வளம் தரும் வாஸ்து!

குடும்ப வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு வீடு என்ற ஒன்று அவசியம். சாஸ்திரம் சொன்னபடி சந்நியாஸ தர்மத்தில் தங்களை அர்ப்பணித்து வாழும் சந்நியாஸிகளுக்கு ஆசிரமம் என்பது முக்கியம். நாட்டைக் காக்கும் மன்னனுக்கு அரண்மனை அவசியம். உலகில் பிறந்த ஜீவன்கள் வழிபட்டுத் தங்களை தூய்மைப் படுத்திக்கொள்ள ஆலயம் அவசியம். இங்கே சொல்லப்பட்ட வீடு, ஆசிரமம், அரண்மனை, ஆலயம் ஆகிய அனைத்துமே வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அங்கு சுகமும் நிம்மதியும் உண்டாகும்.

மனிதன் படைத்த வசதி வாய்ப்புகளை இயற்கை சக்திகளோடு ஒருங்கிணைக்கும் ஓர் அறிவியல் என்றும் வாஸ்து சாஸ்திரத்தைச் சொல்லலாம். ஐம்புலன்களால் அறியக்கூடியதும் அறிய முடியாததுமான இயற்கை சக்திகளை, மனித வாழ்வுக்குப் பயன்படும் வகையில் அமைத்துக் கொள்வதே, வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைக் குறிக்கோள்.

வாஸ்துவுக்கான தெய்வத்தை வாஸ்து புருஷன் என்று வணங்குகிறோம். வாஸ்து புருஷன் என்பவர் பகவான் நாராயணனின் அம்சம். இந்தப் பூவுலகம் அவரது உடலேயாகும். இந்த உலகில் கட்டப்படும் அனைத்துக் கட்டடங்களும் அவரது அனுமதி பெற்றே செய்யப்பட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வாஸ்து என்றால், பொருட்கள் அதாவது வஸ்துக்கள் இருக்கும் இடங்கள் என்பது பொருள். வாஸ்து முறைப்படி வஸ்துக்களை அமைத்தால் வாஸ்து புருஷனின் ஆசிகள் பெற்று வளமோடு

வாழ்வார்கள் என்பதே வாஸ்து சாஸ்திரத்தின் சாரம் ஆகும்.

நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தின் ‘ஸ்தாபத்திய வேதம்’ என்ற பகுதியில், ‘வாஸ்து சில்ப சாஸ்திரம்’ என்ற தலைப்பில் வீடுகளை, கட்டடங்களை வடிவமைப்பதும் கட்டுவதும் தொடர்பான அறிவியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. எவன் ஒருவன் வாஸ்துவை முறையாக மதிக்கிறானோ அவன் திரண்ட செல்வத்தையும், குடும்ப வாரிசுகளையும், சொத்துக்களையும், இகபர இன்பங்களையும் தவறாமல் அடைகிறான்.

தகுந்த விகிதாசாரத்திலான பஞ்சபூதங்களின் சேர்க்கையே வாஸ்து. இதில் நம்மால் செயல்படுத்த சாத்தியமான நிலம், நெருப்பு, நீர் ஆகியவற்றையாவது முறைப்படி சேர்த்து, வாஸ்து முறைப்படி கட்டடங்களை அமைத்துப் பலன் காண வேண்டும்.

நான்காம் இடமும் கிரகங்களும்!

ஒருவரது ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் (ஜன்ம லக்னத்தில் இருந்து) நவகிரகங்களில் ஒன்றான சூரியன் அமைந்திருப்பின், அவரது ஆயுளின் மத்திய காலத்துக்கு பிறகே வீடு வாசல் நன்கு அமைய வாய்ப்பு உண்டு.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜன்ம லக்னத்துக் 4-ஆம் வீட்டில் ராசிக்கட்டத்தில் சந்திரன் அமையப் பெற்றிருந்தால், அவர்கள் எத்தகைய வீட்டில் வசித்தாலும், சுகபோகங்களை அனுபவிப்பதில் தடை ஏற்படாது. ஆனால், அடிக்கடி இடம் மாறி வாழவேண்டியது வரலாம்.

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் அமைந் திருப்பின் நல்ல வீடு-மனை யோகங்கள் உண்டு. அதேநேரம், மற்றவர்களுடன் இவர்கள் அனுசரித்துச் செல்வது கடினம். எனினும், குரு பார்வை ஏற்பட்டால் நல்ல வீடு, மனை யோகம் கிட்டும்.

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் புதன் அமையப் பெற்றிருந்தால், கலை நயம் மிகுந்த வீடு-வாசல் நிச்சயம் அமையும்.

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் குரு அமையப்பெற்றால், வயதின் மத்தம பாகத்துக்கு மேல் அந்திம பாகத்தில் சிறப்பான வீடும், மனை யோகமும் கிடைக்கும். இவர்களுக்கு, எத்தகைய அமைப்புடைய வீடாக இருந்தாலும் தோஷம் ஏற்படாமல், குலம் தழைத்தோங்கும்.

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன் அமைந்திருப் பின் இயற்கையிலேயே நல்ல வீடுவாசல், வாகன யோகங்கள் அமைந்துவிடும். வாடகை வீட்டில் வசித்தால்கூட, அந்த வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் அமைந்திருக்கும். அதேபோன்று எத்தகைய அமைப்புள்ள வீடும் இவர்களுக்கு துன்பம் தராது. அதேநேரம்... தனுசு, மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு மட்டும், நான்கில் சுக்கிரன் இருந்து நல்ல வீடுவாசல் அமையப் பெற்றாலும் வீட்டில் அமைதி ஏற்படுவது கஷ்டம். வாஸ்து சாஸ்திரம் பயன்படாது. வேறு பரிகாரங்கள் அவசியம்.

ஜன்ம லக்னத்துக்கு 4-ம் வீட்டில் சனி இருப்பின், கல்விகேள்விகளில் முழுமை அடையாமல் போவதாலோ, தகுதியற்றவர்களின் நட்புறவாலோ குடும்பத்தில் அபிப்பிராய பேதங்கள் வரக்கூடும். ஆசாரம் குறைவுபடும். சனி பகவான் நல்ல ஆதிபத்தியம் பெற்று சுபக்கிரகப் பார்வை, சேர்க்கை பெற்று அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல வீடுமனை யோகங்கள் உண்டாகும்.

ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ராகு அமையப் பெற்றிருந்தால், நீசர்களுக்கு மத்தியில் வசிக்கவேண்டியது வரும். அதேபோன்று அடிக்கடி வீடுவாசலையும் மாற்ற வேண்டியது வரலாம்.
ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் கேது இருப்பின் பூர்வீக வீடுகளில் வசிக்க இயலாது. வீடு வாசல் இழப்புகள் ஏற்படும். பூர்விகச் சொத்து இருந்தாலும் பயன் இருக்காது. இவர்கள் மற்றவர்கள் பெயரில் சொத்துசுகங்களை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் மாந்தி இருப்பின், செல்வச் செழிப்பு ஏற்படும். ஆனால், மாந்தி அமைந்துள்ள ராசியாதிபதி லக்ன கேந்திரம் பெற வேண்டும். அப்போதுதான் நல்ல வீடுவாசல் அமையும்.

ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் மாந்தியுடன் சம்பந்தப்பட்டால் கிரக தோஷ பரிகாரங்களால் நிவர்த்தி செய்து கொள்ளலாம். பெரும்பாலும் இவ்வாறான அமைப்பு உடையவர்களுக்கு மனை வீடு போன்றவை... ஒரு காலத்தில் களவு, கொலை நடந்த இடங்களிலோ, மயானங்களின் அருகிலோ இயற்கையாகவே அமைந்துவிடும். வாஸ்து சாஸ்திரம் பயன்படாது.

இனி, வாஸ்து சாஸ்திரத்தின் வழிகாட்டலைக் காணலாம்.

மனையைத் தேர்வு செய்வது எப்படி?

வீட்டுக்காக வாங்கும் நிலங்களை உத்தமமானதாக தேர்வு செய்ய வேண்டும். உண்டு புசிக்கத் தகுந்த காய், கனிகளைத் தரக்கூடியதும், நல்ல காற்றோட்டம் தரக்கூடியதுமான செடி-கொடிகளும் வீடு வாங்கும் பகுதியில் இருக்க வேண்டும். வேம்பு மாதிரியான பால் சுரக்கும் விருட்சங்கள் அங்கு இருப்பது கூடுதல் விசேஷம்.

நெல் வயல்கள், ஓங்கி உயர்ந்த மலைகள், சமுத்திரம், ஆசிரமம், மயானம் போன்றவற்றை ஒட்டிய பகுதிகளில் வீடு வாங்கக் கூடாது. அதேபோன்று வீட்டு மனை எப்படியிருக்க வேண்டும் என்றும் வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

உரிய மனைகள் எவை?

கோ வீதி: கிழக்கு மூலை தாழ்ந்து மேற்கு உயர்ந்திருக்கும் நிலப் பகுதி கோ வீதி எனப்படும். இதில் வீடு கட்டினால் அபிவிருத்தி ஏற்படும்; வளம் பெருகும்.

ஜல வீதி: கிழக்கு மூலை உயர்ந்து மேற்கு மூலை தாழ்ந்திருக்கும் நிலப்பகுதி ஜல வீதி எனப்படும். இந்த நிலத்தில் வீடு கட்டும் முயற்சியில் இறங்கக் கூடாது.

யம வீதி: வடக்கு மூலை உயர்ந்திருந்து, தெற்கு மூலை தாழ்ந்திருக்கும் பகுதி யம வீதி எனப்படும். இந்த நிலமும் வீடு கட்ட உகந்ததல்ல.

கஜ வீதி: தெற்கு மூலை உயர்ந்திருந்து, வடக்கு மூலை தாழ்ந்திருக்கும் நிலப்பகுதி, கஜ வீதி ஆகும். இங்கு வீடுகட்டுவது விசேஷம்.

பூத வீதி: வடகிழக்கு மூலை சற்று உயர்ந்திருந்தாலும், தென்மேற்கு மூலை தாழ்ந்திருந் தாலும் அந்த நிலம் பூத வீதி ஆகும். இது, வீடுகட்டுவதற்கு உசிதமானது அல்ல.

