Published:Updated:

துலாம் ராசிக்காரர்களே... கனவுகள் நனவாகும், சாதனைபுரிவீர்கள்... விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் #Astrology

துலாம் ராசிக்காரர்களே... கனவுகள் நனவாகும், சாதனைபுரிவீர்கள்... விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் #Astrology
துலாம் ராசிக்காரர்களே... கனவுகள் நனவாகும், சாதனைபுரிவீர்கள்... விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் #Astrology

 
இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது பிறப்பதால், உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதைத் தொட்டாலும் இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் சீக்கிரமாக முடியும். 

ஆனால், 3.10.2018 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு பகவான்  அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால், உங்களைப் பாடாகப்படுத்தி வருகிறார். அவர், 4.10.18 முதல் குரு உங்கள் ராசியைவிட்டு விலகி 2-ல் அமர்வதால், குடும்பத்தில்  இதுவரையிலும் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வார்கள். 
உங்கள் ராசிநாதன் சுக்கிரன், விளம்பி வருடம் பிறக்கும் நேரத்தில், உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால், மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை, பயம் இவையெல்லாம் தள்ளிப்போகும்.  இல்லற வாழ்வில் தாம்பத்யம் சிறக்கும். கணவன், மனைவி அந்யோன்யம் அதிகரிக்கும்.  நீண்ட நாள்களாகத் தள்ளிப்போன திருமணம் இப்போது கைகூடி வரும். திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். 
உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியாக இருக்கிற புதன் இந்த ஆண்டு முழுவதும் நீசமாகி  6-ம் வீட்டிலேயே இருப்பதால், செலவுகள் அதிகமாகிக்கொண்டே போகும். சின்னச் சின்ன நஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அந்த வகையில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் 3-ம் வீட்டில் நின்று, நிபந்தனையற்ற ஆதரவை உங்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.  இதனால் எல்லா சவால்கள், விவாதங்களிலும் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்களின் இலக்கை நோக்கி வேகமாக  முன்னேறுவீர்கள். 

30.04.18 முதல் 27.10.18 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 4-ல் நிற்பதால், தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். உங்கள் ரசனைக்கேற்ப பழைய வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். சகோதரர்கள் வகையிலும் உதவிகள் கிடைக்கும். 
ராகு, கேதுவைப் பொறுத்தவரை கேது 4-ம் இடத்திலும்  ராகு பகவான் 10-ம் இடத்திலும் இருக்கிறார்கள். இதனால் தாயாரின் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. 
 ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால் வேலைச்சுமை, டென்ஷன் வரக்கூடும். ஆனால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகமாகும். 13.2.19 முதல் 9-ல் ராகு நுழைவதால், நீங்கள் எதிர்பார்த்தபடி பணவரவு திருப்திகரமாக இருக்கும். 
கேது 3-ம் வீட்டில் நுழைவதால், தாயார் உடல் நிலை சீராகும். வண்டி, வாகனச் செலவுகள் குறையும். 

பெண்களுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருப்பதால், தாங்களிருக்கும் துறைகளில் சாதனை புரிவார்கள். தங்களின் பிள்ளைகளுக்குச் சிறப்பான முறையில் திருமணத்தைச் செய்து முடிப்பார்கள்.    

மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.அதிகமான மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டையும் அன்பையும் பெறுவார்கள். அவர்கள் விரும்பிய பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும்  இடம் கிடைக்கப்பெற்றுச் சேர்வார்கள்.

வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு வியாபாரம் சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்யும் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவார்கள். நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதற்கேற்ப செயல்பட்டு லாபத்தைக் கூட்டுவார்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணிச்சுழலில் இருந்த இறுக்கம் குறையும். குற்றம் குறைகளைக் களைந்து நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். அலுவலகச் சூழ்நிலை உங்களுக்குச் சாதகமாக அமையும். ஆண்டின் பிற்பகுதியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கும் சில சலுகைகள் கிடைக்கும். 

கலைத்துறையினருக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். இதுவரைக்கும் கிடைக்காத இடங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். 'நிறைய கதைகள் இருக்கின்றன. வாய்ப்புகள் சரியாக இல்லை' என்பவர்களுக்கு அருமையான வாய்ப்புகள் வந்து சேரும்.

விவசாயிகளுக்கு இதுவரைக்கும் இருந்த தண்ணீர் பிரச்னை, வாய்க்கால்- வரப்புப் பிரச்னையெல்லாம் தீரும். மகசூலும் நல்லவிதமாகவே இருக்கும். மரப்பயிர்கள், எண்ணெய் வித்துகளான ஆமணக்கு, எள், நிலக்கடலை ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் நல்ல மகசூல் கிடைக்கும். 

மொத்தத்தில், இந்தப் புத்தாண்டு உங்களின் நீண்டகால கனவுகளை நனவாக்குவதுடன், அடுத்தடுத்து உங்களைச் சாதிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்

கோவை மாவட்டம், உக்கடம் எனும் ஊரில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாளை, ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் வழிபட்டு வாருங்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

தொகுப்பு: எஸ்.கதிரேசன்