Published:Updated:

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

பரணி நட்சத்திரக்காரர்கள் அணியவேண்டிய நவரத்தினம்: வைரம்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

பரணி நட்சத்திரக்காரர்கள் அணியவேண்டிய நவரத்தினம்: வைரம்

Published:Updated:
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

`ரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்பது ஜோதிடப் பழமொழி. அதற்காக அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் தரணி ஆள்வார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், பலர் கூடியிருக்கும் இடத்தில் அந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பவர்கள் தனித்து தெரிவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வ புண்ணியம் நிரம்பப் பெற்றிருந்தால், அவர் நிச்சயம் ஆட்சிப் பொறுப்புக்கு வருவார் என்று உறுதியாகச் சொல்லலாம்.

பரணி நட்சத்திரம் மூன்று நட்சத்திரங்களுடன் முக்கோண வடிவத்தில் காணப்படும். சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம். கலைகளில் சிறந்து விளங்குவீர்கள். அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கூடிய வாய்ப்பு ஏற்படக்கூடும். பெற்றோரிடம் அளவற்ற பாசம்கொண்டிருப்பீர்கள். தான, தர்மம் செய்வதில் அதிக ஆர்வம்கொண்டிருப்பீர்கள். மன தைரியம் உள்ளவராகவும், அரச போகங்களுடன் வாழ்பவராகவும் இருப்பீர்கள். இயல்பிலேயே ஆளுமைத்திறன் இருப்பதால் அதிகாரப் பதவி தேடி வரும். தலைமைப் பொறுப்பில் இருந்தாலும், உங்களுக்குக் கீழ் இருப்பவர்களை அரவணைத்துச் செல்வீர்கள். அவர்களின் தேவையறிந்து உதவி செய்வீர்கள். அவர்கள், உங்களை முன்மாதிரியாகக்கொள்ளும்படி உங்கள் செயல்கள் அமைந்திருக்கும். இசை, நடனம் போன்ற கலைகளில் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். எதிலும் நேர்த்தியாக இருக்க விரும்புவீர்கள். விதவிதமான வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதை விரும்புவீர்கள். புதுப் புது டிசைன்களில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். ருசியான உணவை ரசித்துச் சாப்பிடுவீர்கள். உங்களை `போஜனப் பிரியர்’ என்றே சொல்லலாம்.

படிப்பிலும் அதிக ஆர்வம்கொண்டிருப்பீர்கள். எதையும் பகுத்தறியும் திறமை உள்ளவராகத் திகழ்வீர்கள். மிகப் பெரிய பிரச்னையைக்கூட எளிதாகக் கடந்துவிடுவீர்கள். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களைக்கூட தைரியமாக ஏற்றுக்கொண்டு லாபகரமாக மாற்றும் திறமையைப் பெற்றிருப்பீர்கள். நீங்கள் மனித வளத்துறை மேலாளராக இருக்கும் நிறுவனம் மிகவும் நல்ல முறையில் இயங்கும். சொந்த வீடு, வாகன வசதி அனைத்தும் பெற்றிருப்பீர்கள். இளமைப் பருவத்திலேயே செல்வமும் செல்வாக்கும் பெற்றுவிடுவீர்கள். வயதான காலத்திலும் உங்களின் அனுபவத்தின் காரணமாக உயர்ந்த பதவிகள் தேடி வரும். மற்றவர்களின் பிரச்னைக்கு ஆலோசனை சொல்லி, அவர்களின் வருத்தத்தைப் போக்குவீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி பாதவாரியாக பிறந்தவர்களுக்கான பலன்களைப் பார்ப்போம்.

பரணி 1-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சுக்கிரன்; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - சூரியன்

பரணி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள், எத்தனை ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் கலங்காமல் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வீர்கள். உங்களுக்குத் தெரியாத விஷயங்களையும் தெரிந்தவர்போல் பேசி மற்றவர்களை நம்ப வைப்பதில் சாமர்த்தியசாலிகளாக இருப்பீர்கள். எதிரிகள் அஞ்சி நடுங்கும்படி நடந்துகொள்வீர்கள். உறவினர்களுக்காக எதையும் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள். அவர்களுக்காக உங்களுக்குச் சேரவேண்டிய சொத்துகளைக்கூட விட்டுக்கொடுப்பீர்கள். தேசத்தின் மீது அதிகப் பற்று வைத்திருப்பீர்கள். நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களையும், மக்களின் நன்மைக்காகப் போராடுபவர்களையும் நேசிப்பீர்கள். குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

பரணி 2-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சுக்கிரன்; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - புதன்

கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுடைய அறிவுக்கூர்மை மற்றவர்களை வியக்கவைக்கும்படி இருக்கும். எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பீர்கள் என்பதால், உங்களை எல்லோரும் `சிந்தனைச் சிற்பி’ என்று அழைப்பார்கள். நண்பர்களோ அல்லது உறவினர்களோ கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பாகப் பழகுவீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடிப்பீர்கள். அடிக்கடி மந்தமாகக் காணப்பட்டாலும், உடனே உற்சாகத்துக்குத் திரும்பிவிடுவீர்கள். உங்களுக்குக் கணிதத்தில் மிகுந்த ஆர்வம் இருக்கும். ஆனாலும், குடும்பத்தினர் உங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வமுண்டாகும்.

பரணி 3-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சுக்கிரன்; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்

ராசிக்கும் அம்சத்துக்கும் சுக்கிரனே அதிபதியாக இருப்பதால், மற்றவர்களைக் கவரும்விதத்தில் பேசுவீர்கள். எங்கும் எதிலும் வெற்றியையே விரும்புவீர்கள். மற்றவர்களை மிகச் சரியாகப் புரிந்துகொள்வீர்கள். சகல துறைகளிலும் அறிவும் அனுபவமும் பெற்றிருப்பீர்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். தொழிலதிபராக இருந்தால் பணியாளர்களை மிகவும் அன்புடன் நடத்துவீர்கள். அவர்களின் தேவையறிந்து உதவி செய்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அவர்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவீர்கள். பிள்ளைகளைப்போலவே பெற்றோர்களையும் நேசிப்பீர்கள். குடும்ப நிர்வாகத்தில் மனைவிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவீர்கள். குடும்பம் தொடர்பான விஷயங்களில் மனைவியின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவீர்கள். வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் சேமிப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

பரணி 4-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சுக்கிரன்; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - செவ்வாய்

மனதில் தன்னம்பிக்கையும் உறுதியும் அதிகம்கொண்டிருப்பீர்கள். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக்கேட்கும் குணம் உங்களுக்கு இயல்பிலேயே இருக்கும். தற்பெருமை அதிகமாக இருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதுபோலவே, மற்றவர்களும் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். எதிலும் பிடிவாதமாக இருப்பீர்கள். அதன் காரணமாகவே வீண் பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததால், மனதுக்குள் புழுங்கித் தவிப்பீர்கள். சிறு வயதிலேயே பல வகைகளிலும் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள். பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுத்திருந்தால், அரசாங்கத்தில் உயர்பதவி வகிக்கும் வாய்ப்பு ஏற்படும். மற்றவர்களை சுலபத்தில் நம்பிவிட மாட்டீர்கள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தெய்வம் : முருகப்பெருமான், மகாலட்சுமி

அணியவேண்டிய நவரத்தினம்: வைரம்

வழிபடவேண்டிய தலம்: கஞ்சனூர்