நாக வீதி: தென்கிழக்கு மூலை உயர்ந்திருந்தாலும், வடமேற்கு மூலை தாழ்ந்திருந்தாலும் அங்கே வீடு கட்டுவது கூடாது. இதை நாக வீதி என்பார்கள்.

அக்னி வீதி: வடமேற்கு மூலை உயர்ந்திருந்து, தென்கிழக்கு பகுதி தாழ்ந்தும் உள்ள நிலப்பகுதி வீடுகட்ட சிறப்பானது. இதை அக்னி வீதி என்பார்கள்.

தான்ய வீதி: நிருதி மூலை உயர்ந்தும், ஈசான்யம் தாழ்ந்தும் உள்ள நிலப்பகுதியை தான்ய வீதி என்பார்கள். இதுவும் வீடுகட்ட உகந்ததாகும்.

வீட்டு மனை வாங்க ஏற்ற காலம் !

வீட்டுமனையை வாங்கும் காலம்... கடக லக்னமாக அமைவதும், அப்போது பரணி, விசாகம், அனுஷம் அல்லது அஸ்த நட்சத்திரம் பொருந்தியிருப்பதும் சிறப்பு. நவாம்சத்தில் லக்னத்தில் சூரியன், கேது இணைந்திருந்தாலும் சிறப்புதான்!

வசிக்கும் இடத்துக்கு குறிப்பிட்ட திசைகளில் நிலம் மனை வாங்குவதற்கு, குறிப்பிட்ட நட்சத்திர நாட்கள் விசேஷமானவை.

தெற்கு – மகம், சுவாதி, அஸ்தம், உத்திரம்; மேற்கு – உத்திராடம், திருவோணம், மூலம்; வடக்கு – உத்திராடம், சித்திரை, சதயம்; கிழக்கு – ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம்.

ரேவதி நட்சத்திரத்தன்று எந்தப் பகுதியிலும் நிலம் மனை வாங்கலாம். அதேபோன்று நகரங்களில் வாங்குவதற்கு அஸ்வினி, சித்திரை, ரேவதி நட்சத்திரங்கள் உகந்தவை.

சித்தயோகம், அமிர்தயோக காலமானது கால்கோள் விழா எடுக்கவும், முதல் செங்கல்லை பதிக்கவும் ஏற்றது.

மாதங்களும் திசைகளும்...

கிழக்கு நோக்கிய வீடுகளைக் கட்டும் பணியை ஆடி மற்றும் தை மாதங்களில் செய்ய வேண்டும். மேற்குப் பார்த்த வீடுகள் கட்டும் வேலையை ஆவணி, மாசி மாதங்களில் மட்டுமே செய்ய வேண்டும்.
வடக்கு நோக்கிய வீடுகளை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் கட்டத் துவங்குவது சிறப்பு.

தெற்குத் திசை பார்த்த வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை ஐப்பசி, சித்திரை மாதங்களில் துவங்குவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டு மாதங்கள் தவிர்த்து ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில் வாஸ்து பகவான் தூங்கிக்கொண்டிருப்பார். அவரை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. இவற்றை கோண மாதங்கள் என்பார்கள். இந்த மாதங்களில் கட்டடம் கட்டத் துவங்குவதைத் தவிர்க்கவேண்டும். அதேநேரம், இடம் வாங்குவது போன்ற செயல்களில் தாராளமாக ஈடுபடலாம்.

கட்டுமானப் பணிகளைத் துவங்குவதற்கான காலம்!

ரோகிணி, மிருகசீரிடம், பூசம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம். புனர்பூசம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம், சதயம் ஆகியன மத்திமம். மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதமம். அவற்றில் வீடுகட்ட ஆரம்பிக்கக் கூடாது. அதேபோன்று கிரகப்பிரவேசம் செய்வதற்கு உத்திரம், உத்திராடம், ரோகிணி, சித்திரை, ரேவதி, அனுஷம், மிருகசீரிடம் ஆகியன விசேஷமானவை. அஸ்தம், அஸ்வினி, பூசம், அவிட்டம், சதயம், சுவாதி, திருவோணம், புனர்பூசம் ஆகியன மத்திமம். மற்ற நட்சத்திரங்களைத் தவிர்த்துவிடலாம்.

அஷ்டம சித்தி என்று ஒன்று உண்டு. அதாவது எந்த லக்னத்தில் வீடு கட்ட ஆரம்பிக் கிறோமோ, அதற்கு எட்டாவது இடத்தில் பாபக் கிரகங்களான சூரியன், செவ்வாய் ஆகியன இருக்கக்கூடாது. புதன் தனித்தி ருந்தால் தப்பில்லை. சூரியன் அல்லது செவ்வாயோடு சேர்ந்து இருக்கக் கூடாது. ராகு, கேது போன்றவையும் இருக்கக் கூடாது. எட்டாம் இடத்தில் சுப கிரகங்கள் இருக்க வேண்டும்.
கட்டட பணி துவங்குமுன்...

முதலில், வீடு அல்லது தொழில் நிலையம் எதுவாக இருந்தாலும், அதற்கான கட்டடம் கட்டப்போகும் பிளாட்டில் முட்புதர்கள், கற்கள், இதர விரும்பத் தகாதப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பிளாட்டின் நிருதி மூலையான தென்மேற்கு பகுதி 90 டிகிரியில் உள்ளதா என்பதை சரிபார்க்கவும். அப்படி இல்லையெனில் 90 டிகிரியில் இருக்கும்படி நிலத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். நிருதி மூலை 90 டிகிரியைவிட குறையவும் கூடாது; கூடவும் கூடாது.

* தெற்கிலும் மேற்கிலும் வெட்டவெளியாக அமைந்திருக்கும் பிளாட்டில் வீடு கட்டும்போது, நிருதி மூலையை சரிப்படுத்தி, முதன்முதலில் மதிலைக் கட்டிக்கொள்வது மிகவும் நல்லது.

* அடுத்ததாக வீட்டுக்கும், மதிலுக்கும் இடையில் உள்ள காலியிடத்தை... தெற்கைவிட வடக்கில் அதிகமாகவும், மேற்கை விட கிழக்கில் அதிகமாகவும் இருக்கும்படி சரிசெய்து கொண்டு, வானக்கால் தோண்டவும். எதிரெதிர் மூலைக்குள்ள தூரம் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்க்கவும்.

* மதிலுக்கும் சரி, வீட்டுக்கும் சரி... முதன் முதலில் வானக்கால் தோண்டும்போது ஈசானிய மூலையில் தோண்ட ஆரம்பிக்கவும். அதன்பிறகு, கடைசியாக நிருதி மூலையில் (தென் மேற்கு) கடைக்கால் தோண்டும் வேலையை முடிக்கவும்.

அதேபோன்று முதன்முதலில் கட்டுமான வேலையை ஆரம்பிக்கும் போது நிருதி மூலையில் (தென்மேற்கு) ஆரம்பித்து, ஈசானிய மூலையில் (வடகிழக்கு) முடிக்கும்படி கட்டவும்.
மேலும், கட்டட வேலைக்கு முதன் முதலாக மணல் அடிக்கும்போது, பிளாட்டுக்குள் அல்லது பிளாட்டுக்கு வெளியே நிருதி மூலையில் (தென்மேற்கு பகுதியில்) அல்லது மேற்கில்தான் குவிக்கவேண்டும். வடகிழக்கு, கிழக்குப் பகுதிகளில் குவிக்கவே கூடாது. இதன் அடிப்படையிலேயே கற்கள் மற்றும் செங்கற்கள் முதலானவற் றையும் குவிக்கவேண்டும்.

வீடு கட்டும்போது...

தினசரி கொத்தனார் வேலையை முடிக்கும்போது தெற்கு மற்றும் மேற்கு சுவர்களை வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களைவிட, ஒரு செங்கல் அளவாவது உயரமாக இருக்கும்படி அமைத்து, கட்டுமான வேலையை முடிக்கவும். கட்டட கட்டுமானத்தில் முக்கியமானது, வாசல்களை நிர்மாணிக்கும் தருணம். எனவே, வாஸ்து பிளானில் உள்ளபடி, உரிய இடங்களில் வாசல்களுக்கு இடம் விட்டுக் கட்டவேண்டும். அதுபோல், எல்லா அறைகளையுமே நான்கு மூலைகள் இருக்குமாறு கட்ட வேண்டும். குறைந்தபட்சம் நான்கரை அங்குலம் அளவில், ஒவ்வோர் அறைக்கும் நான்கு மூலைகளுக்கும் மடக்கு வைத்து செங்கல் கட்டுமானம் கட்டிய பிறகே, நிலைக்கால் வைக்க வேண்டும்.

தள கான்கரீட் போடும்போது நிருதி மூலையில் துவங்கி ஈசானிய மூலையில் முடிக்கவும். அதேபோல், கூரை அமைப்புக்கு சென்ட்ரிங் பலகை அமைத்தல், கம்பி கட்டுமானம், கான்கிரீட் போடும் வேலைகளை நிருதி மூலையில் ஆரம்பிக்கவும்.

லாஃப்ட் கான்கிரீட் அமைக்க விரும்பினால், அறைகளின் தெற்கு மற்றும் மேற்குச் சுவரில் அமைக்கவும். வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அமைக்கவே கூடாது. மாடி கைப்பிடிச் சுவர் தெற்கைவிட வடக்கிலும், மேற்கைவிட கிழக்கிலும் உயரமாக இருக்கக் கூடாது. நான்கு புறமும் சமமாக இருக்கலாம்.

மாடியில் மழை நீரும், வீட்டைக் கழுவிவிடும் நீரும் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசைகளில் வெளியேறும்படி மடைத் துவாரங்கள் அமைக்கவும்.

வீட்டின் தளம் நிருதி அறையில் உயரமாக அமைக்கவும். ஈசானிய அறையின் தளமானது மற்ற அறைகளைவிட தாழ்வாக இருக்கும்படி அமைக்கவும். இல்லையெனில் எல்லா அறைகளிலும் தளத்தின் உயரம் சமமாக இருக்கும்படி அமைக்கவும்.

பால்கனி அமைப்பதாக இருந்தால், கூரை சென்ட்ரிங் அமைக்கும்போதே, வீட்டுக்கு வடக்கிலும், கிழக்கிலும் பால்கனி முழுமையாக வரும்படி அமைக்கவும்.

தெற்கிலும், மேற்கிலும் போர்டிகோ அமைத்தால் கூரை மட்டத்துக்கு அமைக்கவும். செப்டிக் டேங்கை காலி இடத்துக்கு வடக்கில் மையமாகவோ அல்லது காலி இடத்துக்கு கிழக்கே மையமாகவோ அமைக்கவேண்டும். இடத்துக்கு ஈசானியத்தில், வடக்கில் அல்லது கிழக்கில் ‘சம்ப்’ (பூமிக்குள் தண்ணீர் தொட்டி) அமைக்கலாம்.

மதிலின் உயரம் குறைந்தது 11 அடி அளவுக்கு இருப்பது சிறப்பு (கொடைக்கானல், ஊட்டி முதலான மலைவாழிடங்கள் நீங்கலாக) சமையல் அறையில் சமையல் மேடை வடக்குச் சுவரைத் தொடக் கூடாது. வடக்குச் சுவருக்கும், ‘சிங்’க்கும் (பாத்திரம் கழுவும் இடம்) குறைந்தது முக்கால் அடி அல்லது ஒரு அடி இடைவெளி விட்டு கட்டவும்.

மர வேலைகள் செய்யும்போது...

வீடுகளுக்குப் பயன்படும் மரங்களை ஆண் மரம், பெண் மரம், நபும்சக (அலி) மரம் என மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவர். அடிமரம் முதல் நுனிவரையிலும் ஒரே அளவாக இருந்தால் ஆண் மரம். அடிப் பகுதி பருத்தும் நுனிப் பகுதி சிறுத்தும் இருந்தால் பெண் மரம். ஓர் ஒழுங்கற்ற அமைப்பில், நுனிப் பகுதி பெருத்தும், அடிப் பகுதி சிறுத்தும் இருந்தால், அது அலிமரம் எனச் சொல்லப்படுகிறது.

தூண்கள், உத்திரம், நிலை, கதவு போன்ற கட்டுமானத்துக்கு தேவையான மரங்களை வைரம் பாய்ந்ததாகவும், உறுதியான தாகவும், கிழட்டுத்தனம் அடையாததாகவும், தருணா வஸ்தை இல்லாததாகவும், கோணல் இல்லாததாகவும், காயம் படாதவையாகவுமாக தேர்வுசெய்ய வேண்டும். மேலும் புண்ணிய பூமி, மலை, வனம், நதிக்கரை ஆகிய இடங்களில் உள்ள மரங்களாகவும், பார்ப்பதற்கு அழகானதும், அனைத்து வகையான நன்மைகளை அளிக்கத் தக்கதாகவும் அந்த மரங்கள் அமைந்திருப்பது விசேஷம்.

இனிய ஒசையை எழுப்பும் தன்மையுடைய ஒலித் திறன் கொண்ட மரங்கள், ஒரே நிறமுள்ள மரங்கள், தொட்டுப் பயன்படுத்தும் நிலையில் தீங்கு இல்லாத மரங்கள், கிழக்கு மற்றும் வடக்கில் சாய்ந்துசெல்லும் கிளைகள் கொண்ட மரங்களை கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவதால், சுபிட்சம் உண்டாகும், என்பது மயன் கருத்து.

மரங்களைத் தேர்வு செய்யும்போது...

1. கோயிலின் உட்பகுதியில் வளர்ந்த மரங்கள்
2. இடி விழுந்த மரங்கள்
3. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட மரங்கள்
4. வீடுகளில் வளர்ந்த மரங்கள்
5. ராஜ வழிகளாகிய மகா பதங்களில் வளர்ந்துள்ள மரங்கள்
6. கிராமங்களாகிய குடியிருப்புகளில் பராமரித்து வளர்க்கப்பட்ட மரங்கள்
7. நீர் ஊற்றி வளர்க்கப்பட்ட மரங்கள்
8. பெரும் காற்றில் சாய்ந்த மரங்கள்
9. யானை போன்ற விலங்குகளினால் சாய்க்கப் பட்ட மரங்கள்
10. பறவைகள், விலங்கினங்கள் தங்கிய மரங்கள்
11. சண்டாளர்கள் வசிக்கும் இடங்களில் வளர்ந்த மரங்கள்
12. மனிதர்களுக்கு நிழல் தரவும், ஓய்வெடுக்கவும் பயன்படும் மரங்கள்.
13. ஒன்றோடு ஒன்றாக பின்னி வளர்ந்த மரங்கள்
14. நெருக்கமாக வளர்ந்த மரங்கள்
15. கொடிகளால் சூழப்பட்ட மரங்கள்
16. நரம்புகள் தெரியும் வண்ணம் வளர்ந்த மரங்கள்
17. பொந்துகள் உள்ள மரங்கள்
18. கணுக்கள் அதிகம் உடைய மரங்கள்
19. பூச்சிகள் அரித்த மரங்கள்
20. அகாலத்தில் பலன் தரும் மரங்கள்
21. சுடுகாட்டில் உள்ள மரங்கள்
22. ஊர் சபை கூடும் இடங்களில் உள்ள மரங்கள்
23. நான்கு வீதிகள் கூடும் இடங்களில் வளர்ந்துள்ள மரங்கள்
24. கோயில் மரங்கள்
25. குட்டைகளில், குளக் கரை, கிணற்றின் அருகில் வளர்ந்த மரங்கள்
26. பாழ்பட்டு கிடக்கும் இடங்களில் வளர்ந்த மரங்கள்

இவ்வகை மரங்களைத் தவிர்க்கவேண்டும்.

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்?!

கட்டுமானத்துக்கு மரத்தைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, வீட்டில் வளர்க்கப்படும் மரங்கள் குறித்தும் சில விளக்கங்கள் உண்டு.

பருத்தி, அகத்தி, பனை, நாவல், நெல்லி, எருக்கு, புளி, இலவு மரங்களை இல்லத்தில் வளர்த்தால் அஷ்ட லட்சுமியும் இடம் பெயர்வர். அத்தி, ஆல், இச்சி, அரசு, இலவு, புரசு, குச்சம், இலந்தை, மகிழம், விளா மரங்கள் பயன்படுத்தினால் செல்வம் அழியும், ஆயுள் குறைவு ஏற்படும்.

உங்கள் வீட்டு அறைகள் எப்படி?

பூஜையறை: வீட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது பூஜையறை. சூரிய உதயத்தின்போது, சூரியக் கதிர்கள் வீட்டில் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அந்த இடத்தை பூஜை அறையாக உபயோகிக்க வேண்டும். பொதுவாக, சூரிய ஒளி வடகிழக்கில் விழுவது போன்ற மனையையே தேர்ந்தெடுப்பார்கள். எனவே, வீட்டில் வடகிழக்கு பாகத்தில் பூஜை அறை அமைப்பது விசேஷம்.
அந்த இடத்தில் வேறு அறைகள் அமைக்கக் கூடாது. அப்படி வேறு அறைகள் அமைந்து அதில் எவரேனும் தங்கினால், அப்படியானவர்களுக்கு சோம்பல் குணம் மிகுதியாகும். தங்குபவர்கள் சிறுவர்களாக இருந்தால், படிப்பில் தடை ஏற்படும்.

குளியல் அறை: பொதுவாக வீட்டில் பயன்பட்ட நீர், வீட்டில் விழும் மழை நீர் ஆகியன வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசை வழியே வெளியேறும்படி தரை மட்டத்தை அமைப்பார்கள். அதற்கேற்ப வீட்டின் குளியலறையை கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பாகத்தில் அமைப்பது நல்லது. கிழக்கில் குளியலறை அமையும் பட்சத்தில், குளித்ததும் வழிபாடு செய்ய முற்படும்போது, ஆரோக்கியம் தரும் தெய்வமான சூரியதேவனை வழிபட ஏதுவாக இருக்கும். இதற்கு வழியில்லாதபோது, மற்ற திசைகளில் குளியலறையையும், தண்ணீர் வெளியேறும் வழிகளையும் அமைக்கலாம்.

சமையல் அறை: ஒவ்வொரு மனிதருக்கும் மிக அத்தியாவசியமானது உணவு. அதைத் தயார் செய்வதற்கு அக்னி அவசியம். இறை வழிபாட்டில் மந்திரங்களைச் சொல்லியபடி அக்னியில் பொருள்களைச் சமர்ப்பிப்பது உண்டு. அதாவது, இருதயத்தை பலிபீடமாகவும், ஆத்மாவை அக்னியாகவும் பாவித்து தன்னையே தியாகம் செய்ய வேண்டும் எனும் கருத்துடன் அமைந்த சடங்கு முறை இது. இதிலிருந்து அக்னியின் முக்கியத்துவத்தை அறியலாம். சமையலுக்கும் அக்னியே பிரதானம். அக்னிக்கு உரிய திசை தென்கிழக்கு. எனவேதான், தென்கிழக்கு திசையில் அக்னி பயன்பாட்டை ஏற்படுத்தினார்கள். அவ்வகையில் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமையலறையை அமைத்துக் கொள்வது சிறப்பு.

படிக்கும் அறை: வாஸ்து சாஸ்திர நூல்களில், வீட்டின் தென் மேற்குப் பகுதி படிப்பதற்கு உரியதாகக் கூறப்படுகிறது. ஜோதிட விதிப்படி புதன் கிரகத்தை வித்யாகாரகன் என்று சொல்வார்கள். ஆக, படிக்கும் அறையானது புதனுக்கு உரிய திசையில் அமைவது விசேஷம். அல்லது, ஞானகாரகனாகிய குருவுக்கு உரிய திசையில் அமைக்கலாம். புதனுக்கு உரிய திசை வடக்கு; குருவுக்கு உரியது வடகிழக்கு. இந்த திசைகளை நோக்கியபடி படிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

படுக்கை அறை: பொதுவாக, சராசரி மனிதர் ஒருவர் நாளின் 24 மணி நேரத்தில், 8 மணி நேரம் அலுவல்களிலும், 8 மணி நேரம் வெளியிடங்களிலும், 8 மணி நேரம் வீட்டிலும் இருப்பதற்கான சூழ்நிலை உள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும், தெளிவான சிந்தனைகளுடனும் செயல்பட நல்ல நிம்மதியான தூக்கம் அவசியம். அது கைகூட தென்மேற்கில் படுக்கை அமைக்கலாம். மேலும், படுக்கையறையில் கிழக்கு, மேற்கு அல்லது தெற்கில் தலைபாகம் இருக்க படுப்பது சிறப்பாகும்.

வீட்டின் பாகங்களும் பயன்களும்!

வீட்டின் ஈசான்ய பாகமானது (வடகிழக்கு பாகம்) பூஜை செய்வதற்கு உரிய இடம். மேலும், நெல் முதலான தானியங்களைச் சேமித்துவைக்கவும் உகந்தது. தலைவன் தலைவி படுக்கை அமைய, நன்மை விளையும்.

* வீட்டின் தென்கிழக்குப் பகுதியை சமையல் செய்யவும், வீடு தேடி வரும் உறவினர் தங்கவும் பயன்படுத்தலாம். இந்த இடத்தில் படுக்கை அமைவது கூடாது; மீறினால் குழந்தை துர்க்குணத்துடன் பிறக்கும். வீட்டுத் தலைவருக்கு பொருள் சேதம் உண்டாகும்.

* வீட்டின் தெற்கு பாகம் பூஜையறை, உணவு உண்பதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கும் உரிய இடமாகும். இங்கு படுக்கை அமைந்தால், பிறக்கும் குழந்தை ஊனத்துடன் பிறக்கும்; வம்ச விருத்திக்கு கெடுதல் உண்டாகும்.

* தென் மேற்குப் பகுதியில் பாத்திரங்கள், உயர்ந்த பொருட்கள் வைப்பதற்கும், பிள்ளைகள் படிப்பதற்கும் ஏற்ற இடமாகும். இங்கும் படுக்கையறை அமையக்கூடாது.

* வீட்டின் மேற்குப் பகுதி தம்பதி சேர்க்கைக்கு உகந்த இடம். பிறக்கும் குழந்தை ஆணானால், மெய்ஞ்ஞானியாகத் திகழ்வான். பெண் குழந்தை எனில், சிறந்த குணவதியாகத் திகழ்வாள்.

* வீட்டின் வாயு மூலையில் பூஜை அறை அமைக்கலாம். முற்காலத்தில் இந்தப் பகுதியை பிரசவத்துக்கான இடமாகத் தேர்வு செய்வார்கள் (முன்பு வீட்டிலேயே பிரசவம் நிகழும்). இந்த இடத்தில் நெற்களஞ்சியம் வைப்பதால் லாபம் ஏற்படும்.

கதவுகளும் பலன்களும்!

ஒரு வீட்டுக்குப் பாதுகாப்பாக இருப்பவை கதவுகள்தானே? அந்தக் கதவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. மூடி இருக்கும் கதவைத் திறந்தால், அது அசையாமல் அப்படியே நிற்க வேண்டும். அப்படி நின்றால், சகல நன்மைகளுடன் நீடூழி வாழலாம். திறக்கும் கதவானது பெரும் இரைச்சலுடன் தானாகவே மூடிக் கொள்ளுமானால், துன்பகரமான சம்பவங்களே நிகழும். கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும் பெருத்த சப்தம் ஏற்பட்டால், அது அந்த வீட்டின் தலைவனுக்கு ஆகாது. கதவை மூடும்போது செக்கு ஆடுவது போன்ற சப்தம் உண்டானால், புத்திரபாக்கியக் குறையும், மனைவிக்கு ஆரோக்கியக் குறைவும், மனக் கவலைகளும் ஏற்படும்.

கதவுகளின் எண்ணிக்கை!

இரண்டு கதவுகள்: நல்ல பலனைத் தரும்.

3 கதவுகள்: பகைமை ஏற்படும்.
4 கதவுகள்: நீண்ட ஆயுள் உண்டாகும்.
5 கதவுகள்: நோயை உண்டாக்கும்.
6 கதவுகள்: சத்புத்திர பாக்கியம் உண்டாகும்.
7 கதவுகள்: மரண பயத்தை ஏற்படுத்தும்.
8 கதவுகள்: செல்வம் வளரும்.
9 கதவுகள்: நோய் உண்டாகும்.
10 கதவுகள்: திருடர்களால் ஆபத்து.
11 கதவுகள்: நன்மைகள் குறைவாக இருக்கும்.
12 கதவுகள்: வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும்.
14 கதவுகள்: செல்வ வளர்ச்சி இருக்கும்.
15 கதவுகள்: நன்மை குறைவு.

பொதுவாக, ஒரு வீட்டில் நிலை அமைப்புடன் உள்ள கதவுகள் இரட்டைப்படை அமைப்பில்தான் இருக்கவேண்டும். ஆனாலும், 10, 20, 30 என்ற எண்ணிக்கையில் இருக்கக் கூடாது.

உங்கள் ராசியும் வீடும்!

ஒவ்வொரு ராசிக்கு உரியவர்களும் அந்தந்த ராசிக்கு உகந்த திசையை நோக்கி தலைவாயில் அமைந்த வீடுகளில் வசிப்பது சிறப்பு. மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் வடக்கு நோக்கியும், ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிக்காரர்கள் தெற்கு நோக்கியும், மிதுனம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மேற்கு நோக்கியும், கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் கிழக்கு நோக்கியும் தலைவாசல் அமைந்த வீடுகளில் வசிப்பது விசேஷம். இதனால் நோயற்ற வாழ்வு, ராஜ யோகம், வம்ச விருத்தியுடன் வளமாக வாழலாம்.

அதேபோல், 12 ராசிக்காரர்களும் தங்களது வீடுகளை ஊரின் எந்த பாகத்தில் அமைக்கக் கூடாது என்பது குறித்த வழிகாட்டலும் உண்டு.

மேஷம்: ஊரின் வடக்குப் பக்கம் வீடு அமையக்கூடாது

ரிஷபம், மிதுனம், சிம்மம், மகரம்: ஊரின் மையப்பகுதியில் வீடு அமையக் கூடாது

கடகம்: தெற்குப் பகுதியில் வீடு அமையக்கூடாது.

கன்னி: ஊரின் தென்மேற்கில் வீடு அமையக்கூடாது.

துலாம்: ஊரின் வடமேற்குப் பகுதி கூடாது.

விருச்சிகம்: ஊரின் கிழக்குப் பகுதி கூடாது.

தனுசு: ஊரின் மேற்குப் பகுதி கூடாது.

கும்பம்: வடகிழக்கில் வீடு அமையக் கூடாது.

மீனம்: தென் கிழக்குப் பகுதி ஆகாது.

தற்காலத்தில் இந்த நியதிகள் யாவும் பொருந்தும்படி வீடுகள் கிடைப்பது வெகு அபூர்வம்தான். எனினும், இயன்றவரையிலும் மேற்சொன்ன நியதிகளைக் கவனத்தில் கொண்டு வீடு கட்டி, குடிபுகுந்து சிறப்பான வாழ்க்கையைப் பெறுவோம்.

வளம் தரும் வாஸ்து பூஜை!

பூமி மற்றும் ஆகாயவெளியில் வெளிப்படும் பல்வேறு சக்திகள் ஒரே சீராகக் கிடைப்பது இல்லை. விண்வெளியில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட பல்வேறு பொருட்களில் இருந்து வெளிப்படும் சக்திகளின் மாற்றங்கள் பல நல்ல விளைவுகளையும் தீய விளைவுகளையும் ஏற்படுத்தும். இவற்றில் நல்ல விளைவுகளுக்கான சக்திகளைக் கிரகித்து, சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதற்கு நம் முன்னோர்களும், குருமார்களும், மகான்களும் பல வழிகளைச் சுட்டிக்காட்டிச் சென்றுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கது வாஸ்து வழிபாடு.

எந்த தினங்களில் பூஜிக்கலாம்?: வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம்

பூஜைக்குத் தேவையானவை: பசும்பால், பன்னீர், மஞ்சள், தேங்காய், விபூதி, ஊதுவத்தி, நவரத்தினங்கள் (உரிய கடைகளில் கிடைக்கும்), பஞ்ச லோகங்கள், நவதானியங்கள்.

எப்படி பூஜிப்பது?: முதலில் கணபதியை வணங்கிவிட்டு, அவரவர் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தை வழிபட வேண்டும். பின்னர், புது வீடு கட்டடம் கட்டப்போகும் மனையில் குறிப்பாக கட்டுமானம் அமையும் பகுதியின் (பில்டிங் ஏரியா) வடகிழக்கு மூலையில், மூன்றடி அகலம்; 3 அடி நீள அளவில் (அஸ்திவார பரப்பளவுக்குள் அடங்கும்படியாக) குழி தோண்டிக் கொள்ளவும். அல்லது, ஒன்றரை அடி நீளஅகலத்தில் குழி அமைக்கலாம்.

பின்னர், மீண்டும் முறைப்படி விநாயகர், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை மனதாரத் துதித்தபடி, மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் செங்கற்கள் எடுத்து அவற்றுக்கு சந்தன குங்குமத் திலகம் இட்டு, குழியில் ஊன்ற வேண்டும். தொடர்ந்து, மூன்று கன்னிப்பெண்கள் அல்லது சுமங்கலிப் பெண்களை நிறைகுடத்தில் நீர் எடுத்துவரச் செய்து, மூவரும் ஒரே தருணத்தில் குழியில் நீர்விடச் செய்யவேண்டும்.

அடுத்ததாக, தெய்வப் பிரார்த்தனையுடன் குழியில் பால் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு அமையவுள்ள கட்டடத்தில் வசிக்கப் போகும் நமக்குப் பஞ்ச பூதங்களின் திருவருளும் கிடைக்க வேண்டாமா? அதற்காக, பஞ்சபூதங்களையும் மனதில் துதித்து பஞ்சலோகங்களை குழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்ந்து, நவகிரகங்களின் திருவருளைப் பெறும்பொருட்டு, சூரியதேவனே போற்றி, சந்திரனே போற்றி என்று துவங்கி நவகிரகங்களையும் போற்றி கூறி வழிபட்டு நவதானியங்களையும், நவரத்தினங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர், அஷ்டதிக் பாலகர்களை வணங்கி, பூக்கள்அட்சதையைச் சமர்ப்பித்து வழிபடவேண்டும். நிறைவாக தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு சமர்ப்பித்து மீண்டும் கணபதி பெருமான், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தையும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி வணங்கியபடி, ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி கொண்டு தூப ஆராதனையும், தீப ஆரத்தியும் காட்டி வழிபடவேண்டும். இதன் பின்னர் கட்டுமான ஆரம்ப வேலைகளைச் செய்யலாம்.

இந்த முறை எல்லோரும் பின்பற்றக்கூடிய எளிய முறையாகும்.