தொடர்கள்
Published:Updated:

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

அசுவினி, பரணி  கிருத்திகை 1-ம் பாதம்

ண்ணியதை முடிப்பவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 4-ல் ராகுவும் 10-ல் கேதுவும் சஞ்சரிக்க உள்ளார்கள்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்ராகுவின் பலன்கள்:  எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் உத்தியோகம், உயர் கல்வி தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். எந்த ஒரு காரியத்திலும், பலமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது.

 ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 4.4.18 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டா கும். இளைய சகோதர வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் அன்பு குறையாது. செலவுகள் துரத்தும்.

5.4.18 முதல் 10.12.18 வரை சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் ராகு செல்வதால், ஓரளவு வசதி வாய்ப்புகள் பெருகும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள்.

11.12.18 முதல் 13.2.19 வரை குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் சஞ்சாரம் செய்வதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வீடுகட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். பொருள்கள் களவு போகக்கூடிய வாய்ப்புண்டு.

மாணவ மாணவியருக்கு இலக்கியப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில், புதியவர்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை அவ்வப்போது அறிந்துகொள்வது நல்லது. தற்போது கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச் சுமையால் மன இறுக்கம் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். சிலர் உத்தியோகம் தொடர்பாக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு, வெளிமாநிலம் செல்லக்கூடிய நிலை உண்டாகும். கலைத்துறையினரே! வதந்திகளைக் கடந்து முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருக்கவும்.

கேதுவின் பலன்கள்: தற்போது கேது 10-ம் வீட்டில் அமர்வதால், ஒரேநேரத்தில் பல வேலைகளையும் பார்க்கவேண்டி இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராட வேண்டியிருக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது நல்லது. பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் ஏற்படும். உங்களைவிட வயதில் குறைந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். நேர்முகத் தேர்வு முடிந்தும் வேலைக்கான உத்தரவுக்காகக் காத்திருக்கும் சூழ்நிலை உண்டாகும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை அவிட்டம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், புதிய பதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். சகோதரர்கள் உதவுவர். உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி போன்ற உபாதைகள் உண்டாகும்.

30.11.17 முதல் 6.8.18 வரை திருவோணம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். ஆனால், தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் சுலபமாக முடியும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

7.8.18 முதல் 13.2.19 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2,3,4-ம் பாதம் மகர ராசியில் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதால், எதிலும் தெளிவாக முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகள் கோபப்பட்டாலும் அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீகச் சொத்தில் பிரச்னை உண்டாகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புது முயற்சிகள், முதலீடுகள் வேண்டாம். வேலையாட்கள் மற்றும் பங்குதாரர்களால்  பிரச்னை உண்டாகும். உத்தியோகத்தில் நிலைமை யைத் தக்கவைத்துக்கொள்ள போராட வேண்டி இருக்கும். கிடைக்கவேண்டிய சலுகைகள் தள்ளிப் போகும்.

மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி, உங்களைப் பிரச்னைகளில் சிக்கவைத்தாலும் ஓரளவு முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: திங்கட்கிழமைகளில், விழுப்புரத்துக்கு அருகேயுள்ள திருவாமாத்தூர் சென்று, அருள்மிகு காமார்த்தேஸ்வரரை வணங்கி வாருங்கள்.

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்


நினைத்ததை முடிப்பவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 9-ல் கேதுவும் அமர்ந்து பலன் தர உள்ளார்கள்.

ராகுவின் பலன்கள்: இதுவரை  4-ல் இருந்த ராகு தைரிய ஸ்தானத்தில் அமர்வதால், தடைகளைத் தகர்த்து முன்னேறுவீர்கள். முடியாமல் தடைப்பட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும். எதிலும் வெற்றி உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தன - பூர்வ புண்ணியாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால், புதிய சிந்தனைகள் உதயமாகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை விரிவுபடுத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

5.4.18 முதல் 10.12.18 வரை ராகு பகவான் உங்களின் யோகாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களின் அஷ்டம - லாபாதிபதியான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 முடிய ராகு பகவான் பயணிப்பதால், வீண் அலைச்சல், பணப்பற்றாக்குறை வந்து நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, ஒற்றைத் தலை வலி, நெஞ்சு எரிச்சல் போன்ற ஆரோக்கியக் குறை பாடுகள் உண்டாகும். மாணவ மாணவியருக்கு, விரும்பிய பாடப்பிரிவில், விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு இடம் கிடைக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து, லாபத்தைப் பெருக்குவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். அரசாங்க வகையில் நெருக்கடிகள் நீங்கும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கட்டட உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, ஸ்பெஷாக்குலேஷன், துரித உணவகம் போன்ற வகைகளில் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத் தில் அதிகாரிகளின் மனநிலைக்கேற்ப உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக்கிடக்கும் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சிலருக்கு வெளிநாடு அல்லது வெளிமாநிலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரும். கலைத் துறையினரே! வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரும்.

கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 9-ல் அமரும் கேது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வார். வேலைச்சுமை குறையும். தோல்வி மனப்பான்மை விலகும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர்த் திருப்பங்கள் உண்டாகும். பூர்வீகச் சொத்து வகையில் பிரச்னைகள் தலைதூக்கும். புதிதாக அறிமுகமாகும் நபர்களால் ஆதாயம்  உண்டாகும்.

 கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் சப்தம - விரயாதி பதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், எதிர்பாராத திடீர் முன்னேற்றம் உண்டா கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்துகள் சேரும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். உங்களின் திரிதியாதி பதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சில நேரங்களில் சளித் தொந்தரவு, கழுத்துவலி வந்து நீங்கும்.   7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீங்கும்.  கேதுவால் அவ்வப்போது சவால்களை எதிர் கொண்டாலும், ராகுவின் அனுக்கிரகத்தால் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி, உங் களது திறமையை வெளிப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: பூச நட்சத்திரத் திருநாளில், திருவாரூர் புற்றிடங்கொண்ட ஈஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்.

மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்அநியாயங்களைத் தட்டிக் கேட்பவர்களே!

27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் அமர்ந்து தரக்கூடிய பலன்களைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்: வாக்குஸ்தானத்தில் ராகு அமர்வதால், முன்யோசனையுடன் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. பணம்வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். கண் பார்வையை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. குடும்பத்தினரிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொள்வது நல்லது. திடீர் செலவுகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்குக் காலில் அடிபட வாய்ப்பு இருக்கிறது.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ராசியாதிபதியும் சுகாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால், திடீர் பணவரவு உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள்.தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.

5.4.18 முதல் 10.12.18 வரை உங்களின் யோகாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தை வழி சொத்து கைக்கு வரும். வழக்கில் வெற்றி உண்டாகும்.

11.12.18 முதல் 13.2.19 வரை உங்களின் சப்தமாதிபதியும் ஜீவனாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் ராகு செல்வதால், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். இழந்த செல்வாக்கை மறுபடியும் பெறுவீர்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணைக்கு சிறு அளவில் ஆரோக்கியப் பாதிப்பு உண்டாகும். சிலரால் வீண்பழியும் ஏற்படக்கூடும். மாணவ மாணவியர் சமயோசிதமாக நடந்துகொள்ள வேண்டும். விளையாடும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். அறிமுகமில்லாத தொழில்களில் முதலீடு செய்ய வேண்டாம். பங்குதாரர்கள் சற்று முரண்டு பிடிக்கவே செய்வார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் வரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகளைப் போராடித்தான் பெற வேண்டும். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருக்கவும். சின்னச்சின்ன வாய்ப்புகளையும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கேதுவின் பலன்கள்: கேது பகவான் 8-ல் அமர்வதால், உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ப ஆதாயமும் உண்டாகும். புதிய நண்பர்களை நம்பி, எந்த முடிவும் எடுக்க வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்வதில் கவனமாக இருக்கவும்.

 கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், ஒருவித பதற்றமும் காரியங்களில் தடையும் ஏற்படக்கூடும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப்போகும். உங்களின் தனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். 7.8.18 முதல் 13.2.19 வரை திரிதியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2,3,4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், மனோவலிமை அதிகரிக்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் சில நேரங்களில் ஆர்வமில்லாமல் போகக்கூடும். சக ஊழியர்களைப் பற்றி குறை கூறி பேசாதீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

இந்த ராகு - கேது மாற்றம், பொருளாதார ரீதியில் உங்களைப் பின்தங்க வைத்தாலும், நடுநிலையான முடிவுகளால் தர்மசங்கடங்களைச் சமாளித்து முன்னேற வைக்கும்.

பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருஆலம் பொழில் எனும் தலத்துக்குச் சென்று ஸ்ரீஆத்மாரதேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சித்து வணங்குங்கள்.

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்


தையும் திருத்தமாகச் செய்பவர்களே!

ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் 27.7.17 முதல் 13.2.19 வரை அமர்ந்து பலன் தர இருக்கிறார்கள்.

ராகுவின் பலன்கள்: அனுபவபூர்வமாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகைக் கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். ஆனால், ராசியிலேயே ராகு அமர்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்கள் விமர்சித்தாலும் பொருட்படுத்தாமல் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்தவும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் விரயாதிபதியும் திரிதியாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால், உற்சாகம் பிறக்கும். பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளின் திருமணம் நிச்சயமாகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். 

   5.4.18 முதல் 10.12.18 வரை உங்கள் சப்தமாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் செல்வதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். அவ்வப்போது சின்னச் சின்னக் கவலைகள் வந்து நீங்கும்.

உங்கள் சஷ்டமாதிபதியும் பாக்கியாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பகவான் செல்வதால், நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். புது வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.
வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் இருந்த சிக்கல்கள் விலகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். மாணவ மாணவியர் தங்கள் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆய்வகங்களில் பரிசோதனையில் ஈடுபடும்போது கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கத்தான் செய்யும். வியாபாரம் ஒரு நேரம்போல் மறு நேரம் இருக்காது. வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். அதனால் வேலைச்சுமை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தரமான பொருள்களை விற்பதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். அதிகாரிகளுடன் சின்னச்சின்ன மோதல்கள், விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும். உரிமைகளுக்காகப் போராட வேண்டியிருக்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை ரகசியமாக வைக்கவும். சிலர் உங்கள் மீது வழக்கு தொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.   

கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 7-ல் கேது அமர்வதால், ஏமாற்றம் மற்றும் குழப்பங்களில் இருந்து மீள்வீர்கள். மனதில் தைரியம் பிறக்கும். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். முடிந்தவரை சகிப்புத் தன்மையுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் தொடர்பைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:  27.7.17 முதல் 29.11.17 வரை உங்கள் ஜீவனாதிபதி மற்றும் பூர்வ புண்ணியாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், புதிய திட்டங்கள் நிறை வேறும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ராசியாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரம் மகர ராசியில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது பகவான் செல்வதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்கள் தனாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2,3,4-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கம்பீரமாகப் பேசி, காரியம் சாதிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் இணக்கமாகப் பழகுவது நல்லது.

இந்த ராகு - கேது பெயர்ச்சி, சிறிது ஆரோக்கியக் குறைவையும், நிம்மதியின்மையையும் தந்தாலும், மற்றவர்களைப் புரிந்துகொள்ள வைத்து முன்னேற்றம் அடையச் செய்யும்.

பரிகாரம்: நாகப்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ளது கீழையூர். திருவோண நட்சத்திர நாளில் இவ்வூருக்குச் சென்று, சேஷசயனப் பெருமாளை வழிபடுங்கள்; வாழ்க்கைச் சிறக்கும்.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்திலும் முதலிடத்தை விரும்புபவர்களே!

 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 12-ல் ராகுவும் 6-ல் கேதுவும் அமர்ந்து பலன் தர இருக்கிறார்கள்.

ராகுவின் பலன்கள்: ராகு பகவான் 12-ல் செல்வதால், சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக முடியும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவர். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். ஆனால், ராகு விரயத்தில் இருப்பதால், எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். செலவுகள் எதிர்பார்த்ததை விடவும் அதிகரிக்கும். அடிக்கடி கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தனாதிபதியும் லாபாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகைக் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.  5.4.18 முதல் 10.12.18 வரை உங்கள் சஷ்டமாதிபதியும் சப்தமாதிபதியு மான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால், மறைமுக எதிர்ப்புகள் தோன்றக்கூடும். வீண்பழி ஏற்படும். உங்களின் அஷ்டமாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பகவான் செல்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லபடி முடியும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டு வேலை கிடைக்கும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.  மாணவ மாணவியருக்கு விரும்பிய கல்வி கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் சமாளிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவருவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். மூத்த அதிகாரி உங்களை நம்புவார். நிலுவையில் இருக்கும் சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

கலைத்துறையினரே! எதிர்பாராத பெரிய வாய்ப்புகள் வரும். யதார்த்தமான படைப்புகளால் பாராட்டும் பரிசும் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 6-ல் கேது பகவான் அமர்வதால், மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.  வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குச் சொந்த இடம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். தடைப்பட்டு வந்த திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்கள் யோகாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், அதிரடி முன்னேற்றம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலதிபர்கள் உதவுவார்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.  உங்களின் விரயாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது பகவான் செல்வதால், சுபச் செலவுகள் அதிகரிக் கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

7.8.18 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிநாதன் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். புது முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுடன் இணக்கமாக நடந்துகொள்வார். உழைப்புக்கேற்ற சலுகை கிடைக்கும். பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.

இந்த ராகு - கேது பெயர்ச்சி, சின்னச்சின்ன பிரச்னைகளைத் தந்தாலும், கேதுவால் நீண்டகாலக் கனவுகள் நனவாகும்.

பரிகாரம்: சுவாதி நட்சத்திர நாளில், விருத்தாசலம் அருகிலுள்ள ராஜேந்திரபட்டணம் எனும் ஊரில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீநீலமலர்கன்னியம்மை உடனுறை ஸ்ரீநீலகண்டநாயகேஸ்வரரை  வழிபடுங்கள்; சுபிட்சங்கள் கூடும்.

உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்


மயோசித புத்தியுடன் செயலாற்றுபவர்களே! உங்களுக்கு 27.7.17 முதல் 13.2.19 வரை ராகு லாப வீட்டிலும், கேது 5-ம் வீட்டிலும் அமர்ந்து பலன் தரப் போகிறார்கள்.

ராகுவின் பலன்கள்: ராகு உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டுக்கு வருவதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் தம்பதிக்கிடையே சந்தோஷம் குடிக்கொள்ளும். வீண் செலவுகளைக் குறைப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்வியில் பிள்ளைகளின் நிலை உங்களைத் தலைநிமிரச் செய்யும். உங்களில் சிலருக்குப் புது வேலை கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஷேர் மூலமாகப் பணம் வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 
  
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் ராசியாதிபதியும் ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால், இந்தக் காலகட்டத்தில் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

5.4.18 முதல் 10.12.18 வரை உங்களின் ஜீவனாதிபதியும் லாபாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் ராகு செல்வதால், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணத்தை நடத்துவீர்கள். பழைய கடன் பிரச்னை ஒன்று தீரும்.

11.12.18 முதல் 13.2.19 வரை, உங்களின் சுக - சப்தமாதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம், கடக ராசியில் ராகு பயணிப்பதால், சிக்கனம் அவசியம். தாயாரின் உடல்நிலை பாதிப்படையலாம். பணவரவுக்குக் குறைவிருக்காது. கன்னிப்பெண்களுக்கு, மனதுக்கு இனிய கணவன் வாய்ப்பான். மாணவர்களின் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். கலைத்துறையினரே! உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மூத்தோர் நட்பால் சாதிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்: கேது பகவான் தற்போது, உங்கள் ராசிக்குப் பூர்வபுண்ணிய வீடான 5-ம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். முடிவுகள் எடுப்பதில் குழப்பம், எடுத்த காரியங்களில் தடை தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை பெரிதாகும். புதியவர்களை நம்ப வேண்டாம். குடும்பத்தினருடன் செலவிடக்கூடிய நேரம் குறையும். பழைய கடன் பிரச்னையை நினைத்துப் புலம்புவீர்கள்.

வாகனம் பழுதாகி சரியாகும். முகஸ்துதி செய்பவர்களை நம்ப வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். மகளின் திருமணத்துக்காக வெளியே கடன் வாங்கவேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் திரிதிய, அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், இந்தக் காலகட்டத்தில் சகோதரர்களால் நிம்மதி கெடும். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் உண்டாகலாம். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும்; சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 

உங்களின் லாபாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். புது பதவிகள், பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் விரயாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், செலவுகள் துரத்தும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்யுங்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். வேலைச் சுமை அதிகரிக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.

மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி,  உங்கள் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன் பணம், பதவியைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஏகாதசி திதி நாளில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்- ஸ்ரீவடபத்ரசயனரை வணங்கி வழிபடுங்கள்; வாழ்க்கை வரமாகும்.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்ன்பின் அடையாளமாக இருப்பவர்களே! உங்களுக்கு 27.7.17 முதல் 13.2.19 வரையில் ராகு 10-லும், கேது 4-லும் அமர்ந்து பலன் தரப்போகிறார்கள்.

ராகுவின் பலன்கள்: ராகு 10-ல் வந்தமர்வதால், இதுவரையிலும் உழைத்ததற்கான பலன்களை அறுவடை செய்வீர்கள்.  நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு உண்டு. சுயதொழில் செய்யும் வல்லமை உண்டாகும். உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். எனினும், உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் வரும். 
   
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பாக்கிய ஸ்தானாதிபதியும் விரயாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால் இந்தக் காலகட்டத்தில், தடைப்பட்ட காரியங்கள் நல்லவிதமாக நிறைவடையும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். அலர்ஜி, சிறுநீரகத் தொற்று, தூக்கமின்மை வரக்கூடும்.

5.4.18 முதல் 10.12.18 வரை ராகு உங்களின் சுக பூர்வ புண்ணியாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வீடு, மனை, வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களின் சஷ்டம திரிதியாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பயணிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். தலைக்கவசம் அணிந்துசெல்வது நல்லது. பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம்.  மாணவர்களே! எதிர்பார்க்கும் கல்விப் பிரிவைப் பெறுவதற்கு அதிகம் போராட நேரிடும். பெண்களுக்குக் கல்யாணப் பேச்சுவார்த்தை தாமதமாக முடியும்.  அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில், பற்று வரவு கணிசமாக உயரும்.  ராகு 10-ம் வீடான உத்தியோகஸ்தானத்தில் அமர்வதால், பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிவரும். எதிர்பார்த்த சம்பள உயர்வும் தாமதமாகும். ஒருவித அச்சம் இருந்துகொண்டே இருக்கும். எனினும், அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கேதுவின் பலன்கள்: கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் வந்தௌ அமர்வதால், குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்குத் திருமணம் முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. அரசாங்க வரிகள் செலுத்துவதில் தாமதம் வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பசியின்மை, ரத்த அழுத்தம், வயிற்றுப் புண் வரக்கூடும்.   

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் தன சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம், 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால்,  இந்தக் காலகட்டத்தில் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர். சகோதரர்களுடன் வீண் விவாதங்கள் எழும்.

உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில், 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால் சவாலான காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஷேர் லாபம் தரும். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் லாபாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். மூத்த சகோதரர்களால் பலனடைவீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும்.  வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில், உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இல்லையே எனப் புலம்புவீர்கள். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள்.

மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி, சகிப்புத் தன்மையாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யாலும் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

பரிகாரம்: திருவோண நட்சத்திர நாளில், சிங்கப்பெருமாள்கோவில் அருகிலுள்ள திருக்கச்சூர், கச்சபேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்; மனம் மகிழ வரம் கிடைக்கும்.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்


பெ
ருந்தன்மையான குணமுள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் ராகுவும் 27.7.17 முதல் 13.2.19 வரை சஞ்சரிக்க உள்ளார்கள்.

ராகுவின் பலன்கள்:  உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் அமரும் ராகு, எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையைத் தருவார். செயற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வருமானத்தை உயர்த்த திட்டமிடுவீர்கள். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். ஆனால், 9-ல் இருக்கும் ராகுவால், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும். அவருடன் கருத்து வேறுபாடு வரக்கூடும். பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் பிரச்னைகள் தோன்றக்கூடும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:   உங்களின் அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். 5.4.18 முதல் 10.12.18 வரை உங்களின் திரிதியாதிபதியும் சுகாதிபதியுமான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால், புதிதாக வீட்டு மனை வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வழக்குகளில் கவனமாக இருக்கவும். தாயாரின் உடல்நலனில் அக்கறை காட்டவும். ஆன்மிகப் பெரியவர்களின் உதவி கிடைக்கும். உங்களின் தனஸ்தானாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பகவான் செல்வதால், குழந்தை பாக்கியம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவ மாணவியர் அன்றைய பாடங்களை அன்றே நன்றாகப் படித்து, கிரகித்துக்கொள்வது அவசியம். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.   வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வியாபார நுணுக்கங்களை அறிந்துகொண்டு செயல்படுவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைத்துறை யினர்களே! படைப்புகளை வெளியிடுவதில் யோசனை எதுவும் வேண்டாம்.

கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு தைரியஸ்தானமான 3-ம் இடத்தில் கேது அமர்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மனவலிமை கூடும். பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தினருடன் வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள்.கௌரவப் பதவிகள் தேடிவரும். இளைய சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்கள் ராசிநாதனும் சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்ட நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், தைரியம் அதிகரிக்கும். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அலைச்சல் இருந்தாலும் நினைத்ததை முடிப்பீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். சொத்துகள் விஷயத்தில் இருக்கும் இழுபறி நிலை மாறும். உங்களின் பாக்கியாதிபதியான சந்திரனின் திருவோண நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது பகவான் செல்வதால், செயலில் வேகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். ஆனால், தந்தையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், அவருடன் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் செல்வாக்கு கூடும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாகும். புதிய பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.

மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி, புதிய அனுபவங்களைத் தந்து வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதாக அமையும்.

பரிகாரம்: துவாதசி நாளில், நாகை மாவட்டம், சிக்கலுக்கு அருகில் உள்ள ஆவராணி என்னும் தலத்தில் அருளும் ஸ்ரீஅலங்காரவல்லி உடனுறை ஸ்ரீஅனந்தநாராயண பெருமாளைத் தரிசித்து வாருங்கள்; இன்னல்கள் நீங்கி நன்மைகள் சேரும்.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்யர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் அமர்ந்து பலன் தரப் போகிறார்கள்.

ராகுவின் பலன்கள்: ராகு 8-ல் மறைவதால், மன அமைதி உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடி முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிதுர்வழி சொத்துகளைப் பெறுவதில் இருந்த தடைகள் விலகும். ஆனால், ராகு 8-ல் இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சப்தமாதிபதியும் ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், மறைந்துகிடக்கும் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.  5.4.18 முதல் 10.12.18 வரை ராகு பகவான் உங்கள் தனாதிபதியும் திரிதியாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தைரியமாக முடிவெடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். புது வாகனம் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.  உங்கள் ராசியாதிபதியும் சுகாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பகவான் செல்வதால், மனதில் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ மாணவியர் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விரும்பிய பாடப்பிரிவில் சேர, சிலரின் சிபாரிசு தேவைப்படும்.
வியாபாரத்தில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு முதலீடு செய்யாதீர்கள். வாடிக்கையாளர்களிடம் பக்குவமாகப் பேசுவது அவசியம். வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது. பங்குதாரர்கள் அனுசரித்து நடந்துகொள்வார்கள்.  உத்தியோகத்தில் தொல்லை கொடுத்த மேலதிகாரியே முக்கியப் பொறுப்புகளைத் தருவார். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளைத் தருவதில் கவனம் செலுத்தவும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மூத்த கலைஞர்களால் உதவி கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 2-ல் கேது அமர்வதால், சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். அத்தியாவசியமான செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்கவும். வழக்கறிஞர்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். தொலைந்துபோன ஆவணம் ஒன்று கிடைக்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதி மற்றும் விரயாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், மதிப்பு மரியாதை கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். அரசால் ஆதாயம் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். உங்கள் அஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால், மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பணப் பற்றாக்குறை நீங்கும்.  வேலை கிடைக்கும்.உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், வராது என்று நினைத்திருந்த பணம் திரும்பக் கிடைக்கும். தந்தையுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.  வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வேலை காரணமாகச் சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த ராகு - கேது பெயர்ச்சி, புதிய படிப்பினை களைத் தருவதுடன், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற மனத் தெளிவையும் தருவதாக இருக்கும்.

பரிகாரம்: திருப்பூருக்கு அருகிலுள்ள அவினாசியில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅவினாசியப்பரைப் பிரதோஷ நாளில் சென்று தரிசித்து வழிபட்டு வரவும்; பிரச்னைகள் யாவும் நீங்கும்.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்


தர்மங்களை எதிர்த்து நிற்பவர்களே! உங்களுக்கு 27.7.17 முதல் 13.2.19 வரை, ராகு ஏழிலும் கேது ராசியிலும் அமர்ந்து பலன் தரப் போகிறார்கள்.

ராகுவின் பலன்கள்: ராகு பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில்வந்து அமர்வதால், உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உற்சாகம் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பி-க்களின் நட்பால் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். எனினும், களஸ்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் ராகு அமர்வதால் கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போகவும். மனைவியின் உடல்நலனில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துகளைப் பராமரிப்பீர்கள். வயதில் குறைந்தவர்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மறதியால் பொருள் இழப்பு நேரிடும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சஷ்டம பாக்யாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், இந்தக் காலக்கட்டங்களில் தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, மனை வாங்குவீர்கள். திடீர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செல்வாக்குக் கூடும்.  5.4.18 முதல் 10.12.18 வரை ராகு பகவான் உங்களின் ராசிநாதனும், தனாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வழக்கு சாதகமாகும். அரசால் ஆதாயம் உண்டு. நிர்வாகத் திறமைக் கூடும். உங்களின் தைரியஸ்தானாதிபதியும், விரயாதிபதியு மான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 முடிய ராகு பயணிப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்குத் திருமணப் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படும். கலைத் துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்னச்சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். இயன்றவரையிலும் கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். கடையை மாற்றுவதில் அவசரம் வேண்டாம். உத்தியோகத்தில் உங்களின் கருத்துகளை மேலதிகாரியிடம் பதிவு செய்யவும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன் படித்துப் பாருங்கள்.

கேதுவின் பலன்கள்: கேது பகவான் உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால், இனிய பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். எனினும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வெளியூர் பயணங்களில் பாதுகாப்பு முக்கியம். ஆவணங்களைப் பத்திரப் படுத்துங்கள். இரவுப் பயணங்களைத் தவிர்க்கவும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:  27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் சுக லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம், உங்கள் ராசியிலேயே கேது பகவான் செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள், மூத்த சகோதரர் வகையில் அலைச்சல்கள் வந்து போகும். வீடு மனை வாங்கும்போது கவனம் தேவை. உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால்  மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது நகை வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு உண்டு. பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். இக்காலக் கட்டத்தில் திருவோணம் நட்சத்திரக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம், மகர ராசியில் கேது செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். ஆரோக்கியக் குறைவு ஏற்படும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும். வேலையாட்களின் பொறுப்பின்மையை நினைத்து வருந்துவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உரிமையை தக்கவைத்துக்கொள்ள நீதிமன்றம் செல்ல வேண்டிவரும்.

மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி, ஆன்மிகப் பலத்தால் உங்களுக்கு நிம்மதியை அளிப்பதாக அமையும்.

பரிகாரம்: சூரியனார்கோயிலுக்கு அருகிலுள்ள திருலோக்கி தலத்தில் அருளும் ஸ்ரீஷிராதிசயன பெருமாளைச் சனிக்கிழமைகளில் வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை வளமாகும்.

அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் எதிலும் புதுமையைப் புகுத்துபவர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 12-ல் கேதுவும் 27.7.17 முதல் 13.2.19 வரை அமர்ந்து பலன் தர உள்ளார்கள்.

ராகுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 6-ல் அமரும் ராகுவால், ராஜதந்திரமாக முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் பாசத்துடன் நடந்துகொள்வீர்கள். பிரிந்திருந்த கணவன்  மனைவி ஒன்று சேருவார்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணியைத் தொடங்க, வங்கிக் கடனுதவி கிடைக்கும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு சட்ட நிபுணர்களை அணுகித் தெளிவு பெறவும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்குப் பூர்வ புண்ணியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 5.4.18 முதல் 10.12.18 வரை உங்கள் ராசிநாதனும் விரயாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால், ஆளுமைத்திறன் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சிகள் பலிதமாகும். உங்களின் தனாதிபதியும் லாபாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பகவான் செல்வதால், பேச்சால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வழக்குகள் சாதகமாகும். மாணவ மாணவியருக்குத் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள்.  வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். பழைய வேலையாட்கள் மீண்டும் வந்துசேருவார்கள். வியாபாரத்தில் நண்பர்கள் உதவுவார்கள். பங்குதாரர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.  உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்துவந்த அவப்பெயர் நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்துகொள்வார்கள். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயம் உண்டாகும்.
   
கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 12-ல் கேது அமர்வதால், மனப்போராட்டங்கள் முடிவுக்கு வரும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். புதிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். செலவுகள் அதிகரிக்கும். வி.ஐ.பி-க்களின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் திரிதியாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், இளைய சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும். சொத்துகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர் களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களின் சஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது பகவான் செல்வதால், வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.  7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களிடையே மதிப்பு அதிகரிக்கும். பணிச்சுமையின் காரணமாகக் கூடுதல் நேரம் ஒதுக்கி, பணிபுரிய வேண்டி வரும்.

இந்த ராகு - கேது பெயர்ச்சி, அலைக்கழிக்கப்பட்ட உங்களுக்கு மனநிம்மதி தருவதுடன் பிரபலங்களின் பட்டியலில் இடம்பெறச் செய்யும்.

பரிகாரம்: மதுரைக்கு அருகில் உள்ள திருவாப்பனூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅம்பிகையம்மை உடனுறை ஸ்ரீஆப்பனூர்க்காரணாரைச் சதுர்த்தசி திதியன்று சென்று வழிபட்டு வர நன்மைகள் கூடும்.

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்


ற்றவர்களின் மன ஓட்டத்தை அறிவதில் வல்லவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்களுக்கு ராகு 5-ம் வீட்டிலும், கேது 11-ம் வீட்டிலும் அமர்ந்து பலன் தரப்போகிறார்கள்.

ராகுவின் பலன்கள்: ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு  5-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். குடும்பத்தில் இருந்த சச்சரவு ஓரளவு குறையும். தம்பதிக்கு இடையே மோதல்கள் விலகும். எனினும் சில தருணங்களில் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சிலர் கல்வி அல்லது பணியின்பொருட்டு, குடும்பத்தைப் பிரிய நேரிடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையைச் சுமுகமாக தீர்க்கப் பாருங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். மகனின் நட்புவட்டாரம் குறித்து  கவனம் தேவை. வழக்கில் அலட்சியம் வேண்டாம். வாகனத்தை இயக்கும்போதும் அலட்சியம் கூடாது. யோசித்து செயல்படுங்கள். தாய், தாய்மாமன் வகையில் மனத்தாங்கல் வரும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சுக, சப்தமாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், இக்காலக்கட்டங்களில் வேலைச்சுமை இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். வேலை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். போட்டிகளில் ஜெயிப்பீர்கள். 5.4.18 முதல் 10.12.18 வரை ராகு உங்களின் விரய லாபாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 முடிய ராகு பகவான் பயணிப்பதால் செல்வாக்கு கூடும். பணப்புழக்கம் உண்டு. மாணவர்கள் விளையாட்டு, இசைப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவார்கள். சிலர், உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். கன்னிப்பெண்களே! உங்களின் நீண்டகால கனவுகளில் ஒன்று நிறைவேறும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.  கலைத்துறையினரே! எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில், மற்றவர்களின் பேச்சைக் கேட்க வேண்டாம். சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்யுங்கள். பங்குதாரர்களிடம் நீங்கள் வளைந்துக் கொடுக்க வேண்டி வரும்.  வேலைச்சுமை இருந்தாலும், பாராட்டால் உற்சாகம் அடைவீர்கள்.

கேதுவின் பலன்கள்:  கேது பகவான் உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்து அமர்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் ஏற்பாடாகும். உங்களில் சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக்கூடும். புது பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை புரிந்துகொள்வீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் தன பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், இந்தக் காலகட்டத்தில் திடீர் யோகங்கள் உண்டாகும். பண வரவு உண்டு. சிலர், வீடு மாறுவீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். தந்தையாரின் உடல்நிலை சீராகும்.  உங்களின் பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால், குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வேலை கிடைக்கும். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், வழக்கில் வெற்றி கிடைக்கும். லாபம் இரட்டிப்பாகும். சிலர், சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும்.  
    
மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சியில் ராகுவின் நிலையால் மனச்சலனம் ஏற்பட்டாலும், கேதுவின் அருளால் நினைத்ததை முடிக்கும் வல்லமையைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருவாடானையில் அருளும் ஆதிரத்னநாயகேஸ்வரரை, சதுர்த்தசி திதி நாளில் சென்று வணங்கி வாருங்கள்; நல்லதே நடக்கும்.