தெரிந்தவர் வீட்டுப் புதுவிழாவுக்குச் செல்ல நேரிட்டது. ‘மிக அழகான இல்லம். வீடு அருமையாக இருக்கிறதே’ என்றார் பக்கத்து வீட்டுச் செல்வம். பதிலுக்கு, ‘ எல்லாம் தாயாரின் அருட் கடாட்சம்’ என்றார் வீட்டுக்குச் சொந்தக்காரரான ரமேஷ். செல்வமும் ‘தாயாரின் கருணையே கருணை!’ என்று புகழாரம் சூட்டினார்.
அவரிடம் பேச்சுக் கொடுத்ததில்... ‘எனக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியும், குழந்தையே இல்லை. எல்லா டாக்டர்களும் கைவிட்ட நிலையில், இன்று எனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள். அதற்கு முழுக்காரணம் திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாளும், தாயாரின் மகிமையும்தான் ‘ என்று நெகிழ்ந்தார்.

கண்ணீர் துளிர்க்கப் பேசியவர், ‘இந்தத் தாயார் எனக்கு மட்டும் இல்லை, தன் சந்நிதிக்கு வரும் எல்லா பக்தர்களையும், தன் கருணை மழையில் நனைத்துள்ளார்’ என்றார்.
மறுநாள், அவர் குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்றோம். சென்னை சென்ட்ரலில் இருந்து சுமார் 31 கி.மீ தொலைவிலும், திருவள்ளூரில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருத்தலம். ஊர் முழுவதும் பலகோயில்களிலிருந்து அடிக்கடி கேட்கும் மணிச்சத்தம், தன் பச்சை நிறத்தால் கோயில்களைத் தனித்து வெளிச்சமிட்டுக் காட்டும் வயல்வெளிகள், இயற்கை அமைதியுடன் சண்டை இடும் வாகனங் களின் ஹாரன் ஒலிகள், கடைகளுக்குச் செல்லும் மாந்தர் கூட்டம் என, இவற்றுக்கு மத்தியில் அமைந்துள்ளது, ‘பக்தவத்சலப் பெருமாள் கோயில்’.
கோயிலை அடைந்ததும் நம்மையும் அறியாமல் மனம் இழுக்கப்படுகிறது, பக்தியால். வெளியில் வெயில் இருந்தாலும், கோயிலின் உள்ளே அதைச் சிறிதும் உணர முடியவில்லை. 1000 ஆண்டுகள் பழைமையானாலும் இந்த கோயிலின் பொலிவும், அழகும் கடுகளவும் மாறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது, விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்ட கட்டடக் கலையின் துல்லியமும் நுணுக்கமும். அதை நிரூபிக்கும் வகையில் மிளிர்கிறது தலத்தின் ராஜகோபுரம். வாசல் சுற்றுச் சுவரில் சிற்பங்களின் நுணுக்கமான வேலைப்பாடுகள். விசாலமான கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் எதிரிலேயே கொடிமரம், பலிபீடம், கருட சந்நிதி; நுழைவுவாயிலின் இடப்பக்கத்தில் மணிமண்டபம்; அதை அடுத்துச் சென்றால், திருமகள், பூமகளுடன் மிக அற்புதமாகக் காட்சியளிக்கிறார் பெருமாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூலவரின் சந்நிதியை வலம் வந்த வண்ணம் அருகிலிருக்கும் ஆண்டாளின் சந்நிதி, பிராகாரத்தில் இருக்கும் ஆழ்வார்கள் சந்நிதி, அனுமன் சந்நிதி, ஆதிசேஷன் சந்நிதி, நரசிம்மர் சந்நிதி ஆகிய சந்நிதிகளை தரிசித்துவிடலாம். அத்தருணம் மூலவரின் சந்நிதிக்கு வலப்புறத்திலிருந்து கேட்ட ஓர் உரத்த குரலின் பாடல் நம்மைத் தாயார் சந்நிதிக்கு அழைத்துச் சென்றது. தாயாரின் மகிமைகளைப் பாடியவாறே, சந்நிதியில் பூஜை செய்து கொண்டு இருந்தார், கோயிலின் பட்டாச்சார்யர் பாலாஜி.
சிறு குழந்தை தாயிடம் வேண்டுவதுபோல இருந்தது, அவரின் பாவனை. அங்கு வீற்றிருக்கும் தாயார் பற்றி அவர் நெக்குருகிச் சொல்லும்போது, “தேவலோகத்தில் திருமால் நித்திரையில் இருந்தபோது, பாற்கடலில் சமுத்திர ராஜனுக்கும் திருமகளுக்கும் தர்க்கம் ஏற்பட்டது. இதனால் கோபமுற்ற தாயார், பூலோகத்தில் பரந்து விரிந்த கிடந்த திருநின்றவூர் ஏரிக்கரையான வருணபுஷ்கரணியில் வாசம் செய்தார். இதனால் இந்த ஊர் ‘திருநின்றவூர்’என்றும்,சமஸ்கிருதத்தில் ஸ்ரீநிவாசக்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
சமுத்திர ராஜன் தன்னை மன்னித்து அருளும்படி தாயாரை, ‘என்னைப் பெற்ற தாயார்’ எனப் போற்றி, மனமுருகிவேண்டினார். தன்னுடைய தவறை உணர்ந்த சமுத்திர ராஜன், திருமாலுடன் பூலோகத்துக்கு வந்து திருமகளை தேவலோகத்துக்கு அழைத்துச் சென்றார். சமுத்திர ராஜனை மன்னித்து அருளி, தாய் ஆனதால் தாயார் அன்றிலிருந்து இத்தலத்தில் ‘என்னை பெற்ற தாயார் ’ எனும் திருநாமத்துடன் அழைக்கப்படுகிறாள்” என்றவர், தாயார் தமக்கு நல்கிய மகிமைகள் பற்றி கூறத்துவங்கினார்.
“இந்தத் தாயாரை சுற்றுவட்டாரத்தில் தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க. மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால் கேட்குறவங்களுக்கு இவ எல்லாம் கொடுப்பா. நான் 15 ஆண்டுகளா பல்வேறு கோயில்களில் பூஜை செய்துட்டு இருக்கேன். அதில், 108 திவ்ய தேச க்ஷேத்திரத்தில் கிட்டத்தட்ட 20 திவ்ய தேசங்களுக்கும் அதிகமா பூஜை பண்ணிருக்கேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான், 58-வது திவ்ய தேசமான இந்தக் கோயிலுக்கு இடம் பெயர்ந்து வந்தேன். வந்த ஒரே ஆண்டில் பட்டாச்சார்யர் ஆகிவிட்டேன்.எல்லாம் தாயார் அனுகிரகத்தால்தான்!” என்றார்.

சகல செல்வங்களும் கிடைக்கும்
இந்தக் கோயிலின் தீர்த்தத்தில்தான், தர்மத்வஜன் மற்றும் புரந்தான் என்னும் மன்னர்கள் தாங்கள் செய்த பாவத்தைக் கரைத்து, இழந்த நாட்டையும் செல்வங்களையும் மீண்டும் பெற்றார்கள். அத்தகைய பிரசித்திப் பெற்ற, தாயார் நின்று அருள்பாலித்த இந்த இடத்தில், தாயார் சந்நிதி முன் உள்ள ‘சகல செல்வங்கள்’ கட்டத்தில் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் காசுகளை வைத்து பூஜை செய்து வந்தால், திருமண வரம், குழந்தை பாக்கியம் என சகல செளபாக்கியங்களையும் பெற்றுச் சுபிட்சமாக வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
புதன் கிழமைகளில் ஆதிசேஷனுக்கு விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வந்தால் ராகு,கேது தோஷம் விலகும்; நினைத்தது எல்லாம் கைகூடும் என நம்பிக்கை பொங்கத் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
ஆதிசேஷனுக்கு தனிச் சந்நிதி!
தமிழ்நாட்டிலேயே, இந்தக் கோயிலில் மட்டும்தான் ஐந்து தலைகொண்ட ஆதிசேஷனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. இங்கு திருவோணம், சித்ரா பெளர்ணமி, தீபாவளி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், புரட்டாசி, நவராத்திரி முதலிய தினங்களில் விஷேச பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. வருடம் முழுவதும் இங்கு அன்னதானம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
விழாக்காலங்கள் தவிர, மற்ற தினங்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இக்கோயில் நடைதிறந்திருக்கும்.
சகல செல்வங்களையும் , பல மகிமைகளையும் தரும் தாயாரையும் பெருமாளையும் திருநின்றவூர் திருத்தலத்துக்கு சென்று நீங்களும் கண் குளிர தரிசித்துவிட்டு வாருங்கள்.
- ஆ.ஐஸ்வர்ய லட்சுமி, படங்கள்: அ.சரண் குமார்