Published:Updated:

பிறந்த தேதி பலன்கள்!

பிறந்த தேதி பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பிறந்த தேதி பலன்கள்!

ஜோதிட ரத்னா முனைவர். கே.பி.வித்யாதரன்

பிறந்த தேதி பலன்கள்!

ஜோதிட ரத்னா முனைவர். கே.பி.வித்யாதரன்

Published:Updated:
பிறந்த தேதி பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

ண்களை அடிப்படையாகக்கொண்ட நியூமராலஜி, உலகெங்கும் பெற்றிருக்கும் முக்கியத்துவம் நாமறிந்ததே. பொதுவாக, தேதியின் அடிப்படையில் பலன் சொல்லும்போது, பிறந்த எண் மற்றும் கூட்டு எண்ணைக் கவனத்தில்கொண்டு பலன் சொல்வர். அதாவது, எந்தவொரு தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கான பலன்கள், 1 முதல் 9-ம் எண்ணுக்கு உகந்தவாறு சொல்லப்படும்.

பிறந்த தேதி பலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிறந்த தேதி பலன்கள்!

உதாரணமாகச் சொல்வதானால்... 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்க்கு, சூரியனின் ஆதிக்கத்தைக் கருத்தில்கொண்டு பொதுவான பலனைச் சொல்வது உண்டு. இப்படிச் சூரியனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், 10-ம் தேதியில் உள்ள பூஜ்ஜியத்தின் சூட்சுமத்தையும், 19-ல் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு கிரகங்களின் ஆதிக்கத்தையும் (1-சூரியன்; 9-செவ்வாய்), 28-ம் தேதி எனில் அதில் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களின் (2-சந்திரன்; 8-சனி) ஆதிக்கத்தையும் கவனத்தில்கொண்டு, சொல்லப்படும் பலன் துல்லியமாக இருக்கும். இந்த அடிப்படையில் 1 முதல் 31-ம் தேதி வரை பிறந்தவர்களது குணாதிசயங்களும், அவர்களுக்கு உகந்த கல்வி, தொழில், அவர்கள் சந்திக்கவேண்டிய சவால்கள், அவற்றுக்கான பரிகாரம், வழிபடவேண்டிய தெய்வங்கள் முதலான தகவல்களும் இங்கே தரப்பட்டுள்ளன.

பிறந்த தேதி பலன்கள்!

இந்த இதழில் 10 முதல் 18-ம் தேதி வரை பிறந்தவர்களுக்கான பலன்களை அறிவோம். முன்னதாக, எல்லா எண்காரர்களுக்கும் முழுமுதற் தெய்வமாகத் திகழும் கணபதியை வணங்கிவிட்டு, பலனைப் படிக்கத் துவங்குவோம்.

பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

 உதவும் குணம் உங்களை உயர்த்தும்!

கிக்கும் சூரியனின் ஆதிக்கமான பத்தாம் தேயில் பிறந்த இந்த அன்பர்கள், நீறுபூத்த நெருப்புபோல ஆற்றலை தங்களுக்குள் அடக்கிவைத்திருப்பார்கள்.

ஏட்டறிவுடன் அனுபவ அறிவும் இவர்களுக்கு அதிகம். பிறர் பசியைப் பொறுக்காது அன்னமிடும் இந்த அன்பர்கள், தங்களது பசியை தாமதமாகத் தீர்த்துக்கொள்வார்கள். தாய், தந்தைக்கே பாடம் புகட்டும் புத்திரனாகத் திகழ்வர். வெற்றியை அனுபவித்துக் கொண்டிருக்கும்போதே தோல்வியைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவதுபோல, தாங்கள் எதையும் செய்து முடிக்க முடியவில்லையே என்று வருந்துவார்கள். வாய்ப்புகளைப் பயன்படுத்த தயங்குவார்கள். தமக்கென்று நியாயமாகச் சேர வேண்டியதைக்கூட சகோதர, சகோதரிகளுக்கு விட்டுக்கொடுப்பார்கள். யாராவது சிறிது பாராட்டினால்கூட, நெகிழ்ந்து போவார்கள். சபையில் பேசும்போது பேச்சில் நிதானமும், பேச எத்தனிக்கும்போது `இது தேவைதானா' என்று யோசித்துப் பேசுவதும், இவர்களை நான்கு பேர் மத்தியில் இன்னும் உயர்த்தும்.

பத்தாம் தேதியில் பிறந்த இந்த அன்பர்கள், நல்லவர்களைப்போல பழகும் சில கெட்டவர்களிடம் சில காலம் சிக்கி, பின்பு விஸ்வரூபம் எடுப்பார்கள். இவர்களுக்குப் பொதுவுடைமை சிந்தனை அதிகமாக இருக்கும். கஷ்டம் என்று வந்துவிட்டால், உதவி செய்யாமல் அனுப்பவே மாட்டார்கள். வந்து சொன்னால்தான் என்றில்லாமல் முகத்தின் வாட்டம் பார்த்துவிட்டு உதவி செய்வார்கள்.

இவர்களது கம்பீரமான உருவத்துக்குச் சாந்தமான கண்கள் பொருந்தியிருக்கும். கருவிழி சற்று பழுப்பேறியிருக்கும். எப்போதும் பொறுமையும், நிதானமுமாக இருக்க விரும்புவார்கள். அபாரமான யோசிப்புத்திறன் இருக்கும். ஆனாலும் அதை வெளிப்படுத்த மாட்டார்கள்.வேறொருவர் அதை உபயோகப்படுத்தி விருட்சமாக வளரும் வாய்ப்பு உண்டு.

குடும்பச் சூழ்நிலை, நட்பு வட்டத்தால் படிப்பு தடைபடும். சிலர் கோர்ஸ் மாறிப் படிப்பார்கள். இவர்கள், வானிலை அறிக்கை சொல்லும் மெட்ரோலாஜிக்கல் துறை, மாசுக் கட்டுப்பாடு போன்ற துறைகளைப் பற்றி படிப்பார்கள். அரசியல், உரம் பற்றிய படிப்புகளில் தனி கவனம் இருக்கும். புகைப்படக்கலையில் சிறந்து விளங்குவார்கள். சேல்ஸ் டாக்ஸ் அதிகாரி, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் என்பது போன்ற வேலையில் அமர்வார்கள். மூத்த அதிகாரிகளோடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்களோ, அதேபோல புதிதாக வேலைக்குச் சேருபவர்களோடும் இருப்பார்கள். வியாபாரத்தை இவர்கள் விரும்பினாலும் தங்களின் திட்டப்படியே நடக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதனால் நஷ்டம் வரும். கூட்டு வியாபாரமெனில் உழைப்பு அதிகம் தேவைப்படும்.. இவர்களால் மற்றவர்கள் அதிகம் பயனடைவார்கள்.

