Published:Updated:

பிறந்த தேதி பலன்கள்!

பிறந்த தேதி பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பிறந்த தேதி பலன்கள்!

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

பிறந்த தேதி பலன்கள்!

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
பிறந்த தேதி பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

வ்வொரு நட்சத்திரத்தில், ராசியில் பிறந்தவர்களுக்கு இந்தந்த குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதற்கேற்பவே அவர்களது செயல்பாடும், பலன்களும் அமையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆம்! மனிதர்களின் வாழ்வில் எண்களுக்கு முக்கியத்துவம் உண்டு.

ஒருவர் பிறந்த தேதியின் மூலம் பிறவி எண்ணையும், அவர் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக்கூட்டி வரும் எண்ணை விதி எண் என்றும் கணக்கிடுவார்கள். இந்த எண்களின் ஆதிக்கத்தில், அவரின் வாழ்வும் எதிர்காலமும் அமையும் என்பது எண் கணிதத்தின் அடிப்படை.

இந்த எண் கணித பலனுடன், அவருக்கு உரிய எண்ணின் மீதான கிரகங்களின் ஆதிக்கத்தையும் அறிந்து சொல்லப்படும் பலன், மிகத் துல்லியமாக அமையும்.

பிறந்த தேதி பலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதாரணமாக, ஒருவருக்கு சுக்கிர திசை நடக்கிறது என்று வைத்துக் கொண்டால், சுக்கிரனின் எண்களான 6, 15, 24 ஆகிய தேதிகள் மற்றும் அதன் இணை எண்களான 9, 18, 27 ஆகிய தேதிகளில், அவர் வாழ்வில் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள் நடந்தேறும்.

இன்னோர் உதாரணம்... செவ்வாயின் 9-ம் எண்ணை எடுத்துக்கொள்வோம். 9-ம் தேதியில் பிறந்தவர்களிடம் அறிவாற்றலும் அவசர செயல்பாடும் தென்படும். 18-ம் தேதியில் பிறந்தவர்களிடம் சாதிக்கும் எண்ணம் இருந்தாலும், தயக்கமும் தடுமாற்றமும் தென்படும். 27-ல் பிறந்தவர்களுக்கு வேகம்-விவேகத்துடன் ராஜதந்திரமும் இணைந்திருக்கும்.

பிறந்த தேதி பலன்கள்!

இப்படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அதன் அலைவரிசைக்கு ஏற்ற நிறங்கள், திக்குகள், ரத்தினங்கள், உடலுறுப்புகள் மீது ஆதிக்கம் செலுத்துவதுபோன்று, தமக்கு உரிய எண்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில், பிறந்தது எந்த மாதமாக இருந்தாலும் 1 முதல் 31 தேதி வரை பிறந்தவர்களுக்கு, அந்தந்த எண்ணுக்கு உரிய கிரக ஆதிக்கத்தின் அடிப்படையிலான குணநலன்களை, பலன்களை, பரிகாரக் கோயில்களை விரிவாக அறிவோம். இந்த இணைப்பிதழில் 1 முதல் 9-ம் தேதி வரையிலான பலன்கள் சொல்லப்பட்டுள்ளன.

ஆதவனின் ஆதிக்கத்தில், ஒன்றாம் தேதி பிறந்தவர்களே!

பிறந்த தேதி பலன்கள்!

நீங்கள், எதிலும் தனித்துவம் பெற்றவர்கள். சுய உழைப்பில், சொந்தக்காலில் நிற்பீர்கள். பேச்சில் கம்பீரம் இருக்கும். நண்பரே ஆனாலும் சில சந்தர்ப்பங்களில், சிலவற்றில் சற்று தள்ளியே வைப்பீர்கள். கஷ்டநஷ்டங்கள் கண்டும் கலங்காத மனம் கொண்ட நீங்கள், உங்கள் நிலையிலிருந்து ஒருபோதும் கீழிறங்க மாட்டீர்கள்.

நீங்கள் பொதுவாக சற்று பரந்த காதும், கூர்மையான மூக்கும் கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்களில் பலருக்குச் சற்று பூசினாற்போல உடம்பு இருக்கும். ஒல்லியாக இருந்தாலும் எலும்பு உறுதி அதிகம். நடுத்தர உயரமானவர்கள். கண்கள் சற்று சிறியதாக இருந்தாலும் பார்வையில் கூர்மை இருக்கும். நேர்த்தியாக உடுத்துவீர்கள். தனிமையை அதிகம் விரும்ப மாட்டீர்கள். அதேநேரம், பெரிய கூட்டத்துக்கு நடுவில் வெகுநேரம் இருப்பதையும் விரும்ப மாட்டீர்கள். எல்லாவற்றிலும் ஓர் அளவைக் கொண்டிருப்பீர்கள். இந்த சமநிலை குணத்தாலேயே ஒரு பெரும் கூட்டத்தை, சமூகத்தை, வழிநடத்தும் சக்தி வளரும்.

படிக்கும் காலத்தில் தத்துவம், உளவியல் மற்றும் அரசியல் தொடர்பான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வீர்கள். கலைகளை ரசிப்பீர்கள். கலைஞர்களுக்குப் பரிசு கொடுத்து சிறப்பு செய்வதை விரும்புவீர்கள்.

உங்களின் 19 வயதிலிருந்தே உங்கள் திறமையைச் சுற்றியுள்ளோர் எளிதாக உணருவார்கள். 27 வயதாகும்போது நீங்கள் விரும்பிய துறையில் முன்னேறுவதற்கு உண்டான திடத்தையும், தெளிவையும், அமைப்பையும் பெறுவீர்கள். 44 வயதாகும்போது சற்று எச்சரிக்கை வேண்டும். இழப்பு, ஏமாற்றம் ஏதாவது ஏற்படலாம். ஆயினும், அதையும் தாண்டி முன்னேறும் மனதிடம் உங்களிடம் இருக்கும்.

தாய், தந்தையரை அதிகம் நேசிக்கும் நீங்கள், அவர்கள் தவறு செய்தால், நெறிப்படுத்துவீர்கள். உடன்பிறப்புகளோடு கட்டுக்கோப்பாக இருக்க விரும்புவீர்கள். மூத்தோருக்கு மரியாதை கொடுப்பீர்கள்.

வேலைக்குச் செல்லும்போது அந்த நிறுவனத்துக்குத் தகுந்த மாதிரி தயார் செய்துகொள்வீர்கள். எப்போதும் அதிகாரம் மிக்க வேலையில் அமர விரும்புவீர்கள். உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நடத்துவீர்கள். சூரியசக்தியை சேமிக்கும் கருவிகளையும், அவற்றை தயாரிக்கும் தொழிற்சாலையையும் நிறுவுவீர்கள்.

அரசியலில் நாட்டம் இருக்கும். அரசியலாக இருந்தாலும், ஆன்மிகமாக இருந்தாலும் தலைமைப் பதவிதான் உங்கள் விருப்பம். அப்படி பொறுப் பேற்றவுடனே தகுதியற்றவர்களையும் தரம் குறைந்தவர்களையும் உடனே நீக்கிவிடுவீர்கள். அதனால் உங்களுக்கு எதிரிகள் இருப்பார்கள்.

ஆனாலும், அவர்களை சமாளிக்கும் திறனையும் பெற்றிருப்பீர்கள். தெரிந்த விஷயங்களையும் தெரியாததுபோல் காட்டி, எதிராளி என்ன பேசுகிறார் என்று கவனித்து விஷயங்களைக் கறக்கும் சாமர்த்தியசாலி நீங்கள்.

ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள உங்களுக்கு, தினமும் பூஜை செய்ய ஆர்வமிருக்கும். ஆனால், அதையே ஒரு வேலையாக வைத்துக் கொள்ள மாட்டீர்கள். கண் எரிச்சல், உஷ்ணத்தால் ஏற்படும் கட்டி, நெஞ்சு எரிச்சல், பார்வைக் கோளாறு, கண்களில் ரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற நோய்கள் வரலாம். பொதுவாக முன்வழுக்கை விழும். வாரத்தில் வியாழக்கிழமை, மனதுக்கு இதமான நாளாக அமையும்.

ராசியான தேதிகள், 1, 3, 9. மெரூன், ப்ரௌன், சிவப்பு உங்களுக்கு ஏற்ற நிறங்கள். ரத்தினங்களில் மாணிக்கம் பொருத்தமானது. எந்த வேலையைத் தொடங்குவதாக இருந்தாலும், கிழக்கு திசை நோக்கி ஆரம்பிக்கவும்.

சோழப் பேரரசன் ராஜராஜனின் பெருஞ்சாதனை, தஞ்சை பெரியகோயில்.வான்கயிலாயமான மகாமேருவை அமைத்து, சூரியன் அதைச் சுற்றுவது போல, இக்கோயிலையும் சூரியன் சுற்றி வருவதாகப் பாவித்து வழிபட்டான். முழுச் சூரியனின் அருள் பெற்றவராலேயே, ஈசனின் அருளாற்றல் பெற்றவர்களாலேயே இதுபோன்ற மகத்தான, காலத்தால் அழிக்க முடியாத காரியங்களைச் செய்யமுடியும். ஒன்றாம் தேதியில் பிறந்தவர்கள் இக்கோயிலை வழிபடும்போது தமக்குள் புது வேகம் கொள்வர். தஞ்சைப் பெருவுடையாரும், ராஜராஜனின் பிரமிக்கத்தக்க பேராற்றல் மிகுந்த சரிதமும், அவர்கள் வாழ்வில் புது மலர்ச்சியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

சந்திரனின் ஆதிக்கத்தில், இரண்டாம் தேதி பிறந்தவர்களே!

பிறந்த தேதி பலன்கள்!

ந்த மாதமானாலும் இரண்டாம் தேதியில் பிறந்தவர்கள் என்றால், நீங்கள் சந்திரனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்களே. இயற்கையழகும், குளுமையும் உங்களைக் குதூகலப்படுத்தும். எல்லோர் மீதும் பாச மழை பொழிவீர்கள். நட்பு என்ற வார்த்தையே உங்களுக்கானதுதான்! இந்த எண்ணில் பிறந்த பெண்கள் பலர் மென்மையான குரலில் மெதுவாகப் பேசுவர். உணர்ச்சிப் பெருக்கில் சட்டென்று அழுதுவிடுவர். அம்மாவை அதிகமாக நேசிப்பீர்கள். அப்பாவிடம் விலகியிருப்பீர்கள். அறுசுவை விரும்பும் நீங்கள் கூழ் கிடைக்கும் ஊருக்குப் போனால் கூழையும் ரசித்துக் குடிப்பீர்கள். ஆனால், எல்லாம் கிடைக்கும் இடத்தில் உப்பு இல்லை, உரப்பு போதாது என்று மெல்லியதாகக் குறை சொல்லும் வினோத மனோபாவம் இருக்கும்.

சிந்தனைத்திறன் அதிகம். சேமிக்கலாம் என்று நினைத்து பணம் சேர்ப்பீர்கள். ஆனால், கலை அலங்காரப் பொருள்கள், ரத்தினங்கள், ஆபரணங்கள் என்று வாங்கிக் குவித்து அழகு பார்ப்பீர்கள். பலர், கோட்டுச் சித்திரங்கள் வரைவார்கள். கண் பார்ப்பதை கை அழகாக வரையும் திறமை இருக்கும்.

இவர்களில் பலர் கோதுமை நிறத்தில் இருப்பார்கள். உருளை போன்ற முகத்தில் மான் போன்ற மருளும் விழிகள் உங்களுக்கு. தலைமுடி சிற்றலை போல அலை அலையாக இருக்கும். விதம்விதமான வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வீர்கள். எப்போதும் நான்கு பேரோடு இருக்கவே ஆசைப்படுவீர்கள். அவ்வளவு சீக்கிரம் நீங்கள் கோபப்படுவதில்லை. ஒருவேளை, கோபப்பட்டாலும் வெகுநேரம் அது நீடிப்பதில்லை.

பள்ளியில் படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டுவீர்கள். உளவியலை படிக்காமலேயே இயல்பாக அடுத்தவரின் மனதைப் பிரதிபலிப்பீர்கள். மார்க்கெட்டிங், கம்ப்யூட்டர் போன்ற படிப்பில் முதல் நிலை பெறுவீர்கள்.

உங்களுடைய 16 வயது காலகட்டத்தில் நீங்கள் சந்திக்கும் புதிய நபர்களால் வாழ்வில் திருப்பம் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் நீங்கள் இருப்பீர்கள். பிரபல நிறுவனங்களுக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிவீர்கள். சுருக்கெழுத்து, தட்டச்சில் விரைவு மிக்கவர்கள். மொழிபெயர்ப்பாளர்கள், பிழை திருத்துனர்களாக பலர் இருப்பர். ஆர்க்கிடெக்ட்டில் சிறந்தவர்களாக விளங்குவீர்கள். அலுவலகத்தில் எல்லோரிடமும் சிரித்துப் பேசினாலும் அவ்வப்போது தொணதொணப்பீர்கள். பூக்கடை, இனிப்புக்கடை, பழச்சாறு, உள்ளாடை, உதட்டுச்சாயம், நெயில் பாலீஷ், பியூட்டி பார்லர் போன்ற தொழில்களில் அமோகமாக வருவீர்கள்.

இனிப்பு வகை பலகாரங்களையும், புதிய உணவு வகைகளையும் தேடிப் பிடித்து சாப்பிடுவீர்கள். உடம்பைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டீர்கள். அதனால், வயிற்றுவலி, தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவுகள் வந்து நீங்கும். மூச்சுத்திணறலால் கொஞ்சம் சிரமத்துக்கு உள்ளாகலாம்.

மென்மையான மனதினராக இருப்பதால் ராஜதந்திரம் கைவராது. பணத்தை வாரி இறைத்து செலவு செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் உண்டு. ராசியான தேதிகளாக 2, 7 போன்றவை அமையும். முத்து உங்களுக்கு ராசியானது. வடமேற்கு திசைநோக்கித் தொழுது செயலைத் தொடங்க வெற்றி நிச்சயம்.

சந்திரனின் முழு ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் வழிபடவேண்டிய திருத்தலம் பவானி கூடுதுறை.  பாடல் பெற்ற திருத்தலம். சங்க இலக்கியம், கூடலூர் என்று பவானியைக் குறிப்பிடுகிறது. பவானி ஆறும், காவிரியும் சங்கமிக்கும் இடமே கூடுதுறை. அதனாலேயே இறைவனுக்கு சங்கமேஸ்வரன் என்று பெயர். பவானி அம்மனை வேதநாயகி அம்மன் என்றும், கல்வெட்டுகள் பண்ணார் மொழியம்மை என்றும் அழைக்கின்றன.

