Published:Updated:

ஆடி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

ஆடி மாத ராசிபலன் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் தந்திருக்கிறோம்

ஆடி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology
ஆடி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

துலாம்: 
10 -ல் சூரியன்,  புதன்;  11,12 -ல் சுக்கிரன்; 1-ல் குரு; 3 -ல் சனி(வ); 4 -ல் செவ்வாய், கேது; 10 -ல் ராகு

துலாராசி அன்பர்களே!

முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். தொடங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். ஆனால், குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் அவசியம். சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்ற உறவினர்கள், உங்கள் அருமையைப் புரிந்துகொண்டு வலிய வந்து அன்பு பாராட்டுவார்கள். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியவர்களும்கூட உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.     

பணியாளர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது. உங்கள் திறமைக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நன்மை நடக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும்.

சிலருக்கு தொழிலில் மந்த நிலை ஏற்படலாம். ஆனால், உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். போட்டியாளர்களின் சூழ்ச்சிகளை உடைத்து, வளர்ச்சி காண்பீர்கள். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். வருமானம் அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் சில தடைகள் ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாதப் பிற்பகுதியில் காரியங்களில் தடை, தாமதங்களும் வீண்செலவுகளும் ஏற்படக்கூடும்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நன்மைக்கு வழிவகுக்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசு, பாராட்டு பெறுவீர்கள். 

பெண்களுக்கு குடும்பத்தில்  மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடம்பர வசதி பெருகும். வாகன சுகம் உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 20, 21, 25, 26, ஆக  3, 4, 5, 11, 12, 13
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9
சந்திராஷ்டம நாள்கள்: ஆக 6, 7

பரிகாரம்: செவ்வாயன்று முருகனை வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நல்ல பலன் தரும்.

விருச்சிகம்:
9 -ல் சூரியன்,  புதன்;  10, 11 -ல் சுக்கிரன்; 12-ல் குரு; 2 -ல் சனி(வ); 3 -ல் செவ்வாய், கேது; 9 -ல் ராகு

விருச்சிகராசி அன்பர்களே!

இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் விலகும். பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். பொன், பொருள் போன்றவை சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணலாம். ஆனால், மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடுவதைத்  தவிர்க்கவும். பொறுமையுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகை அடிக்கடி இருக்கும். இதனால் மகிழ்ச்சி கூடும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.மாத முற்பகுதியில் உறவினர் வருகையால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. 

பணியாளர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு திடீர் இடமாற்றம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் நன்மை கிடைக்கும். வீண் அலைச்சல், வேலைப்பளு குறையும். 

தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும்.  எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வகையில் பணம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு  முன்னேற்றம் உண்டாகும்.. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு புதிய பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வருமானமும் அதிகரிக்கும். 

மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும்.ஆசிரியர், பெற்றோர் அறிவுரையை ஏற்று நடந்துகொள்வது அவசியம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பெண்களுக்கு ஆடம்பரப் பொருள்களை வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாதப் பிற்பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19, 22, 24, 27, ஆக 3, 4, 6, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 
சந்திராஷ்டம நாள்கள்: ஆக 8, 9 

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு, வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு  நெய்தீபம் ஏற்றி வழிபடுவதும் நலம் தரும்.    
 

தனுசு:
8 -ல் சூரியன்,  புதன்;  9, 10 -ல் சுக்கிரன்; 11-ல் குரு; 1 -ல் சனி(வ); 2 -ல் செவ்வாய், கேது; 8 -ல் ராகு

தனுசுராசி அன்பர்களே!

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். சகோதரிகளால் நன்மை பெறலாம். நினைத்தது எல்லாம் நிறைவேறும். எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சி சாதகமாக முடியும்.ஆன்மிக நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்வீர்கள். மாத முற்பகுதியில் எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் நன்மை ஏற்பட்டாலும், அவர்கள் வகையில் மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம். சிலரது வீட்டில் பொருள்கள் திருட்டு போக வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காணலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடம், பணி மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. 

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் கூடும். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். வரவு, செலவுகளில் கவனமாக இருக்கவும். எதிலும் அதிக முதலீடு செய்யவேண்டாம். மாதத்தின் இடையில் சிறுசிறு தடைகள் ஏற்படும். மாதத்தின் இறுதியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. பங்குதாரர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும். 

கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிரிகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படலாம். மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும்.  

மாணவர்களுக்கு முன்னேற்றமான மாதமாக அமையும். கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கிடைக்க பெறுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு  கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தோழிகள் உதவியாக இருப்பார்கள்.பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19, 20, 21, 31, ஆக 6, 7, 15, 16
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
சந்திராஷ்டம நாள்கள்: ஆக 10, 11

பரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், பவுர்ணமியன்று அம்பிகைக்கு நெய் விளக்கு

மகரம்:
7 -ல் சூரியன்,  புதன்;  8, 9 -ல் சுக்கிரன்; 10-ல் குரு; 12 -ல் சனி(வ); 1 -ல் செவ்வாய், கேது; 7 -ல் ராகு

மகரராசி அன்பர்களே!

இந்த மாதம் ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பொருளாதார வளம் பெருகும். எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. மனதில் அவ்வப்போது சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். எத்தனை இடையூறுகள் குறுக்கிட்டாலும் அனைத்தையும் முறியடிப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. 

குடும்பத்தில் குழப்பம் நிலவும். கணவன் - மனைவிக்கிடையே சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரும்.  உங்கள் திறமைக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பதவி உயர்வுக்கு தடை இருக்காது. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 

தொழில், வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்பது அவசியம். பெண்களை பங்குதாரராகக் கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பண இழப்பு, எதிரிகளால் இடையூறு என்பதால் கவனம் தேவை. 

கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர், பெற்றோர் ஆதரவு கிடைக்கும். விரும்பிய நிறுவனத்தில் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். 

பெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும். பிள்ளைகளின் விஷயங்களில் பொறுமையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். நிதானம் தேவை. ஆனால் வழக்கமான சம்பளம், பதவி உயர்வுக்குத் தடை இருக்காது. 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 20, 21, 23, 24, 25, ஆக 1, 2, 9, 10
அதிர்ஷ்ட எண்கள்: 4, 7
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 27, ஆக 12, 13

பரிகாரம்: வெள்ளியன்று ராகு காலத்தில் துர்கை வழிபாடு, சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை செய்வதும் நலம் தரும்.

கும்பம்:
6-ல் சூரியன்,  புதன்;  7, 8 -ல் சுக்கிரன்; 9-ல் குரு; 11 -ல் சனி(வ); 12 -ல் செவ்வாய், கேது; 6 -ல் ராகு

கும்பராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் சாதகமான பலன்களே நிகழும். பொருளாதார வளம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  மனமகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். கணவன் - மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். அடிக்கடி குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர், நண்பர் வீட்டு விழாக்களில் கலந்துகொள்வீர்கள். சகோதர வழியில் உதவி கிடைக்கும். உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. மாதப் பிற்பகுதியில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். மேலதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக  ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். 

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். இதுவரை இருந்த தடைகள் விலகும். பகைவரின் சதியை முறியடிப்பீர்கள். மாதப் பிற்பகுதியில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

கலைஞர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நற்பெயரும், புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும். 

மாணவர்களுக்கு பெரியோர்களின் வழிகாட்டுதல் உதவிகரமாக இருக்கும். விரும்பிய மேல்படிப்பினை தொடருவீர்கள். படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். இதுவரை உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் தங்கள் தவறினை உணர்ந்து மன்னிப்பு கோருவார்கள். இதுவரை தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சி நடந்தேறும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வளர்ச்சி ஏற்படும். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 22, 23, 24, 30, 31, ஆக 3, 4, 5, 12, 13
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 18, 19, ஆக 14, 15

பரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு நெய்தீபம்.

மீனம்:
5-ல் சூரியன்,  புதன்;  6, 7 -ல் சுக்கிரன்; 8-ல் குரு; 10 -ல் சனி(வ); 11 -ல் செவ்வாய், கேது; 5 -ல் ராகு

மீனராசி அன்பர்களே!
இந்த மாதம் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய மாதமாக அமையும். எந்த ஒரு செயலையும் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. மனதில் தேவையில்லாத  சஞ்சலமும், அதனால் கவலை யும் ஏற்பட்டாலும் குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி, வெற்றி ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கலாம். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக் கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும். சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் மிகுந்த நன்மையைப் பெறுவீர்கள். உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். விசேஷங்களிலும் விருந்துகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.

பணியாளர்களுக்கு சீரான வளர்ச்சி இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறுவதில் சற்று தாமதம் ஏற்படலாம். பணியின் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். பணிச்சுமை அதிகரிக்கும். யாரையும் நம்பி பொறுப்பினை ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. 

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடலாம். எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கவும். 

கலைஞர்களுக்கு இதுவரை இருந்த தடையும், சோர்வும் நீங்கும். இதுநாள் வரை உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். விரும்பிய மேற்படிப்பில் சேர்ந்து படிப்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் பொறுமையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லவும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19 25, 27, 29, ஆக 1, 2, 6, 7, 15
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 20, 21, ஆக 16

பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம், ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு.