ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

ராசி பலன்கள்

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்ஜனவரி 5-ம் தேதி முதல் 18 - ம் தேதி வரை

மேஷம்: சாதிக்கப் பிறந்தவர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10ல் உச்சமாகி நிற்பதால், குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவர் உங்களைப் புரிந்து கொள்வார். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால்... பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். குரு 12ல் மறைந்திருப்பதால், திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

 

ரிஷபம்: எதிலும் மாற்றத்தை விரும்புபவர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால், பணப்பற்றாக்குறை நீங்கும். வீடு, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். சகோதரர் பாசமழை பொழிவார். பூர்விக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குரு வலுவாக இருப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாரிசு கிட்டும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உயரதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

தொட்டது துலங்குவதுடன், விட்டதைப் பிடிக்கும் வேளையிது.

 

மிதுனம்: தொலைநோக்கு பார்வை கொண்டவர்களே!

சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், குழம்பிய விஷயங்களில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சுக்கிரனும், செவ்வாயும் மறைந்திருப்பதால்... செலவுகள், அலைச்சல் துரத்தும். சமையலறையில் நெருப்பு, மின்சாரத்தைக் கவனமாக கையாளுங்கள். 5ம் தேதி காலை 10 மணி முதல் 7ம் தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் நிதானித்து செயல்படுங்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.

உணர்ச்சிவசப்படாமல் செயல்பட வேண்டிய வேளையிது.

 

கடகம்: மற்றவர்கள் மதிக்கும்படி நடந்து கொள்பவர்களே!

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. 15ம் தேதி முதல் சூரியன் 7ம் வீட்டில் அமர்வதால், கணவர் கொஞ்சம் கோபப்படுவார். 7ம் தேதி இரவு 8 மணி முதல் 9ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால், உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உயர்பதவியில் அமர்வீர்கள்.

இங்கிதமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

 

கன்னி: எதையும் கலைக் கண்ணோடு பார்ப்பவர்களே!

சூரியன் வலுவாக இருப்பதால்... அரசு காரியங்கள் சுலபமாக முடியும். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். செவ்வாய் 5ல் நிற்பதால், மன உளைச்சல் வந்து நீங்கும். 12ம் தேதி மாலை 7 மணி முதல் 14ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால், யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரி உதவுவார்.

திடீர் திருப்பங்கள் நிறைந்த காலமிது.

 

துலாம்: போராட்ட சிந்தனை கொண்டவர்களே!

உங்கள் ராசிநாதன் பலமாக இருப்பதால், சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். கணவரின் வருமானம் உயரும். ஆபரணம் சேரும். விரயச் சனியால் அவ்வப்போது எதிர்மறை சிந்தனைகள் வந்து செல்லும். 15ம் தேதி முதல் 17ம் தேதி நண்பகல் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

 

மதிப்பு, மரியாதை கூடும் காலமிது.

 

விருச்சிகம்: கடந்து வந்த பாதையை ஒருபோதும் மறவாதவர்களே!

செவ்வாய் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் அமைதி நிலவும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், பணவரவு உண்டு. 17ம் தேதி நண்பகல் 12.30 மணி முதல் 18ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

அடிப்படை வசதி பெருகும் வேளையிது.

 

சிம்மம்: உறங்கா சூரியன் போல் ஓயாமல் சிந்திப்பவர்களே!

உங்கள் பிரபல யோகாதிபதி செவ்வாய் உச்சமடைந்ததால், குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 10ம் தேதி முதல் 12ம் தேதி மாலை 7 மணி வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால், முக்கிய முடிவுகளைத் தவிருங்கள். ஏழரைச் சனி தொடர்வதால்... உடல் உபாதை, பணப்பற்றாக்குறை வந்து நீங்கும். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் கோபம் தணியும்.

சவால்களில் வெற்றி பெறும் நேரமிது.

 

தனுசு: பகையாளிக்கும் உதவும் பரந்த மனசுக்காரர்களே!

செவ்வாய் சாதகமாக இருப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கணவருக்கிருந்த உடல் உபாதை, மன உளைச்சல் நீங்கும். அவரின் தொழில் முயற்சிகள் வெற்றியடையும். ராசிக்குள் ராகு தொடர்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் சுமார்தான். உத்யோகத்தில் எதிராக இருந்த அதிகாரி மாற்றலாவார். திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிட்டும்.

நம்பிக்கை துளிர்விடும் தருணமிது.

 

மகரம்: யாருக்காகவும் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாதவர்களே!

கேதுவின் ஆதிக்கம் ஓங்கி நிற்பதால், சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும். கணவருக்கு புது வேலை கிடைக்கும். அவரின் சாந்தமான பேச்சில் சந்தோஷப்படுவீர்கள். 15ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால்... முன்கோபம், அலைச்சல், வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். நல்ல வேலையாள் அமைவார். உத்யோகத்தில் சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

சொந்த பந்தங்களால் நன்மை ஏற்படும் வேளையிது.

 

கும்பம்: தீவிரமாக சிந்தித்து செயல்படுபவர்களே!

யோக கிரகங்கள் சாதகமாக இருப்பதால், உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப வருவாய் ஓரளவு உயரும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். அரசால் ஆதாயம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமைவார். செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால்... திடீர் பயணம், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சகோதர வகையில் மனத்தாங்கல் வரக்கூடும். வியாபாரத்தில் புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் இருந்த கெடுபிடிகள் விலகும்.

புதிய பாதை தெரியும் நேரமிது.

 

மீனம்: கொடுத்து சிவந்த கைகளை உடையவர்களே!

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் கல்யாண விஷயம் சாதகமாக முடியும். செவ்வாய் சாதகமாக இருப்பதால்... புது வீடு, மனை வாங்குவீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஜென்ம குரு தொடர்வதால்... வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

பழைய சிக்கல்கள் தீரும் காலமிது.