இங்கு அமுதநதியும் இந்த ஆறுகளோடு கலந்தோடுவதாக புராணங்கள் கூறுகின்றன. திருமாலிடமிருந்து அமுதத்தைப் பெற்ற பராசர முனிவரை அசுரர்கள் துரத்தினர். இத்தலத்து சிவன், முனிவரைக் காப்பாற்றினார். அமிர்தத்தை முனிவர் கூடுதுறையில் புதைத்துவிட்டார். அந்த அமிர்தம் பெருக்கெடுத்து ஓடி, கூடுதுறையில் கலந்தது. அமிர்தம் லிங்கமாக மாற, அதன் அடியிலிருந்து இன்றும் அமுதநதி பிரவகிக்கிறதாம்! இங்கு சென்று வழிபட்டு வாருங்கள்; உங்கள் வாழ்க்கை செழிக்கும்.

குரு பகவானின் ஆதிக்கத்தில், மூன்றாம் தேதி பிறந்தவர்களே! 

பிறந்த தேதி பலன்கள்!

திகாரத்துக்கும், ஆணவத்துக்கும் அஞ்சமாட்டீர்கள். கடின உழைப்பால் அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். தவறு செய்தால் பெற்ற பிள்ளையானாலும் தண்டிப்பீர்கள். அரசியலில் மிகுந்த ஆர்வம் உண்டு. ராஜதந்திரத்தால் நாடாளும் யோகத்தை எட்டிப் பிடிப்பீர்கள்.

தெளிவும் தெய்விகக்களையும் முகத்தில் தெரியும். மொழுமொழுவென, சற்று குள்ளமான உடல்வாகு இருக்கும். கழுத்துப்பக்கம் சற்று கூடுதல் சதை காணப்படும். பார்க்கும் பார்வையில் ஓர் அலட்சியம் இருக்கும். ஆனால், எப்போதும் யாரையாவது கவனித்தபடி இருப்பீர்கள். அடர்த்தி குறைவான நீளமான முடி இருக்கும். சராசரி உயரம் கொண்டிருப்பீர்கள். உங்கள் விருப்பம், பாரம்பர்ய உடைகள் அணிவதாக இருக்கும்.

பொய் சொன்னால் கோபத்தால் பொங்கியெழுவீர்கள். நாய், பூனை, பசு வளர்ப்பதில் பிரியம் இருக்கும். அவ்வப்போது தனிமையை விரும்புவீர்கள். ஓலைச்சுவடிகளை விரும்பிப் படிக்கும் நீங்கள், மேலைநாட்டவர்களின் படைப்புகளையும் படிக்கத் தவற மாட்டீர்கள். பள்ளிப்பருவத்திலேயே பக்குவப்பட்டிருப்பீர்கள். அன்றாடக் கடமைகளை உடனே செய்து விடும் பழக்கம் இருக்கும். பூர்விகச் சொத்தின் புராதனம் மாறாமல் அதே வீட்டிலேயே குடியிருக்க விரும்புவீர்கள்.  தாய் தந்தையை மதித்து வாழ்வீர்கள். உடன் பிறந்தவர்களை நீங்கள் நேசித்தாலும் அவர்கள், உங்களை நேசிக்காதது குறித்து வருத்தப்படுவீர்கள்.

சிலர், பெரிய நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக இருப்பர். மேலும் வழக்கறிஞர்களாகவும், கல்லூரிப் பேராசிரியர்களாகவும், தாசில்தார், பேங்க் மேனேஜர், நிருபர் ஆகிய பணிகளிலும் ஜொலிப்பார்கள். சிலர், நகைக்கடை அதிபராகத் திகழ்வர். நீங்கள் வெளி உணவுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொதுப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் உள்ளவர். பலர் உங்களை ஒரு ரோல்மாடலாகக் கொள்வார்கள். 1,3,9 தேதிகள் அதிர்ஷ்டம் தரும். நிறங்களில் மஞ்சள், பொன்நிறம், மெரூன் போன்றவை ஏற்றதாக அமைகின்றன. ராஜவெண் பவழம் எனும் ரத்தினம் அணிந்தால், இன்னும் வாழ்வில் ஒளி கூடும்.

மூன்று என்ற குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் பழைமைக்குள் புதுமையை புகுத்துவீர்கள். ஆன்மிகத்தில் உயர்ந்த ஞானம் இருக்கும். மக்களுக்கு நண்பராக, பேரரசருக்கு இணையாக, நாடாளுபவருக்கு ஆலோசனை கூறும் புத்திக்கூர்மை மிக்க மந்திரியாக குரு திகழச் செய்வார். மந்திரியாக விளங்கும் இவர்களை மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள்.

இப்படி ஒரு  மகானாக விளங்கியவரே கோவிந்த தீட்சிதர். நாயக்கர் காலத்தில் ஆன்மிக குருவாகவும், அரசவை மந்திரியாகவும், வேதங்களில் கரை கண்டவராகவும், ஜோதிடத்தில் மகா பண்டிதராகவும், இசையில் பெரிய வித்வானாகவும் புகழ் பெற்றிருந்தார். இவரை `தீட்சிதர் அய்யன்' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 

சிறந்த அரசியல் திறமை மட்டுமல்லாமல் காவியப் புலமையோடும் விளங்கினார். ‘சங்கீத கதாநிதி’ எனும் இசை நூலை அருளினார். ‘கோவிந்த தீட்சிதீயம்’ எனும் ஜோதிட நூலை இயற்றினார். சங்கரரின் அத்வைத தத்துவக் கோட்பாடுகள் குறித்து விரிவான நூல்களையும் எழுதினார். வேத விற்பன்னரான `வாஜபேயாஜி' என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். கோவிந்தகுடி, ஆவூர், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், திருநாகேஸ்வரம், திருப்பாலைத்துறை என்று இன்னும் தமிழகம் முழுவதும் எண்ணற்ற கோயிலின் திருப்பணிகளை ஏற்று நடத்தினார்.

கும்பகோணத்துக்கு அருகேயுள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் மீதும், தேனுபுரீஸ்வரர் கோயிலிலுள்ள ஞானாம்பிகையின்பால் பெரும் பக்தி கொண்டிருந்தார். பட்டீஸ்வரம் கோயில் ஞானாம்பிகை சந்நிதிக்கருகில் கோவிந்த தீட்சிதரும், அவரின் மனைவி நாகமாம்பாவும் சிலை உருவத்தில் காட்சி தருகின்றனர்.

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த மகானை வணங்க இவர்கள் வாழ்வு சிறக்கும். பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் ஞானாம்பிகை சந்நிதியில் இவரை தரிசிக்க, உங்கள் வாழ்வு அந்த குருவருளால் இன்னும் வளர்வதை உள்ளத்தில் உணர்வீர்கள்.

ராகுவின் ஆதிக்கத்தில், 4-ம் தேதியில் பிறந்தவர்களே!

பிறந்த தேதி பலன்கள்!

ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள், புதிய பார்வையுடன் விஷயங்களை அணுகுவீர்கள்; எதையும் கிரகிக்கும் சக்தி உங்களிடம் அதிகமுண்டு. பிரச்னையின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவதில் வல்லவர்கள் நீங்கள். பழைய விஷயங்களை மறக்காதவர் நீங்கள்.

சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கொண்டு, திடீரென முடிவுகளை எடுப்பீர்கள். எந்த விஷயத்தையும் அடக்கிவாசிக்கத் தெரியாது; இந்த விஷயத்தில் கவனமாக இருத்தல் அவசியம். பயணங்களில் யதேச்சையாக உங்களைச் சந்திக்கும் சிலர், உங்கள் வாழ்வில் கடைசி வரை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்றால், அதில் ஆச்சர்யமில்லை. சிலருக்கு மனைவியேகூட அப்படி அமைவதுண்டு. உங்களிடம் விவாதம் செய்து ஜெயிப்பது கஷ்டம். அபாரமான சிந்தனைத் திறன் இருக்கும். எல்லோரும் எதிர்க்கும் ஒரு விஷயத்திலுள்ள நியாயத்தைக் கூறுவீர்கள்.

தியரியைவிட ப்ராக்டிகலில் நல்ல மார்க்குகள் வாங்கும் மாணவர்கள் அதிகம். சவால்களை ஏற்றுக்கொள்வீர்கள். மனதை ஒரு நிலைக்குள் வைத்திருப்பீர்கள். உறவினர்களைவிட நண்பர்கள்தான் அதிகம். இந்த எண்காரர்கள், எந்தப் பிரச்னையையும் லேசில் விடமாட்டார்கள். திடீரென விஸ்வரூபம் எடுப்பார்கள். சினிமா தியேட்டரில் டிக்கெட் கிழித்து பிறகு தியேட்டரையே வாங்கிப் போடும் ஜாம்பவான்களாகவும் சிலர் திகழ்வார்கள். எண்ணிப் பார்த்து பண உதவியைச் செய்வது என்பது, இவர்கள் வாழ்வில் எப்போதும் கிடையாது.

திடீரென நாடோடியாக ஊர் சுற்ற விரும்புவார்கள். பொது சபையாக இருந்தாலும் கால் மேல் கால் போட்டு உட்காரும் இவர்கள், தன்னைவிட திறமை அதிகமுள்ளவர் என்று தெரிந்தால் அப்படியே அவர் காலில் விழுந்துவிடுவர்.

இவர்கள், சற்றே விரிந்த சதுரம் போலிருக்கும் முக அமைப்பு உடையவர்கள். முகவாய்க்கட்டை மட்டும் முகத்திலிருந்து சற்றே தனித்துத் தெரியும். கழுகுப் பார்வை இவர்களுக்கு. படிப்புக்கேற்ற வேலை செய்ய மாட்டார்கள். ஏரோநாட்டிக்ஸ், மரைன் இன்ஜினீயரிங், இயற்கையைப் பற்றிய படிப்புகள் போன்றவற்றில் ஆர்வம் செலுத்துவார்கள். சுரங்க ஆராய்ச்சிகளில் தனிப்பட்ட ஆசை இருக்கும். ஓடுதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் தனி கவனம் செலுத்துவார்கள்; வாலிபால் விளையாட்டிலும் கைதேர்ந்தவர்கள். இசைக்கருவிகளில் டிரம்ஸ் பிடிக்கும்.

ஓலைக்குடிசையாக இருந்தாலும் காற்றோட்டமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். எனினும் அதிகம் சத்தம் நிறைந்த இடத்தில்தான் உங்கள் வீடு அமைந்திருக்கும். பெற்றோர்களை அதிகம் நேசிக்கும் நீங்கள், தாத்தா, பாட்டி மீது தீராத பாசம் காட்டுவீர்கள். திருமணம் முடிந்த பின்னும் பாட்டியின் மடியில் தலை சாய்த்து பழங்கதை பேசுவீர்கள். ஊரே வியக்கும் அளவுக்கு சகோதரிக்குத் திருமணம் செய்வீர்கள்.

தொடர்ந்து ஒரு பணியில் நீடிக்க மாட்டீர்கள். திறமைக்கேற்ப வேலை கிடைக்கவில்லையே என்று வருந்த மாட்டீர்கள். பொதுவாக டிடெக்டிவ் ஏஜென்ஸி, மனமகிழ் மன்றம், சுற்றுலாத் தலங்கள், ஆயுர்வேத மசாஜ் சென்டர், பார் வசதியோடு கூடிய உணவகம், கல்குவாரி போன்ற தொழில்களில் ஈடுபடுவர். பத்திரிகைத்துறையில் இருப்பவர்கள் சர்ச்சைக்குள்ளான விஷயங்களை எழுதி பிரபலமடைவர்.

வறுத்த, பொரித்த, சற்றே காரம் தூக்கலான, சைனீஸ், தந்தூரி என்று விரும்பி உண்டாலும், கேழ்வரகு கூழ், தயிர்சாதம் என்று விருப்பத்தோடு சாப்பிடுவீர்கள். குடல் இறக்கம், ஹிரண்யா, ஹார்மோன் குறைபாடு ஏற்படலாம்... வலிப்பு நோய் வந்து நீங்கும். முதுகுத்தண்டு பிரச்னைகள் மத்திம வயதில் வரும்.

இவர்களுக்குப் பணத்தைச் சேமிக்கத் தெரியாது. திடீரென பணக்காரர் ஆகும் யோகம் உடையவர்கள். மிகப் புராதனமான கோயில்களைத் தரிசிக்க விரும்புவர். காளி அல்லது துர்க்கையை வழிபடுவதன் மூலம் இவர்கள் வாழ்க்கை இன்னும் உறுதிபெறும். வெற்றி தானாக வந்து கைகளில் அமரும். எனவே, தஞ்சையிலுள்ள வடபத்ரகாளியம்மன் எனும் நிசும்ப சூதனியை வழிபட்டு வரலாம். ‘இவளுடைய உருவத்தை மனதில் இருத்தி தியானித்தாலே போதும்; சகல வரங்களும் கிடைக்கும்’ என்கிறது தேவி மகாத்மியம். ஆகவே, அனுதினமும் இந்த அம்பிகையை வழிபடுங்கள்.

புதனின் ஆதிக்கத்தில், 5-ம் தேதி பிறந்தவர்களே!

பிறந்த தேதி பலன்கள்!

ப்பனுக்கே பாடம் சொல்லுபவர்களென்றால் அது நீங்கள்தான். மூளையை மூலதனமாக்கி முன்னேறுவீர்கள். பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்களைப் பிடிக்காது.

இன்றைக்கு ஓஹோ என்றுள்ள எந்தத் துறையானாலும் இன்னும் அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன ஆகும் எனும் தொலைநோக்கு உள்ளவர்கள். லாப நஷ்டம் குறித்து கவலைப்பட மாட்டீர்கள். நினைத்ததை நினைத்ததும் செய்துமுடிப்பவர் நீங்கள். இவர்களில் சிலர், பள்ளிப்பருவத்தில் ஏளனத்துக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகியிருக்கலாம்.

நல்ல நகைச்சுவையாளர்கள். சமயோசித புத்தி அதிகம். உங்கள் மனதுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லையென்றால், வார்த்தைகளால் குத்தியெடுப்பீர்கள். எதைப் பற்றிப் பேசும் புத்தகமானாலும் சரி, அரைமணி நேரத்திலேயே அதன் சாரத்தைப் பிழிந்தெடுத்து விடுவீர்கள். எனினும், மனம் போகும் மின்னல் வேகத்துக்கு உடம்பு ஒத்துழைக்காது. இதனால் உங்களில் சிலருக்குத் தூக்கமின்மை, நரம்புக்கோளாறு வருவதுண்டு. ஆளை எடை போடுவதில் அசகாயசூரர்கள். வெற்றி பெற்ற மனிதர்கள் பற்றிப் பேசும் நீங்கள், தோள் கொடுப்பது என்னவோ தோற்றுப் போனவர்களுக்குத்தான். உங்களுக்குச் சற்று தாமதமாகத்தான் அங்கீகாரம் கிடைக்கும். எனினும், நீங்கள் பல தருணங்களில் எவருடைய அங்கீகாரத்துக்கும் காத்திருக்கமாட்டீர்கள். உங்களை நீங்களே `நான் இன்னவன்' என்று அறிவித்துவிடுவீர்கள். கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.

சற்றே உயரம் குறைவாக இருந்தாலும் உங்கள் கண்களில் தீர்க்கம் தெரியும். எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டுமென விரும்புவீர்கள். சட்டென்று கோபப்படுவீர்கள். ஆனால், அதுவும் ஐந்து நிமிடங்கள்தான். மனக்கணக்கில் புலிதான்! ஆனால், அல்ஜீப்ரா அவ்வளவாக வராது. அரிய வகைப் பூக்கள், இலைகளை பதப்படுத்தி வைக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டு. சிறு சிறு கோட்டுச் சித்திரம் வரைந்து மகிழ்வீர்கள். வானளாவிய கற்பனை வளம் இருக்கும். செஸ், டேபிள் டென்னிஸ், ஷட்டில் கார்க் போன்ற இன்டோர் கேம்ஸை விரும்புவீர்கள். வீணை இசைக்கு மயங்குவீர்கள்.

திருமண வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும். ஆனால், கணவன் மனைவிக்குள் பிரிவு ஏற்படும் வகையில் சிலர் குறுக்கிடுவர். பிள்ளைகளின் மீது உயிரையே வைத்திருப்பீர்கள். அழகான, பாந்தமான வீடு மிகவும் பிடிக்கும். மனதுக்குப் பிடித்தவர்களாக இருந்தால் தண்ணீராக காசை செலவழிப்பீர்கள். உறவினர், நண்பர் செய்த உதவிகளை மறக்காத இவர்கள், தங்களை அவமானப்படுத்தியவர்களை அடிமனதில் வைத்திருந்து பழிவாங்குவர். பெற்றோரை அதிகம் நேசிப்பர்.

கன்சல்டன்சி உங்களுக்குச் சரியாக வரும். நகைச்சுவை நிகழ்ச்சிகள், எழுத்துத்துறைகளில் அபார சாதனை புரிவீர்கள். சினிமாவாக இருந்தால் திரைக்கதையில் வல்லவர்கள். கம்ப்யூட்டர் உபகரணங்கள், எல்.ஐ.சி. ஏஜென்ட், சார்டர்ட் அக்கவுன்டன்ட், பத்திர எழுத்தாளர் என்று வேலைகளில் அமரலாம்.

பொதுவாகவே உங்களுக்கு எப்போதுமே வயிறு சரியாக இருப்பதில்லை. வாயுக்கோளாறு வந்துபோகும். மூளை பலவீனமாகி பழைய நினைவுகள் மறக்கும் நோய்கள் வந்து நீங்கும். அரசியலில் ஆர்வம்காட்ட மாட்டீர்கள். ஞானிகளை நேசிப்பீர்கள். சக்தி வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ஹயக்ரீவரே இவர்கள் வழிபட வேண்டிய கடவுள். கடலூருக்கு அருகே திருவஹீந்திரபுரத்தில் குடிகொண்டுள்ளார் ஹயக்ரீவர். மது, கைடப அசுரர்கள் பிரம்மனிடமிருந்து வேதங்களை அபகரித்துக்கொண்டனர். திருமால் ஹயக்ரீவம் எனும் குதிரை வடிவம் கொண்டு அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டார்.

ஹயக்ரீவரை பிரத்யட்சமாக தரிசித்தவர் வேதாந்த தேசிகர் எனும் நிகமாந்த மகாதேசிகன். ஹயக்ரீவரின் பேரருளால் ஞானியாகத் திகழ்ந்தார். சகல வித்தைகளும் கைவரப்பெற்றிருந்தார். ஒரு சமூகத்தையே கட்டிக்காக்கும் மகாவலிமையை ஹயக்ரீவப் பெருமான் இவருக்கு அளித்தார். எனவே, ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் ஹயக்ரீவப் பெருமாளையும், நிகமாந்த மகாதேசிகரையும் தரிசித்து வர அவர்கள் வாழ்வு உயரும் என்பது உறுதி.

சுக்கிரனின் ஆதிக்கத்தில், 6-ம் தேதி பிறந்தவர்களே!

பிறந்த தேதி பலன்கள்!

நீங்கள், கலவரப் பூமிக்கு சென்றாலும் கனிவாகப் பேசி கலகலப்பை உண்டாக்குவீர்கள். எதிலும் அழகு, அலங்காரம், கவரும் தன்மை என்று அசத்துவது உங்களுக்குப் பிடிக்கும். எதிரியை காயப்படுத்தாமல் திசை திருப்புவீர்கள். ஆளுமைத் திறன் உண்டு. உங்களைச் சுற்றிலும் கூட்டம் இருக்கும். எப்போதும் பணம் கையிலிருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். கற்பனை வளம் கொடிகட்டிப் பறப்பதால் படைப்பாற்றல் உங்களிடம் உண்டு. இசைக்குரிய எண்ணாக இருப்பதால் சங்கீதப் பிரியர்கள். அரிய பழைய பாடல்களைத் தொகுத்து வைத்திருப்பீர்கள்.

உயரத்துக்கேற்ற பருமன் இருக்கும். சிற்பம்போல் செதுக்கிய அழகான முகம் உங்களுக்கு. துறுதுறுவென்று பார்ப்பீர்கள். சிரிக்கும்போது கண்களும் சேர்ந்து சிரிக்கும். தனிமை உங்களுக்குப் பிடிக்காது. தனியாக இருந்தால் பெயின்டிங் வரைதல், நாவல்கள் படிப்பது என்று ஈடுபடுவீர்கள். உங்கள் அனுபவங்களை எப்போதுமே நான்கு பேரோடு பகிர்ந்துகொள்ள விரும்புவீர்கள். சிறு சிறு கோபங்கள் தலைதூக்கும்.

இவர்களில் அதிகம் பேர் சாப்ட்வேர், எம்.பி.ஏ. ஐ.டி. துறை என்று எதில் பணம் கொட்டுகிறதோ அதைத்தான் படிப்பார்கள். குழந்தை நலம் சார்ந்த மருத்துவப் படிப்பையும் விரும்புவார்கள். ஆர்கிடெக்ட் துறையில் அசத்துவார்கள். உங்களுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் என்பதால், ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற கொள்கையோடு இருப்பீர்கள்.

ஆறாம் எண்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை அமைவதைப் பொறுத்துத்தான் வாழ்க்கையும் அமையும். பிள்ளைகள் மீது பாசம் அதிகமிருக்கும். பெற்றோர்களைச் சிரமப்படுத்தாமல் உதவியாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களை நண்பர்கள்போல நடத்துவார்கள். எவரிடமும் கைகட்டி வேலை செய்வது பிடிக்காது. இம்போர்ட், எக்ஸ்போர்ட், ஷிப்பிங் கார்ப்பரேஷன், டிராவல்ஸ், ஜவுளி, பேன்ஸிகடை, ஹெர்பல் போன்ற தொழில்களில் கொடிகட்டிப் பறப்பார்கள். இவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களை வசதி வாய்ப்போடு வைத்திருப்பார்கள்.

மினி டிபன், தயிர் பச்சடி, மாங்காய் துருவல் போன்றவற்றை விரும்பி உண்பீர்கள். ஆனாலும், பாட்டி தரும் தயிர் சாதத்தோடு மோர் மிளகாய் சாப்பிடவும் பிடிக்கும். சிலருக்கு சர்க்கரை நோய், உடல் பருமனால் வரும் தொல்லை, சிறுநீரகத் தொற்று, நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்றவை வந்து நீங்கும். சிலருக்கு வயது ஏற ஏற துறவற எண்ணம் மிகும். பெருமாள் பெயருள்ள நண்பர்களது உதவி கிடைக்கும்.

தும்பைப்பூ நிறமும், லைட் பிங் நிறமும் இவர்களுக்கு ஏற்ற நிறங்கள். தேதிகளில் 6, 9 ராசியாக இருக்கும். எட்டாம் எண்காரர்கள் அடிக்கடி சாதகமாக இருப்பர். ரத்தினங்களில் வைரத்தை அணிய விரும்புவார்கள். தென்கிழக்கு திசைநோக்கி காரியம் தொடங்க, எதுவும் சுகமாக முடியும்.

குபேரனாக வாழ விரும்பும் இந்த அன்பர்கள் தரிசிக்கவேண்டிய தலம், திருக்கோளூர். நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் இதுவும் ஒன்று. மதுரகவியாழ்வார் அவதரித்த தலம்.

கர்வத்தின் காரணமாக உமையவளின் சாபம் பெற்ற குபேரன், தன்னுடைய நவநிதிகளையும் இழந்தான். இதனால் தங்களைப் பராமரிக்க ஆளின்றி வருந்திய நவநிதிகளும், தாமிரபரணியில் நீராடி திருமாலைத் தியானித்து தவம் இருந்தன. திருமால் நவநிதிகளையும் தன் அருகே வைத்துப் பாதுகாத்து, அதன் மீது சயனம் கொண்டார். அதனாலேயே அவருக்கு வைத்தமாநிதிப்பெருமாள் எனும் திருநாமம் உண்டானது.

பின்னர், குபேரன் தனது தவறுணர்ந்து, அம்மையப்பனைப் பணிந்தான். அவர்களது அறிவுரைப்படி, திருக்கோளூர் தலத்தை அடைந்து பெருமாளை வழிபட்டு, நவநிதி களையும் திரும்பப் பெற்றான்.

இன்றைக்கும் வறுமையில் வாழ்பவர்களும், செல்வம் இழந்தவர்களும், இன்னும் செல்வங்கள் பெருகவும், வைத்தமாநிதிப்பெருமாளை வணங்கி சகல சம்பத்தும் மிக்க வாழ்க்கையைப் பெறுகின்றனர்.
 
இங்கு தீர்த்தமே, குபேர தீர்த்தம்தான்.

ஆறாம் எண்ணில் பிறந்த அன்பர்கள், இத்தலத்துக்குச் சென்று வழிபட்டு வந்தால், இன்னும் பல வளங்களும், பெருமாளின் அருள்வளமும் பெறுவர் என்பது உறுதி.

கேதுவின் ஆதிக்கத்தில், 7-ம் தேதி பிறந்தவர்களே!

பிறந்த தேதி பலன்கள்!

நீங்கள், காற்றைப்போல கட்டுக்கடங்காதவர்கள். உலகின் ஒவ்வோர் இயக்கத்தையும், அனைத்து விஷயங்களையும் அசைபோடுவீர்கள். எத்தனைதான் காசு, பணம் வந்தாலும் அலட்டிக்கொள்ள மாட்டீர்கள். எத்தனை சொத்து, சுகங்கள் இருந்தாலும் அவற்றையும் தாண்டி தேடலும், தவிப்பும் இருக்கும். பத்து நிமிடங்கள் ஆத்மார்த்தமாக அமர்ந்து தியானிப்பதே சிறந்த வழிபாடு என்று நினைப்பவர் நீங்கள். கேது ஞானகாரகனாக இருப்பதால், உங்கள் மனதை அடக்கும் வித்தையையும் கற்றிருப்பீர்கள். ஹிப்னாடிசம், மெஸ்மரிசம், ஆவியுலக ஆராய்ச்சி மாதிரியான விஷயங்களில் எப்போது ஓர் ஈர்ப்பு இருக்கும்.

தனக்கென்று தனி நியதி, தனி வாழ்க்கை என்ற அமைப்போடு வாழ்வீர்கள். முகஸ்துதிக்கு மயங்க மாட்டீர்கள். தகுதியில்லாதவர்களைப் புகழ மாட்டீர்கள். தகுந்த சந்தர்ப்பங்களில் உங்களது பேச்சு, சுற்றியிருப்போரை வியப்பில் ஆழ்த்தும். சுத்தம் சோறுபோடும் என்பது உங்களுக்குத்தான் பொருந்தும்.

நாலு பேருக்கு நல்லது செய்யும் பதவியை விரும்புவீர்கள். எப்போதும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றி இயல்பாக உங்கள் மனம் ஏதேனும் சொல்லும். சுயசரிதைகளை விரும்பிப் படிப்பீர்கள். சுற்றுலா விரும்பியான நீங்கள், நிச்சயம் கோயில்களாகத்தான் செல்வீர்கள். கார்ல் மார்க்ஸின் பொதுவுடைமையை விரும்பும் நீங்கள், விவேகானந்தரின் வீர ஆன்மிகத்தையும் சேர்த்து விரும்புவீர்கள்.

இவர்கள் பருமனாகவும் இல்லாமல், ஒல்லியாகவும் இல்லாமல் நடுத்தர உடல்வாகு கொண்டவர்கள். லைட் கலரில் உடையணிவது பிடிக்கும். ஒரு கூட்டத்தையே நிர்வகிக்கும் நீங்கள், எப்போதும் தனிமையை விரும்புவீர்கள். சரிவர தன் கடமைகளைச் செய்யாதவர்களைப் பார்த்து நீங்கள் கோபப்படுவதுண்டு.

படிக்கும் வயதில் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு வெறித்தனமாகப் படித்து நிலையை உயர்த்திக்கொள்வீர்கள். ஆளாக்கிய தாய், தந்தையருக்கென்று எப்போதும் ஏதேனும் செய்து கொண்டேயிருப்பீர்கள். உளவியல் சார்ந்த படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தெருக்கூத்து, நாட்டுப்புறப் பாடல், மண்ணின் மணம் சொல்லும் கதைகளை ஆழமாக நேசிப்பீர்கள். தாவரவியல் மற்றும் மகசூலை அதிகரிப்பது எப்படி போன்ற துறைகளின் மீது தனிக் கவனம் செலுத்துவீர்கள்.

வாழ்க்கைத் துணைவர், பிள்ளைகள் மீது வெளிப்படையாக அன்பு செலுத்தத் தெரியாது. வீட்டுக்குள் பொருள்களை வாங்கிக் குவிப்பீர்கள். ஆனால், நீங்கள் அவற்றை உபயோகப்படுத்துவது சந்தேகமே. உங்களைச் சேர்ந்தோர், எப்போதும் எல்லா விஷயங்களுக்கும் உங்களையே நம்பியிருப்பார்கள். உடன்பிறந்தோருக்கு மறைமுகமாக உதவுவீர்கள்.

ஸ்கிரீன் பிரின்டிங், பத்திரிகை, டப்பிங் தியேட்டர், பெண்களுக்கான ஹாஸ்டல், யோகா சென்டர், மருந்துக் கடை போன்ற தொழில்களில் ஈடுபடுவோர் அமோகமாக வருவீர்கள். அலுவலகத்தில் எப்போதும் கறாராக இருப்பீர்கள். அவிக்கப்படாத உணவை அதிகம் விரும்புவீர்கள். சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றை விரும்பினாலும் அவ்வப்போது நூடுல்ஸையும் உண்ண முயற்சிப்பீர்கள்.

சரும வியாதிகள், கால் மரத்துப் போதல், தூக்கமின்மை, செரிமானக்குறைவு போன்றவை வந்து நீங்கும். சிறந்த அரசியல் விமர்சகரான நீங்கள், சில தலைவர்களை நேருக்கு நேர் கேள்வி கேட்டு மடக்குவீர்கள்.

எப்போதும் 2, 7 ஆகிய தேதிகள் உங்களுக்கு ராசியானவை. நிறத்தில் பழுப்பும், ஊதாவும் அதிர்ஷ்டம் தரும். கற்களில் வைடூரியம் அணிந்தால் வாழ்க்கை சுடர்விட்டுப் பிரகாசிக்கும். வடகிழக்கு திசை நோக்கி செயலைத் தொடங்க வெற்றி நிச்சயம்.

பொதுவாக 7 மெய்ஞ்ஞானத்தைக் குறிக்கும் எண்ணாகும். இந்த தேதியில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தலம் சிதம்பரம். இதன் புராணப் பெருமை காலக் கணக்குக்கு அடங்காதது. இத்தலத்தை வந்து வணங்காத ஞானிகளே இல்லையெனலாம். ஏழாம் தேதியில் பிறந்தோர் நடராஜ சந்நிதிக்கு அருகேயுள்ள பிரபஞ்சவெளி எனும் சிதம்பர ரகசியத்தை, தங்க வில்வ இலைகளால் அலங்கரித்திருக்கும் அந்தச் சந்நிதியை தரிசிப்பதால், வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ்வர் என்பது உறுதி.

சனி பகவானின் ஆதிக்கத்தில், 8-ம் தேதி பிறந்தவர்களே!

பிறந்த தேதி பலன்கள்!

நீங்கள் தமக்கென வாழாப் பெருந்தகைகள். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிப்பீர்கள். ஜன்ம எதிரியாக இருந்தாலும் நெருக்கடியான நேரத்தில் முன்நின்று உதவுவீர்கள். சிலர், பெரிய விஷயங்களையெல்லாம் பிரமாதமாக முடிப்பார்கள். ஆனால், உப்புக்குப் பெறாத விஷயங்களுக்கெல்லாம் புலம்புவார்கள்.

எப்போதும் கடைநிலை ஊழியருக்காக தோள் கொடுப்பார்கள். போட்டி, பந்தயம், வாக்குவாதம் என்று எது வந்தாலும் `வரட்டும் பார்க்கலாம்’ என்ற மனோபாவம் இருக்கும். திடீரென இவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். ஏனெனில் சனி பகவானின் ஆதிக்கத்துக்குட்பட்டவர் இவர்கள்.

பார்வைக்கு நீங்கள் கரடுமுரடாகத் தெரிந்தாலும், பழகிய பின்னர்தான் நீங்கள் தேன் சுளை என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். பழைமையை மறக்காதவர் நீங்கள். உங்களில் சிலர், மற்றவர்களுக்கு உதவப்போய் சில அவமானங்களை சந்திப்பதுண்டு. தோற்றத்திலும் செயலிலும் மிகவும் எளிமையானவர். வலதுகை செய்வது இடதுகைக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வீர்கள். சின்ன வயதில் நீங்கள் பட்ட கஷ்டங்களை, உங்களைச் சுற்றியிருப்பவர்கள் படக்கூடாது என்று உறுதியாக இருப்பீர்கள். செல்லப் பிராணிகளை விரும்பி வளர்ப்பீர்கள். உங்கள் பார்வையில் எப்போதும் ஒரு கனிவு இருக்கும். உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்.

இவர்கள், தாய்மொழியைவிட அந்நிய மொழியில்தான் அதிக மதிப்பெண் எடுப்பார்கள். விலங்கியல், மண்ணியல், ஆர்க்கியாலஜி, நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல், டீசல் மெக்கானிக்கல், பிரின்டிங், தோல் தொழிற்சாலை அமைத்தல், கேட்டரிங் டெக்னாலஜி போன்றவை சார்ந்த படிப்புகள் இவர்களுக்கு ஏற்றவை.  வாழ்க்கைத் துணையை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வார்கள். மாமனார், மாமியார் என்று எல்லோரையும் பொறுப்பாக கவனித்துக்கொள்வார்கள். பிள்ளைகள் மீது எல்லையில்லா பாசம் காட்டுவார்கள். பூர்விகச் சொத்தை சகோதரர்களுக்காக விட்டுக்கொடுப்பார்கள்.

இவர்கள், கார் ஸ்பேர்பார்ட்ஸ், பெரிய நிறுவனங்களுக்கு அட்டைப்பெட்டி சப்ளை செய்தல், சமையலறைக்குத் தேவையான சாதனங்கள், மரச் சாமான்கள், செட்டிநாடு உணவகம், உர கம்பெனி, சிமென்ட், ப்ளூமெட்டல், செருப்புக் கடை, பாத்திரக்கடை, பிரின்டிங் பிரஸ், பில்டிங் காண்ட்ராக்டர் போன்ற தொழில்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். அலுவலகத்தில் எல்லோருடைய வேலையையும் இழுத்துப்போட்டு செய்வார்கள்.

பொதுவாக இவர்களுக்கு சருமநோய்களும், காது வலி, கண்களில் நீர் வடிதல், குடலிறக்கம் போன்றவையும் வந்து சிகிச்சை மூலம் குணமாகும்.

தேதிகளில் 5, 6 ராசியாக இருக்கும். நிறங்கள் சில்வர் க்ரே, வெளிர் நீலம். திசை தென்மேற்கு. ரத்னம் நீலக்கல் சபையர். பூரண சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்திருந்தாலும் உங்களுக்கு திருமால் மீது மாறாத பக்தியிருக்கும். சிவாம்சத்தின் சாரமாக சனிபகவான் விளங்கினாலும் பெருமாளை வழிபடுவதை மிகவும் விரும்புவீர்கள்.

சயனக் கோலத்தில் மகாவிஷ்ணு அரங்கனாகச் சேவை சாதிக்கும் கோயில்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவையே. குறிப்பாக திருவரங்கனை வழிபட்டு வந்தால், உங்கள் வாழ்க்கை வளமாகும்.

புராணம் புகழும் திருவரங்கம், காலத்தால் கணிக்க இயலாத பழைமையானது. ஆழ்வார்கள் உருகி உருகி மங்களாசாசனம் செய்த அற்புதத் திருக்கோயில். இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களில் இதுவும் ஒன்று. எண்ணற்ற புராணங்களும், பாடல்களும் கொட்டிக் கிடக்கும் பிரமிப்பூட்டும் கோயில் இது.

தவிர, பல மன்னர்களால் திருப்பணிகளும் செய்யப்பட்டது. பார்க்கப் பார்க்க வியப்பூட்டும் அரங்கனின் சயனக் கோலம் காண, மனம் வலிமை பெறுகிறது. இருப்பவரிடம் பொருள் கவர்ந்து இத்திருக்கோயிலில் பல பணிகளைச் செய்தார் திருமங்கையாழ்வார். அவ்வளவு பக்தியோடு ரங்கநாதரை ஆராதித்தார். இத்தலத்தில் கால்படாத ஞானிகளே இல்லை எனலாம். பூலோக வைகுண்டமாக விளங்கும் ரங்கநாதரை தரிசிக்க, உங்கள் வாழ்வு நிச்சயம் சிகரமாக உயரும்.

செவ்வாயின் ஆதிக்கத்தில், 9-ம் தேதி பிறந்தவர்களே!

பிறந்த தேதி பலன்கள்!

ங்களுக்கென்று ஒரு தனி சகாப்தத்தை படைப்பீர்கள். எந்த உலகளாவிய பிரச்னைக்கும் உடனடித் தீர்வு எது என்றுதான் எப்போதும் யோசிப்பீர்கள். எந்தக் காரியமானாலும் நாளைக்குப் பார்ப்போம் என்று தள்ளிப்போடுவது, உங்கள் அகராதியில் எப்போதும் இல்லை. எந்தக் காரியம் என்றாலும் உடனுக்குடன் செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்விகச் சொத்தை எப்படியாவது காப்பாற்றுவீர்கள். நட்புக்காக உயிரையே கொடுப்பீர்கள்.

எப்போதும் `வறுமையிலிருந்து மீள்வதற்கு என்ன செய்யலாம்' என்ற யோசனை உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அதேபோல், புதிதாக ஏதேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவலும் உங்களுக்குள் எப்போதும் இருக்கும். பழையதை மாற்றாமல் புதுமையைப் புகுத்துவதில் கெட்டிக்காரர்கள். தவறுகளைச் சட்டென்று ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்வீர்கள்.

தூக்கத்தை அதிகம் விரும்பும் இந்த அன்பர்கள், ஏதோவொரு காரணத்தால் தூக்கம் குறைந்தால், அசௌகரியமாக உணர்வார்கள். பிறருக்குத் தெரியாமல் ரகசிய ஆலோசனைக் கூட்டங்கள் கூட்டுவதில் கில்லாடிகள். இவர்களில் சிலர் சங்கேத பாஷையில் பேசுவதும் உண்டு. பிடிவாதக் குணம் இவர்களிடம் அதிகம்.

இவர்களது எண்ணுக்குரிய செவ்வாய் கிரகம், இவர்கள் பிறந்த ஜாதகத்தில் வலுவாக இருந்தால், கம்பீரமான தோற்றத்தோடு இருப்பார்கள். அதாவது தோற்றப்பொலிவில் ஓர் அரசனைப்போன்ற தோரணையிலும், காவல்துறை அதிகாரியைப் போன்று மிடுக்குடனும் இருப்பார்கள். எலும்புறுதி மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குக் கண்கள் சிவந்தே இருக்கும். தொளதொளவென்று உடை அணிய மாட்டார்கள். இறுக்கமான உடையை விரும்பி அணிவார்கள். மூக்கு நுனியில் கோபமிருந்தாலும், இதயத்தில் ஈரமிருக்கும்.

படிக்கும்போது செய்முறைக்கல்வியை விரும்புவார்கள். வகுப்பறையில் எதற்கெடுத்தாலும் நியாயம் பேசுவார்கள். நுண்ணறிவு அதிகமுண்டு. ஆசிரியரைப் பற்றி தலைமை ஆசிரியரிடமே புகார் சொல்லும் துணிவு இருக்கும். வேதியியலில் வித்தகர்களாக விளங்குவார்கள். எலெக்ட்ரிகல்ஸ் சார்ந்த படிப்புகளை அதிகம் விரும்புவார்கள். செயற்கைக்கோள் பற்றிய படிப்பில் சிறிய வயதிலிருந்தே ஆர்வம் காட்டுவார்கள்.

செங்கல் சூளை, ரத்தப் பரிசோதனை நிலையம், ரியல் எஸ்டேட், செக்யூரிட்டி சர்வீஸ், காவல் துறை, ரசாயன தொழிற்சாலை, யாகங்கள், ஹோமங்கள் வளர்த்தல் என்று பல்வேறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
எலி வளையானாலும் தனி வளை வேண்டுமென, தங்களுக்கு தனி வீடு கட்டிக்கொள்வார்கள். தேவைக்கேற்ப சம்பாதிப்பது இவர்கள் குணம். பெற்றோரைப் பிரிந்து வாழ விரும்ப மாட்டார்கள். முன்னோர் புகழ் பாடுவார்கள். உடன் பிறந்தோரின் திருமணத்துக்கு ஊரையே கூட்டுவர். மூக்கில் விரல் வைத்து வியக்குமளவுக்கு திருமணம் முடிப்பர். அரசியலில் ஈடுபாடு உண்டு. நான்கு பேர் திரும்பிப் பார்ப்பதுபோல் ஏதாவது செய்வர்.

இவர்களில் சிலருக்கு அடிக்கடி ஜூரம் வரும். மஞ்சள்காமாலை, மூலநோய் போன்றனவும் வந்து நீங்கும். உடல் உஷ்ணம் சாதாரண அளவைவிட அதிகமாக இருக்கும்.

பொதுவாக ஒன்பதாம் எண்காரர்களான நீங்கள், சற்று போராட்ட குணத்தோடுதான் இருப்பீர்கள். ஒன்பதாம் எண் செவ்வாயைக் குறிப்பதால், அதன் அதிபதியான முருகன் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்குச் செல்ல, எல்லா நற்பலன்களும் கிடைக்கும்.

குறிப்பாக சிக்கல் சிங்காரவேலனைத் தரிசித்து வந்தால் உங்கள் வாழ்க்கை மேலும் சிறந்து விளங்கும். சூரபதுமனை வெல்வதற்காக, முருகப்பெருமான் அன்னை சக்தியின் ஆசிபெற்று அவளிடம் இருந்து சக்திவேல் பெற்ற திருத்தலம் இது. வாழ்வில் ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்குச் சென்று, சிங்காரவேலனைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; அந்த வேலவன் அருளால் உங்கள் சங்கடங்கள் சம்ஹாரம் செய்யப்பட்டு சந்தோஷம் பெருகும்.

அடுத்த இணைப்பிதழில்... 10 முதல் 19-ம் தேதி வரை பிறந்தவர்களுக்கான பலன்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism