Published:Updated:

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

Published:Updated:
சனிப்பெயர்ச்சி பலன்கள்

நிகழும் கர வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி புதன் கிழமை (21.12.2011) கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில்; சுகர்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக, உதயாதி நாழிகை 2.17-க்கு நேத்திரமும், ஜீவனும் நிறைந்த, பஞ்சபட்சியில் காகம் நடை பயிலும் நேரத்தில், புதன் ஓரையில், சரியாக காலை மணி 6.55-க்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து தன் உச்ச வீடான துலாம் ராசிக்குள் நுழைகிறார். 16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து, தன் ஆதிக்கத்தைச் செலுத்துவார். இடையில்... மார்ச் 26, 2012 முதல் செப்டம்பர் 11, 2012 வரை சனி பகவான் வக்ரகதியில் கன்னி ராசிக்குள் சென்று திரும்புகிறார்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேஷம் :

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளை தந்த சனிபகவான், வரவிருக்கும் சனிப்பெயர்ச்சி காலத்தில் வலுவடைந்து, 7-ல் அமர்வதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். இருவருக்கும் சண்டை, சச்சரவை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள்.

மாதவிடாய்க் கோளாறினால்,  ஆரோக்கியம் பாதிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமரும் காலகட்டத்தில் திடீர் பணவரவு, வாகன யோகம் உண்டாகும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும் காலகட்டத்தில் சற்றே உடல் நிலை பாதிக்கும். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் காலகட்டத்தில் எதிலும் வெற்றி உண்டாகும். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்லும்போது செல்வம் பெருகும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.

உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணரும் காலம்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்

 

##~##

உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து இதுவரை பல வகைகளிலும் அலைக்கழித்த சனிபகவான், வரவிருக்கும் சனிப்பெயர்ச்சி காலத்தில் 6-ம் வீட்டில் அமர்வதால்... தொட்ட தெல்லாம் துலங்கும்.

அடிவயிற்றில் வலி இருந்ததே! அடிக்கடி இருமிக் கொண்டும் இருந்தீர்களே! இனி ஆரோக்கியம் கூடும்.பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நாடாளுபவர்கள் அறிமுக மாவார்கள்.

சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமரும் காலத்தில்... பிள்ளைகளால் டென்ஷன், உறவினர் பகை வந்து நீங்கும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும் காலகட்டத்தில் கௌரவம் உயரும். வீடு, மனை வாங்குவீர்கள். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்லும்போது வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது பணப்பற்றாக்குறை ஏற்படும்.

பரிகாரம்: திருநெல்வேலி, தென்திருப் பேரை ஸ்ரீகைலாசநாதரை ஆயில்யம் நட்சத்திர நாளில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

திடீர் யோகங்களையும், அதிரடி முன்னேற்றங்களை அள்ளித் தரும் காலம்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மிதுனம் :

உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து பல இன்னல்களை இதுவரை தந்து வந்த சனிபகவான், இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் 5-ம் வீட்டில் அமர்வதால்... உங்களின் தயக்கம், பயம் நீங்கி, மனவலிமை கூடும். பூர்விக சொத்து கைக்கு வரும்.

கணவருடன் உரிமையாக பேசி, கூடா பழக்க வழக்கங்களிலிருந்து அவரை மாற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சனிபகவான் வக்ரமாகும் காலத்தில், உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் செல்லும் காலகட்டத்தில் பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிட்டும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்லும்போது, சொத்து வாங்குவீர்கள்.  குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்லும்போது மாமனார், மாமியார் மதிப்பார்கள்.

பரிகாரம்: வைத்தீஸ்வரன்கோயில் அருகிலுள்ள திருப்புன்கூர், ஸ்ரீசிவலோக நாதரை, கேட்டை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

தடைகளை உடைபட வைப்பதுடன் அதிரடி முன்னேற்றங்களை தரும் காலம்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கடகம் :

இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனிபகவான், இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால், ஓரளவு நிம்மதியே தருவார். உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் 8-ம் வீட்டுக்கு அதிபதியாக அமைவதால், கணவரின் கை ஓங்கும்.

அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் எடுத்த வேலையை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும்.

