
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
எல்லோருக்கும் நன்மை செய்பவர்களே!

மேஷம்: குரு சாதகமாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். விசா கிடைக்கும். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால், திடீர் பயணம், செலவுகளால் திணறுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும்.
சிறுகச் சிறுக சேமிப்பவர்களே!

ரிஷபம்: புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். பூர்வீகச்சொத்தை சீர் செய்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குரு 6-ல் மறைந்திருப்பதால், மறைமுக விமர்சனங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள்.
சகிப்புத் தன்மை உடையவர்களே!

மிதுனம்: யோகாதிபதி சுக்கிரன் சாதகமாக இருப்பதால், சோர்வு, களைப்பு நீங்கும். பணவரவு உண்டு. புது வேலை அமையும். வாகனப்பழுது நீங்கும். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விலை உயர்ந்த மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது முதலீடு செய்வீர்கள். மதிப்பு, மரியாதை கூடும் தருணம் இது.
சீர்திருத்தச் சிந்தனை உள்ளவர்களே!

கடகம்: யோகாதிபதியான செவ்வாய் சாதகமாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டாகும். நிம்மதி கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சர்ப்பக்கிரகங்கள் சாதகமாக இல்லாததால், யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் காலம் இது.
தீர்க்கமாக முடிவு எடுப்பவர்களே!

சிம்மம்: சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். பணவரவு கூடும். வழக்கு சாதகமாகும். புது வீடு கட்டி, குடி புகுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. குரு 3-ல் மறைந்திருப்பதால், வீண் டென்ஷன், வேலைச்சுமை, எதிர்ப்புகள் வந்துபோகும். செவ்வாய் 8-ல் நிற்பதால், மருத்துவச்செலவு, சகோதர வகையில் சங்கடங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள்.
துன்பங்களைக்கண்டு துவளாதவர்களே!

கன்னி: குருபகவான் 2-ம் இடத்தில் நிற்பதால், பிரச்னைகளைக் கண்டு அஞ்ச மாட்டீர்கள். வீடு, மனை அமையும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். எதிர்பார்த்த பணம் வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். 5-ல் சூரியன் நிற்பதால், டென்ஷன், வாகனப்பழுது வந்து நீங்கும். பூர்வீகச்சொத்து விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கூடும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

எப்போதும் நீதி தவறாதவர்களே!
துலாம்: செவ்வாய் சாதகமாக இருப்பதால் மனோபலம் கூடும். தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கு வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பர். முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித்தொகை தந்து, பத்திரப்பதிவு செய்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். குரு ராசிக்குள் நிற்பதால், யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்பீர்கள். வேலைச்சுமை, விமர்சனங்கள் அதிகரிக்கும். இழுபறியான வேலைகள் முடியும் வேளை இது.
மற்றவர்களின் நலனை விரும்புபவர்களே!

விருச்சிகம்: சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பிரபலங்களின் நட்பு ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக் கும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு கட்டும் பணி விரைந்து முடியும். அரசு காரியங்கள் சாதகமாக அமையும். நல்ல தீர்ப்பு கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் 5-ல் நிற்பதால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். மேலதிகாரியின் ஆதரவு பெருகும்.

மென்மையான மனம் கொண்டவர்களே!
தனுசு: செவ்வாயும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். சகோதர வகையில் இருந்த பிரச்னைகள் தீரும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் உண்டு. அடகில் இருந்த நகை, பத்திரங்களை மீட்க வழி பிறக்கும். 2-ல் சூரியன் நிற்பதால், அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரம் விறுவிறுப்பாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். கனவுகள் நனவாகும் தருணம் இது.
நினைத்ததைப் பாடுபட்டு முடிப்பவர்களே!

மகரம்: புதன் சாதகமாக இருப்பதால், புதிய எண்ணங்கள் தோன்றும். குடும்பத்தில் அமைதி நிலவும். வி.ஐ.பி.-க்கள் ஆதரிப்பார்கள். பூர்வீகச்சொத்து கைக்கு வரும். ராசிக்குள் சூரியன் நிற்பதால், வீண் டென்ஷன், வாகன விபத்து, ஒற்றைத் தலைவலி வந்து போகும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வளைந்துகொடுத்து முன்னேறுவீர்கள்.

மற்றவர் மனதைப் புண்படுத்தாதவர்களே!
கும்பம்: குரு சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று காணிக்கையைச் செலுத்துவீர்கள். சூரியன், செவ்வாயின் போக்கு சரியில்லாததால் உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் உஷ்ணம், பார்வைக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை தெரிந்துகொள்வீர்கள்.
கலாசாரத்தைப் பெரிதாக மதிப்பவர்களே!

மீனம்: புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், மன அமைதி உண்டாகும். எதிர்பாராத வகையில் பண உதவி கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சூரியன் வலுவாக இருப்பதால், அரசாங்க வகையில் ஆதாயம் அடைவீர்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். தாயாரின் உடல்நலம் சீராகும். 8-ல் குரு தொடர்வதால், இனம்தெரியாத கவலைகள், காய்ச்சல், வீண் செலவுகள் வந்து செல்லும். அதிரடி மாற்றம் உண்டாகும்.