Published:Updated:

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!
பிரீமியம் ஸ்டோரி
2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த

Published:Updated:
2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!
பிரீமியம் ஸ்டோரி
2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!
2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

நிகழும் ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி, திங்கட்கிழமை, தட்சிணாயனம் ஹேமந்த ருது, வளர்பிறையில் சதுர்த்தசி திதியில், சமநோக்கு கொண்ட மிருகசீரிடம் நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்கினத்தில், சுப்பிரம் நாமயோகம், வணிசை நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்ட நேரம் நள்ளிரவு மணி 12-க்கு 1.1.18 -ம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப் படி சந்திரனின் ஆதிக்கத்தில் (2+0+1+8=2) இந்த ஆண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் வாகன உற்பத்தி அதிகரிக்கும். கம்ப்யூட்டர், கார், டி.வி., ஃபிரிஜ், ஏ.சி மற்றும் சமையலறைச் சாதனங்களின் விலை குறையும். காய்கறி விலை குறையும். நகரத்தைக் காட்டிலும் நகரத்தை ஒட்டியிருக்கும் பகுதிகள் நவீனமாகும். விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவதைத் தடுக்க சட்டம் வரும். கைம்பெண் மற்றும் விவாகரத்து வாங்கியவர்கள் சமூகத்தில் சாதித்துக் காட்டுவார்கள். பெரிய பதவியிலும் அமர்வார்கள். ஆபரணங்கள் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். தங்கம் இறக்குமதி அதிகரிக்கும். வெள்ளி விலை உயரும். கண்ணாடி, சிமென்ட், மின்னணுச் சாதனங்கள், செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயரும்.

30.8.18 முதல் 28.12.18 வரை துலாம் ராசியில் சுக்கிரன் வக்ரமாகி அமர்வதால், திரைப்படத்துறை பாதிக்கப்படும். நடிகர் நடிகையர்களுக்குள் ஒற்றுமை குறையும். அரசியலில் ஈடுபடும் நடிகர்களுக்குத் தோல்வியே ஏற்படக்கூடும். முன்னணி நடிகர் நடிகையர்கள் பாதிக்கப்படுவார்கள். வரதட்சணைக் கொடுமை, பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும். சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் மலைப்பகுதி நகரங்கள் பெருமழையால் பாதிக்கும். தங்க நகைத் திருட்டு அதிகரிக்கும். சின்ன பட்ஜெட் படங்கள் பிரபலமாகும். எழுத்தாளர்கள், சீரியல் கலைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். சைபர் க்ரைம் அதிகமாகும். செப்டம்பர் மாதம் வரை துலாம் ராசியில் குரு இருப்பதால் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் வரும்.

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வருடம் முழுக்க தனுசில் சனி இருப்பதால், புதிய அரசியல் கட்சிகள் உதயமாகும். கோயில் விழாக்களின் போது தீ விபத்துகளுக்கு வாய்ப்பு உண்டு. ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர் களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் வரும். புதனின் லக்கினத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், கல்வித் துறை மேம்படும். போலியான கல்வி நிறுவனங்கள் மூடப்படும். புதிய பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள், மதிப்பெண் முறைகள் நடைமுறைக்கு வரும். ஆசிரியர்களுக்கு சம்பளம் உயரும். ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் மேலும் சில மாணவர் சேர்க்கை இடங்களை அரசுக்கு விட்டுக்கொடுக்க வேண்டி வரும்.

10.3.18 முதல் 2.5.18 வரை சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் வாகன விபத்துகள் அதிகரிக்கும். அரசியலில் அதிரடி ஆட்சி மாற்றங்கள் இருக்கும். நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கும். அரசியல் தலைவர்கள் பாதிக்கப்படுவார்கள். வங்கி, ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள். நாட்டின் எல்லைப் பகுதியில் பதற்றம் உண்டாகும். ஏவுகணை ராணுவ ரகசியங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி ரகசியங்கள் வெளியாகும். மின்சாரம் மற்றும் தீ விபத்துகள் அதிகரிக்கும். பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு குறையும். தவறான ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ளநோட்டைப் புழக்கத்தில் விடுபவர்கள் சிக்குவார்கள். ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பு அதிகரிக்கும்.

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாயும் கேதுவும் சேர்ந்திருப்பதால், ராணுவத்தில் நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். இந்தியப் பாதுகாப்பு ரகசியங்கள் கசியும். ராணுவத்தில் பெரிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மாற்றப்படுவர். இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், தீவிரவாதி களைக் கண்காணிக்கவும் அதிநவீன செயற்கைக் கோள்கள் ஏவப்படும். சொத்து, சைபர் கிரைம், முன்விரோதம், ஹவாலா சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரிக்கும். உணவுப் பயிர்களை வினோதமான கிருமிகள் தாக்கும். கலப்பட உணவுக் கூடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்படும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, கல்வியில் மாற்றங்கள், அரசியலில் திடீர் திருப்பங்களைத் தருவதாகவும், மக்களிடையே சுயநம்பிக்கையை விதைப்பதாகவும் அமையும்.

மேஷம்

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுபவர்களே! உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் இடத்தில் புத்தாண்டு பிறப்பதால், வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மதிப்பு கூடும்.

2.10.18 வரை குருபகவான் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியம் மேம்படும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் பக்கபலமாக இருப்பார். தந்தை வழியில் ஆதரவு பெருகும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், குரு பகவான், 14.2.18 முதல் 10.4.18 வரை, விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் செல்கிறார்; 3.10.18 முதல் வருடம் முடியும் வரை, ராசிக்கு 8-ல் சென்று மறைகிறார்.  ஆகவே, சிறிய விஷயங்களையும் போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும்.  குடும்பத்தில் சலசலப்பு, பணப் பற்றாக்குறை, கடன் சுமை ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களின் மீது அதீத கவனம் தேவை.

வருடம் பிறக்கும்போது ராசிநாதன் செவ்வாய் 7-ல் இருப்பதால், தம்பதிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். சொத்துகள் வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும்.

உங்கள் ஜீவனாதிபதியும் லாபாதியுமான சனி பகவான் வருடம் முழுவதும் 9-ம் இடத்திலேயே தொடர்வதால், தன்னம்பிக்கை கூடும். பெரிய பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். புதிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பிற மொழி பேசுபவர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்தி முடிப்பீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

புத்தாண்டின் தொடக்கத்தில் சூரியன், பகை கிரகமான சனியுடன் இணைந் திருப்பதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட கவலைகள் வந்து போகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமை அவசியம். 10.3.18 முதல் 2.5.18 வரை சனியும் செவ்வாயும் சேர்ந்திருப்பதால், தந்தை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்ற வாய்ப்பு உள்ளது. மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். 2.8.18 முதல் 29.8.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் எழலாம். வருடம் முழுவதும் ராகு 4-லும் கேது 10-லும் இருப்பதால், சிலருக்கு வீடு மாறவேண்டிய நிர்பந்தம் ஏற்படக்கூடும். தாயாரின் அறிவுரைப்படி நடப்பது மிகவும் அவசியம். அவருடைய உடல் நலனிலும் கவனம் தேவை. புறநகர்ப் பகுதியில் இருக்கும் சொத்துகளைப் பராமரிப்பதில் கவனம் தேவை.