சனி பகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமரும் காலகட்டத்தில் புதுவீடு கட்டி குடி புகுவீர்கள். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் காலத்தில் வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்லும் காலகட்டத்தில் திடீர் பயணங்கள் வரும். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் செல்லும்போது, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

பரிகாரம்: திருநெல்வேலி, பாபநாசம், ஸ்ரீபாபநாச நாதரை மூலம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

முதல் முயற்சியில் முடிக்காமல் போனாலும், இடைவிடாத உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம் :

இதுவரை பாதச்சனியாக அமர்ந்து உங்களை நாலாவிதங்களிலும் பாடாய்ப்படுத்திய சனிபகவான், சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களை விட்டு விலகி 3-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி பெறு வீர்கள்.

நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்து கொண்டிருந்த நீங்கள், ஆரோக்கியம் அடைவீர்கள். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச்சனியாக அமரும் காலகட்டத்தில் பணத்தட்டுப்பாடு, உடல் நல பாதிப்புகள் வந்து செல்லும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் செல்லும் காலகட்டத் தில் குடும்பத்தில் நல்லது நடக்கும். ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் காலத்தில் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலத்தில் உங்கள் செல்வாக்கு உச்சத்தை அடையும்

பரிகாரம்: வேதாரண்யம், ஸ்ரீவேத வனேஸ்வரரை புனர்பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

அதிரடி வெற்றிகளையும், அடிப்படை வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தரும் காலம்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கன்னி :

இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து உங்கள் நிம்மதியை சீர்குலைத்த சனிபகவான், சனிப்பெயர்ச்சி  காலகட்டத்தில் உங்கள் ராசியைவிட்டு விலகி, பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.

எப்போதும் தலைவலி, வயிற்று  வலி என வலி பற்றியே பேசிக் கொண்டிருந்தீர்களே! இனி உடல் நிலை சீராகும். கணவர் எப்போது பார்த்தாலும் எதையோ யோசித்தபடி ஒருவித கவலையில் ஆழ்ந்திருந்தாரே! இனி சுறுசுறுப்பாக வேலை பார்ப்பார். என்றாலும், பாதச்சனியாக வருவதால் கணவருடன் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து செல்லும்.

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக அமர்கின்ற காலகட்டத்தில் நம்பிக்கையின்மை ஏற்படும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில், சனி பகவான் செல்லும்போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் காலங்களில் நினைத்த காரியம் நிறைவேறும். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.

பரிகாரம்: திருவையாறு, திருப்பழனம், ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரை சதய நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

புது முயற்சிகளில் வெற்றியும், தோற்றப் பொலிவும், ஆரோக்கியமும் வந்து சேரும் காலம்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

துலாம் :

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து சேமிக்க முடியாதபடி செலவுகளைத் தந்த சனிபகவான், இப்போது ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். அதற்காக அஞ்சத் தேவையில்லை. சனிபகவான் உங்களுக்கு சுகப் பூர்வ புண்யாதிபதி யாக வருவதால் நல்லதையே செய்வார்.கணவரின் பாராமுகம் மாறி, பாசமாகப் பேசுவார். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜென்மச் சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் கடன் பிரச்னை, வீண் விரயம், தூக்கமின்மை வந்து செல்லும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்கின்ற காலகட்டத்தில், அரசால் ஆதாயம் உண்டு. ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும்போது வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் பிரவேசிக்கும் காலத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும்.

பரிகாரம்: கும்பகோணம், தேரெழுந்  தூரில் வீற்றிருக்கும் தேவாதிராஜப் பெருமாள்- ஸ்ரீசெங்கமலவள்ளித் தாயாரை ரோகிணி நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த உங்களுக்கு பணப்புழக்கம் மற்றும் மகிழ்ச்சி  தரும் காலம்.  

சனிப்பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம் :

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களின் புகழ், கௌரவத்தை உயர்த்திய சனிபகவான்,  இனி விரயச் சனி, ஏழரைச் சனியின் தொடக்கம் என்று மாறப் போகிறார். உங்கள் ராசிநாதனான செவ்வாய்க்கு பகைக் கோளாக வரும் சனி பகவான், ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். சிக்கனமாக இருக்கப் பழங்குங்கள்.

'ஏழரைச் சனி தொடங்குகிறதே!’ என்று கலங்க வேண்டாம். இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான், மன இறுக்கத்தையும், பயத்தையும் தந்தாரே! ஆனால், தற்சமயம் விரய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். சனிபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் தொட்ட காரியம் துலங்கும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில், சனி பகவான் செல்கின்ற காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்லும்போது, வேற்று மதத்தவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்: சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் வீற்றிருக்கும் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளை பூரம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

அனுபவபூர்வமான பேச்சால் வெற்றியும், வளைந்து கொடுக்கும் போக்கால் வளர்ச்சியும் கிடைக்கும் காலம்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

தனுசு :

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உத்யோகத்தில் அவமானங்களையும், முயற்சிகளில் இடையூறுகளையும் தந்த சனிபகவான், இப்போது லாப வீட்டில் அமர்கிறார். கடினமாக உழைத்தும் அதற்கான பலனேதுமில்லாமல் போனதே! அடுத்தடுத்து செலவுகளாலும், வேலைச்சுமையாலும் அவதிப்பட்டீர் களே! இந்தத் தொல்லைகள் நீங்கும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மாமனார், மாமியார் மெச்சுவார்கள். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கு வீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும்.

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் வீண் டென்ஷன், மறைமுக அவமானம் ஏற்படும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்கின்ற காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும்போது வெளிநாட்டில்இருக்கும் தோழிகளால் திடீர் திருப்பம் உண்டாகும். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் சனிபகவான் பிரவேசிக்கும்போது சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

பரிகாரம்: மயிலாடுதுறை, திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கநாதரை உத்திரம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

சுறுசுறுப்போடு... வசதி, வாய்ப்புகளையும் தரும் காலம்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மகரம் :

உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து, இதுநாள் வரை தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாற்றங்களைத் தந்து, சேமிப்பு களையும் கரைத்த சனிபகவான், இப்போது 10-ம் வீட்டில் அமர்வதால் பதவிகளும், கௌரவமும் தேடி வரும். சனிபகவான் உச்சமாகி யோகாதிபதி யான சுக்கிரனின் வீட்டில் அமர்வதால்... இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள்.

கணவரின் கோபம் குறையும். உங்களின் பெருந்தன்மையை இனிமேல் புரிந்து கொள்வார். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.  

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் இனந்தெரியாத கவலை, ஒரு வித படபடப்பு வரும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும்போது வயிற்று வலி, முதுகு வலி, முழங்கால் வலி வந்து நீங்கும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் காலகட்டத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குரு பகவானின் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலகட்டங்களில் மனோபலம் அதிகரிக்கும்.

பரிகாரம்: விருத்தாசலம், விருத்த  கிரீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீஆழத்து விநாயகரை சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.

முடங்கிக் கிடந்த உங்களை உற்சாகப்படுத்துவதுடன் செயற்கரிய செயல்களையும் செய்ய வைக்கும் காலம்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கும்பம் :

இதுவரை அஷ்டமத்தில் நின்று கொண்டு உங்களை அலற வைத்து, அழ வைத்த சனிபகவான், இப்போது 9-ம் வீட்டில் அமர்வதால்... இனி எல்லா வற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். சாதிக்க வேண்டுமென்ற துணிச்சல் வரும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வீடு, வாகன வசதி பெருகும். பழைய பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் விரக்தி, பதற்றம், ஏமாற்றம் வந்து செல்லும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும்போது புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும்போது திருமணத் தடை நீங்கும். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலகட்டத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

பரிகாரம்: மாமல்லபுரம் அருகிலுள்ள திருவிடந்தை ஸ்ரீலக்ஷ்மி வராகப் பெருமாளை பூச நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.  

கவலையும், கண்ணீருமாக இருந்த உங்களுக்கு... நிம்மதியும் நிதியும் வந்து சேரும் காலம்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மீனம் :

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து அவ்வப்போது ஆரோக்கிய குறைவைத் தந்தாலும் ஓரளவு யோக பலன்களையும் தந்த சனிபகவான், இப்போது 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் திருமணம், உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தமான முயற்சிகள் தாமதமாகி முடியும்.

சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் உங்களுக்கும், கணவருக்கும் உடல் நலக் கோளாறுகள் வரும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்கின்ற காலகட்டத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும்போது, இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது... கல்யாண முயற்சிகள் கைகூடும்.

பரிகாரம்: சுவாமிமலை அருகிலுள்ள திருஆதனூர் ஸ்ரீஆண்டளக்குமையன் பெருமாளை மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.

அலைச்சல், செலவினங்களுக்கு நடுவே, விடாமுயற்சியால்  வெற்றிகளும் வந்து சேரும் காலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism