Published:Updated:

ராசிபலன் - மே 9 முதல் 22 வரை

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன் - மே 9 முதல் 22 வரைதன்னம்பிக்கையுடன் சாதிப்பவர்களே! புதன் ராசிக்குள் நிற்பதால், இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எனினும் எதிர்பாராத செலவுககளால் சேமிப்புகள் கரையும். கண், காது, பல்வலி வந்து போகும்.  பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். முதுகு மற்றும் மூட்டுவலி வந்து போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

அஷ்டமத்துச் சனி தொடர்வதால், சொத்து வாங்குவதற்கு முன்பாக தாய்ப்பத்திரத்தை சரி பார்த்து வாங்க வேண்டும். சுக்கிரன் 12-ல் மறைந்து நிற்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வெளியூர்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பைப் பார்த்து மேலதிகாரி வியப்பார். சம்பளம் - பதவி உயர்வு உண்டு. கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். 

சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் தருணம் இது.

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ராசிபலன் - மே 9 முதல் 22 வரை


மற்றவர்களின் மனதைப் புரிந்துகொள்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிக்க உதவி கிடைக்கும். சொத்து சேர்க்கையும் உண்டு. உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள்.

சூரியன் சாதகமாக இல்லாததால், முன்கோபம், தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து போகும். கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். குரு சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். செவ்வாய் ராசிக்குள்ளேயே நிற்பதால் சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் அதிரடியான முடிவுகளை எடுத்துவிடாதீர்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் சென்றுவிடுவதால், வேலைப்பளு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களும் வியக்கும்படி நடந்துக்கொள்வீர்கள். கலைத் துறையினரே! சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

விடாமுயற்சியுடன் இலக்கை எட்டும் வேளை இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன் - மே 9 முதல் 22 வரைதன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்களே! சுக்கிரனும், ராசிநாதன் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். 12-ல் செவ்வாய் மறைந்திருப்பதால், வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும்.

மே 13-ம் தேதி வரை சூரியன் லாப வீட்டில் நிற்பதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். வீடு கட்ட அரசிடமிருந்து ப்ளான் அப்ரூவல் வந்து சேரும். குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். கலைத் துறையினரே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

எதையும் சாதித்துக் காட்டும் நேரம் இது.

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

ராசிபலன் - மே 9 முதல் 22 வரை


சூழ்நிலைக்குத் தக்கபடி பேசுபவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், மனப்போராட்டங்கள் ஓயும். வீடு, மனை வாங்க, விற்க மேற்கொள்ளும் முயற்சிகள் பலிதமாகும். கணவன்-மனைவி மனம்விட்டுப் பேசுவார்கள். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

சனி பகவான் 5-ல் நிற்பதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். சொந்தங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். செவ்வாய் வலுவாக இருப்பதால், சகோதரியின் திருமணம் முடியும். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைகள் நீங்கும். பதவிகள் தேடி வரும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். பங்குதாரர்களுடன் இருந்துவந்த பகை நீங்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

சூழ்ச்சிகளை முறியடித்து சாதிக்கும் காலம் இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன் - மே 9 முதல் 22 வரைதொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்களே! செவ்வாய் 10-ல் நிற்பதால், சவாலான விஷயங்களைக்கூட சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. குரு பகவான் சாதகமாக இருப்பதால்,  பணவரவு கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப்பத்திரத்தை மீட்பீர்கள். 

மே 13-ம் தேதி வரை 9-ல் சூரியன் நிற்பதால், தந்தையின் உடல்நலம் பாதிக்கும். வீண் டென்ஷன், வேலைச்சுமை வந்து போகும். அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் ஏற்படும். 14-ம் தேதி முதல் சூரியன் 10-ல் அமர்வதால், தந்தையுடன் இருந்த மோதல்கள் விலகும். அவரின் உடல்நலமும் சீராகும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். இழுத்தடித்துக் கொண்டிருந்த பாக்கிகளை நயமாக பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் இருந்து வந்த கசப்பு உணர்வு விலகும். கலைத் துறையினரே! விருப்பங்கள் பூர்த்தியாகும்.

அடிப்படை வசதிகள் பெருகும் தருணம் இது.

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

ராசிபலன் - மே 9 முதல் 22 வரை


கலை உணர்வு கொண்டவர்களே! சுக்கிரன் 7-ல் அமர்ந்திருப்பதால், கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சீராகும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். ஜன்ம குரு தொடர்வதால் மன உளைச்சல், ஏமாற்றம் வரக்கூடும். பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு வேண்டாம்.

செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால், சகோதரர்கள் உங்களைப் புரிந்துக்கொள்வார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சூரியனின் சஞ்சாரம் சரியில்லாததால், முக்கியமான வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரில் சென்று முடிப்பது நல்லது. அரசாங்க வேலை விரைவில் முடியும். தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினரே! புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் வேளை இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன் - மே 9 முதல் 22 வரைநீதியின் பக்கம் நிற்பவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தந்தை வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். ஆனால், ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், வீண் செலவுகள் வந்து போகும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

செவ்வாய் 8-ல் அமர்ந்திருப்பதால், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம். சகோதரர்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணம் எவ்வளவு வந்தாலும், எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் அதிகரிக்கும். ராகு வலுவாக இருப்பதால், பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். சில வேலைகளை நீங்களே முன்னின்று செய்வது அவசியம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். கலைஞர்களே! சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

நல்லவர்களின் நட்பால் சாதிக்கும் நேரம் இது.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

ராசிபலன் - மே 9 முதல் 22 வரை


எப்போதும் செய்நன்றி மறவாதவர்களே! சுக்கிரன் 5-ல் அமர்ந்திருப்பதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். செவ்வாய் 7-ல் அமர்ந்திருப்பதால் மறதி, ஹார்மோன் பிரச்னைகள் வந்து போகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஒரு சொத்தை விற்று, மறு சொத்து வாங்குவீர்கள்.

மே 13-ம் தேதி வரை சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் இடர்ப்பாடுகள், சிக்கல்களைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். ஆனால், புதன் மறைந்திருப்பதால் பழைய நண்பர்கள் உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் மதிக்கப்படுவீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

திறமைகள் வெளிப்படும் காலம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன் - மே 9 முதல் 22 வரைஇரக்க மனம் கொண்டவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், வரவேண்டிய பணம் வரும். சொந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். சுக்கிரன் வலுவாக நிற்பதால், திட்டமிட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். மகளுக்கு எதிர்பார்த்த இடத்தில் நல்ல வரன் அமையும். நவீனப் பொருள்கள் வாங்குவீர்கள்.

மே 13-ம் தேதி வரை சூரியன் 5-ல் நிற்பதால், கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் வீண் அலைச்சல் வரக்கூடும். குரு 10-ல் நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். செவ்வாய் 6-ல் அமர்ந்திருப்பதால், வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சகோதரர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கலைத்துறையினரே! பரபரப்பாக இருப்பீர்கள்.

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் தருணம் இது.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

ராசிபலன் - மே 9 முதல் 22 வரை


விட்டுக் கொடுத்துச் செல்பவர்களே!  ராசிநாதன் சனி பகவான் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், அரசு காரியங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். சுக்கிரன் 3-ல் நிற்பதால், விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணையின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

5-ல் செவ்வாய் நிற்பதால், பிள்ளைகள் பொறுப்பில்லாமல் நடந்துக்கொள்வதாக நினைப்பீர்கள். அவர்களின் கல்லூரி, பள்ளிச் சேர்க்கையை போராடி முடிப்பீர்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற, மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். சகோதர வகையில் சச்சரவு வரும். ஆனாலும், 9-ல் குரு சாதகமாக இருப்பதால், தன்னம்பிக்கை துளிர்விடும். பிரபலங்களின் நட்பு கிட்டும்.  வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிட்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

அமைதி காக்க வேண்டிய வேளை இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

ராசிபலன் - மே 9 முதல் 22 வரைதர்மம் செய்வதை விரும்புபவர்களே! சுக்கிரன் 2-ல் நிற்பதால், அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். பழைய இனிமையான நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள். செவ்வாய் 4-ல் அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். டென்ஷன் வந்து போகும். வாகனம் பழுதடையும். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

ஆனால், மே 13-ம் தேதி வரை சூரியன் வலுவாக இருப்பதால், பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புதன் சாதகமாக இருப்பதால், பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதம் விலகும். குரு சாதகமாக இல்லாததால் வீண் அலைச்சல், செலவுகள் வந்து போகும். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத்துறையினரே! உங்கள் புகழ் கூடும்.

கறாராகப் பேசி சாதிக்கும் நேரம் இது.

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

ராசிபலன் - மே 9 முதல் 22 வரை


புதிய சிந்தனை  உள்ளவர்களே! ராசிக்குள் சுக்கிரன் நிற்பதால், ஓரளவு பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். செவ்வாயும், மே 14-ம் தேதி முதல் சூரியனும் 3-ல் அமர்வதால், திடீர் யோகம் உண்டாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.

வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். முன்பணம் கொடுத்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து மீட்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டு. சகோதரர்கள் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். ராசிநாதன் குரு சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களைப் பற்றிய வதந்திகள் விலகும்.

எதிர்பாராத  நன்மைகள் சூழும் காலம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு