தொடர்கள்
Published:Updated:

ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்

ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்

விவசாயம் செழிக்கும்... வணிகம் தழைக்கும்! ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

நிகழும் ஹேவிளம்பி வருடம், ஆடி மாதம் 11-ம் நாள் வியாழக் கிழமை (27.7.17) சுக்லபட்சத்து பஞ்சமி திதி, உத்திர நட்சத்திரம், பரீகம் நாமயோகம் - பாலவம் நாமகரணத்தில், ஜீவனம் நிறைந்த மந்த யோகத்தில், சனி ஹோரையில், பஞ்ச பட்சியில் காகம் அரசுத் தொழில் செய்யும் நேரத்தில், நண்பகல் 12.39 மணிக்கு ஆயில்யம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில், சர வீடான கடக ராசியில் ராகு பகவானும், அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் சர வீடான மகர ராசியில் கேது பகவானும் வாக்கியப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சி அடைகிறார்கள்.      

ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பகை வீடான சிம்மம் மற்றும் கும்பத்தில் ராகு, கேதுவாகிய பாம்புகள் இரண்டும் அமர்ந்து, நாடெங்கும் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தின. இப்போது, இந்த இரண்டு கிரகங்களும் யோகம் தரும் வீடுகளில் அமர்வதால் உலகெங்கும் பணத்தட்டுப்பாடு விலகும்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

கடல் வீடும், நண்டு ராசியுமான கடகத்தில் ராகு அமர்வதால் நாடெங்கும் புதிய தொழில் தொடங்கு வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். மக்களிடம் வெளிநாட்டு மோகம் குறையும். பாட்டன், பூட்டன் செய்துவந்த பாரம்பர்யத் தொழில்கள் மீது இளைய தலைமுறை யினருக்கு ஆர்வம் அதிகரிக்கும். கடலில் கலக்கும் கழிவுகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் வரும். கடலில் அழிந்துவரும் பவழப்பாறைத் திட்டுகள் பாதுகாக்கப்படும். மக்களின் அச்ச உணர்வு விலகும். வாகன உற்பத்தி அதிகரிக்கும்.

எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் துறை மேம்படும். செல்போன் முதலான மின்னணு சாதனங்களின் விலை குறையும். இணையதளம்  மற்றும் செல்போன் சேவைக்கான கட்டணம் வெகுவாகக் குறையும். தொலைக்காட்சியில் மிகக் குறைந்த செலவில் அதிக சேனல்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு உருவாகும். அதிநவீன கேமராக்கள், ரோபோக்கள் அறிமுகமாகும்.

கால புருஷ தத்துவப்படி ராகு 4-ம் வீட்டில் அமர்வதால், மக்களிடையே சேமிக்கும் குணம் குறையும்; வாழ்வின் சுக போகங்களை அனுபவித்து விடும் வேட்கை அதிகரிக்கும். இதயநோய் பாதிப்புகள் அதிகமாகும். பாரம்பர்யச் சின்னங்கள், மலைகள், காடுகள், நதிகள் ஆகியவற்றை மீட்கவும் பாதுகாக்கவும் புதிய சட்டங்கள் அமலுக்கு வரும். சுற்றுச்சூழலைப் பாதிக்காதவண்ணம் புதிய வாகனங்கள் உற்பத்தியாகும். வாகனங்களின் விலை குறையும். வெளிர்நீலம், சில்வர் க்ரே ஆகிய நிறங்களும், எண்களில் 2 மற்றும் 4 ஆகியனவும் வலிமைபெறும்.

வாழ்க்கைத் துணையைப் பிரிந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் பல துறைகளிலும் சாதனை புரிவார்கள். மின்சாரம், குடிநீர் தட்டுப்பாடு குறையும். வீட்டு வாடகை குறையும். குறைந்த விலையில் தரமான வீடுகள் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் பங்குகளின் விலை உயரும். மழை அதிகமாகும். புதிய நீர்த் தேக்கங்கள் கட்டப்படும். விவசாயம் தழைக்கும். கிராமங்கள் வளர்ச்சியடையும். நகரங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் ஆகிய பெட்ரோ கெமிக்கல் பொருள்களின் விலை குறையும். தங்க ஆபரணங்களின் விலை அதிகமாகும்.

கேது பகவான் அருளும் பலன்கள்


கேது, கும்ப ராசியிலிருந்து விலகி மகரத்தில் அமர்வதால் உலகெங்கும் வியாபாரம் தழைக்கும். நாடெங்கும் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வரும். நாட்டின் பாதுகாப்பு கருதி ராணுவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். பாகிஸ்தான், சீனாவுடன் போர் மூளும் வாய்ப்புண்டு.    

ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்

குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங் கள் பிரபலம் அடையும். பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படும். ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் நலிவடையும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் அறிமுகமாகும்.

சிமென்ட், மணல் மற்றும் பால் விலை உயரும். ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் துறைகள் வளர்ச்சியடையும். தோல் நோய் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களால் மக்களின் ஆரோக்கியம் பாதிப்படை யும். மரக்கன்றுகள் அதிகம் நடப்படும். இரண்டுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியது வரும். வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ-யின் கிடுக்குப்பிடி நடவடிக்கைகள் அதிகரிக்கும்.

மனோகாரகனும், மாதுர்காரகனும் மற்றும் கலைகளுக்குரிய  கிரகமுமான சந்திரனின் கடக ராசியில் ராகு அமர்கிறார். ஆகவே,  நம் தேசத்தின் பாரம்பர்யக் கலைகள் மீண்டும் பொலிவுபெற முயற்சி செய்வோம். முதியோர் மற்றும் பெற்றோரைப் பேணுவதாலும் ராகுவின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.    

ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்

அதேபோல், தொழிலாளி மற்றும் முதலாளித் துவத்துக்குரிய கிரகமான சனி பகவானின் மகர ராசியில் கேது பகவான் அமர்கிறார். ஆகவே, எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல் அனைத்து தரப்பினரிடமும் அன்பு செலுத்துவதாலும், ஆதரவற்ற பெண் பிள்ளைகளின் திருமணத்துக்கு உதவி செய்வதாலும் கேது பகவான் மகிழ்ந்து நல்லருள் தருவார்.

மேலும், ஒவ்வொரு ராசிக்கும் ராகு மற்றும் கேதுவால் கிடைக்கும் பலன்கள் குறித்த தகவல்கள், ‘ராகு - கேது பெயர்ச்சி’ இணைப்பிதழில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. படித்துப் பயன்பெறுங்கள்.