மிளகுக் காரம் இவர்களுக்குப் பிடிக்கும். சித்த வைத்தியத்தில் ஈடுபாடு உள்ளவர்கள். மொடக்கத்தான் தோசை, அத்திக்காய் கூட்டு என்று செய்யச் சொல்லி சாப்பிடுவீர்கள். மூலம், பித்தப்பையில் கல், மன இறுக்கம் போன்றவை வந்து நீங்கும். அரசியலில் ஈடுபாடு இருக்கும். சிவனின் பெயர்களைக் கொண்டோர், இவர்களுக்கு உதவுவார்கள். மகான்களின் பெயர் கொண்டவர்கள், இவர்களுக்குச் சாதகமாக இருப்பார்கள்.

இவர்களுக்கு 10, 13, 18, 22, 31 ஆகிய தேதிகள் ராசியானவை. ஆரஞ்சு, சில்வர் க்ரே போன்ற நிறங்கள் சாதகமானவை. தென்கிழக்கு திசை நோக்கி வேலையைத் தொடங்க, வெற்றி பெறுவார்கள். `ஸ்டார்-ரூபி' எனப்படும் சன் ஸ்டோன் ரத்தினத்தை அணிய வாழ்வு இன்னும் ஒளிரும். 

பத்தாம் தேதியில் பிறந்தவர்கள் மகான்களின் புகழ் சொல்லும் கோயில்களுக்குச் சென்று வருவது சிறப்பு. அவ்வகையில், திருவையாறு தலத்துக்கு ஒருமுறையேனும் சென்று வருவது அவசியம்.
திருநாவுக்கரசருக்குக் திருக்கயிலாயக் காட்சி கிடைத்த திருத்தலம் இது. ஸ்ரீஐயாறப்பர் என்பது இறைவனின் திருப்பெயர். அம்பாளின் நாமம் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி. பிரமாண்டமான கோயில். அப்பர் பெருமான் கயிலைக் காட்சி கண்ட இடமும் சிறு கோயிலாக ஐயாறப்பர் ஆலய வளாகத்திலேயே அமைந்துள்ளது. அடியவரையும் ஆண்டவனையும் தரிசித்து வரம்பெற்று வாருங்கள்.

பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

 செயல்வேகம், லட்சிய பயணத்தை எளிதாக்கும்!

ந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்திருந்தாலும் இரட்டைச் சூரியர்களைத் (1+1) தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு தேதியில் பிறந்தவர்கள் இவர்கள். அமுதமான சந்திரனின் உச்சநிலையான வெம்மையைக் குறிக்கும் எண் இது. இந்த தேதியில் பிறந்தவர்கள், நினைத்ததை நினைத்த நேரத்திலேயே செயல்படுத்தத் துடிப்பார்கள்.

இவர்களிடம் எப்போதுமே ஒரு பிடிவாத குணம் உண்டு. சூழ்நிலையால் தவறுகள் செய்யும் வாய்ப்பும் உண்டு. இவர்கள் ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை போன்ற நாள்களில் பிறந்திருந்தால் சந்தேகம், அதீத பயம், தாழ்வு மனப்பான்மை ஆகியன மிகுந்திருக்கும்.

பார்ப்பதற்குக் கரடுமுரடாக இருந்தாலும், பழகிய பின்னரே இவர்கள் பழமென்று தெரியும். பிரயாணங்களில் அதீத ஆர்வம் உள்ளவர்கள். உள்ளுக்குள் எப்போதும் ஒரு மனப் போராட்டம் இருக்கும். ஆனால், அதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகமுள்ளவர்கள். சிறிய வயதிலேயே அதிவேகத்தில் நல்லது கெட்டதை அனுபவித்துவிட்ட தெளிவு இருக்கும். தன்மானம் மிக்கவர்கள்.

அருகில் இருப்பவர்களின், குடும்பத்தைச் சார்ந்தவர்களின் நிறைகளை, திறமைகளை மனதுக்குள்ளேயே பாராட்டி, தவறுகளை மட்டும் அடிக்கடி சுட்டிக்காட்டுவார்கள். தொடர் முயற்சி இல்லாமல், ஒவ்வொரு வெற்றிக்கும் இடையில் இடைவெளியை யும், சந்தோஷத்தை அனுபவிக்கும் சுபாவத்தையும் இவர்கள் கைவிட வேண்டும். இல்லையென்றால், நிரந்தர வெற்றி கைநழுவக்கூடும். எதிரிகளைத் தோற்கடிக்கும் எண்ணம் இவர்களிடம் உண்டு. அப்பா, அம்மாவுக்கு சோறு போடாமல் சமூக சேவை செய்கிறேன் என்று சொல்பவர்களை, இவர்களுக்குப் பிடிக்காது.

உடம்புக்கு ஒரு குறை எனில் தவித்துப்போய்விடுவார்கள். விபரீதமாக கற்பனை செய்துகொள்வார்கள். யார் எந்த விஷயத்தைச் சொன்னாலும், ‘முடித்துவிடலாம்’ என்று ஊக்கம் கொடுத்து உதவுவார்கள். முன்கோபம் அதிகம். ஆனால், உடனே குளிர்ந்து விடுவார்கள். தான தர்மங்கள் செய்வார்கள். எந்த விஷயத்திலும் சட்டென்று நம்பிக்கை வராது.

படிப்பில் இவர்கள் சுமார்தான். ஆனால், சந்திரனின் உச்சபட்ச வலிமையும் இந்த எண்ணில் பிரதிபலிப்பதால் அசாத்திய கவித்திறனுடன், நீடித்து நிற்கும் காவியம் படைப்பார்கள். ஆளுமைத்திறன் மிக அதிகம். இந்தத் தேதியில் பிறந்த பலருக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறக்கும். காரணம், சூரியனும் சந்திரனும் இரட்டிப்பான சக்தியோடு விளங்குவதால்தான். நாற்பது வயதுகளில் சொந்த வீடு அமையும்.

விளம்பரத்துறை, மார்க்கெட்டிங், ஆர்கிடெக்ட், பியூட்டி பார்லர், ஜிம் வைத்து நடத்துதல், அலங்கார விளக்குகள் அமைத்துத் தருதல் போன்ற தொழிலில் சாதிப்பார்கள். வழக்கறிஞராகவும், உளவுத் துறைகளிலும் பணிபுரிவர். உடனடி உணவுவகை எதுவாக இருந்தாலும் இவர்களுக்குப் பிடிக்கும். இவர்களுக்கு வயிற்றுவலி, ஒற்றைத் தலைவலி, சிறுநீரகத் தொற்று, தொண்டைப்புண் போன்ற நோய்கள் வந்து நீங்கும். அரசியலில் மிகுந்த ஆர்வம் உண்டு.

இவர்களுக்கு 4, 6, 9 போன்றவை அதிர்ஷ்ட தேதிகள். நிறங்களில் மயில் நீலமும், புலித்தோல் நிறமும், வெள்ளையும் ஏற்றவை. வடக்கு, தென்மேற்கு திசைகள் ராசியானவை.

இவர்கள், இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ள கோயில்கள் அல்லது உக்கிரத்துடன் அம்பாள் தவம் இயற்றும் கோலத்தோடு உள்ள கோயில்களுக்குச் செல்லும்போது, தடைகள் தகர்ந்து, வெற்றி கிட்டும். அவ்வகையில் இவர்கள் சிதம்பரத்துக்குச் சென்று தில்லைக்காளியை வழிபட்டு வரலாம்.

இவள் தில்லையின் எல்லையில் அமர்ந்திருக்கிறாள். ஈசனோடு நடனப் போட்டியில் ஈடுபட்டு, தோல்வியுற்று, பிறகு எந்நாளும் ஈசனையே நோக்கி உக்கிர தவம் இருக்கிறாள். மிக மிகத் தொன்மையான ஆலயம். தரிசிப்பவர்களின் வேண்டுதல்களை வேகமாக நிறைவேற்றுபவள் இந்த தில்லைக்காளி. எத்தனை சிரமமான காரியங்களாக இருக்கட்டும், இந்தத் தேவியை வழிபட வெற்றி கிடைக்கும்.

பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

 மண்ணையும் பொன்னாக்கும் சாமர்த்தியம் சாதிக்கவைக்கும்!

கு
ருவின் முழு ஆதிக்கத்தில் 12-ம் தேதியில் பிறந்த இந்த அன்பர்கள், ஒன்று என்ற சூரியனின் தகிப்பையும் சந்திரனின் மனோ விவேகத்தையும் சரிபாதியாகக் கலந்த கலவையாகத் திகழ்வார்கள். சத்தியமே ஜெயிக்கும் என்று பூரணமாக நம்புவார்கள். துள்ளி விளையாடும் பாலபருவத்திலும் குடும்பச் சுமை இவர்களைத் தொற்றிக்கொள்ளும். பகைவரையும் தாய்மை உணர்வோடு நோக்குவர்.

தந்தையையே வியக்கவைக்கும் தனயனாகத் திகழ்வர். எத்தனை இக்கட்டான சூழலிலும் கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். செய்நன்றி மறவாதவர். எல்லோரிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துபவர்கள். எல்லோரையும் அனுசரித்து வேலை வாங்குவார்கள்.

ஆடம்பரமில்லாத ஆன்மிகவாதியான இவர்கள், வீரம் பேசும் விவேகானந்தரை விரும்புவார்கள். சிறிய வயது முதற்கொண்டே யாராவது ஒருவரை ரோல்மாடலாக வைத்துக்கொள்வார்கள். அந்தத் துறையில் முன்னேறிய அந்தந்த நாட்டின் மேதைகளை முன்மாதிரியாக நெஞ்சில் நிறுத்துவார்கள். உலகளாவிய அரசியலைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பார்கள்.

சூரியனைக் காட்டிலும் சந்திரபலம் அதிகம் இருப்பதால் இயல்புக்கு மாறான சின்னச் சின்ன ஆசைகள் இவர்கள் மனதில் எழுவதுண்டு.

இந்த தேதியில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தால் பெண்களுக்கேற்ற ஒரு நெகிழ்வுத் தன்மையும், பெண்ணாக இருந்தால் ஆணின் இறுக்கமும் மனதளவில் காணப்படும். வெளியில் சிரித்தபடி இருந்தாலும், இவர்களுக்குள் ஒரு சோகம் இருந்து கொண்டேயிருக்கும். எனினும், எவ்வளவு பேரிழப்பாக இருந்தாலும் பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுந்து வந்துவிடுவார்கள்.

இந்த தேதியில் பிறந்தவர்களில் பல பேருக்கு, படிப்பென்றால் பாகற்காயாகக் கசக்கும். எனினும் ஒருவழியாக படிப்பை முடித்துக் கரையேறிவிடுவார்கள்.

கலையார்வம் மிகுந்தவர்கள், இந்த அன்பர்கள். தங்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை எல்லோருக்கும் உணர்த்துவார்கள். ஆடம்பரம் இல்லாத, எல்லாம் இருந்தும் எளிமையான வாழ்க்கை வாழ்வார்கள். பெற்றோர்களை கைமேல் வைத்துத் தாங்குவார்கள்.

மியூசிக் ஆர்கெஸ்ட்ரா, கன்சல்டன்ஸி, மெடிக்கல் ஷாப் மற்றும் கெமிக்கல் வகைகளாலும் ஆதாயம் ஈட்டுவார்கள். மண்ணையும் பொன்னாக்கி விற்றுவிடும் சாமர்த்தியம் இவர்களிடத்தில் உண்டு.  இவர்களுக்கு துவர்ப்பு அதிகமுள்ள சூப் வகைகள் பிடிக்கும். மசாலா தூவிய நூடுல்ஸ், மாவடு தயிர்சாதம் பிடிக்கும்.

அவ்வப்போது வெளியில் சாப்பிட்டாலும், சுயமாகச் சமைத்துச் சாப்பிடுவதை அதிகம் விரும்புவார்கள். இவர்களுக்கு வீசிங், ஜலதோஷம், செரிமானத்தில் தொந்தரவு, மஞ்சள்காமாலை, ரத்தம் கெடுதல், இரும்புச் சத்து குறைவு, ஹீமோகுளோபின் குறைபாடு ஆகியவை வந்து நீங்கும்.

இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்கு அரசியலில் அதீத ஆர்வம் இருக்கும். இவர்கள், அரசியலில் ஈடுபட்டால், கிங் மேக்கராக விளங்குவார்கள்.

3, 6, 7, 2 ஆகிய தேதிகள் இந்த அன்பர்களுக்கு மிக ராசியானவையாக அமையும். அதேபோல் வெள்ளை, பொன் நிறம், பசுமை கலந்த மஞ்சள் ஆகிய வண்ணங்கள் ஏற்புடையதாக இருக்கும்.  எப்போதும் வடமேற்கு திசையை நோக்கி வணங்கி, புதிய காரியங்களைத் தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.

12 என்ற தேதி சூரியனையும், சந்திரனையும் ஒருசேர இணைக்கும் எண்ணாகும். ஆகவே, இந்தத் தேதியில் பிறந்த அன்பர்கள், சிவபெருமானும் பராசக்தியும் இணைந்த திருக்கோலமான அர்த்தநாரீஸ்வர திருவடிவையும், இந்தக் கோலத்தில் ஸ்வாமி அருள்பாலிக்கும் தலத்துக்குச் சென்றும் வழிபடுவது சிறப்பு. இரு சக்திகளும் இணைந்த உயர்ந்த நிலை இவர்களுக்குள் ஒரு மாற்றத்தை உண்டாக்கும். ஆகவே, இந்த அன்பர்கள் தரிசித்து வழிபடவேண்டிய திருத்தலம் திருச்செங்கோடு.

இந்தத் திருத்தலத்தில் ஈசனும் உமையும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக அருட்கோலம் காட்டுகிறார்கள். 12-ம் தேதியன்று பிறந்தவர்கள், வாழ்வில் ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்குச் சென்று அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள். அதன்பிறகு, உங்களது வாழ்வில் பிரச்னைகள் யாவும் நீங்கி, உள்ளத்தில் புதுத் தெளிவு உண்டாகும்.

பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

 மாறுபட்டக் கோணமும் சிந்தனையும் மாற்றம் தரும்.

