியை ஒதுக்கும். எல்லை தாண்டி வரும் தீவிரவாதம் கடுமையாக ஒடுக்கப்படும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பழைய நீர்நிலைகள் கண்டறியப்பட்டு தூர்வாரப்படும். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் வேளையை கவனித்தால் அமெரிக்காவைவிட சீனாவின் கை உயரும்.

தானியாதிபதியாக சூரியன் வருவதால் பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் நவதானியங்களின் விலை உயரும். ஹோட்டல் உள்ளிட்ட உணவு தொடர்பான வியாபாரத்தில் லாபம் நிலையில்லாததாக இருக்கும்.

விளம்பி வருடப் பிறப்பு ஜாதகத்தில், லக்னாதிபதி செவ்வாயுடன் பாதகாதிபதி சனிபகவான் சேர்ந்து காணப்படுவதால் உலகெங்கும் வன்முறைகள் அதிகரிக்கும். மின்கசிவால் தீ விபத்துகளும், அழிவும் ஏற்படும்.

தனசப்தமாதிபதியாக சுக்கிரன் வருவதால், மக்களிடையே சேமிக்க முடியாத நிலை ஏற்படும். விவாகரத்துகள் அதிகரிக்கும். திருதியசஷ்டமாதிபதியாக புதன் வருவதாலும், புதன் நீச கதியில் நிற்பதாலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, சி.ஏ., ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகள் கடுமையாகும். அனுமதியில்லாத கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்.

கம்ப்யூட்டர் துறையில் மீண்டும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆசிரியப் பணிக்கு அதிகமான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். பாக்கிய, விரயாதிபதியாக குரு வருவதாலும், குரு வக்கிரம் பெற்று நிற்பதாலும் மேலும் சில வங்கி மோசடிகள் கண்டறியப்படும். மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள் பாதிக்கப்படுவார்கள். புதிய ரூபாய் நோட்டுகள் வெளியாகும். வெளிநாட்டில் இருக்கும் குற்றவாளிகள் சரணடைவார்கள்.

இந்த விளம்பி வருடம் கடந்த வருடத்தைவிட மக்களிடையே மகிழ்ச்சியையும் பணவரவையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

குருபகவானின் வீடான மீன ராசியிலும், சனிபகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும், செவ்வாயின் வீடான மேஷ லக்னத்திலும் இந்த ஆண்டு பிறப்பதால் மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்வது அனைத்துவிதமான யோகங்களையும் தரும். முடிந்தால் சித்தர்களுக்கெல்லாம் சித்தராகிய ஸ்ரீபழநி முருகனை ராஜ அலங்காரத்தில் ஒரு முறை தரிசியுங்கள். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

அடுத்த கட்டுரைக்கு