Published:Updated:

பிறந்த தேதி பலன்கள்!

பிறந்த தேதி பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பிறந்த தேதி பலன்கள்!

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

பிறந்த தேதி பலன்கள்!

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
பிறந்த தேதி பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

திட்டமிடலும் உத்வேகமும் வாழ்வை உயர்த்தும்.

அரசாட்சி கிரகமான சூரியனும் பூமிகாரகனான செவ்வாயும் சேர்ந்து உருவாக்கும் அளப்பறிய ஆற்றல்

பிறந்த தேதி பலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தேதியில் பிறந்தவர்களிடம் இருக்கும். இவர்கள் புதிய சரித்திரத்தை உருவாக்கப் பிறந்தவர்கள். சூரியன், செவ்வாய் இரண்டுமே நெருப்புக் கிரகங்கள்தான். இந்த இரண்டும் கலந்த ஆற்றலில் பிறந்தவர்களிடம் சூரியனுடைய திறமையான திட்டமிடலும், செவ்வாயின் உத்வேகமும் சரி பாதியாகக் கலந்திருக்கும். சவால்கள் வந்து கொண்டுதான் இருக்கும் என்று அதற்கு பழகிக்கொள்வார்கள்.

நிராயுதபாணியாகத் தவிப்பவர்களுக்கு நெருக்கடி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத

பிறந்த தேதி பலன்கள்!

வகையில், ஆபத்பாந்தவனாகத்  துணை நிற்பார்கள். இப்படித்தான் பழக வேண்டும் என்று கட்டுப்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

மதம், மொழி, இன அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். தங்கள் பிள்ளையாக இருந்தாலும் தவறு செய்தால் மன்னிக்க மாட்டார்கள். இவர்களில் பலர், அதிகாரப் பதவியில் இருந்தாலும் பதவி கொடுத்த சலுகைகளை தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். சூரியனின் ஆதிக்கத்தில் இருப்பதால் தேசப் பற்று மிதமிஞ்சியிருக்கும். அலுவலகத்தில் கௌரவமாக இருப்பவர்கள், வீட்டுக்கு வந்தால் விளையாட்டுப் பிள்ளையாக மாறிவிடுவார்கள்.

நிறைகுடம்போல ஆர்ப்பாட்டமில்லாமல் இருப்பார்கள். கணித சூத்திரங்கள், அறிவியல் சமன்பாடுகள் போன்ற கடினமானவற்றையும் மற்றும் வரலாற்றுப் பகுதிகளையும் நினைவில் வைத்திருப்பார்கள். விளைவுகளைக் கருத்தில்கொண்டு புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள்.மிகப் பெரிய காரியங்களைச் சாதிப்பார்கள். 

பிறந்த தேதி பலன்கள்!

37 வயதிலிருந்து 40-க்குள் அதிக வாய்ப்புகள், பெரிய பதவிகள் என்று உயர்வார்கள். பொதுவாகவே தொடர்ந்த வளர்ச்சியைக் குறிக்கும் ஓர் எண் இதுவாகும். ஆன்மிகத்தைப் பொறுத்தவரை குரு வழிபாடு ஏற்றது. பைலட், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர், கெமிக்கல் இன்ஜினீயர், அஸ்ட்ரோநாட்ஸ், தொழிற்சாலை டீம் லீடர் போன்ற தொழிலுக்கு ஏற்ற கல்வியைத் தேர்ந்தெடுத்தால் உன்னத நிலையை அடையலாம். தொல்லியல் துறை, மேலாண்மை, விஞ்ஞானம் ஆகியவையும் ஏற்ற துறைகள்.

மிளகு ரசத்தையும் துவர்ப்பு கலந்த பதார்த்தங்களையும் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆரோக்கியமாக இருப்பதற்கு சித்த வைத்தியத்தை நாடுவார்கள்.

1, 5, 14, 19 ஆகிய தேதிகளும் மாம்பழ நிறம், மஞ்சள், ஆரஞ்சு ஆகிய நிறங்களும் இவர்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். கிழக்கு திசை நோக்கி தொடங்கும் காரியங்கள் வெற்றி அளிக்கும். காலையில் சூரியனைத் தொழுதுவிட்டு அந்த நாளை ஆரம்பித்தால், நாள் முழுவதும் வெற்றி இவர்களுடையதே. மஞ்சள் நிற ஸிர்கான் என்னும் ரத்தினத்தை அணிந்தால் பால சூரியன் இவர்கள் வாழ்க்கையை இன்னும் இதமாக்குவார்.

இந்தத் தேதிக்காரர்கள் அட்ட வீரட்டானங்களில் ஒன்றான திருவதிகை வீரட்டானரை தரிசிக்கும்போது புதிய பலம் பெறுவார்கள். இந்தத் தலம் பண்ருட்டிக்கு அருகேயுள்ளது. திரிபுர சம்ஹாரம் நிகழ்ந்த இடம் என்று புராணங்கள் சொல்லும் திருவதிகைக்குச் சென்று வழிபட்டு வந்தால், இவர்களுடைய ஆற்றல் அதிகரிக்கும். பல அற்புதமான வரங்களால் எதிர்காலம் சுபிட்சம் அடையும். வாழ்க்கைச் செழிக்கும்.

சாதிக்கும் குணம், சிறப்பைத் தரும்.

பிறந்த தேதி பலன்கள்!

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களானாலும் பௌர்ணமி சந்திரனின் முழு ஆதிக்கத்தில் உதித்தவர்கள் என்று சொல்ல இயலாது. பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளுக்கு `பஞ்சமி' என்று பெயர். கொஞ்சம் தேய்ந்த நிலையில் தெரியும் அந்தச் சந்திரக் கதிர்வீச்சின் ஆதிக்கம் இவர்களிடத்தில் அதிகமாக இருக்கும். பஞ்சமி சந்திரன் சூட்சுமமானது. அதனால் இவர்களிடத்தில் சூட்சும சக்திகள் நிறைந்து இருக்கும். வாழ்க்கை ரகசியங்கள், அருகிலிருப்பவர்களின் மனச் சலனம் ஆகியவை இவர்கள் மனதுக்கு உடனே தெரிந்துவிடும். ஆனாலும் அதை வெளிப்படுத்த மாட்டார்கள். இவர்களின் மனம் அவ்வப்போது சூன்யத்தில் லயித்துவிடும்.

பிறந்த தேதி பலன்கள்!

எந்த விஷயத்தையும் அதி விரைவில் தெரிந்துகொள்வார்கள். மற்றவர்களின் மனம் வருந்தும்படி நடந்துகொள்ள மாட்டார்கள். பிரமிக்க வைக்கும் அழகையும்கூட அமைதியாக ரசிப்பார்கள். தலைபோகிற காரியமாகவே இருந்தாலும் ஆகட்டும் பார்க்கலாம் என்று பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஏமாற்றத்தையும் இழப்பையும் இடிதாங்கிபோல சகித்துக் கொள்வார்கள். பழைய நூல்களைத் தொகுப்பது, மிகப் பழைமையான நாணயங்களைப் பத்திரப்படுத்துவது ஆகியவற்றை மேற்கொள்வார்கள். மற்றவர்கள் மறந்துபோன கலை, கலாசாரம் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

சம்பந்தமில்லாத துறையில்கூட ஏதாவது சாதிக்கத் துடிப்பார்கள். ஆங்கிலம் உள்ளிட்ட பல அந்நிய மொழிகளிலும் இவர்களுக்குப் புலமை இருக்கும். காலத்தில் உதவியவர்களுக்குக் காலமெல்லாம் மறக்காமல் நன்றி சொல்லிப் பெருமைப்படுத்துவார்கள். இவர்களில் பலர் ஓவியம் வரைவதில் சிறந்து விளங்குவார்கள். கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள். தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு எதுவாக இருந்தாலும், அக்கறையுடனும் ஆர்வத்துடனும் படிப்பார்கள். வகுப்பாசிரியரே மதிக்கும் தலைசிறந்த மாணவனாக விளங்குவார்கள். மொழிப் பாடம், மனப்பாடப் பகுதி ஆகியவற்றில் முழு மதிப்பெண் பெறுவார்கள்.

சந்திரன் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் 25-வது வயதிலேயே சொந்த வீடு அமையும். 40-க்கு மேல் ஏதேனும் பெரியதாக சாதிப்பார்கள்.  விவசாயம், மூலிகை ஆராய்ச்சி, தமிழ் கற்பித்தல், ஓவியம், புகைப்படம், மொழி பெயர்த்தல், விளம்பரம் ஆகிய பல்வேறு துறைகள் இவர்களுக்கு ஏற்றவை. ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் இருக்கும்.

4, 6, 16, 22, 25 ஆகிய தேதிகள் இவர்களுக்கு ராசியாகும். பிங்க் மற்றும் வெளிர் நீலம் ஏற்றவையாகும். மேற்கு திசையை நோக்கிக் காரியத்தைத் தொடங்கினால் ஏற்றம் பெறுவார்கள். ஸ்டார் மூன் ஸ்டோன் என்னும் ரத்தினத்தை அணிந்தால், இவர்கள் வாழ்வு முழு நிலவாகப் பிரகாசிக்கும்.

இவர்களுக்கு மன அழுத்தம், ஈஸ்னோபீலியா, சைனஸ், ஞாபக மறதி, சன் ஸ்ட்ரோக் போன்ற நோய்கள் வந்து நீங்கும். எல்லாத் திறமையும் இருந்தாலும் சற்றே தேய்ந்திருக்கும் பஞ்சமி சந்திரனைப் போல இவர்களுடைய திறமையை இவர்களே குறைத்து மதிப்பிடுவார்கள். அதனால் தடுமாற்றமும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும். அனுமனுக்கு அவருடைய வலிமையை மற்றவர்கள் உணர்த்தினால்தான் தெரியும் என்பார்கள். அதேபோல் இவர்களுக்குள் இருக்கும் திறமைகளை இவர்கள் உணர மாட்டார்கள். மற்றவர்கள்தான் இவர்களுடைய திறமைகளை எடுத்துச் சொல்லி ஊக்குவிக்க வேண்டும். 

இந்தத் தேதியில் பிறந்தவர்கள் தங்கள் குறை நீங்கவும் தடையில்லாமல் வேலைகள் முழுமையடையவும் சென்று வணங்க வேண்டிய தலம் திருமாந்துறை. இந்தத் தலம் கும்பகோணத்துக்கு அருகேயுள்ள சூரியனார் கோயிலில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம் மூலமும் செல்லலாம்.

தேய்ந்த சந்திரனை இந்தத் தலத்திலுள்ள ஈசன் தன் அருளால் முழுமையாக ஒளிரச் செய்தார். அதனால் இந்தத் தல நாயகருக்கு அக்ஷயநாதர் என்று பெயர். அக்ஷயம் என்றால் வளர்தல் என்று பொருள். சந்திரனுக்கு வந்த க்ஷயம் என்னும் குஷ்டநோயை நீக்கியதாலும் அக்ஷயநாதர் எனும் பெயர் வந்தது என்றும் சொல்வர். இந்தத் தலத்துக்குச் சென்றால் உள்ளுக்குள் இருந்து இவர்களை இயக்கும் சந்திரனும் பிரகாசமாக ஜொலிப்பான் என்பதில் ஐயமில்லை.

அன்பும் ஆளுமையும்  வாழ்வை வளமாக்கும்.

பிறந்த தேதி பலன்கள்!

சூரியனிலிருந்து வரும் வெப்பமும் சந்திரனிலிருந்து வரும் தட்பமும் இணைவதால் உருவாகும் குரு இவர்கள். எனினும், சூரியனின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கும். அதனால் ஆர்ப்பாட்டமில்லாத, ஆரவாரமில்லாத ஆளுமைத் திறன் இவர்களிடத்தில் காணப்படும். மதியாதார் தலைவாசலை மறந்தும் மிதிக்க மாட்டார்கள்.

பிறந்த தேதி பலன்கள்!

மனதின் யோசனையை ஒரு கட்டத்தில் ஓரம் கட்டிவிட்டு இலக்கு நோக்கிய பயணமாக செயலில் இறங்கிவிடுவார்கள். மனதின் குழப்பங்களை எளிதாக அலட்சியம் செய்வார்கள். ஆனால், மரபு வழிப்பாதையை எப்போதும் விடமாட்டார்கள். இவர்களது சுயநலத்திலும் ஒரு பொதுநலம் இருக்கும். மூத்தோர் சொல்லையும் முதுமொழியையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல் நடைமுறைக்கு இணைந்து வருமா என ஆராய்ந்து பார்த்தபின் ஏற்றுக்கொள்வார்கள். எனினும், சில நேரங்களில் சிலரை முழுவதும் நம்பி அவர்கள் தரும் அறிவுரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அவஸ்தைப்படுவதும் உண்டு.

அவசியப்பட்டால் மட்டும் விஷயங்களை வெளிப்படுத்துவார்கள். எல்லோரும் விரும்புகிறார்களே என்று ஒரு விஷயத்துக்கு ஆதரவு தர மாட்டார்கள். இந்தத் தேதியில் பிறந்தவர்களைத் தயக்கமும் கூச்சமும் ஆட்கொள்ளும். இவர்களுக்குள் ஓர் அதீதத் திறமை இருந்தாலும் சரியான வடிவமைப்பில் வெளிப்படுத்த கஷ்டப்படுவார்கள். மற்றவர்களிடம் அவ்வளவு எளிதில் உதவி கேட்க மாட்டார்கள். எல்லோருக்கும் இனியனாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

குடும்ப விசேஷமானாலும் சரி, நாடு தழுவிய விழாவாக இருந்தாலும் சரி... உரிய மரியாதையைத் தராவிட்டால் புறக்கணிப்பார்கள். கம்பீரமும் பார்ப்போரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகும் இவர்களிடத்தில் இருக்கும். கொஞ்சம் காலதாமதப்படுத்தும் பழக்கத்தால் கடைசி நேரத்தில் வேலை பார்ப்பார்கள். 

இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்கு பெரிய அளவு நிர்வாகத் திறனெல்லாம் கிடையாது. இவர்களில் சிலருக்கு சூழ்நிலை சந்தர்ப்பத்தால், நடுவயதில் வாழ்க்கைத் துணையை விட்டுப் பிரிய நேரிடலாம். சில ஆண்கள் சிற்றின்பத்துக்கு அடிமையாகிப் பிறகு மீண்டு விடுவார்கள். அதுபோல திடீர்த் துறவறம் போன்றவையும் சிலருடைய வாழ்வில் நிகழும்.

மரபுக்கும் நவீனத்துக்கும் இடையே திண்டாடுவார்கள். 24, 33, 51 ஆகிய வயதில் நிறைய மாற்றங்கள் நிகழும். இவர்களின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு 25, 27 வயதில் எல்லா நல்ல மாற்றங்களும் ஏற்படும். ஏற்றுமதி - இறக்குமதி, கூரியர், லாஜிஸ்டிக்ஸ், பாட்டு, கவுன்சலிங், மனித உரிமை, நுகர்வோர் துறை, பி.ஆர்.ஓ. ஆகிய பல துறைகளிலும் ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
எளிய வேலையில் அமர்வார்கள். இந்தத் தேதியில் பிறந்த பலர் ஆலோசகராக இருப்பார்கள். வீட்டை அதிகம் நேசிப்பார்கள். பச்சடி வகைகள் இவர்களுக்குப் பிடிக்கும். பாகற்காயை இனிப்புப் போல சாப்பிடுவார்கள். பசி பொறுக்க மாட்டார்கள். சம்பிரதாயமான சாப்பாட்டை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

வயிற்று வலி, வாய்வு தொல்லை, அடிக்கடி கை கால்களில் சுளுக்கு, நரம்பு சுளுக்கு ஆகியவை வந்து நீங்கும். 3, 6, 7, 16, 24, 21, 25 ஆகிய தேதிகளும் காவி மற்றும் பிரவுன் நிறங்களும் இவர்களுக்கு ஏற்றவை. கழுத்தில் ஸ்படிக மாலை அணியுங்கள். தென்கிழக்கு நோக்கித் தொழுதுவிட்டு, எப்போதும் காரியத்தைத் தொடங்கினால் வெற்றி முன்னே சென்று இவர்களை வரவேற்கும்.

சூரியனின் ஆதிக்கத்தையும் சந்திரனின் மனோபலத்தையும் சமமாகப் பெறவேண்டுமென்றால், சூரியன் எனும் சிவத்தோடு இணைந்த அம்பாள் தலத்துக்குச் செல்லுதல் நலம். அப்போது ஒரு சமநிலை உருவாகும். அர்த்தநாரீஸ்வரர் என்பது இரண்டும் சமமான அளவில் உள்ள திருக்கோலம். ஆனால், அம்பாளைவிடத் தன்னையே அதிகமாக ஈசன் வெளிப்படுத்திக்கொள்ளும் தலமே இவர்களுக்கு ஏற்றதாகும். அப்படிப்பட்ட தலமே திருச்சத்திமுற்றமாகும். இந்தத் தலத்தில் ஈசன் தன்னை மிகுதியாக வெளிப்படுத்தி, கூடவே அம்பாளையும் மேம்பட்ட நிலையில் அமர்த்துகிறார். ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று, அங்கு அருள்பாலிக்கும் தழுவக் குழைந்த நாதரை தரிசித்து வந்தால், இவர்களுக்குள் இருக்கும் சாந்த குரு இவர்களைச் சாதிக்க வைப்பார்.

ஈடுபாடும் உழைப்பும் உயர்வைத் தரும்.

பிறந்த தேதி பலன்கள்!

இந்தத் தேதியில் இரண்டு, இரண்டுகள். அதாவது இரட்டைச் சந்திரன்கள் வருகின்றன. அதனால் சந்திரனின் இரு வேறு தன்மைகள் ஆதிக்கம் செலுத்தும். ஆனாலும், மூலமான ராகுவின் ஆதிக்கத்தை மீறாமல் சந்திரன் தன் ஆற்றலைப் பொழிவார். இவர்கள் எப்படி யோசிப்பார்கள் என்று யாராலும் யூகிக்க முடியாது. சரியான வழிகாட்டுதல் இருந்தால், இதில் பிறந்தவர்கள் ராணுவத் தளபதியாகி நாட்டைக் காப்பார்கள். இல்லையெனில் சமூகத்துக்கு எதிரான இயக்கங்களில் சிக்கிக்கொள்வார்கள்.

பிறந்த தேதி பலன்கள்!

சின்னச்சின்ன ஆசைகளுக்கும் சில்லறை சிந்தனைகளுக்கும் மனதில் இடம் கொடுக்க மாட்டார்கள். சிறிய இழப்புகளுக்கெல்லாம் கவலைப்பட  மாட்டார்கள். நினைத்ததை செய்து முடிப்பார்கள். இவர்களிடம் கலையார்வம் மிகுதியாக இருக்கும். திறமை இருக்குமிடத்தில் சரணடைவார்கள். மனிதநேயத்துடன் இருப்பதால், இவர்கள் சொல்வதைத் தட்டாமல் செய்ய ஒரு கூட்டமே காத்திருக்கும். நிர்வாகத் திறன் இருக்கும். எதிரிகளும் ஒருகட்டத்தில் இவர்களுக்கு நண்பர்களாவார்கள். எதையும் உணர்வுபூர்வமாகப் பார்த்து யதார்த்தமான முடிவுகளை எடுப்பார்கள்.

இவர்களில் சிலர் பெற்றோரால் அல்லாமல், வேறொருவரால் எடுத்து வளர்க்கப்படுவார்கள். இருபதாவது வயதில் வழிகாட்டியாக ஒருவர் வந்து வாழ்வை செம்மையாக்குவார். மற்றவர்களின் பிரச்னைகளை அலசித் தீர்வு சொல்லும் அசாத்திய திறன் இவர்களுக்குண்டு. ஆனால், பிரச்னை தனக்கென்று வரும்போது தடுமாறுவார்கள். சுலபமாகக் கிடைக்கும் எந்த விஷயமும் இவர்களுக்கு போரடிக்கும். கொள்கை, கோட்பாடு என்று ஒரு வட்டத்துக்குள் வாழப் பிடிக்காது.

தனிமையில் இருக்கும்போது மனதுக்கினிய இசையைக் கேட்டு மகிழ்வார்கள். சிறிய வயதில் ஒழுங்காகப் படித்து, மேல்நிலைப் பள்ளிப் பருவத்தில் சற்று தடுமாறுவார்கள். கல்வியா, கலையா என்று குழம்புவார்கள். ஆனாலும், எதில் ஈடுபட்டாலும் தன்னை மறந்து முழு மனதோடு ஈடுபடுவார்கள். இந்தத் தேதியில் பிறந்த பலருக்கும், படித்ததற்கும் செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கும். இந்தத் தேதியில் பிறந்தவர்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்ல தூண்டுதல்கள் வரும். கவனத்துடன் அவற்றைத் தவிர்க்க வேண்டும். இவர்களில், பலருக்கு சிறிய வயதிலேயே திருமணம் ஆகிவிடும். உடன் பிறந்தவர்களைக் கண்மணிபோல பார்த்துக் கொள்வார்கள். உக்கிர தெய்வங்களை வணங்குவார்கள். பழைய மரபை எக்காலத்திலும் கைவிட மாட்டார்கள்.

அதிகம் பேசி வியாபாரம் செய்யும் வேலை முதலில் அமையும். ஆனாலும், எதிலும் அதிகம் நீடிக்காமல் தாவிக்கொண்டே இருப்பார்கள். ஏஜென்ஸி, புரவிஷனல் ஸ்டோர், புரோக்கரேஜ், சுரங்கம், ராணுவம், மியூசிக் ஆர்க்கெஸ்ட்ரா, டிராவல்ஸ் என்று பல்வேறு துறைகள் இவர்களுக்கு ஏற்றது. இவர்களில் பலர் கல்லூரிப் பேராசிரியர்களாக, கவுன்சலிங் செய்யும் மருத்துவர்களாக விளங்குவார்கள். பார்வைக்குச் சாதாரணமாக இருப்பவர் போலத் தெரிந்தாலும் வேலை வாங்கும்போது நெருப்பாக மாறிவிடுவார்கள்.

சூடான உணவு வகைகள் மிகவும் பிடிக்கும். பானிபூரி, சமோசா போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பாட்டில் அதிக கவனம் கொள்ள மாட்டார்கள். கொறித்துவிட்டு நகர்ந்து விடுவார்கள். நரம்புத் தளர்ச்சி, ஒற்றைத் தலைவலி, அடி வயிற்றில் வலி, அல்சர் மற்றும் ஹெர்னியா போன்ற நோய்கள் வந்து நீங்கும். உடல் உஷ்ணமாக இருக்கும். 1, 4, 6, 19, 24, 31  ஆகிய தேதிகள் ராசியானது. வெளிர் மஞ்சள், வெளிர்ப் பச்சை, கிருஷ்ண நீலம் இவர் மனதை இதமாக்கும் நிறங்களாகும். வாட்டர்மெலன் டர்மலைன் எனும் ரத்தினத்தை அணிந்தால் குன்றிலிட்ட விளக்காக வாழ்வு பிரகாசிக்கும். தென்மேற்கு திசை நோக்கி ஒரு காரியத்தைத் தொடங்கினால் சகல திசைகளிலும் இவர்கள் புகழ் பரவும். 

அம்மன்குடி என்ற தலத்துக்குச் சென்று அங்கு அருள்பாலிக்கும் அஷ்டபுஜ துர்கையை வழிபட்டு வந்தால், வாழ்க்கை வளமாகும். இந்தத் தலம் கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. கும்பகோணம் - உப்பிலியப்பன் கோயில் - அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்குப் பேருந்துகள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம் மூலமாகவும் இந்தக் கோயிலை அடையலாம்.

உதவும் குணம் உங்களை உயர்த்தும்.

பிறந்த தேதி பலன்கள்!

குருவும், சந்திரனும் சேர்ந்த புதனின் அம்சமாக இவர்கள் இருந்தாலும், சந்திரனின் வீச்சுதான் மேலோங்கியிருக்கும். அதனால் மனதில் தோன்றும் எண்ணத்துக்கு ஏற்ற உணர்வே இவர்களை ஆட்கொள்ளும். அதை உடனடியாக வெளிக்காட்டவும் செய்வார்கள். அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்குமளவுக்கு நெஞ்சுரம் இருக்கும். எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டார்களென்றால் தொடர் வெற்றி உறுதி. மனதில் தோன்றும் சிறு சலனத்தைக்கூட இவர்கள் தங்கள் புறத்தோற்றத்தில் வெளிப்படுத்துவார்கள். நன்றிக்கடன் செலுத்துவதில் இவர்களுக்கு இணை எவருமில்லை. அதேபோல், மற்றவரின் மனதைப் படித்து அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே கொடுத்து உதவும் வள்ளல் இவர்கள்.

பிறந்த தேதி பலன்கள்!

சிறுவயதிலிருந்து இவர்கள் கருத்துக்கு எதிர்க்குரல் எழுந்து பல இடங்களில் அவமானப்பட்டிருப்பார்கள். ஆனால், அவற்றை தங்கள் உயர்வுக்கான ஏணிப்படிகளாக மாற்றிக் கொள்வார்கள். அடுத்தவர்களின் அறிவுரையை அதிகமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதிலும் சிரத்தையாக இருப்பார்கள். சபை நாகரிகத்தை, சம்பிரதாயப் பேச்சுகளை இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்பார்ப்பில்லாது உழைப்பார்கள். பிறரைக் காயப்படுத்தாமல் வேலை வாங்குவார்கள். தவறு செய்பவன் அவனது அறியாமையால் தவறிழைக்கிறானா அல்லது  தூண்டப்படுவதால் செய்கிறானா என்று பல கோணங்களில் ஆராய்வார்கள். சில தவறுகளுக்கு தாங்களே காரணம் என்று தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளவும் செய்வார்கள். இவர்களின் திறமையை மற்றவர்கள் காசாக்கிக் கொள்வார்கள். அசாத்திய திறமை, ஆழ்ந்த புலமை கொண்டவர்கள். புதனும் சந்திரனும் ஆதிக்கம் செலுத்துவதால், உறுதிக்கும் சலனத்துக்கும் இடையில் மனம் ஊசலாடும். அதனால் திடீரென்று வெவ்வேறு முடிவுகளை எடுப்பார்கள். இவர்கள் தன்மானச் சிங்கமாதலால் ரோஷம் அதிகம். இவர்களில் பலர், பிறர் உதவியின்றித் தட்டுத் தடுமாறி மேலே வரக்கூடியவர்கள்.

வாய்ப்புகள் அரிதாகவே வந்தாலும் கிடைத்ததை வைத்து கரணம் அடித்துக் காட்டுவார்கள். வசதி வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிடாது. ஆனாலும், எப்போதும் சுகவாசியாக இருக்கத்தான் விரும்புவார்கள். 23 என்ற எண்ணானது உச்சம் பெற்ற புதனாக இருப்பதால்,  இதில் பிறந்தவர்கள் சொல்லும் விஷயம் ரத்தினச் சுருக்கமாக இருக்கும். ஒரு சொல்லுக்கு இரு பொருளில் பேசி பிறரை வியப்பில் ஆழ்த்துவார்கள். பெற்றோர்களைத் தெய்வமாக மதிப்பார்கள். உடன் பிறந்தோருக்கு எப்போதும் தோள் கொடுப்பார்கள்.

கார்ட்டூன் ஓவியம், நிகழ்ச்சித் தொகுப்பு, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட், திட்டங்கள் தீட்டுதல், இலவசப் பாடசாலை நடத்துதல் ஆகியவற்றில் செயல்படுவார்கள். சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. கலைத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களிலோ, பேராசிரியராகவோ பணிபுரிவார்கள். நொறுக்குத் தீனியைக் கொறித்த வண்ணம் இருந்தாலும் சரியான உணவில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வாய்வுத் தொல்லை, தொண்டைக் கமறல், மலச்சிக்கல், உடற்பருமன், குடல் இறக்கம் போன்ற உபாதைகள் வந்து நீங்கும். அரசியலில் ஆர்வமுண்டு. அரசியல்வாதிகளை கைக்குள் வைத்துக்கொண்டு நான்கு பேருக்கு நல்லது செய்வார்கள். 6, 8, 17, 24  தேதிகள் எப்போதும் இவர்களுக்கு ராசியாக இருக்கும். சாம்பல், பழுப்பு, பச்சையும் மஞ்சளும் கலந்த நிறம் இவர்களுக்கு ஏற்றது. நடுவில் மரகதக் கல்லும் அதைச் சுற்றிலும் முத்துகள் பதித்த மோதிரம் அல்லது தோடு அணிவது சிறப்புகளைத் தரும். வடமேற்கு திசை நோக்கி காரியம் தொடங்கினால் எந்நாளும் இவர்களுக்கு வெற்றிதான்.

மெத்தப் படித்திருந்தாலும் அடக்கமாக இருப்பார்கள். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் எளிமையுடன் நடந்து கொள்வார்கள். தலைவனாக இருந்தும் தலையில் மண் சுமந்த ஈசன் போல இருப்பார்கள். திறமைகள் மண்டிக்கிடக்கும். ஆனால், திறமையை வெளிப்படுத்தக்கூடிய சக்தி இவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

இவர்கள் திறமையைப் பயன்படுத்தி உயர்வடையவும், சமூகத்தில் பெரிய பதவி, அந்தஸ்தைப் பெறவும் மதுரை மீனாட்சி அம்மையையும், சுந்தரேஸ்வரரையும் வணங்க வேண்டும்.

இதமான செயல்பாடு, வாழ்வைச் சிறப்பாக்கும்

பிறந்த தேதி பலன்கள்!

உலக இன்பத்தையும் உயர் பதவிகளையும் ஒருங்கே தந்து சிகரத்தில் கொண்டு நிறுத்தும் கோளான, 6 எனும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் ஜனித்தவர்கள் இவர்கள். ஆனாலும், 24 எனும் எண்ணிலுள்ள கிரகங்களின் (சந்திரன் - ராகு) கலவையே இவர்களுடைய வாழ்வை வழிநடத்தும்.

அழகோடு கைகோத்த ஓர் அறிவாற்றலின் கலவையாகத் திகழ்வார்கள். மற்றவர்கள் அஞ்சும் விஷயங்களைக்கூட இவர்கள் தனி ஒருவராக நின்று சாதிப்பார்கள். சிறு வயதிலேயே சில அவமானங்களைச் சந்தித்ததால் இவர்கள் தங்களுக்குள் பெரிய குறிக்கோள்களை உருவாக்கிக் கொள்வார்கள். உதாசீனப்படுத்தியவர்களை எல்லாம் தங்களை நாடி வரும்படி செய்வார்கள். வானளாவிய திறமைகள் இவர்களிடத்தில் மண்டிக்கிடந்தாலும், அதை வெளிப்படுத்தும் வழிவகைகளை அறியாதிருப்பார்கள். ஏளனமாக எடுத்தெறிந்து எவரையும் பேச மாட்டார்கள். மனதில் குறுகிய புத்திக்கு இடம் தர மாட்டார்கள்.

சந்திரன் ஒளிர்வதால் எல்லோரிடமும் இதமாகப் பழகுவார்கள். மற்றவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக்கொள்வார்கள். வசீகரத்தோடு திகழ்வார்கள்.

பிறந்த தேதி பலன்கள்!

இவர்களை நிழல் கிரகமான ராகுவும் இயக்குவதால், அடிக்கடி மனம் கற்பனை உலகில் சஞ்சரிக்கும். இவர்களால் பயனடைந்த உற்றார் உறவினர்கள் இவர்களைத் தாக்கி ஒரு வார்த்தை பேசினாலும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். கோபப்படும்போது பெரும்பாலும் அமைதியாகி விடுவார்கள். எந்த விஷயமானாலும் தோண்டித் துருவி ஆராய்வார்கள். இவர்கள் பேச்சைவிட செயலால் எல்லோரையும் திகைக்க வைப்பார்கள்.

ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் உள்ளவர்கள் 24 அல்லது 27 வயதுக்குள்ளேயே எல்லாமும் பெற்றுவிடுவர். சுக்கிரன் பலவீனமாக இருந்தால் 40, 45 வயதுக்குப் பிறகுதான் நல்ல நிலையை அடைவர். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதுதான் இவர்களின் தாரக மந்திரம். இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்கு திரைமறைவு வாழ்க்கை ஒன்று இருக்கும். அதீதக் கோபத்தால், இவர்களுடைய மிகச் சிறந்த செயல்கள் குடத்திலிட்ட விளக்காக மங்கிக் காணப்படும். அவசரப்பட்டு முடிவுகள் எடுத்துவிட்டு, பின்னர் வருத்தப்படுவார்கள். பலவீனத்தை உணராத ஓர் அறியாமையும் இவர்களோடு சேர்ந்திருக்கும். மிகப் பெரிய ராஜதந்திரியாக விளங்குவார்கள்.
 
பள்ளிப்படிப்பைத் தவிர, மற்ற கலைகளையும் பயில்வார்கள். அபார நினைவுத்திறன் இருக்கும். இவர்களில் பெரும்பாலோருக்கு சிறு வயதிலேயே திருமணம் நடந்துவிடும். அடிப்படை வசதி வாய்ப்புகள் குழந்தைப் பருவத்திலேயே கிடைத்துவிடுவதால் அதைப் பற்றிய கவலைகள் இவர்களுக்கு இருக்காது. இவர்களில் அநேகர் வெளிநாட்டு வாழ் நபர்களாக இருப்பார்கள். மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் இருந்தால் இல்லறம் இனிக்கும்.

ஓட்டல், சினிமா, ஐ.டி., பியூட்டி பார்லர், வணிக வளாகம், மதுபான விடுதி ஆகிய தொழில்களில் ஈடுபடுவார்கள். பலர் பிரபல பாடகர்களாகவோ அல்லது பத்திரிகையாளராகவோ திகழ்வார்கள். இவர்கள் பையில் எப்போதும் ஓர் இனிப்பை வைத்திருப்பார்கள். உணவு விஷயத்தில் புதுப்புது வகைகளாகத் தேடித்தேடி உண்பார்கள். பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்வார்கள்.

இவர்களுக்கு 4, 6, 8, 22, 24, 26 ஆகிய தேதிகள் ராசியாகும். பிங்க், தாமரை நிறம், இளம் பச்சை, கருநீலம் போன்றவை இவர்களுக்கு ஏற்றது. ஆறு நூல் கொண்ட சபையர் ரத்தினத்தை அணிந்தால் லட்சுமி கடாட்சம் கூடும். இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்குக் கண், காது, மூக்கு தொல்லைகளும், டான்சில், மூச்சடைப்பு, உடற் பருமனால் வரும் தொந்தரவுகள், தைராய்டு பிரச்னை, குடல் இறக்கம் போன்றவை வந்து நீங்கும். இவர்களுடைய பெருஞ் சக்தியைச் சரியான பாதையிலும், நேர்த்தியான வளர்ச்சியிலும் கொண்டு செல்லக்கூடியவளே காஞ்சி காமாட்சி. 

பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காகப் பிரபஞ்சத்தின் நாபியாக விளங்கும் காஞ்சிக்கு, காமாட்சி வந்து அசுரனை வதைத்தாள். காமாட்சியின் உக்கிரத்தைத் தணித்து, யாவரும் அருகே சென்று வணங்கும் சாந்தமான அம்பாளாக ஆதிசங்கரர் மாற்றி ஸ்ரீசக்கரத்தை ஸ்தாபித்தார். நாபிக்கு உரியவனும் சுக்கிரன்தான். நாபித் தலத்தின் அதிதேவதையாக ஸ்ரீமகாதேவியான காமாட்சியே இந்தத் தலத்தில் அருள்கிறாள். அவளை வணங்கி வழிபட்டு வந்தால், அனைத்தும் வெற்றியாக அமையும்.

தேடலும் புதுமையும் வெற்றியைத் தரும்.

பிறந்த தேதி பலன்கள்!

அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் உரிய கிரகமான சந்திரனும் தடைகளைத் தகர்க்கும் கிரகமான புதனும் இணைந்த 25-ம் தேதியில் பிறந்த இவர்களுக்கு சந்திரனும், புதனும் சேர்ந்திருப்பதால் இந்திரனைப் போல் வாழ்வான் என்று ஜாதக அலங்காரம் சொல்கிறது. ஆக, இந்திரபோகம் இவர்களுக்கு உண்டு.

எத்தனை சாதித்தாலும் நிலைகுலையாமல், அகங்காரமில்லாமல் இருப்பார்கள். எப்போதும் ஒரு தேடல், புதுமை என்று இருப்பார்கள். ஆழ்கடலின் அமைதி இவர்களிடத்தில் இருக்கும். சாதாரணமானவர்களிடமிருந்து வித்தியாசப்பட வேண்டும் என்று நினைப்பார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பார்கள்.

பிறந்த தேதி பலன்கள்!

அதிமேதாவிகள் பேசினாலும் பேச்சின் தொடக்கத்தை வைத்தே, இதைத்தான் சொல்லப்போகிறார், இப்படித்தான் முடிப்பார் என்று யூகித்து விடுவார்கள். அமானுஷ்ய உணர்வு இவர்களிடம் இருக்கும். கனவுகள் மூலமாகவோ, எப்போதும் விழித்திருக்கும் உள் மனது மூலமாகவோ எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருப்பார்கள்.

தங்களுடைய கொள்கைகளை ஒருபோதும் மற்றவர்கள் மீது திணிக்க மாட்டார்கள். தங்களுடைய உயர்ந்த நிலையை மற்றவரோடு ஒப்பிட்டு யாரையும் காயப்படுத்த மாட்டார்கள். பசியில் இருப்பவனுக்கு எதற்கு தத்துவ உபதேசம் என்று முதலில் அன்னமிடுவார்கள். தங்கள் சுகத்தைத் தியாகம் செய்து நாடி வந்தவர்களுக்கு நன்மை செய்வார்கள். அதேசமயம் மற்றவர்கள், சாதாரண உதவி செய்தால்கூடப் புகழ்வார்கள். இவர்கள் கலைத் திறன் மிக்கவர்கள். எந்தவொரு விஷயத்தையும் ஆர்ப்பாட்டமில்லாமல் நிதானமாக அணுகுவார்கள். மிகப் பெரிய சந்தோஷத்தைக்கூட அளவாகத்தான் வெளிப்படுத்துவார்கள். சமூகத்தில் நிலவும் சில வறட்டு நம்பிக்கைகளுக்கெல்லாம் எதிர்க் குரல் கொடுப்பார்கள். சில சமயம் இவர்களுடைய அமைதியான நடத்தை, இவர்களை அலட்சியவாதியாகக் காட்டும். மேலும், கேதுவின் ஆதிக்கத்தில் இவர்கள் இருப்பதால், தாங்கள் உணர்ந்த விஷயங்களை மற்றவர்களும் புரிந்துகொள்வார்கள் என்று நினைப்பார்கள். ஆனால், உலகம் அப்படி அல்ல. ஆகவே, மற்றவர்களுக்கு விஷயங்களைப் புரிய வைப்பது அவசியம்.

சரித்திரப் பாடங்களில் அதீத ஆர்வம் காட்டுவார்கள். பணியில் ஆட்களுக்குத் தகுந்தாற்போல் வேலை வாங்கும் நிர்வாகத் திறன் கொண்டிருப்பார்கள். மத்திய வயதுக்குப் பிறகு இல்லறத்தில் ஈடுபாடு குறைந்துவிடும். கல்வியைவிட ஒழுக்கம்தான் பெரியது என்று குழந்தைகளை வளர்ப்பார்கள். வசதி வாய்ப்புகள் குவிந்தாலும் மனநிம்மதிதான் பெரியது என்பார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை கலைத் துறையிலுள்ள அனைத்து வேலைகளும் ஏற்றது. அதிக முதலீடுகள் உள்ள வியாபாரம் செய்யும்போது எச்சரிக்கை அவசியம். பேராசிரியர், மதபோதகர், கெமிக்கல் இன்ஜினீயரிங் போன்ற துறைகளிலும் கால் பதிப்பார்கள். பிரபலமாக வேண்டுமென்ற எண்ணம் எப்போதும் இருப்பதால், அரசியல் தலைவர்களாகவோ, சங்க செயலாளராகவோ விளங்குவார்கள். எத்தனை செல்வங்கள் வந்தாலும் இறுதியில் மனம் இறைவனையே தேடும். எந்தச் செயலிலும் ஒரு தெளிவு இருக்கும்.

இவர்களுக்கு ஒற்றைத் தலைவலி, மூச்சுத்திணறல், சரும வியாதி, சிறுநீர் பிரச்னை போன்ற நோய்கள் வந்து நீங்கும். பொதுவாக 2, 3, 7, 11, 16, 21, 25 ஆகிய தேதிகள் சிறப்பான பலன்களைத் தரும். சாம்பல் நிறமும் அஜந்தா நீலமும் இவர்கள் மனதை புத்துணர்ச்சியூட்டும். முத்துகளுடன் கூடிய வைடூரியம் அணிந்தால் வெற்றிகள் அணிவகுத்து நிற்கும்.

தேக்கத்திலிருந்து விடுபடவும் முன்னிலும் அதிகத் தெளிவோடு காரியமாற்றவும், மனச் சலனத்தை நிறுத்தவும், மனதைக் கட்டுப்படுத்தவும்  இவர்கள் நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரரைத் தரிசித்து வழிபடுவது சிறப்பு. நீலாயதாட்சி எனும் திருநாமத்துடன் அம்பாள் அருளாட்சி செய்யும் தலம் இது. அழகுத் தமிழில் கருந்தடங்கண்ணம்மை என்றும் அழைக்கிறார்கள். அம்பாளின் அருட் கண்கள் சற்றுப்பட்டாலே போதும் என்பவர்களுக்கு நீலக் கண்களையே தனது நாமமாகக் கொண்டு அருள்பாலிக்கிறாள். நீலாயதாட்சி நினைத்ததை நிறைவேற்றுவதில் இணையில்லாத நாயகி.

சமயோசித செயல்பாடு, வெற்றியை எளிதாக்கும்.

பிறந்த தேதி பலன்கள்!

சந்திரனும், சுக்கிரனும் இணைந்து மனசாட்சி கிரகமான சனியின் ஆதிக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும் 26-ம் தேதி பிறந்த பிறந்தவர்கள், கவித்துவம் மிக்கவர்கள். எத்தனை செல்வமிருந்தாலும் முக்தியை நோக்கியே மனம் நகரும். தங்களோடு இருப்பவர்களின் சந்தோஷத்தையே முக்கியமாக எண்ணுவார்கள். ஏமாற்றுபவனையும் பட்டை தீட்டி, செம்மைப்படுத்துவார்கள். செய்நன்றி மறவாதவர்கள். அறிவு முதிர்ச்சியோடு இருப்பார்கள். தங்களையே ஒரு மூன்றாம் நபர்போல கவனித்து, தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள்.

சமயோசிதமும், ஆட்களை எடைபோட்டு வேலை வாங்கும் திறனும் இவர்களிடத்தில் இருக்கும். சுக்கிரனின் ஆதிக்கம் இருப்பதால், எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையையும் சுகமாக மாற்றிவிடுவார்கள். தற்கால விஷயங்கள் வரை அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்வார்கள். தலைமுறை இடைவெளியை உடைத்து இன்றைய தலைமுறைக்கும் ஈடு கொடுப்பார்கள். விதிமுறைகளைப் பெரும்பாலும் மற்றவர்களுக்காகத் தளர்த்துவார்கள்; தங்களுக்காகவும் தளர்த்திக்கொள்வார்கள். அலட்டிக்கொள்ளாமல் தொட்ட காரியத்தை மன உறுதியோடு முடிப்பார்கள். ஏனெனில், உள்ளுக்குள் சாதித்துக் காட்ட வேண்டுமென்ற ஓர் எண்ணம் இருக்கும்.

பிறந்த தேதி பலன்கள்!

தனிமையில் இருப்பதிலேயே இவர்களுக்கு விருப்பம் அதிகம். சிறிய வயதிலேயே பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுத் தெளிவைப் பெற்றிருப்பதால் தேவையற்ற பழைய விஷயங்களை மனதுக்குள் போட்டுப் புதைத்துவிடுவார்கள். சந்திரனும் சுக்கிரனும் கலந்த கலவையாக இருப்பதால், அசுர நிலையைக் கடந்து தேவ நிலையைப் பெற்றவர்களாக இவர்கள் திகழ்வார்கள். அடிப்படையிலேயே கல்வியறிவு மிக்கவர்களாக இருப்பதால் எதிலும் திட்டமிட்டுப் பணியாற்றுவார்கள். இந்தத் தேதியில் பிறந்தவர்கள் வாக்குக் கொடுத்துவிட்டோமே என்று அநேக விஷயங்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். வசதி வாய்ப்புகளைச் சுக்கிரன் இவர்களுக்கு உருவாக்கித் தருவார். எனினும் இவர்களில் பலர் மிகவும் எளிமையானவர்களாகத் திகழ்வர். ஃப்ரிட்ஜைத் திறந்தால் பாதாம், பிஸ்தா என்று இருந்தாலும் இவர்களுடைய தேர்வு என்னவோ கேழ்வரகுக் கூழ்தான். தேடி ஓட மாட்டார்கள். இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

இவர்களில் பெரும்பாலோருக்குத் திருமணம் தாமதித்துத்தான் நடக்கும். இவர்களிடம் பணம் இருந்தால் நிம்மதி இருக்காது. நிம்மதி இருந்தால் பணம் இருக்காது. அழகான வாழ்க்கைத் துணை இருந்தால் குழந்தை இருக்காது. இதுபோன்ற குறைபாடுகள் இவர்களுடைய மன உளைச்சலை அதிகரிக்கும். இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்கு யார் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதற்குச் சரியான பதில் சொல்லத் தெரியும். பேராசிரியர், கன்சல்டன்ஸி, சமையல் கலை, ஆய்வுக் கட்டுரையாளர், சுரங்கத் தொழில் என்று பலவிதமான துறைகள் இவர்களுக்கு ஏற்றவையாக இருக்கும்.

இவர்களுக்கு 5, 6, 8, 14, 24, 26 ஆகிய தேதிகள் சாதகமாக இருக்கும். நிறங்களில் கருநீலம், க்ரீம், வெள்ளை போன்றவை செய்யும் செயல்களில் சிறப்பைத் தரும். ரத்தினங்களில் வைரம் இவர்களின் மன நிம்மதியையும் வாழ்வின் தரத்தையும் பல மடங்கு உயர்த்தும். தென்மேற்கு திசைநோக்கி இறைவனைத் தொழுது காரியங்கள் செய்ய, வெற்றி இவர்களை விடாது துரத்தும்.
 
இவர்களுடைய வாழ்வு முழுமையாகி, இனிமையை அனுபவிக்க இவர்கள் தரிசிக்க வேண்டிய தலம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர். சந்திரனும், சுக்கிரனும் மணியும், முத்துமாக விளங்க சனி, முக்தி தரும் மணிமுத்தாறாகப் பாய, காசிக்குச் சமமான முக்தி தரும் தலமாக விருத்தாசலம் விளங்குகிறது. அதனாலேயே இதை ‘காசிக்கு வீசம் அதிக’மென்பார்கள். மேலும், கர்மத்துக்குரியவன் சனி. அதனால், அவனே கர்ம வினைகளைத் தீர்ப்பவன். இப்படி இந்த மூன்று அம்சங்களும் இணைந்து அமைந்த அபூர்வத்தலமாகவும் பல ஞானியர் உருகி நின்ற தலமாகவும் இது இருக்கிறது.

முதுகுன்றப் பெருமானான விருத்தகிரீசனைப் பாட மறுத்துச் சென்ற சுந்தரரை ஆட்கொண்ட தலம். சுந்தரரை ஆட்கொண்டது மட்டுமல்லாமல், பன்னீராயிரம் பொன்னையும் மணிமுத்தாறில் விடுத்து, அதைத் திருவாரூர் கமலாலயத்தில் எடுத்துக்கொள்ளுமாறு ஈசன் கூறிய திருத்தலம். ஆகவே, இந்தத் தலத்து ஈசன் வல்லமை வாய்ந்தவர்; மணிமுத்தாறு அத்தனை புண்ணியம் வாய்ந்தது.

ஞானமும் விவேகமும் சாதிக்க வைக்கும்.

பிறந்த தேதி பலன்கள்!

சுயசரிதை எழுதத் தூண்டும் கிரகமான இரண்டு என்கிற சந்திரனும், எதிலும் நுனிப்புல் மேயாமல் அகன்ற சிந்தனையோடு ஒரு தீவிரத்தைத் தரும் கோளான ஏழு என்னும் கேதுவும் இணைந்த 27 என்கிற முழுச் செவ்வாயின் ஆளுமையில் பிறந்தவர்கள் இவர்கள். இவர்களுக்குக் கேது வலிமையாக இருப்பதால் ஞானத்துடனும், செவ்வாய் இணைவதால் விவேகமுள்ளவராகவும் விளங்குவார்கள்.

மனதிலிருந்து வரும் கடுமையான கட்டளைகளை உடனே கைகளுக்குத் தராமல் மூளைக்கு எடுத்துச் சென்று சித்தத்தில் பதப்படுத்திய பிறகே செயல்படுத்த விடுவார்கள். சமயம் பார்த்து விஸ்வரூபம் எடுப்பார்கள். செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்துவிட்டாலே போராட்டங்களும் சண்டைகளும் சகஜமானதாக இருக்கும். கோபதாபம், ஏமாற்றம், அவமானம் ஆகிய எல்லாவற்றையும் சரிசமமாகப் பாவிப்பார்கள். ஆசைகளுக்கு அதிபதியான சந்திரனின் மீது கேது ஆதிக்கம் செலுத்துவதால், ஆசைகள் அளவாக இருக்கும். ஆன்மிகத் தேடல் மிகுதியாக இருக்கும். மெஸ்மெரிஸம், ஹிப்னாடிஸம் போன்ற மனோதத்துவக் கலைகளில் நிபுணராக விளங்குவார்கள்.

செவ்வாய், புரட்சி கிரகமானதால் மாடி வீட்டில் இருந்தாலும், குடிசை வாழ்மக்களிடமும் அன்பு காட்டுவார்கள். அதேபோல், மிகப் பெரிய அவமானத்தையும் தாங்கிக்கொண்டு அதையே வெகுமானமாகச் சாமர்த்தியமாக மாற்றிக்கொள்ளும் வித்தையில் கைதேர்ந்தவர்கள்.

பிறந்த தேதி பலன்கள்!

இவர்களுடைய முகத்தைப் பார்த்தாலே மற்றவர்களுக்குப் பரவசம் ஏற்படும். பேச்சில் தடுமாற்றம் இருக்காது. நளினத்தையும் விரும்புவார்கள்; வீரத்தையும் விரும்புவார்கள். விசேஷ நாள்களில் உண்டோம், உறங்கினோம் என்றில்லாமல் குடிசை வாழ் மக்களைத் தேடிச் சென்று இனிப்பு, பதார்த்தம் பகிர்ந்துகொண்டு உண்பார்கள். தங்களுடைய அனுபவங்களை வீணாக்காமல் மற்றவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் நூலாகப் பதிவு செய்வார்கள். இவர்களில் பலர் மனித குலத்தைக் காக்கும் அரிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் அறிஞர்களாக இருப்பார்கள். கேதுவின் ஆதிக்கம் இவர்களிடம் மேலோங்கியிருப்பதால் தனிமையை விரும்புவார்கள்.

18 வயது வரை தொடர் தோல்விகளால் துவண்டாலும் 20 வயதிலிருந்து நீடித்த வெற்றிகள் இவர்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும். அகலக்கால் வைக்கும் பழக்கம் இவர்களிடம் கிடையாது. இவர்களுடைய வாழ்க்கை சீராக முன்னேறும். குடும்பப் பற்று அதிகமாக இருக்குமாதலால் வெளியூர்களுக்குச் சென்று வேலை செய்யத் தயங்குவார்கள். மற்றவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.
மஞ்சள் காமாலை, வேனல் கட்டிகள், ஜுரம், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வந்து நீங்கும். இந்தத் தேதியில் பிறந்த பெண்கள் மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படுவார்கள். கேதுவின் ஆதிக்கம் இருப்பதால், மனிதர்களைவிட தெய்வத்தின் துணையையே அதிகம் நம்புவார்கள். நட்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சந்திரனும் இவர்கள் எண்ணில் இருப்பதால், தங்களைச் சுற்றி எல்லோரும் இருக்க வேண்டும் என்றும் தங்களையே கவனிக்க வேண்டுமென்றும் எண்ணுவார்கள். தாய்ப்பாசம் அதிகமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பேச்சும், செயலும் பல சமயங்களில் மழலைக் குழந்தையுடையது போல இருக்கும். உணர்ச்சிவசப்பட்டால் உடனே அழுதுவிடுவார்கள்.

புத்தகப் பதிப்பு, கவுன்சலிங், ராணுவம், காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகளில் ஜொலிப்பார்கள். 2, 6, 9, 11, 24, 27 ஆகிய தேதிகளும், பழுப்பு, ஆரஞ்சு, மெரூன் ஆகிய நிறங்களும் இவர்களுக்குச் சாதகமாக இருக்கும். தென்கிழக்கை நோக்கிக் காரியங்களைத் தொடங்கினால் வெற்றி உண்டு. கனக புஷ்பராகம், மஞ்சளில் வெள்ளை நீரோட்டம் உள்ள ரத்தினம் ஆகியவற்றை அணிந்தால் வாழ்க்கை ஜொலிக்கும்.
இவர்களுக்கு உகந்த இறைவன் திருச்செந்தூர் செந்திலாண்டவர். குருவுக்கே ஞானாதிபதியாக இருந்து போதித்த தலம். இந்தத் தலத்துக்குச் செல்லும்போது ஒரு பேராற்றல் பாய்வதை உணரலாம்.

திருச்செந்திலாண்டவரைத் தரிசித்தால் அவரருள் மிகப் பெரிய பலமாக இறுதி வரை நிலைத்து நிற்கும்; இவர்களுடைய வாழ்க்கையைச் செந்திலாண்டவர் சிகரத்தில் அமர்த்திவிடுவார்.

வைராக்கிய குணம், வெற்றி அளிக்கும்.

பிறந்த தேதி பலன்கள்!

சந்திரனும் சனியும் சேர்ந்த கலவையில் உதித்தவர்கள், இந்த தேதிக்காரர்கள். சந்திரனும், சனியும் இணைந்து இருந்தாலும் சனியுடைய தாக்கமே மிகுந்திருக்கும். சூரியன் இந்த இரு சக்திகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதால், இந்தத் தேதியில் பிறந்தவர்கள் விடாமுயற்சியால் எதையும் சாதிப்பார்கள். தலைமைப் பதவியின் மீது ஒரு கண் இருக்கும்.

சனி மெதுவாக நகரும் ஒரு கிரகம். அதனால், இந்தத் தேதியில் பிறந்தவர்கள் முதல் 30 வருடங்கள் அவமானம், இழப்பு ஆகியவற்றைச் சந்திப்பார்கள். அதன் பிறகு சிறப்பான உயர்வு கிடைக்கும். ஆனால், வெற்றியின் களிப்பில் ஒரு முதிர்ச்சி தெரியும். மனதில் வைராக்கியம் வஜ்ரமாக இருக்கும்.

பிறந்த தேதி பலன்கள்!

இந்தத் தேதியில் பிறந்தவர்கள் நாற்பது பக்கப் புகார் மனுவைப் படித்துவிட்டு, நான்கு வரிகளில் அந்தப் புகாரை எழுதும் அபாரத் திறமை பெற்றவர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதாரமாகவும் அவர்களை இயக்குபவர்களாகவும் இருப்பார்கள். சந்திரன் மனதுக்குரியவன். சனி எப்போதும் சாட்சிநாதன். இவை இரண்டும் இணைவதால், இயல்பாகவே நீதிநெறி, மனசாட்சியை மீற மாட்டார்கள். பொய் சொல்வதற்கும் கெடுவதற்கும் வாய்ப்புகள் வந்தாலும் கெட்டுப் போக மாட்டார்கள். உண்மை பேசுவார்கள். வாழ்க்கை இவர்களோடு விளையாடுமே தவிர, துன்புறுத்தாது. ஏனெனில், இவர்கள் விவேகி.

28-ம் தேதிக்காரர்கள் கலைஞர்களாக இருப்பார்கள். இந்த நிலை வருவதற்கு என்ன கஷ்டப்பட்டிருக்க வேண்டும்; கலையில் ஈடுபட எது காரணம் என்றெல்லாம் யோசிப்பார்கள். சனியின் ஆதிக்கத்தால் தொழில் தாண்டி ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனிப்பட்ட முகத்தை அறிவதற்கு ஆவல் காட்டுவார்கள்.

பள்ளிப் பருவத்தில் தொடங்கிய நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், ஆயுள் முழுவதும் நட்பைத் தொடர்வார்கள். சிறிய உதவிக்கும் மிகையாகப் புகழ்வார்கள். நகைச்சுவை மிக்கவர்கள். அலங்காரப் பேச்செல்லாம் இவர்களுக்கு வராது.

இவர்களுடைய மிகப்பெரிய பலமே எல்லாவற்றையும் கவனித்துத் துல்லியமாக உள்வாங்கிக் கொள்வதுதான். கலையம்சம் நிறைந்த பார்வை இவர்களுடையது. இவர்களுக்கென்று எதிலும் தனிப் பாணி வைத்திருப்பார்கள். பெரும்பாலும் மரபு சார்ந்த கலைகள் மீது மிகுந்த ஆர்வமிருக்கும்.

1, 4, 6, 19, 22, 24 ஆகிய தேதிகள் ராசியானவை. கிழக்கு, தென்மேற்கு திசையை நோக்கிக் காரியத்தைத் தொடங்கினால் வெற்றி வந்து கைகளில் அமரும். மெரூன், சாம்பல், வெளிர் நீலம் ஆகியவை இவர்களுக்கு உகந்த வண்ணங்கள்.

மிகச் சிறிய வயதிலேயே இந்தத் தேதியில் பிறந்தவர்களில் பலர், குடும்பச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்பதால், நிர்ப்பந்தத்தின் காரணமாகச் சீக்கிரமாக திருமணமும் ஆகிவிடும். வசதி வாய்ப்புகள் மெதுவாகப் பெருகும். அடிக்கடி மூச்சிரைப்பு, பார்வைக் கோளாறு, பல் வலி, சுண்ணாம்புச் சத்து குறைவு, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் வந்து நீங்கும்.

அடுத்தவரை நல்லவர்கள் என்று இவர்களே கற்பித்துக் கொள்வதால் அவர்களை அதீதமாக நம்பிவிடும் குணம், சரியான சமயத்தில் இவர்களைக் காலை வாரிவிடும். ஒரே நேரத்தில் தகுதிக்கு மீறிப் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு தடுமாறுவார்கள். துக்கங்களை நினைத்து வருந்துவதாலும், தங்கள் திறமைகள் தெரியாமல் அவற்றை சாதாரணமாக எடைபோடுவதாலும் இவர்கள் வாழ்வில் ஒரு சஞ்சலம் இருக்கும்.

இந்தத் தேதியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம் திருவண்ணாமலை. நான் எனும் ஆணவத்தை அழித்து, சிவாம்சத்தை நமக்குள் கொண்டு வரும் பேராற்றல் உள்ள தலம் இது. செஞ்ஜோதியாக ஈசன் திகழ்ந்ததால், அருணம் என்றும், அது அசையாது எல்லாவற்றையும் அசைக்கும் சக்தி பெற்றதால், அசலம் என்றும் பெயர் பெற்றது. இந்த இரு தன்மையும் இணைந்ததால் அருணாசலம் என்று அந்த மாபெரும் மலைச் சிவத்தை மகரிஷிகள் அகமகிழ்ந்து அழைத்தனர். யுகமே முடிவுக்கு வந்தாலும் இந்த மலை மட்டும் நிரந்தரமாக இருக்கும். அதை தரிசிக்கும் 28-ம் தேதிக்காரர்களுக்குக் கலையாத நெஞ்சுறுதியையும் அசைக்க முடியாத ஆற்றலையும் அளித்து பெருவாழ்வு தருவார், அண்ணாமலையார்.

அடுத்த இணைப்பிதழில்...  29 முதல் 31-ம் தேதி வரை பிறந்தவர்களுக்கான பலன்கள்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism