Published:Updated:

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய தெய்வம் மற்றும் வழிபடவேண்டிய தலம் பற்றிய விவரங்கள்...

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

புனர்பூசம் நட்சத்திரம் ஶ்ரீராமபிரானின் அவதார நட்சத்திரம். இதன் முதல் மூன்று பாதங்கள் மிதுனராசியிலும், கடைசி பாதம் கடகராசியிலும் இடம்பெறும்.  தந்தை சொல் காப்பதிலும், பொறுமையுடன் கஷ்டங்களைச் சகித்துக்கொள்வதிலும், மற்றவர்களின் நலனுக்காக தியாகம் செய்வதிலும் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். புனர்பூசம் நட்சத்திரத்தில் சத்தியத்துக்கும் தர்மத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

சாந்தமான சாத்விக குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்கள் கருத்துகளை அழுத்தம் திருத்தமாகப் பேசுவீர்கள். நீண்ட தொலைவு நடப்பதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்துக்கு அதிபதி முழு சுபகிரகமான குருபகவான். எனவே, நீங்கள் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். மற்றவர்களும் அப்படியே நடக்க வேண்டுமென்று வலியுறுத்துவீர்கள். தெய்வ பக்தியும் தெய்வ அனுக்கிரகமும் பெற்றிருப்பீர்கள். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வள்ளலார் வருந்தியதுபோல், மனிதர்களை மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பீர்கள். அடிக்கடி கோயில் விழாக்களில் அன்னதானம் செய்ய விரும்புவீர்கள்.  

அடிக்கடி  உணர்ச்சிவசப்படுவீர்கள். யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உதவி தேவைப்படுபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை, வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாதபடி விளம்பரமில்லாமல் செய்வீர்கள். சாதுர்யமாகப் பேசிப் பல காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். மற்றவர்களைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ளும் திறனைப் பெற்றிருப்பீர்கள். 

நீங்கள் கடக ராசியில் பிறந்தவராக இருந்தால், திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். மற்றவர்களை நம்பி எந்தக் காரியத்தையும் ஒப்படைக்க மாட்டீர்கள். சிக்கனமாக இருப்பீர்கள். அவசியத் தேவையென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மதிப்பு தருவீர்கள். எப்போதும் சிந்தனையில் மூழ்கியிருப்பீர்கள். பெண் குழந்தைகளிடம் மிகுந்த பிரியம் கொண்டிருப்பீர்கள்.

பெற்றோருக்காகவும் உடன்பிறந்தவர்களுக்காகவும் உங்களுடைய சுகத்தைக்கூடத் தியாகம் செய்துவிடுவீர்கள். படிப்பறிவைவிட பட்டறிவு அதிகம்கொண்டிருப்பீர்கள். எவருக்கும் அஞ்சாமல் கம்பீரமாகவும் நேர்மையாகவும் வாழ்வீர்கள். சில நேரங்களில் ஏகாந்தமாக இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். அதற்காகவே காடு, மலை போன்ற பகுதிகளைத் தேடிச் செல்வீர்கள்.
இனி பாதம் வாரியான பலன்களைப் பார்ப்போம்.

புனர்பூசம் 1-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - குரு; ராசி அதிபதி - புதன்; நவாம்ச அதிபதி - செவ்வாய்

தாயிடம் மிகுந்த பாசம்கொண்டிருப்பீர்கள். தாயின் விருப்பத்தை பார்த்துப் பார்த்து நிறைவேற்றுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களுடன் கூடியிருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். ஆன்மிக நிகழ்ச்சிகளிலும், சொற்பொழிவுகளிலும் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள். மற்றவர்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புவீர்களே தவிர, நீங்கள் யாருக்கும் கட்டுப்பட மாட்டீர்கள். உண்மைக்காகப் போராடுபவர்களாக இருப்பீர்கள். தந்தைவழி உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதுடன், அவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகப் பாடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்துகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வீர்கள். மருத்துவம் அல்லது சட்டத் துறையில் பிரபலமடைவீர்கள்.

புனர்பூசம் 2-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - குரு; ராசி அதிபதி - புதன்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்

எல்லோருடனும் அன்புடன் பழகுவீர்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வருவீர்கள். பரந்த மனப்பான்மையுடன் நடந்துகொள்வீர்கள். சுவையான உணவு வகைகளையே சாப்பிட வேண்டுமென்று நினைப்பீர்கள். சொகுசு வாகனங்களில் பயணிக்க விரும்புவீர்கள். பகைவர்களே ஆனாலும் அவர்களையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். நன்றாக அலங்கரித்துக்கொள்வதிலும், சென்ட் போன்ற வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதிலும் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். கலைகளில் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். மற்ற மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். பெற்றோர், மனைவி, பிள்ளைகளை மிகவும் நேசிப்பீர்கள். அடிக்கடி ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியவராகக் காணப்படுவீர்கள். கணவனுக்கு மனைவியாலும், மனைவிக்கு கணவனாலும் வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான திருப்பம் ஏற்படும். சொத்துகள் விஷயத்தில் கோர்ட்டுக்குச் செல்லவும் தயங்க மாட்டீர்கள்.

புனர்பூசம் 3-ம் பாதம் 

நட்சத்திர அதிபதி - குரு; ராசி அதிபதி - புதன்; நவாம்ச அதிபதி - புதன்

பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும், காரியத்தில் இறங்கிவிட்டால் சூரப்புலிதான் என்று காட்டிவிடுவீர்கள். எப்போதும் ஏதேனும் ஒரு தேடலில் ஈடுபட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். எழுத்துத்துறையில் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். பத்திரிகைகளை வாசிப்பதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை ஆராய்ந்து பார்த்த பிறகுதான் ஏற்றுக்கொள்வீர்கள். பெற்றோர், மனைவி, பிள்ளைகளிடம் அதிகப் பாசம்கொண்டிருப்பீர்கள். அனுபவ அறிவு நிரம்பப் பெற்றிருப்பீர்கள். பலருடைய பிரச்னைக்கு ஆலோசனை கூறும் நபராக இருப்பீர்கள். நிறைய செல்வம் சேர்ப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன்னிற்பீர்கள். வேலை அல்லது வியாபாரத்தின் காரணமாக குடும்பத்தைவிட்டு சில காலம் பிரிந்திருப்பீர்கள். சுயநலத்துடன் நடப்பவர்களைக் கண்டால் ஒதுங்கிவிடுவீர்கள். இயற்கையை அறிந்துகொள்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். போதுமென்று நினைக்காமல் மேலும் மேலும் உயர வேண்டுமென்று நினைப்பீர்கள்.

புனர்பூசம் 4-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - குரு; ராசி அதிபதி - சந்திரன்; நவாம்ச அதிபதி - சந்திரன்

தெய்வ பக்தி மிகுந்தவர்களாக இருப்பீர்கள். அடிக்கடி புனிதத் தலங்களுக்கு பாதயாத்திரை செல்ல விரும்புவீர்கள். எழுத்தாற்றல் பெற்றிருப்பீர்கள். கதை, கவிதை எழுதுவதிலும், அவற்றை விமர்சிப்பதிலும் திறமை பெற்றிருப்பீர்கள். இயற்கையை ரசித்துப் போற்றுவீர்கள். குழந்தையைப் போன்ற மனம்கொண்டிருக்கும் நீங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை விரும்புவீர்கள். எல்லோரையும் எளிதில் நம்பிவிடுவீர்கள். கலைகளை ரசிப்பீர்கள். காண்பவர்களைக் கவரும்படி வசீகரமான தோற்றம் பெற்றிருப்பீர்கள். தானங்கள் செய்வதில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். குடும்பத்தினரை அதிகம் நேசிப்பீர்கள். பிள்ளைகளுக்காகச் சொத்து சேர்க்க வேண்டுமென்று நினைத்து தீவிரமாக உழைப்பீர்கள். மற்றவர்களை மதித்துப் போற்றுவீர்கள். அதே நேரம் உங்களை மதிக்காதவர்களை அலட்சியப்படுத்தி ஒதுங்கிவிடுவீர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பீர்கள்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீராமபிரான், வெங்கடேச பெருமாள்
அணியவேண்டிய நவரத்தினம்: கனகபுஷ்பராகம்
வழிபடவேண்டிய தலம்: ஆலங்குடி, திருப்பதி.