Published:Updated:

மேஷ ராசிக்காரர்களே... உங்கள் புது வீடு கனவு நனவாகும் நேரம் இது- விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் #Astrology

மேஷ ராசிக்காரர்களே... உங்கள் புது வீடு கனவு நனவாகும் நேரம் இது- விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்  #Astrology
மேஷ ராசிக்காரர்களே... உங்கள் புது வீடு கனவு நனவாகும் நேரம் இது- விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் #Astrology

மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம். விளம்பி வருஷம், குரு  உங்கள் ராசியைப் பார்க்கிற நேரத்தில் பிறந்திருப்பது, உங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பாக்கியம். 'குரு பார்க்கக் கோடி நன்மை' என்று சொல்லுவார்கள். இந்த ஆண்டு நீங்கள் எந்தச் செயலை எடுத்துச் செய்தாலும் ஆர்வமும் சுறுசுறுப்பும் உங்களிடம் வெளிப்படும். நீங்கள் எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாக முடியும்.

உங்கள் லக்னத்துக்கு  12 -ம் வீட்டில் புத்தாண்டு பிறப்பதால்,  செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். செலவுகளைச் சுபச் செலவுகளாக மாற்றுங்கள். அதாவது, ஏற்கெனவே வாங்கிப் போட்டிருக்கிற காலி மனையில வீடு கட்டுங்கள். அதற்கு உரிய நேரம் இப்போது வந்திருக்கிறது. வீடு கட்டுவீர்கள். புது வீட்டில் நீங்கள் குடியேறி சிறப்பாகவும் இருப்பீர்கள். 

ராசிக்கு 12 - ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், திடீர்ப் வெளி நாட்டுப் பயணங்கள் போய் வருவீர்கள். சனி பகவான் செவ்வாயுடன் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். 

ராசிநாதன் செவ்வாயின் போக்கு சுமராக இருப்பதால், உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சகோதரர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால், நிதானமான போக்கைக் கடைப்பிடியுங்கள். 

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால்,. நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றிதான் கிடைக்கும். அதேநேரத்தில் அலர்ஜி, இன்பெக்‌ஷன் ஆகிய விஷயங்களில் கவனமாக இருங்கள். ராசிநாதன் செவ்வாய்,  பாவ கிரகங்களுடன் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது. கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அதே சமயத்தில் வீண் சந்தேகங்கள், சிறு சிறு வாக்குவாதங்கள்  வர வாய்ப்பிருக்கிறது. இருவருமே அதைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.

3.10.18 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 7 - ம் வீட்டிலேயே இருப்பதால் திருமணம், வளைகாப்பு என்று அடுத்தடுத்து நடைபெறும் சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். 

4.10.18 முதல் 12.3.19 வரை குரு ராசிக்கு 8 - ம் வீட்டில் மறைவதால், வீண் அலைச்சல், இனம் புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். 13.3.19 குரு ராசிக்கு 9 -ம் வீட்டுக்குச் செல்வதால் பல வகைகளிலும் வளர்ச்சிப் போக்கைக் காணலாம். மாணவ மாணவிகளுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகமாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று சாதனை படைப்பார்கள். 

 ராகு கேதுவைப் பொறுத்த அளவில் வருஷம் பிறக்கும்போது ராகு 4-ம் வீட்டில் இருக்கிறார். அதனால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் கொள்வது நல்லது.  13.2.19 முதல் ராகு 3 -ம் வீட்டிலும் கேது 9 -ம் வீட்டிலும் அமர்வதால்,  தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புது வீடு மாறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

வியாபாரிகளுக்கு இந்த வருஷம் மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுக்கவும் புது முதலீடுகள் செய்யவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதேவேளையில் முன்பின் தெரியாத துறைகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் வியாபாரம் செய்யும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். 

உத்தியோகத்தில், உங்கள் கை ஓங்கி இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். உங்களுடைய பொறுப்புகளை, நீங்களே முன்னின்று நடத்துவது நலம் பயக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்குப் புதுப்புது சலுகைகள், இடமாற்றங்கள் எதிர்பார்த்த மாதிரி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு இந்த வருஷம் மிகவும் நன்றாக இருக்கும். சுக்கிரன் கலைகளுக்கு உரிய கிரகம் அந்தச் சுக்கிரன் ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் வரை 7-ம் வீட்டில் இருக்கப் போகிறார். எடுத்து முடித்து ரிலீஸ் பண்ண முடியாமல் இருந்த படங்கள், வெளியாகி வெற்றிபெறும் தடைப்பட்டுக் கிடந்த சீரியல்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற ஆரம்பிக்கும். 

வருடம் முழுவதும் சனி பகவான் 9 - ம் வீட்டில் நிற்பதால்,  விவசாயிகளுக்கு இந்த வருஷம் சிறப்பாக இருக்கும். குறிப்பா எண்ணெய்வித்துக்களான எள், ஆமணக்கு, கடலை, சூரியகாந்தி ஆகியவற்றைப் பயிரிட்டால், நல்ல லாபம் கிடைக்கும்.  நன்செய் பயிர்களில் கரும்பு நல்ல லாபம் தரும்.  

மொத்தத்தில் இந்த விளம்பி வருடம்,  சின்னச்சின்னத் தொந்திரவுகள் உடல் உபாதைகளைக் கொடுத்தாலும் உங்கள் திறமையையும் செல்வாக்கையும் அதிகரிக்க வைப்பதாகவே அமையும்.

பரிகாரம் 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புத்தூர் எனும் ஊரில் அருளும் சுப்ரமணியரை, சஷ்டி திதி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; சுபிட்சம் உண்டாகும்.