தொடர்கள்
Published:Updated:

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!
பிரீமியம் ஸ்டோரி
News
கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி 

‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. மனிதராகப் பிறந்த ஒவ்வோர் ஆணும் பெண்ணும் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து, விதிக்கப்பட்ட தர்மங்களை அனுஷ்டித்து வாழ வேண்டும். அதுதான் பிறவிப்பயனும் ஆகும்.    

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. திருமணம் மட்டுமல்ல... நாம் பிறப்பது, வாழ்வது எல்லாமே முன்னரே எழுதப்பட்ட விதி ஆகும். நம்மைத் தோற்றுவிப்பதும், நம்மை வழிநடத்திச் செல்வதும், நாம் அடைய வேண்டியவற்றை அடையச்செய்வதும் நமது விதியே.

எனினும், மதியின் பலம் இருந்தால் விதியிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். நேர்வழியில் புத்தி இயங்கும்போது விதியினால் வரும் துன்பங்கள் விலகவே செய்யும். மனப்பக்குவம் பெற்றவர்கள் அதாவது, சந்திர பலம் பெற்றவர்கள் விதியின் கைப்பாவையாக இல்லாமல் விதியை மதியால் வெல்வார்கள்.

பலருக்கு, விதிவசத்தால் ஜாதகத்தில் திருமண தோஷம் அமைந்துவிடுவதுண்டு. அந்த தோஷம் அமையக்காரணமான கிரக நிலைகள் என்ன, அவற்றுக்கான பரிகாரங்கள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் இந்த இணைப்பிதழில் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

திருமண தோஷமும்  கிரக நிலைகளும்

சூரியன், தேய்பிறை சந்திரன் மற்றும் சந்திரனுடன்கூடிய பாப கிரகங்கள், செவ்வாய், பாபிகளுடன் சேர்ந்த புதன், சனி, ராகு, கேது ஆகிய பாப கிரகங்கள்... இவை, களத்திரகாரகனான சுக்கிரனுடனோ, 7-ம் வீட்டிலோ, 7-ம் வீட்டுக்கு அதிபதியுடனோ சேர்ந்திருப்பதும், பார்ப்பதுமான நிலை, திருமண தோஷத்தை விளைவிக்கும். பெண்களுக்குக் குரு, பர்த்துரு (கணவன்) காரகன் ஆவார். எனவே, பெண்களின் ஜாதகத்தில் குரு பலம் குறைந்திருக்கக் கூடாது.

ஜன்ம லக்னம், சூரிய லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம், குரு லக்னம் அதாவது சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு இருக்கும் இடத்திலிருந்து பிற கிரகங்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதையும்  கவனிக்க வேண்டும். அதாவது சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருந்தாலும் தோஷம்தான். பாப கிரகங்கள் இருந்தாலும் தோஷம்தான். எனினும், ஜன்ம லக்னமே எல்லாவற்றிலும் முக்கியமாகும். அதற்கடுத்ததாக சந்திர லக்னம் அதாவது ராசி முக்கியத்துவம் பெறும்.

திருமண தோஷம் விளைவிக்கும் சில கிரக அமைப்புகள்...

சூரியனும் சனியும் ஒருவருக்கொருவர் பகையாகி, களத்திர ஸ்தானமான 7-ல் இருப்பது, லக்னத்துக்கு இருபுறமும் பாப கிரகங்கள் இருப்பது. `பாப கர்த்தரி யோகம்' ஆகும்.

லக்னத்துக்கு 2-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பது, லக்னத்துக்கு 12-ல் சனி இருப்பது, சூரியனும் களத்திரகாரகன் சுக்கிரனும் ஒன்று சேர்ந்து, சுக்கிரன் அஸ்தமனம் அடைந்திருப்பது... இப்படியான நிலைகளும் தோஷத்தை அளிக்கும்.    

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

சுக்கிரன் ஆண் ஜாதகத்தில் 6, 8, 12-ல் மறைவது, களத்திர ஸ்தானாதிபதி அதாவது லக்னத்துக்கு 7-ம் வீட்டோன் 6, 8, 12-ல் மறைவது ஆகிய நிலைகளும் தோஷமாகும்.

சுக்கிரனும் 7-ம் வீட்டோனும் பாப கிரகங்களுடன் சேர்ந்து இருப்பது, நீச ராசியில் இருப்பது, பாப கிரகங்களின் பார்வையைப் பெறுவது... இந்த நிலைகளும் தோஷமே.

பெண்கள் ஜாதகத்தில் சந்திரனும் சனியும் சேர்வது, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது, செவ்வாய் 2, 4, 7, 8, 12-ல் இருப்பது, 7-ம் வீட்டுக்கும் சுக்கிரனுக்கும் பலம் குறைந்திருப்பது, நவாம்சத்தில் 7-ம் வீட்டோனும் சுக்கிரனும் பலம் குறைந்திருப்பது, ஜாதகத்தில் பூர்வ புண்ணிய பலம் குறைந்திருப்பது... இந்த நிலைகளும் தோஷத்தைக் குறிக்கும்.

இவை மட்டுமின்றி, பித்ரு தோஷம், களத்திர தோஷம், பெண் சாபம், செவ்வாய் தோஷம் இருப்பது... இதுபோன்ற காரணங்களாலும் ஒருவருக்குக் கல்யாண தோஷம் ஏற்படும்.

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

சில உதாரணங்கள்...

மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் ஒருவருக்கு 7-ம் இடத்துக்கு அதிபதி சுக்கிரன் ஆவார். அவரே களத்திரகாரகனும் ஆவார். சுக்கிரன் மேஷ லக்னத்துக்கு 6-ம் இடமான கன்னியில் அமர்ந்து நீசமாக இருந்தால், அவருடைய மண வாழ்க்கை பாதிக்கவே செய்யும்.

ஆனால், கன்னியில் இருக்கும் சுக்கிரனுக்குச் சுப கிரகங்களின் பார்வை இருந்து, சுக்கிரன் நீசபங்கம் பெற்று, இதர வர்க்கங்களிலும் சுப பலம் பெற்றிருந்தால், சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன்மூலம் திருமணம் நடைபெற வழி பிறக்கும். சுக்கிரனுக்குரிய பரிகாரத் தலமான ஸ்ரீரங்கத்துக்குச் சென்று மனமுருகிப் பிரார்த்தனை செய்துகொண்டால், தோஷம் விலகி நல்ல மண வாழ்க்கை அமையும்.

ஒருவர் விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு 7-ம் வீடான ரிஷபத்துக்கு உரியவர் சுக்கிரன். அவரே களத்திரகாரகனும் ஆவார். அவர் லக்னத்துக்கு 12-ம் இடமான துலாமில் இருந்தால், அந்த இடம் சுக்கிரனுக்கு ஆட்சி வீடாக இருந்தபோதிலும், திருமண வாழ்க்கை பாதிக்கவே செய்யும். பிரிவினை ஏற்படவும், மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படவும் கூடும்.

கடக லக்னத்தில் பிறந்திருக்கும் ஒருவருக்கு 7-ம் வீட்டுக்குரியவர் சனி ஆவார். சனி, லக்னத்துக்கு 12-ம் இடமான மிதுனத்தில் இருந்தால், திருமண வாழ்க்கை பாதிக்கவே செய்யும். மனைவிக்கு ஆரோக்கியக் குறைபாடு ஏற்படுவதுடன், கருத்து வேறுபாடு காரணமாகவும் பிரிவினை ஏற்படக்கூடும்.      

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

பொதுவாக கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்குச் சனி ஆதிபத்திய விசேஷம் இல்லாதவர் ஆவார். சனி 8-ம் வீட்டுக்கும் அதிபதி ஆவதால், துன்பங்கள் அதிகரிக்கவே செய்யும். களத்திரகாரகன் சுக்கிரன் பாதக ஸ்தானாதிபதி என்பதாலும், கேந்திராதிபத்திய தோஷம் உள்ளவர் என்பதாலும் சனி 8-ல் இருந்தால் திருமண வாழ்க்கையில் பல வகையான பிரச்னைகள் ஏற்படுவதுடன் சுகமும் குறையும்.

அதேபோல், குரு பலம் இருந்தால் மட்டுமே பரிகாரம் பலிதமாகும். குரு பலம் இல்லையென்றால், பரிகாரம் பலன் தராமல் போவதுடன் சங்கடங்களே உண்டாகும்.

சிம்ம லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு, 12-ம் இடமான கடகத்தில், களத்திரகாரகனான சுக்கிரன் கேதுவுடன் சேர்ந்து இருந்தால் திருமண வாழ்க்கை அமையாது.

இனி தோஷங்களுக்கான பரிகாரங்களைப் பார்க்கலாம்.  ஒருவருக்கு, ஜாதகத்தில் எந்தக் கிரகத்தால் தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து, அந்தக் கிரகத்துக்கு உரிய பரிகாரங்களைச் செய்வதன்மூலம் நிவாரணம் பெறலாம். அவ்வகையில் ஒவ்வொரு கிரகத்தாலும் ஏற்படும் தோஷத்துக்கு என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்வோமா?

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

சூரியனால் தோஷமா?

ஜோதிடரை அணுகும்போது, எந்தெந்தக் கிரகங்களால் கல்யாண தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். அவ்வகையில், சூரியனால் கல்யாண தோஷம் ஏற்பட்டிருந்தால், ஞாயிற்றுக்கிழமையில் அமிர்தயோகமோ, சித்தயோகமோ உள்ள காலை வேளையில் சூரியனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது அவசியமாகும்.

சூரியனார் கோயில் சென்று அங்குள்ள விநாயகருக்கு ரோஜா மாலை அணிவித்து, நெய் விளக்கேற்றி, அர்ச்சனை செய்துவிட்டு, பிறகு சூரியனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. அதேபோல், தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கு உதவுவதும், எருக்கு சமித்தால் ஹோமம் செய்வதும், அக்னி தேவனை வழிபடுவதும் சிறப்பாகும். சூரியனுக்கு அதிதேவதையான ருத்திரனுக்கு அர்ச்சனை ஆராதனை செய்வதுடன், திருவண்ணாமலை சென்று ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வழிபடுவது நன்மை தரும். கோதுமை தானம் கொடுக்கலாம்.

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

சந்திர தோஷம் தீரணுமா?

ந்திரனால் திருமண தோஷம் ஏற்பட்டு இருந்தால், திங்கள்கிழமையில் சிவபெருமானுக்குப் பசும்பால் அபிஷேகம் செய்வது சிறப்பாகும். சோமவார விரதம் இருப்பது மிகவும் நல்லது. திங்களூர் சென்று சந்திரனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்து, நெல் அல்லது பச்சரிசி தானம் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

வேத விற்பன்னர்களைக் கொண்டு பலாச சமித்தால் ஹோமம் செய்வது மிகவும் விசேஷமாகும்.அதேபோல் திருவானைக்காவல் சென்று இறைவனையும் அம்பிகையையும் வழிபடுவதால், தோஷம் நிவர்த்தியாகி நல்ல மண வாழ்க்கை அமையும். குறிப்பாக அங்கே உச்சிக் கால பூஜையின்போது அம்பிகையே சுவாமியை வழிபடுவதையும் பின்னர் கோபூஜை செய்வதையும் தரிசிப்பது மிகவும் சிரேஷ்டமான பலன்களைத் தரும்.

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

செவ்வாய் தோஷ பரிகாரம்...

செவ்வாயால் திருமணம் தோஷம் ஏற்பட்டிருந்தால், செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. வைத்தீஸ்வரன்கோவில் சென்று அங்காரகப் பிரீதி செய்துகொள்வது நல்லது.

பூமி தேவி வழிபாடும் ஆண்டாள் வழிபாடும் நலம் தரும். கருங்காலி சமித்து கொண்டு ஹோமம் செய்வதும் துவரம்பருப்பு தானம் செய்வதும் நன்மை தரும். குறிப்பாகச் செவ்வாய்தோறும் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதுடன், கந்தசஷ்டி கவசம் போன்ற முருகனுக்குரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்வதும் மிகவும் விசேஷமான நற்பலன்களைக் கொடுப்பதுடன், நல்ல திருமண வாழ்க்கையைப் பெற்றுத் தரும்.

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

புதன் - மகாவிஷ்ணு தரிசனம்!

புத
னால், ஒருவருக்குத் திருமண தோஷம் ஏற்பட்டால், புதன்கிழமைதோறும் மகா விஷ்ணுவை வழிபடுவதுடன், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும். ஏகாதசி விரதம் இருப்பது மிகவும் சிரேஷ்டமான பரிகாரம் ஆகும்.

திருவெண்காடு தலத்துக்குச் சென்று, புதனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது சிறப்பாகும். புதனுக்குரிய நாயுருவி சமித்து கொண்டு ஹோமம் செய்து, பச்சைப்பயறு தானம் செய்வதும் சிறந்த பரிகாரமாகும். மேலும், புருஷ சூக்தம் ஜபிப்பதும் விசேஷம். புதன்கிழமைகளில் திருப்பதிக்குச் சென்று, அங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, திருவேங்கடவனை வழிபடுவதும், காஞ்சிபுரம் சென்று ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், ஸ்ரீவரதராஜரையும் வழிபடுவதும் சிறப்பு. இதனால் கல்யாண தோஷம் நீங்கி நல்ல மண வாழ்க்கை அமையும்.

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

குருவை வழிபடுவோம்!

குருவால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், வியாழக்கிழமைகளில் இந்திரனையும் பிரம்மதேவரையும் வழிபடுவது நல்லது. மேலும் சிதம்பரம் சென்று ஸ்ரீசிவகாமி சமேத ஸ்ரீநடராஜரைத் தரிசிப்பதும், ஆலங்குடிக்குச் சென்று ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை ஆராதனைகள் செய்வதும் சிறப்பாகும்.

வியாழக்கிழமைகளில் குருவின் ஸ்தானத்தில் உள்ளவர்களையும், வேத விற்பன்னர்களையும் வணங்கி, அவர்களுடைய நல்வாழ்த்துகளைப் பெறுவது மிகவும் சிறப்பான பரிகாரமாகும். மேலும், குரு பகவானுக்கு அரச சமித்தால் ஹோமம் செய்து, கொண்டைக்கடலை தானம் செய்வது விசேஷமான பலன்களைத் தரும்.

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

சுக்கிரனால் தோஷமா?

வெள்ளிக்கிழமையில் இந்திரனையும், சசி தேவியையும் வழிபடுவது நல்லது. அன்றைய நாளில் சுமங்கலி பூஜை செய்வதும் மிக விசேஷம்.

அதேபோல், அத்தி சமித்தால் ஹோமம் செய்து, மொச்சை தானம் செய்வதால் சிறப்பான பலன்களைப் பெறலாம். குறிப்பாக ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு மங்கலப் பொருள்களைத் தானமாக வழங்குவது சிறப்பு. ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுவதும், ஸ்ரீசூக்தம், லட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

சனி வழிபாடு...

னியால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், சனிக்கிழமையில் யமனையும் பிரஜாபதியையும் வழிபடுவது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதும் ஹனுமன் சாலீஸா படிப்பதும் மிகவும் நல்லது. வன்னி சமித்தால் ஹோமம் செய்வதும் எள் தானம் செய்வதும் சிறப்பாகும்.

ஒருமுறை திருநள்ளாறு திருத்தலத்துக்குச் சென்று, ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரையும், சனி பகவானையும் முறைப்படி வழிபட்டு வாருங்கள். வயோதிகர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுங்கள்.

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

ராகுவும்  கேதுவும்

ராகு, கேதுகளால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், ஸ்ரீகாளஹஸ்தியில் சனிக்கிழமை ராகு காலத்தில் சர்ப்ப தோஷ நிவர்த்தி செய்துகொள்வது நல்லது. ராகு ப்ரீதிக்கு காலன், சர்ப்பேஸ்வரன் ஆகியோரை வழிபடுவதும் உளுந்து தானம் செய்வதும் நல்லது. அறுகம்புல்லால் ஹோமம் செய்யலாம். ஞாயிறு அன்று திருநாகேஸ்வரம் சென்று,  ராகு காலத்தில் ராகுவுக்குப் பால் அபிஷேகம் செய்வது நல்லது.

கேது தோஷம் நீங்க, கீழ்ப்பெரும்பள்ளம் சென்று வழிபடுவது விசேஷம். மேலும், கணபதி ஜபம், ஹோமம் செய்யலாம். பிரம்மாவையும், சித்திரகுப்தனையும் வழிபடுவது விசேஷமாகும். தர்ப்பையால் ஹோமம் செய்து, கொள்ளு தானியம் அளிப்பதும் சிறப்பாகும்.

பரிகாரங்கள் செய்யும்போது...

கிரகங்களுக்குப் ப்ரீதி, பரிகாரங்கள் செய்யும்போது, மனம் ஒருநிலையில் இருக்க வேண்டும். ஒப்புக்காக, ஜோசியர் மற்றும் பெரியவர்கள் கூறிவிட்டார்களே என அலட்சியமாகச் செயல்படக் கூடாது.உள்ளம் உருக, பகவானையும், கிரகங்களையும் மனதார நினைத்து வழிபட்டால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

திருமண தோஷம் நீங்க சுயம்வரா பார்வதி ஜப, ஹோமம் செய்வதும் நல்லது. இந்த வழிபாட்டை வேத விற்பன்னர்களின் வழிகாட்டுதலோடு செய்ய வேண்டும்.

ஜாதகத்தில் திருமணத் தடை மற்றும் தாமதத்தை உண்டாக்கும் கிரகம் எது என்பதை அறிந்து, அந்தக் கிரகத்துக்குரிய சாந்தி பரிகாரங்கள் செய்துகொள்வது அவசியமாகும். அதன்மூலம் திருமண தோஷம் விலகவும், திருமணம் ஆகவும் வாய்ப்பு உண்டாகும்.

க்னம், லக்னாதிபதி, 7-ம் வீடு, 7-ம் வீட்டோன், பூர்வ புண்ணியம், குரு பலம், சுக்கிர பலம் உள்ளவர்களுக்கு உரிய காலத்தில் சிறப்பாக திருமணம் நடக்கும் என்று சொல்லலாம். திருமண வாழ்வும் வெகு சிறப்பாக அமையும். குறிப்பிட்ட ஜாதக பலம் உள்ளவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள்.

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

திருவருள் தரும் திருமணஞ்சேரி

திருமண வயது வந்தும் திருமணம் தாமதப்படுபவர்கள், கும்பகோணம் அருகில் உள்ள திருமணஞ்சேரிக்குச் சென்று வழிபட்டு வரலாம்.

கோயிலில், சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து, மாலை மற்றும் எலுமிச்சைப்பழம் தருவார்கள். வீட்டுக்கு வந்ததும் மாலையையும் எலுமிச்சைப் பழத்தையும் பூஜையறையில் வைத்துவிட்டு, ஸ்நானம் செய்த பிறகு பூஜையறையில் வைத்த மாலையை அணிந்துகொண்டு, எலுமிச்சைப்பழச் சாறை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடித்துவிட்டு, இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும். திருமணம் ஆனவுடன், வாழ்க்கைத் துணையுடன் திருமணஞ்சேரி சென்று மீண்டும் அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும். அப்படிச் செல்லும்போது திருமணத்துக்கு முன்பு நமக்குக் கொடுத்த மாலையை எடுத்துச்சென்று கோயிலில் அதற்கு உரிய இடத்தில் சேர்க்க வேண்டும்.

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

நித்ய கல்யாண பெருமாள்!

சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தை சிறந்த திருமணப் பரிகாரத்தலம் ஆகும். இந்தக் கோயிலுக்குச் செல்லும்போது இரண்டு பூமாலை, அர்ச்சனைத் தட்டு வாங்கிச் செல்ல வேண்டும்.

ஸ்ரீநித்யகல்யாண பெருமாளுக்கு அர்ச்சனை, ஆராதனை செய்துவிட்டு, பட்டாச்சாரியார் தரும் மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டு, கோயில் பிராகாரத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும். பிறகு கொடி மரத்தின் அருகில், சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். வீட்டுக்குச் சென்றதும் பூமாலையைப் பூஜையறையில் வைக்க வேண்டும். திருமணம் நடைபெற்ற பிறகு தம்பதி சமேதராக கோயிலுக்குச் சென்று, முதலில் நாம் வாங்கிவந்த மாலையை அங்குள்ள தல விருட்சத்துக்கு அருகில் வைத்துவிட்டு, ஸ்ரீநித்யகல்யாண பெருமாளுக்கு அர்ச்சனை ஆராதனை செய்து வழிபட்டு வர வேண்டும்.இதனால், திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.