தன்னம்பிக்கை
Published:Updated:

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி வித்யாதரன்

துன்முகி வருடம் ஆடி மாதம் 18-ம் தேதி (2.8.2016) செவ்வாய்க்கிழமை கிருஷ்ண பட்சத்து அமாவாசை திதி மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம், சித்தி நாமயோகம், சதுஷ்பாத நாமகரணம், நேத்திரம், ஜீவனம் மறைந்த சித்தயோகத்தில், புதன் ஹோரையில் இரண்டாம் ஜாமத்தில் பஞ்ச பட்சியில் ஆந்தை துயில்கொள்ளும் நேரத்திலும், தட்சிணாயணப் புண்ய கால கிரிஷ்மருதுவில் காலை மணி 9.24-க்கு கன்யா லக்னத்தில் பிரகஸ்பதி எனும் தேவ குருவாகிய வியாழன் பகவான், சிம்ம ராசியிலிருந்து உபய வீடான கன்னி ராசிக்குள் சென்று அமர்கிறார். 1.9.2017 வரை இங்கமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார்.

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

மேஷம்: குருபகவான் 2.8.2016 முதல் 1.9.2017 வரை உங்கள் ராசிக்கு 6-ல் சென்று மறைவதால், எதையும் கொஞ்சம் போராடித்தான் பெற முடியும். செலவினங்கள் அதிகமாகும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், புது வேலை தேடுபவர்களுக்கு விருப்பம் போல வேலை அமையும். குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். உத்யோகத்தில் வேலைச் சுமையால் மனஇறுக்கம் உண்டாகும்.

இந்த குருமாற்றம் கடின உழைப்பால் கரையேற்றுவதாக அமையும்

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம்: அருகிலுள்ள பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீநரசிம்மரை சுவாதி நட்சத்திர நாளில் வணங்குங்கள்.

ரிஷபம்: இதுவரை 4-ல் அமர்ந்து உங்களைப் பதறவைத்த குருபகவான், 2.8.2016 முதல் 1.9.2017 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால், குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். வாழ்க்கைத் துணைவர் கனிவாகப் பேசுவார். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால்... அழகு, ஆரோக்கியம் கூடும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள்.

குருபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், பிதுர்வழி சொத்து கைக்கு வரும். உங்களின் லாப வீட்டை குரு பார்ப்பதால், உடன்பிறந்தவர் களின் அனுசரணை அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தை புது முதலீடுகள் செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் சம்பளம் மற்றும் பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும்.

இந்த குருமாற்றம் உங்களுக்கு  எங்கும் எதிலும் முதல் மரியாதையைப் பெற்றுத் தரும்.

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம்: அருகிலுள்ள ஆலயத்தில் ஸ்ரீசிவபெருமானை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.

மிதுனம்: 2.8.2016 முதல் 1.9.2017 வரை 4-ம் வீட்டில் குரு அமர்வதால், எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளைக் கரைத்துக்கொண்டிருக்க வேண்டாம். வேலைச்சுமையால் அவதிக்குள்ளா வீர்கள். குருபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால்,  உங்களுடைய பலம், பலவீனத்தை உணருவீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். உங்களின் 10-ம் வீட்டை குரு பார்ப்பதால், கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க கடினமாக உழைக்கவேண்டி வரும். உத்யோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு  அலைச்சலுடன் ஆதாயத்தையும் தரும்.

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம்: அருகிலுள்ள பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகருடாழ் வாரை துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.

கடகம்: உங்கள் ராசிக்கு 2-வது வீட்டில் அமர்ந்து வெற்றிகளைத் தந்துகொண்டிருந்த குருபகவான் 2.8.2016 முதல் 1.9.2017 வரை 3-ம் இடத்தில் நுழைவதால், புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். செலவினங்கள் அதிகமாகும். `கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே' என்று வருத்தப்படுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், உறவினர்கள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால், சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். குருபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு போதிய அங்கீகாரம் இல்லாமல் போகும்.

இந்த குரு மாற்றம் `தன் கையே தனக்கு உதவி' என்பதை உணர வைக்கும்.

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம்: அருகிலுள்ள கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீதுர்க்கையம்மனை வெள்ளிக்கிழமையில் வணங்குங்கள்.

சிம்மம்: இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்திருந்து உங்களுக்கு நிம்மதியின்மையையும், ஆரோக்கிய குறைவையும் உண்டாக்கிய குருபகவான் 2.8.2016 முதல் 1.9.2017 வரை உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டில் அமர்வதால், உங்கள் வாழ்க்கை இனி பிரகாசிக்கத் தொடங்கும். உங்களிடம் பணம் வாங்கியவர்கள் அதை  திருப்பித் தருவார்கள். ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், புதிய சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். குருபகவான் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும்.

இந்த குரு மாற்றம் சமூகத்தில் உங்களுக் கென்று ஓர் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும்.

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபைரவரை அஷ்டமி திதி நாளில் வணங்குங்கள்.

கன்னி: இதுவரை 12-ல் மறைந் திருந்த குருபகவான் 2.8.2016 முதல் 1.9.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்ம குருவாக அமர்வதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஒரே சமயத்தில் நீங்கள் பல வேலைகளைப் பார்க்கவேண்டி வரும். குருபகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மகளுக்கு வேலை கிடைக்கும்.

மகனுக்கு நீங்கள் நல்ல குடும்பத்திலிருந்து மணமகள் அமைவார். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், புது டிசைனில் நகை வாங்குவீர்கள். உறவினர் வகையில் மகிழ்ச்சி தங்கும். குருபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

இந்த குரு மாற்றம் ஆரோக்கிய குறைவையும் எதிர்மறை எண்ணங்களையும் தந்தாலும், தன்னை உணரும் சக்தியையும் தரும்.

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை வியாழக்கிழமையில் கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

துலாம்: இதுவரை ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து செல்வம், செல்வாக்கை பெற்றுத் தந்த குருபகவான் 2.8.2016 முதல் 1.9.2017 வரை 12-ம் இடத்தில் சென்று மறைவதால், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகும். வாகனத்தில் செல்லும்போதும், சாலைகளைக் கடக்கும்போதும் நிதானம் அவசியம். குருபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், ஆரோக்கியம் சீராகும். சிலர் தங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்கு குடிெபயர்வீர்கள் குருபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வேற்று மொழி பேசுபவர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் முக்கிய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக செய்து முடிப்பது நல்லது. உத்யோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயத்தில் தலையிட வேண்டாம்.

இந்த குரு மாற்றம் பரபரப்பான வாழ்க்கையைத் தந்தாலும், மாறுபட்ட அணுகு முறையால் ஓரளவு முன்னேற வைக்கும்.

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம்: அருகிலுள்ள பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆஞ்ச நேயரை சனிக்கிழமையில் வணங்குங்கள்.

விருச்சிகம்: 2.8.2016 முதல் 1.9.2017 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் குரு அமர்வதால், தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள்  விரும்பி வந்து பேசுவார்கள். வீட்டு மனை வாங்குவீர்கள். குருபகவான் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், மனோபலம் கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். குருபகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புது வாகனம், சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும்.  

இந்த குரு மாற்றம் உங்களை வளம் பெற வைப்பதுடன்... மதிப்பு, மரியாதையை அள்ளித் தரும்.

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம்: ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நாளில் வணங்குங்கள்.

தனுசு: இதுவரை 9-ல் அமர்ந்து சாதிக்க வைத்த குருபகவான் 2.8.2016 முதல் 1.9.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால், ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். ஒரே நாளில் சில முக்கியமான வேலைகளை சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொடுவார்கள். குருபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால்... பணவரவு, குடும்பத்தில் அமைதி, விருந்தினர் வருகை எல்லாம் உண்டாகும்.

குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வீட்டில் தடைப்பட்டு வந்த விசேஷங்களெல்லாம் நடந்தேறும். குருபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், விலை உயர்ந்த மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில், நிலையற்ற சூழல் நிலவும்.

இந்த குருமாற்றம் ஏமாற்றங்களை ஏற்படுத்தினாலும், விட்டுக் கொடுத்துப் போனால் மகிழ்ச்சி தரும்.

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை திங்கட்கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள்.

மகரம்: இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் மறைந்துகொண்டு பல வகையிலும் சிரமங்களைத் தந்த குருபகவான் 2.8.2016 முதல் 1.9.2017 வரை 9-ம் வீட்டில் அமர்வதால், இனி தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.

குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், சோர்வு நீங்கி உற்சாகமாக செயல் படத் தொடங்குவீர்கள். குரு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள்.

குருபகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகள் நல்லபடியாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். சம்பளம் உயரும். 

இந்த குரு மாற்றம் உங்களை சீராக்கு வதுடன், அடுத்தடுத்து வெற்றிகளையும் தரும்.   

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம்: ஸ்ரீமாரியம்மனை வெள்ளிக் கிழமையில் எலுமிச்சைப் பழ மாலை அணிவித்து வணங்குங்கள்.

கும்பம்: 2.8.2016 முதல் 1.9.2017 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு மறைவதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறையும் இருக்கும். காரியதாமதம் ஏற்படும். குருபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் வீட்டை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு.

குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். விருந்தினர்களின் வருகையால் உற்சாகம் பொங்கும். குருபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்ப்புகள் குறையும். கடன் பிரச்னை இருப்பவர்களுக்கு, அது கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள்.  உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும், அதிகாரிகள் உங்களை அங்கீகரிப்பார்கள்.

இந்த குரு மாற்றம் சாதிக்க வேண்டுமெனில் சகிப்புத்தன்மை, விடாமுயற்சி அவசியம் என்பதை உணர வைக்கும்.

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசண்டிகேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள்.

மீனம்: இதுவரை ராசிக்கு 6-ல் அமர்ந்து ஏமாற்றங்களையும், இழப்புகளையும் தந்த குருபகவான் 2.8.2016 முதல் 1.9.2017 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கவிருப்பதால், இனி எதிலும் வெற்றி பெறுவீர்கள். மாதக் கணக்கில், வருடக்கணக்கில் தாமதமான  காரியங்களெல்லாம் முடிவடையும். இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கியம் கூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குருபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால், வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். வியாபாரம் தழைக்கும். சிலர் சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

இந்த குரு மாற்றம் உங்களின் நீண்ட கால கனவுகளை நனவாக்குவதுடன், புதிய பாதையில் சென்று சாதிக்க வைக்கும்.

ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம்: ஸ்ரீவிநாயகப் பெருமானை சதுர்த்தி திதி நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள்.