முழுமையான ராகுவின் எண் ஆதிக்கம் நிறைந்த 13-ம் தேதியில் பிறந்த அன்பர்களிடம், அரசியல் கிரகமான சூரியனின் யதார்த்தமும், ஆன்மிக கிரகமான குருவின் பழைமையும் ஒருசேரக் கலந்திருக்கும். ஆகவே, புரட்சிகர சிந்தனைகளோடு திகழ்வார்கள்.

எனினும், அதிதீவிரமான தருணங்களைத் தவிர, மற்ற நேரங்களில் மிகச் சாதாரணமாகத் திகழ்வார்கள். சிற்சில விஷயங்களில் எதிர்ப்புக் கருத்துகள் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.எத்தனைப் பெரிய பதவி வகித்தாலும் அதற்குரிய பந்தா இவர்களிடம் துளியும் இருக்காது. வேறு யாரும் யோசிக்காத கோணங்களில் இவர்கள் யோசித்து செயல்படுவார்கள். இந்த எண்காரர்களுக்கு, டீன் ஏஜ் தொடங்கும்போதே வாழ்வில் சூறாவளி வீசத் தொடங்கிவிடும். டீன் ஏஜ் முடியும் முன்பே இவர்களில் பலர் அனைத்து போகங்களையும் அனுபவித்துவிடுவார்கள். அதேநேரம், இருபது வயதுக்குள்ளேயே வாழ்வின் மோசமான பக்கங்களையும் பார்த்து விடுவார்கள். யாருமே அணுகுவதற்கு அஞ்சும் நபரிடம் நின்று நேருக்கு நேர் சவால் விடுவார்கள். இவர்களைச் சிறிது பாராட்டினால்கூட போதும், மகத்தான காரியங்களை ஆற்றுவார்கள். எதைச் செய்தாலும் ரகசியமாகச் செய்வார்கள். எல்லோரிடமும் எல்லா விஷயத்தையும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இவர்கள் தோற்றத்துக்கும் வகிக்கும் பதவிக்கும் சம்பந்தமே இருக்காது. தனிமை மிகவும் பிடிக்கும். கல்வியில் நாட்டம் உண்டு. வகுப்பறையில் இவர்கள்போல குறுக்குக் கேள்விகள் கேட்பவர் எவருமில்லை. அசாத்திய நினைவுத்திறன் இருக்கும். எல்லாமே தனித்த சாதனையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எதிலும் ஒரு வேகம் இருக்கும்.

மனைவி மீது பாசம் வைத்திருப்பர். அவருக்கு, அவ்வப்போது வித்தியாசமான பரிசுகளைக் கொடுத்து அசத்துவர். ஆனால், திருமண நாளை ஏனோ மறந்துவிடுவர். பிள்ளைகளுக்குப் பிடித்த துறையில் அவர்களை ஈடுபடுத்துவர். சொந்தவீடு வேண்டுமென்று ஆசை இருந்தாலும், அதற்காக வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி பணம் சேர்க்க வேண்டுமா என்றும் யோசிப்பார்கள். எப்போதும் பெற்றோரைச் சார்ந்து வாழ மாட்டார்கள். பாட்டன், பாட்டியின் அரவணைப்பில்தான் அதிகம் வளர்வர். 

கலைத்துறையில் அபாரமாக சாதிப்பார்கள். நல்ல கேமராமேனாக வருவார்கள். பத்திரிகைத் துறையில் தனி முத்திரை பதிப்பர். துரித உணவு ஹோட்டல், பார், வெளிநாடுகளிலிருந்து வரும் இரும்புக் கழிவுகள் விற்பனை, ஹார்டுவேர் சாமான்கள், அதிரடி தள்ளுபடி விற்பனை செய்துவரும் ஷோரூம் வைத்தல், பியூட்டி பார்லர், ஜிம் என்று வியாபாரத்தை நடத்துவார்கள்.

அலுவலகத்தில் ஜாலியாக இருப்பர். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன் என்ற கொள்கை உடையவர்கள். தந்தூரி, சைனீஸ், ஐஸ்க்ரீம், புளிப்புச் சுவை அதிகமுள்ள கூழ் குடிப்பார்கள். மக்காச்சோளம், பாப்கார்ன் போன்றவற்றை விரும்பி உண்பர். ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று இருந்தாலும், திடீரென அரசியலில் குதிப்பார்கள்.

இவர்களுக்கு வயிற்று வலி, கைகள் நடுக்கம், முடி உதிர்தல், மஞ்சள் காமாலை, எலும்புத் தேய்மானம் போன்ற நோய்கள் வந்து நீங்கும். பொதுவாக 1, 10, 19, 28, 3, 12, 21, 30 ஆகிய தேதிகள் ராசியாக இருக்கும். கறுப்பு, வெளீர் மற்றும் சாம்பல் நிறங்கள் இவர்களுக்கு உகந்தவை. `டைகர்ஸ் ஐ' எனப்படும் ரத்தினம் அணிந்தால் வாழ்வில் ஒளி கூடும். கிழக்கு திசை வெற்றி தரும்.

இவர்களுக்கு அற்புதச் சக்தி அளிக்கும் தலம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில். பிரம்மனின் ஐந்தாவது தலையை அறுத்ததால் ஈசனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை, இந்தத் தலத்தில் அம்பிகை நசுக்கி அழித்ததாக ஸ்தலபுராணம் சொல்கிறது. மேலும், இந்தப் பகுதி மீனவர்களுக்குக் குலதெய்வமாகவும் திகழ்கிறாள் அங்காள பரமேஸ்வரி.

சென்னை - திண்டிவனம் மார்க்கத்தில் செஞ்சிக்குப் பிரியும் சாலையில், சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தலத்துக்குச் சென்று அம்பிகையை வணங்கி வாருங்கள்; சகல வரங்களும் கிடைக்கும்.

பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

 கனிவானப் பேச்சும் செயலும் உங்களை சாதிக்கவைக்கும்!

வீரியம் மிக்க சூரியனை, ஜோதிடத்தில் ராகு எனும் நிழல் கிரகம் அடக்கி ஆள்வதை இந்த 14-ம் எண் குறிக்கிறது. ஆனாலும், புதன் எனும் கிரகத்தின் புத்திக்கூர்மையால் எதையும் பொடிப்பொடியாக்கி முன்னேறும் 14-ம் தேதியில் பிறந்தவர்கள், அசைக்க முடியாத இமயமாக உறுதியோடு இருப்பார்கள்.

இவர்கள் பெரும்பாலும் அமைதியான தோற்றத்தோடு இருப்பார்கள். இவர்களின் மனதை படித்தறிவது கடினம். வேலை என்று வந்துவிட்டால் இவர்கள்போல் ஆளுமை செலுத்த வேறு யாராலும் முடியாது. கல் மனசுக்காரர்களையும் கனிவான பேச்சால் கரைத்து விடுவார்கள். காசு, பணம் பண்ணுவது ஒரு காலகட்டம் வரை கடினமாகத் தெரியும் பிற்காலத்தில் புதியதாக ஏதேனும் ஒரு விஷயத்தில் உலகமே பாராட்டும் வகையில் பெரும் பணமும், புகழும் அடைவார்கள். எல்லை தாண்டி நடப்பவரிடம் கடுமையாக கோபம் கொள்வார்கள். சிறு வயதிலிருந்தே, எந்த கோர்ஸ் படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்ற தொலைநோக்கு உண்டு. இந்த தேதியில் பிறந்தவர்களில் ஆய்வாளர்கள், கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணிபுரிவோர் அதிகம். பள்ளிக்காலத்தில் டபுள் ப்ரமோஷன் என்று பாஸ் செய்பவர்களும் உண்டு.

வேலைப்பார்க்கும் நிறுவனத்தில் இக்கட்டான காலங்களில் இவர்களின் முடிவுகளை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருப்பார்கள். மிகச் சிறந்த நிர்வாகிகளான இவர்கள், தொழிலாளரோடு சாப்பிட்டு, டீ குடித்து என்று சமர்த்தாக வேலை வாங்குவார்கள். மனைவியைத் தோழியாக பாவிப்பார்கள். குழந்தைகளோடு குழந்தையாகி விடுவார்கள். அவர்கள் கொஞ்சம் வளர்ந்தவுடன் கண்டிப்பாக இருப்பார்கள்.

இந்த அன்பர்களுக்கு, 41 வயதுக்குப் பிறகுதான் செல்வ நிலையில் தன்னிறைவு காண இயலும். இடம் வாங்கிப் போட்டாலும் தாமதமாகத்தான் வீடு கட்டுவார்கள். உடன் பிறந்தோரை அரவணைத்துச் செல்வார்கள். கன்சல்டிங், மார்க்கெட்டிங், நிர்வாக இயக்குநருக்கு அடுத்த பதவி, பேப்பர் தொழிற்சாலை, கரும்பு ஆலை, பணப் பரிமாற்ற வங்கிகள், டிராவல்ஸ், ட்ரெய்னிங் சென்டர் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றுவார்கள். மேல் அதிகாரிகளுக்குத் தெரியாமல் கீழே வேலைசெய்யும் பணியாளர்களுக்கு உதவுவார்கள். தன்னைப் பற்றிய இமேஜை மேலதிகாரியிடம் வளர்த்து வைத்திருப்பார்கள்.

தயிர் வடை, நெய் முறுக்கு, சீடை, அவல் உப்புமா போன்றவை பிடிக்கும். பொதுவாக வயிற்றுக் கடுப்பு, உடற்பருமன் அதிகமாகி மூச்சு வாங்குதல், தூக்கமில்லாமல் தவிப்பது போன்ற அவஸ்தைகள் வந்து நீங்கும். அரசியல் ஆர்வம் அதிகம் இருந்தாலும், களத்தில் குதிக்கத் தயங்குவார்கள்.

இவர்களுக்கு ராசியான தேதிகள் 1, 10, 19, 6, 24. வெளிர் நீலம், சாம்பல், கருஞ்சிவப்பு போன்றவை ஏற்ற நிறங்கள். `டர்க்காய்ஸ்' எனும் ரத்தினம் அணிந்தால், இவர்களது வாழ்வில் ஒளி கூடும். வடகிழக்கு வெற்றி தரும்.

14 - சூரியனும் ராகுவும் இணைந்த சட்ட நிபுணத்துவத்தைக் குறிக்கும் எண். எதையும் நியாயமாகப் பெற வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும். ஆழ யோசித்து ஆலோசனைகள் கூறி, மற்றவர்களைச் சிரமப்படுத்தாது அவர்கள் மனம் புரிந்து வேலை வாங்குவதில் கெட்டிக்காரர்கள் இவர்கள். அதேநேரம் இவர்களுக்குள் ஏற்படும் மன அயற்சியும், மன அழுத்தமும் இவர்களைத் தனிமைப்படுத்தும். பகவான் கிருஷ்ணரை வழிபடும்போது தங்களுக்குள் மிகப்பெரிய தெளிவும், திடமும் பிறக்கும். ஆகவே, திருக்கண்ணங்குடி சென்று வழிபட்டு வாருங்கள்.

இந்தத் தலம் கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்று.

பல மகரிஷிகள் கிருஷ்ணனைக் காண வேண்டும் என்று தவமிருந்த தலம். மூலவர் ஸ்ரீலோகநாதர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

தாயார்  ஸ்ரீலோகநாயகி. கிழக்கு நோக்கிய திருமுக மண்டபம். ஸ்ரீதாமோதர நாராயணன், ஸ்ரீஅரவிந்த நாயகி எனும் திருப்பெயர்களோடு உற்சவ மூர்த்திகள் காட்சியளிக்கின்றனர்.

இந்தத் தலம் நாகப்பட்டினம்- திருவாரூர் சாலையில், ஆழியூர் பள்ளிவாசல் என்ற இடத்திலிருந்து தெற்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது.

பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

 திறமையை நம்புங்கள் வெற்றி நிச்சயம்!

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்களிடம், ஒருவித வசீகரம் உண்டு. ஒன்றாம் எண்ணான சூரியனின் சூடும், ஐந்து என்கிற புதனின் சுகமும் ஒருசேரக் கலந்திருக்கும். எதிரியைக்கூட பெருந்தன்மையாக ஓரிரு வார்த்தைகளில் திட்டிவிட்டு, அலட்சியப் புன்னகையில் தவிர்ப்பார்கள். இவர்கள் வெளிப்படையாகப் பேசுவது போல மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால், இவர்களுக்குள் சிலவற்றை ஒளித்துவைத்திருப்பார்கள்.

வாழ்வின் கடைத்தட்டு மக்களைப் பற்றியே கவலைப்படும் அன்பர்கள் இவர்கள். வாழ்வின் தொடக்கத்தில் பல அரிய பெரிய வாய்ப்புகள் கதவைத் தட்டும் போதெல்லாம் குடும்பச் சுமையாலோ, ஏதோ ஒரு காரணத்தாலோ இவர்கள் அழுத்தப்படுவார்கள். உள்ளத்தின் குதூகலம் வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்வார்கள். இயற்கையின் அழகைக்கண்டு தம்மை இழப்பார்கள். அதனாலேயே அடர்ந்த மரங்கள், ஆடை, ஆபரணங்களின் மீது இவர்களுக்கு அலாதி பிரியம் உண்டு. குடும்பத்தினர் சிரமப்படும்போதெல்லாம் தனது சுகங்களைத் தியாகம் செய்வார்கள். தன்னிடம் இருக்கும் திறமைகளைக் குறைத்து எடை போடுவார்கள். அதனால், பலர் கம்பீரக் குறைவாகவும், தன்னைவிட உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாது பவ்யமாகவும் நடந்துகொள்வார்கள். தங்களுக்குள் இருக்கும் அசாத்திய திறமையை இவர்கள் நம்பினால் வெற்றியைத் தவிர இவர்கள் வாழ்வில் வேறெதுவும் இல்லை.

புத ஆதித்ய யோகம் எனும் ஒரு யோகத்தை இந்த 15-ம் தேதி உணர்த்துகிறது. இவர்கள், 40 வயதில் வளர்ச்சி காண்பார்கள். அதிகாரப் பதவியில் அமர்வார்கள். அவ்வப்போது சிறுகதை, நாவல் எழுதி நட்பு வட்டத்தை அதிசயக்க வைப்பார்கள். இவர்களில் பலருக்கு உயர் அதிகாரிகள் செய்யும் தவறுகள் தெரிந்திருந்தும் `நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கிவிடுவார்கள். சுற்றியிருப்போரில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று யூகித்து உணர இவர்களால் முடியாது. 

நிர்வாகத்திறன் இருந்தாலும் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் சரியானதுதானா என்று சரிபார்த்துச் சொல்லுவதற்கு ஒரு நபரை எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்கு எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே பாட்டு வரும். மனைவி வந்த பிறகுதான் சமூகத்தில் தனக்கு மரியாதை கூடியிருப்பதாக நினைப்பார்கள். அதனாலேயே மனைவியின்மீது இவர்களுக்கு மரியாதை உண்டு. இன்டீரியர் டெக்கரேஷன், அந்தரங்க காரியதரிசி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட், அனிமேஷன், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், பத்திரிகைத் துறை, மார்க்கெட்டிங், புள்ளியியல் சார்ந்த துறைகளில் இவர்களது வாழ்க்கை அமையும்.

பாராட்டை எதிர்பார்ப்பதில் கூச்சம் உண்டு. பந்தியில் அடக்கி வாசிக்கும் இவர்கள், தனிமையில் அமர்ந்து ரசித்து, ருசித்து உண்பார்கள். முடி உதிர்தல், உடம்பு வெக்கை சூடு, நெஞ்சு எரிச்சல், ஹிரண்யா, டான்சில் போன்ற நோய்கள் வந்து நீங்கும். அரசியலில் எல்லோரையும் வளர்த்துவிடுவார்கள். நேர்மையிலிருந்து பிறழ மாட்டார்கள்.

இவர்களுக்கு 4, 31, 22, 8, 17 போன்ற தேதிகள் ராசியானவை.பிஸ்தா பச்சை, மயில் நீல நிறங்கள் இவர்களுக்கு ஏற்றது. வடகிழக்கு, மேற்கு திசைகள் வெற்றி தரும். பெரிடாட் எனும் ரத்தினம் அணிய, வாழ்வில் வெளிச்சம் பரவும். இவர்கள் தரிசித்து வழிபடவேண்டிய திருத்தலம் குற்றாலம்.

பரமேஸ்வரன் - பார்வதி திருமணத்தைக் காண மூவுலகத்திலுள்ளவர்களும் கயிலாயத்தில் கூடினர். அதனால், வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகைச் சமன்படுத்துவதற்காக, அகத்தியரை தென்திசை சென்று பொதிகை மலை மீது அமருமாறு பணித்தார் இறைவன். அப்படிச் சென்றால், இறைவனின் திருக்கல்யாணத்தைத் தாம் காண முடியாதே என வருந்தினார் அகத்தியர்.

அவருக்கு, திரிகூடமலையின் சிறப்பைக் கூறிய இறைவன், அங்கு சென்று தம்மை வழிபட்டால், தமது மணக்கோலத்தையும், திருநடனத்தையும் காணலாம் என்றும் அருள்பாலித்தார். அதன்படியே வந்து அகத்தியர் வழிபட்ட தலம் இது. குற்றாலம் சென்று வழிபட்டுவர, குற்றாலநாதரின் அருட்சாரலும், அருவிகளின் குளிர்சாரலும் இவர்களை உயர்த்தும்.

பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

 அனுபவமும் ஆளுமையும் உயர்வைத் தரும்.

 ஆத்மகாரகன் என்றழைக்கப்படும் சூரியனுக்கு உரிய ஒன்றின் ஆற்றலும், சுக்கிரனின் சுகபோகமும் இணைந்திருக்கும் அமைப்பில் பிறந்த இந்த அன்பர்களிடம், 7 எனும் எண்ணுக்கு (1+6) உரிய கேதுவின் ஆதிக்கமும் உண்டு. இது இல்லறத்தோடு ஒட்டிய ஞானத்தைக் குறிக்கும் அம்சமாகும்.

இந்த அன்பர்கள், எதையும் அனுபவத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். பாகுபாடு பார்க்காமல் எல்லோருடனும் பேசும் பழக்கமுடையவர்கள். மனிதர்களை எப்படி அணுகுவது, நான்கு பேரிடம் எப்படிப் பழகுவது என்ற விஷயங்களில் இவர்களுக்கு இணை எவருமில்லை. ஏமாற்றாதே, ஏமாறாதே என்பதுதான் இவர்களின் தாரக மந்திரம். அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். அநாவசியமாகவும் வாரி வழங்க மாட்டார்கள். இவர்கள் தொடாத துறையே இல்லை எனலாம். எதைச் சொன்னாலும் அதைப் பற்றி அரை மணி நேரம் பேசுவார்கள். அவ்வப்போதைய ‘ட்ரெண்டை’ மனதில் வைத்துக் காரியமாற்றுவார்கள். அவ்வளவு எளிதில் எவரிடமும் சரணடைய மாட்டார்கள்.  தன்னைச் சுற்றி நிகழும் அனைத்து சம்பவங்களிலும் தானும் இடம்பிடிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களின் அந்தரங்கங்களை அறிந்துகொள்வதில் அலாதி ஆர்வம் காட்டுவார்கள். எப்போதும் மற்றோரைக் கவரும் வண்ணம் உடை உடுத்துவார்கள். அடுத்தவர்கள் தன்னிடம் ஆலோசனை கேட்கத் தயங்கினாலும் இவர்களே முன் சென்று பேசி, பிறரின் வருத்தங்களைக் கேட்டறிந்து தீர்வு சொல்வார்கள். அதேநேரம் தனக்கென்று ஒரு பிரச்னை வரும்போது செய்வதறியாது திகைப்பார்கள்.

தன்னை எளிமையானவராகக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் பெரிய கௌரவத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சூரியனும் சுக்கிரனும் இணைந்து இருப்பதால் பெரிய மனிதர்களுக்குரிய ஈர்ப்புத் தன்மை இருக்கும். சுக்கிரன் ஆதிக்கம் இருப்பதால் ஏதேனும் ஒரு கலையைத் தெரிந்துவைத்திருப்பார்கள்.

மத்திம வயதில், ஆர்வமான துறையில் படித்து பட்டம் பெறுவார்கள். நிர்வாகத் திறன் இருந்தாலும் எதிலும் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பார்கள். மனைவி மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள். கூட்டுக் குடும்பமாக இருப்பதை விரும்புவார்கள். இவர்களுடைய பிள்ளைகள் இவர்களிடம் இருந்து வித்தியாசப்படுவார்கள். இவர்களது 36-வது வயதில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.

சம்பளம் தடையில்லாமல் கிடைக்கும் இடமாகப் பார்த்து வேலையில் அமர்வார்கள். வேலை விஷயத்தில் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். தங்களது மத்திம வயதுகளில் சுயமாக முதலீடு செய்வார்கள். அரசுத்துறையில் வேலை வாய்ப்பு, மெடிக்கல், உரம், மூலிகைப் பயிர்கள், பெட்ரோ கெமிக்கல், புத்தகக் கடை, சினிமா, நவீன நகரம் அமைத்தல் மற்றும் சிறந்த ஒப்பனையாளராக விளங்குவார்கள். புவியியல் ஆராய்ச்சிகள் செய்து பட்டம் பெறுவார்கள். சிறுநீரக அழற்சி, மனச்சோர்வு, அடிக்கடி தலைவலி ஆகிய அவஸ்தைகள் வந்து நீங்கும். அரசியலில் ஆர்வம் இருக்கும். ஆனால், விமர்சனத்தை தாங்க மாட்டார்கள்.

1, 10, 19, 9, 18, 27 ஆகிய தேதிகள் இவர்களுக்கு ராசியானவை. மெரூன், மஞ்சள், கருஞ்சிவப்பு ஆகியவை இவர்களுக்கு ஏற்ற நிறங்களாகும். தென்கிழக்கு திசை வெற்றி தரும். இந்தத் தேதியில் பிறந்தவர்கள், வழிபடவேண்டிய தலம் திருவெண்ணெய்நல்லூர்.சிவபெருமான், அழகும் இளமையும் நிரம்பிய சுந்தரரை ஆட்கொண்டு பூரண ஞானவானாக்கிய சம்பவம் நிகழ்ந்த தலம் இது. ஈசன் தடுத்தாட்கொண்ட நாதர் எனும் கிருபாபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம் வேற்கண்மங்கை - மங்களாம்பிகை. விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது.

இத்தலத்துக்குச் செல்லும்போதே, அதன் மாகாத்மியம் இவர்களுக்குள் ஒரு சிலிர்ப்பான மாற்றத்தைக் கொண்டு வருகிறது. மனதில் குதூகலம் பிறக்கும். அதே நேரம் இவர்களிடம் மறைந்திருக்கும் கேது என்ற ஞானப்பெட்டகமும் வெளிப்படும். சுந்தரருக்கும் நிகழ்ந்தது இதுதான். ஏனெனில், இவர்கள் பிறந்த தேதியின் ஆற்றலை முழுமையாகத் திறக்கச் செய்யும் திறவுகோலாகத் திகழ்வது இந்த ஆலயம். ஆகவே, திருவெண்ணெய்நல்லூர் ஈசனை தரிசியுங்கள். வாழ்வு விண்ணுயர வளரும்.

பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

 கொண்ட கொள்கை, உங்களைத் தலைவனாக்கும்!

சூரியனுக்குரிய `1' மற்றும் கேதுவைக் குறிக்கும் `7' ஆகிய எண்களின் இணைவைக் குறிக்கும் 17-ம் தேதியில் பிறந்தவர்கள் இந்த அன்பர்கள். சூரியனையே துரத்தி மறைக்கும் நிழல் கிரகமான கேதுவால் செவ்வாய் கிரகத்தின் எதிர்மறையைக் கொடுக்கும் தன்மையில் பிறந்தவர்கள். இதுவொரு கிரகண நிகழ்ச்சியைக் குறிக்கும் எண். ஆனாலும், சனியின் முழு ஆளுமை அந்த எண்ணில் வெளிப்படும். செவ்வாய் எதிர்மறையாக இருப்பினும் சனியின் உச்சகட்ட வலிமையை வெளிப்படுத்தும் எண். ஆகவே மறைந்திருக்கும் விஷயங்களையும், ஒதுக்கி வைக்கப்பட்ட நபர்களையும் வெளிக்கொண்டு வருவார்கள். எனினும், தங்கள் திறமையை தாமே அறியாது வெகுகாலம் முடங்கிக்கிடந்து, பிறகு சட்டென வெளிப்படுவார்கள்.

அழியும் நிலையிலுள்ள பழைமையான விஷயங்களைக் கண்டுபிடித்து, உலகின் கவனத்துக்குக் கொண்டுவருவார்கள். எந்தக் காரியத்தில் இறங்கினாலும் ஒருமுறைக்கு ஆயிரம் முறை யோசிப்பார்கள். பாரபட்சமின்றி எல்லோரையும் பாராட்டும் குணம் எப்போதும் இவர்களிடம் உண்டு. தனது கருத்துகளைக் கேட்பதற்கும், ஆமோதிப்பதற்கும் என்றே ஒரு கூட்டத்தை உருவாக்குவார்கள். தனக்கென கொள்கைகளையும் உருவாக்கிக் கொள்வார்கள்.

இளமைக்கால வாழ்க்கையில் சோகங்களும் துரோகங்களும் இவர்களைத் தாக்கினாலும், அதிலிருந்து மீண்டு, புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். பாதை மாறிச் சென்று பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதை புறம் தள்ளிவிட்டு, இவர்கள் நேர் வழியில் செல்ல வேண்டும்.

எந்தச் சூழலிலும் தோற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பர். தமக்குப் பணிவிடை செய்பவர்களை முன்னுக்குக்கொண்டு வருவார்கள்.

சிறிய வயதில் பள்ளிப்படிப்பு தடைப்பட்டு தேறி வருவார்கள். ஆனால், கல்லூரிக் காலங்களில் சிறப்பாகப் படிப்பார்கள். வரலாற்றுப் பாடத்தில் ஆர்வம் உண்டு. எனினும், இவர்களது நிர்வாகத் திறன் `தும்பை விட்டு வாலைப் பிடிப்பது' போன்றிருக்கும்.

குடும்பப் பாசம் உண்டு. மனைவி, பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வைத்துக்கொண்டு, எதிர்பாராத நேரத்தில் கொடுத்து அசத்துவார்கள். இவர்களில் சிலருக்கு மத்திம வயதில் சொந்த வீடு அமையும். பெற்றோர் இருக்கும்போது அவர்கள் அருமை இவர்களில் சிலருக்குத் தெரியாது. அதற்குப் பிறகு ஏக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தோரை கொஞ்சம் தள்ளியே வைத்திருப்பர்.

`காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்பதைப்போல சீசன் பிசினஸ் செய்வார்கள். ஸ்டார் ஹோட்டல், டிராவல் ஏஜென்ஸி, புத்தகக் கடை, கார்கோ, லாஜிஸ்டிக்ஸ் தொழில், மீன் பிடித்தல், மூலிகைப் பொருள்கள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், ஊறுகாய் ஏற்றுமதி என்று வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பர்.

உணவு விஷயத்தில் தேடிப் பிடித்து சாப்பிடுவார்கள். காரம், மசாலா அதிகம் உள்ள உணவுப் பொருள்களை ஒருகை பார்ப்பார்கள். இவர்களுக்கு உரிய ராசியான தேதிகள் 2, 11, 6, 24, 17, 8. மஞ்சள், ஊதா, கருஞ்சிவப்பு ஆகியவை இவர்களுக்கு ஏற்ற நிறங்களாகும். `அகுவாமரைன்' என்ற வெளிர்நீல நிறத்தில் திகழும் ரத்தினத்தை அணியலாம். தென்மேற்கு திசை நோக்கி செயல் தொடங்கினால், வெற்றிக் கனியை வெகு விரைவில் பறிக்கலாம்.

இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் வராஹமூர்த்தி. சென்னை -மாமல்லபுரம் பாதையில் கோவளத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது திருவிடந்தை.

17-ம் தேதியில் பிறந்த அன்பர்கள், ஒருமுறை திருவிடந்தைக்குச் சென்று வராஹமூர்த்தியைத் தரிசித்து, வழிபட்டு வந்தால் அனைத்து காரியங்களும் ஸித்திக்கும்.

அதேபோல், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கள்ளிடைக்குறிச்சி. இங்கு அருள்மிகு லட்சுமி வராஹர் கோயில் கொண்டிருக்கிறார். குபேரன் வழிபட்டு அருள்பெற்ற இந்தத் தலத்துக்குச் சென்று வராஹமூர்த்தியைத் தரிசித்து வர, உங்கள் வாழ்வு செல்வ போகத்தால் சிறக்கும்.

பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

 நிதானமும் தியாகமுமே உங்களுக்குப் பலமாகும்.

பிதுர்காரகனான சூரியனை, ஊழ்வினைக் கோளான சனி ஆக்கிரமிக்க, அதனின்று வெளியேறும் எதிர்மறைச் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இவர்கள். எதிரெதிர் துருவங்களான `1'-க்கு உரிய சூரியனும், `8'-க்கு உரிய சனியும் இணையும் எண் ஆதலால், இவர்களிடத்தில் முரண்பாடுகளுக்குப் பஞ்சமிருக்காது. எனினும், எல்லோரையும் எப்போதும் எல்லா விஷயங்களிலும் திருப்திப்படுத்த வேண்டும், மற்றவர்கள் மனம் கோணக் கூடாது என்று நினைப்பார்கள்.

18-ம் தேதியில் பிறந்த இவர்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று எல்லோரையும் நம்புவார்கள். தன்னகத்தே திறமைகள் மலைபோல் குவிந்திருந்தாலும், இலைமறைகாயாக இவர்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் கொஞ்சம் தடுமாறுவார்கள். கீழ் மட்டத்திலுள்ள தொழிலாளர்களை முன்னுக்குக் கொண்டு வருவார்கள்.

வருங்காலத்தைப் பற்றிய அச்சம் உள்ளுக்குள் எப்போதும் இருக்கும். மேலும் இடம், பொருள், ஏவல் தெரியாது பேசிவிட்டு வருத்தப்படுவார்கள். இவர்கள் தங்களுக்கு ஒரு நிதானத்தைக் கைக்கொண்டால், எல்லாவற்றிலும் வெற்றி பெறலாம்.

இவர்களில் சிலர், ராஜதந்திரியாகவும் விளங்குவார்கள். தன்னைப் பயன்படுத்திக்கொண்டு கிள்ளுக்கீரையாக உதாசீனப்படுத்தி தூக்கி எறிபவர்களுக்கும், துணை நிற்கும் தன்மையாளர்கள் இவர்கள். அழுது புலம்பிக் கேட்டால், அண்ணன் தம்பிக்காக பூர்வீகச் சொத்தையும் விட்டுக்கொடுப்பார்கள்.

பள்ளிப் படிப்பில் தொடக்கத்தில் தட்டுத்தடுமாறினாலும், கல்லூரிக் காலத்தில் எந்தப் படிப்புக்கு அதிக மவுசு இருக்கிறதோ அதில் ஆழமாக, ஈடுபட்டு தேறிவிடுவார்கள். வணிகவியல், கணக்குப்பதிவியல், எம்.பி.ஏ. போன்ற துறைகளில் சேர்ந்து படிப்பார்கள். வரலாற்று ஆசிரியர்களோடு நெருக்கமாக இருப்பார்கள். மின்சார சாதனங்கள் பழுதானால் அக்குவேறு, ஆணி வேறாகப் பிரித்து ஆராய்வது, சிறிய வயதிலேயே இவர்களுக்கு கைவந்துவிடும். அந்த அளவுக்கு மின்சாரம், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களைப் பற்றிய நுண்ணறிவு உண்டு.
 
எதற்கும் பரிதாபப்படும் குணம் இவர்களிடம் இருப்பதால், நிர்வாகத்திறன் குறைவுதான். மனைவியை அவ்வப்போது ஏதேனும் சொல்லிக் கொண்டிருந்தாலும், ‘‘அவள் இல்லையெனில் என் வாழ்க்கை சூன்யம்தான்’’ என்று உணர்ச்சிகரமாகப் பேசுவார்கள். சிறு வயதில் இவர்களை யும், இவர்கள் தந்தையையும் காலமும், சூழலும் சேரவிடாமல் தடுக்கும். பல சமயங்களில் கருத்து மோதல்களும், வாக்குவாதமும் தலைதூக்கும்.
 
ஆரம்பக்கட்டத்தில் இவர்கள் துறைக்கு ஒத்துவராத நிறுவனத்தில் வேலை பார்ப்பார்கள். இவர்கள் மனமெல்லாம் சொந்தத் தொழில் தொடங்குவதிலேயே இருக்கும். எனினும் வியாபார நுணுக்கமும், வேலை வாங்கும் திறனும் இவர்களிடம் குறைந்தே காணப்படுவதால் நஷ்டமடையக்கூடும். எனவே, எச்சரிக்கை தேவை. மருந்துப் பொருள்கள், ரசாயனம், பிளாஸ்டிக் தொழிற்சாலை, கிரானைட், வங்கிகள், அரசு வக்கீல், சி.பி.ஐ., சி.ஐ.டி. போன்ற துறைகளில் வேலைக்கு அமர்வார்கள். அரசியல் ஆர்வம் உண்டு. பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவுவார்கள்.
   
இவர்களுக்கு வயிற்றுப் புண், வாய்ப் புண், மழை - குளிர்காலங்களில் மூச்சுத் திணறல், முட்டிக்காயம் ஆகியன ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போது எப்போதும் எச்சரிக்கை தேவை. சித்தர் சமாதிகளைத் தேடிச் சென்று வணங்குவர்.

புதிய காரியங்களைத் தொடங்கும்போது 3, 12, 6, 24, 7, 25 ஆகிய தேதிகளும், மெரூன், கிருஷ்ண நீலம் ஆகிய நிறங்களும் இவர்களுக்கு உகந்தவை. ஆம்பர் (மஞ்சள் நிறத்தில் இருக்கும்) எனும் ரத்தினத்தை அணிய இவர்கள் வாழ்வு சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

இவர்கள், தனித்து ஜெயித்து தனக்கென தனி ராஜ்ஜியம் அமைத்து வெற்றி பெற, பழநி தண்டாயுதபாணியை வணங்க வேண்டும். ஆண்டி நிலையில் இருப்போரையும்  ராஜ நிலைக்கு உயர்த்தும் தெய்வம் பழநி முருகப்பெருமான்.

அடுத்த இணைப்பிதழில்... 19 முதல் 28-ம் தேதி வரை பிறந்தவர்களுக்கான பலன்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism