Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

சிந்தனை வளம் கொண்டவர்களே!

கேது வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். வழக்கு சாதகமாகும். சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், விலகிச் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

4-ம் தேதி முதல் புதன் 6-ல் மறைவதால், சளித் தொந்தரவு, காய்ச்சல், தொண்டை வலி வந்து போகும். அஷ்டமத்துச் சனியும், 6-ல் குருவும் தொடர்வதால், சின்னச் சின்ன பிரச்னைகள் வரும். அவ்வப்போது அசதி, சோர்வு வந்து போகும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும்.

விட்டுக்கொடுத்து வெற்றி பெறும் காலம் இது.    

ராசிபலன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கலங்கி வருபவர்களுக்கு ஆறுதலாய் இருப்பவர்களே!

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், வி.ஐ.பி.களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். உறவினர், நண்பர்களின் ஆதரவு ஆறுதலாக இருக்கும். குருபகவான் 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பழைய பிரச்னைகளுக்கு ஒரு பக்கம் தீர்வுகள் கிடைத்தாலும் முக்கிய கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால் புதிது புதிதாக சில பிரச்னைகளும், சிக்கல்களும் தொடரவே செய்யும்.

அலர்ஜி, ரத்த அழுத்தம் வந்து போகும். சகோதர வகையில் சச்சரவுகள் வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகள் கோபப்பட்டாலும் அன்புடன் அரவணைத்துச் செல்லவும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உயரதிகாரியால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

 செயலில் வேகம் காட்ட வேண்டிய வேளை இது.

ராசிபலன்

யதார்த்தமாகச் சிந்திப்பவர்களே!

சூரியன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்து கைக்கு வரும். 6-ல் சனி வலுவாக அமர்ந்திருப்பதால், வெளிநாட்டில் இருப்பவர் களால் நன்மை உண்டாகும். பிற மொழி பேசுபவர்களால் உதவிகள் உண்டு.

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். பொது அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டுமென்று நினைப்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வாகனம் வாங்குவீர்கள். ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பதவிகள் தேடி வரும். குருபகவான் 4-ல் நிற்பதால், யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் வந்து நீங்கும். தூக்கமில்லாமல் போகும். சிலர் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரம் செழிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமானாலும் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார்கள்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் காலம் இது. 

ராசிபலன்

நினைத்ததை உடனுக்குடன் முடிப்பவர்களே!

செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும்.

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள். 5-ல் சனி நிற்பதால், பிள்ளைகளின் நலனில் கவனம் தேவை. ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், அசதி வந்து போகும். பிறரை நம்பி பெரிய முயற்சி களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். வேலையாட்களிடம் அதிகக் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினரே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும்.

 பழைய பிரச்னைகள் தீரும் தருணம் இது.     

ராசிபலன்

தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்களே!

குரு சாதகமாக இருப்பதால், தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சிலருக்கு வேற்று மாநிலத்தில் வேலை அமையும். ராசிநாதன் சூரியன் 2-ல் நிற்பதால், பேச்சில் கடுமை காட்டாதீர்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், சிக்கலான காரியங்களில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள், வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோத்தில் மூத்த அதிகாரி அலுவலக ரகசியங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வார். இங்கிதமாகப் பேசி சக ஊழியர்களின் குறை, நிறைகளைச் சரி செய்வீர்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள்.

 வெற்றிப் பாதையில் பயணிக்கும் வேளை இது. 

ராசிபலன்

எப்போதும் கலகலப்பாகப் பேசுபவர்களே!

சனி வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தைரியம் கூடும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். நகர எல்லைப் பகுதியில் விட்டு மனை வாங்குவீர்கள். கேது வலுவாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். ராசிநாதன் புதன் 4-ம் தேதி முதல் உச்சம் பெற்று அமர்வதால், உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். ராசிக்குள் சூரியன் அமர்ந்திருப்பதால், வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமானாலும் விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோப் பிரச்னைகள் வந்து போகும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவீர்கள்.

 மாற்றி யோசித்து சாதிக்கும் காலம் இது. 

ராசிபலன்

உள்ளும் புறமும் தூய்மையை விரும்புபவர்களே!

ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதுடன், 4-ம் தேதி முதல் பாக்கியாதிபதி புதனும் உச்சம் பெற்று ராசிக்கு 12-ல் அமர்வதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு உண்டு. வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

செவ்வாய் 3-ம் இடத்தில் நிற்பதால், சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சூரியன் ராசிக்கு 12-ல் மறைந்து நிற்பதால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் வந்து போகும். குரு 12-ல் நீடிப்பதால், மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து போகும். ராகு லாப வீட்டில் தொடர்வதால், வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வாய்ப்புகள் வரும். வருமானம் உயரும்.

வருமானம் உயரும் நேரம் இது.

ராசிபலன்

உள்ளத்தில் உள்ளதை அப்படியே பேசுபவர்களே!

குரு வலுவாக இருப்பதால், நினைத்த காரியம் முடியும். சாணக்கியத்தனமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். புதிய ஆடை, அணிகலன்கள் சேரும். வெகுநாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

சூரியன் லாப வீட்டில் நிற்பதால், அரசால் ஆதாயம் உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சுபச் செலவுகள் அதிகமாகும். ராசிநாதன் செவ்வாய் 2-ல் நிற்பதால், பேச்சால் பிரச்னை, சகோதர வகையில் மனத்தாங்கல், வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும். ஜன்மச் சனி தொடர்வதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

அதிரடி முடிவுகளால் முன்னேறும் வேளை இது.

ராசிபலன்

தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்களே!

சூரியன் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதன் சாதகமாக இருப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தை புதுப்பிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ராசிநாதன் குருபகவான் 10-ல் நீடிப்பதால், தர்ம சங்கடமான சூழ்நிலைகளை அவ்வப்போது சமாளிப்பீர்கள். ராசிக்குள் செவ்வாய் தொடர்வதால், சகோதர வகையில் பிரச்னை, சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம், சிறுசிறு விபத்துகள் வந்து போகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகள் பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

எதிர்பாராத நன்மைகள் சூழும் தருணம் இது.

ராசிபலன்

வாதாடுவதில் நிபுணத்துவம் கொண்டவகளே!

குருவும், சனியும் வலுவாக அமர்ந்திருப்பதால், பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். மகளுக்கு திருமணம் ஏற்படாகும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சூரியன் 9-ல் நிற்பதால், தந்தைக்கு வேலைச்சுமை, கை, கால் வலி வந்து போகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், சிலர் உங்களது பெயரை தவறாகப் பயன்படுத்தக்கூடும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்கள் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் எதிராக இருந்த அதிகாரி மாற்றலாவார். கலைத்துறையினரே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

 நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் தருணம் இது. 

ராசிபலன்

உள்ளன்போடு மற்றவர்களிடம் பேசுபவர்களே! செவ்வாய் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள்.

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், புதுத் தெம்பு பிறக்கும். பழைய சிக்கல்கள் தீரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். தந்தை வழியில் இருந்த மோதல்கள் விலகும். சூரியனும், குருவும் 8-ல் நிற்பதால், வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்காதீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் அடுத்தடுத்து வேலைச்சுமை இருந்தாலும் முடித்துக் காட்டுவீர்கள். கலைத் துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் மக்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

மாறுபட்ட பாதையில் பயணிக்கும் நேரம் இது.

ராசிபலன்

கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்களே!

சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால், கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 6-ம் இடத்தில் மறைந்திருந்த புதன் 4-ம் தேதி முதல் 7-ல் உச்சம் பெற்று அமர்ந்து உங்களது ராசியைப் பார்க்க இருப்பதால், மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

ராசிநாதன் குருபகவான் 7-ல் அமர்ந்திருப்பதால், புது பதவிகள் தேடி வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சூரியன் 7-ல் அமர்ந்திருப்பதால், அடிவயிற்றில் வலி, வாழ்க்கைத்துணைக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். செவ்வாய் 10-ல் நிற்பதால், உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள் உங்களின் பரந்த மனதைப் புரிந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினரே! ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

கனவுகள் நனவாகும் வேளை இது.