வியாபாரத்தில் புது வியூகம் அமைத்து, கூடுதல் லாபம் ஈட்டுவீர்கள். சிலர் சொந்த இடத்துக்குக் கடையை மாற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரிகள் சங்கத்தில் முக்கியப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உணவகம், தங்கும் விடுதி, சிமென்ட் வகைகளால் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், ராகு 4-ல் இருப்பதால் கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் ஜீவனாதிபதி சனி சாதகமாக இருப்பதால் பாராட்டுகள் அதிகரிக்கும். புதிய அதிகாரி உங்களுக்கு ஆதரவு தருவார். எனினும், கேது 10-ல் தொடர்வதால் பணிச் சுமை அதிகரிக்கும். சலுகைகள் சற்று தாமதமாகத்தான் கிடைக்கும். சிலருக்கு, பணிநிமித்தம் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மாணவ மாணவியர்களே, உயர்கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள். கலைத் துறையினரின் நீண்டநாள் கனவு நனவாகும். பெரிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களை முன்னேற வைப்பதுடன் எதிர்காலத் திட்டங்களையும் நிறைவேற்றித் தருவதாகவும் அமையும்.

 பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம், இரும்பை எனும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு மகா  காளேஸ்வரரை, பிரதோஷ நாளில் தரிசித்து நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்; நற்பலன்கள் பன்மடங்காகக்
கிடைக்கும்.

ரிஷபம்

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!


 
கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

உழைப்பால் உயர நினைப்பவர்களே! உங்கள் சப்தமாதிபதி செவ்வாய் 6-ல் வலுவாக இருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். சகோதரர்கள் உதவுவார்கள்.

புதன் உங்கள் ராசியைப் பார்க்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் ஏற்படும். புதியவர்களின் நட்பு உற்சாகம் தரும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வருடம் முழுவதும் ராகு 3-ல் தொடர்வதால் மனதில் தைரியம் அதிகரிக்கும். பெரிய பொறுப்புகளில் இருக்கும் பழைய நண்பர்களால் சில உதவிகள் கிடைக்கும். இளைய சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கடன்கள் தீரும். ஆனால், கேது 9-ல் இருப்பதால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் ராசிநாதன் சுக்கிரன், சூரியன் மற்றும் சனியுடன் சேர்ந்து 8-ல் இருப்பதால், வீண் அலைச்சல்கள், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். 1.1.18 முதல் 13.1.18 வரை சூரியனும் சனியும் சேர்ந்திருப்பதால், வீண்பழி ஏற்படக்கூடும். மற்றவர்களுக்காகச் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். வழக்குகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். 10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாயுடன் சனி சேர்ந்திருப்பதால், பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படக்கூடும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. 3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாயுடன் கேது சேர்ந்திருப்பதால் தந்தைவழி சொத்துகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.

30.8.18 முதல் 28.12.18 வரை சுக்கிரன் 6-ல் சென்று மறைவதால், சிறுசிறு விபத்துகள், வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிறு அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வருடம் முழுவதும் அஷ்டமச் சனி தொடர்வ தால், குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லவும். உங்கள் பொறுப்புகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. முக்கிய ஆவணங்களில் கையெழுத்து போடும் முன்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்பது அவசியம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும்; எச்சரிக்கை தேவை.

ஆண்டின் தொடக்கம் முதல்  2.10.18 வரை குருபகவான் 6-ல் மறைந்து சகட குருவாக இருப்பதால், ஒரே நாளில் பல வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் அனுசரணை தேவை. 14.2.18 முதல் 10.4.18 வரை, விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும்; 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டிலும் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வருமானம் உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்க வழி பிறக்கும். 

வியாபாரிகளே! புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். டெண்டர்கள் மற்றும் அரசாங்க விஷயங்களில் பல முறை யோசித்து முடிவெடுக்கவும். பழைய பாக்கிகளைப் போராடித்தான்  வசூலிக்கவேண்டி இருக்கும். கமிஷன், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உத்தியோக ஸ்தானாதிபதி சனி 8-ல் இருப்பதால், எதிலும் ஸ்திரமற்ற நிலையே காணப்படும். வேலை விஷயத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். சிலருக்கு உத்தியோகம் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும்.

 மாணவ மாணவியர்களே, பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். கலைத் துறையினரே, கிடைக்கும் வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு பல சோதனைகளைத் தந்தாலும், திட்டமிட்டுச் செயல்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம்:
சுவாதி நட்சத்திர நாளில், திருவரங்கத்துக்குச் சென்று அருள்மிகு காட்டழகிய சிங்கப் பெருமாளை வணங்கி வாருங்கள்; தீவினைகள் நீங்கி, சந்தோஷம் பொங்கிப் பெருகும்.

மிதுனம்

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

எதையும் மறைக்காமல் பேசுபவர்களே! சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்க்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், உங்கள் திறமைகள் வெளிப்படும். பிரச்னை களின் மூலத்தைக் கண்டறிந்து களைவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சிலருக்கு, சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

ஆண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை குருபகவான் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், மாறுபட்ட சிந்தனையால் செயற்கரிய வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வருமானம் உயரும். கணவன்  மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலையும் அமையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். புதுப் பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

ஆனால், குரு பகவான் 14.2.18 முதல் 10.4.18 வரை, விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில்; 3.10.18 முதல் வருடம் முடியும் வரை, ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைந்து சகட குருவாக அமர்வதால், இனம்தெரியாத கவலைகள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு 12-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், ஆதாயமும் உண்டு அலைச்சலும் உண்டு. பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். புத்தாண்டின் தொடக்கத்தில் புதன் 6-ல் மறைந்திருப்பதால், நரம்புச் சுளுக்கு, கழுத்து வலி, காய்ச்சல் வந்து செல்லும். செவ்வாய் 5-ல் இருப்பதால், சொத்து வாங்குவதில் விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும்.

ஆண்டு முழுவதும் சனி 7-ல் கண்டகச் சனியாக இருப்பதால், கணவன்  மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சிறு அளவில் பாதிக்கப்படக்கூடும். குடும்ப விஷயத்தில் மற்றவர் களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வழக்குகளால் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.

13.1.18 வரை சூரியன் சனியுடன் சேர்ந்திருப்பதால் இளைய சகோதர வகையில் அலைச்சல் ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். 10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாயுடன் சனி சேர்ந்திருப்பதால், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும் உடனே சரியாகிவிடும். 3.5.18 முதல் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்திருப்பதால், மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இரவில் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வருடம் முழுவதும் 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் தொடர்வதால், பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.

வியாபாரத்தில், சந்தை நிலவரங்களை உஷாராகக் கவனிக்கவேண்டும். பெரிய முதலீடுகள் வேண்டாம். பிரபலங்கள் வாடிக்கையாளர்களாவார்கள். வெளிநாடு, வெளி மாநிலத்துடன் வியாபாரத் தொடர்புகள் விரிவடையும். கடையைச் சொந்த இடத்துக்கு மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்; தேவையான கடனுதவி கிடைக்கும். பங்குதாரர்களை மாற்றவேண்டி வரும். பிளாஸ்டிக், கெமிக்கல், உணவு, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சம்பளம் மற்றும் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.

மாணவ  மாணவியர்களே, படிப்பிலும் போட்டிகளிலும் சாதிப்பீர்கள்.  நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகளும் வரும். வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு தடைகளை ஏற்படுத்தினாலும், உங்களை மாற்றுப் பாதையில் செல்லவைத்து வெற்றி பெறவைப்பதாக அமையும்.

பரிகாரம்:
நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் பைரவரை, தேய்பிறை அஷ்டமி திதி நாளில் சென்று வணங்கி வர நற்பலன்கள் அதிகரிக்கும்.

கடகம்

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்


மற்றவர்கள் மதிக்கும்படி நடந்துகொள்பவர்களே! உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். வீட்டை விரிவுபடுத்த, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும்.

வருடம் முழுவதும் சனிபகவான் உங்களுடைய ராசிக்கு 6-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணைவர் உங்களுடைய  முயற்சிகளை ஆதரிப்பார். அயல்நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். வழக்கு சாதகமாகும். தொலைதூரத்திலுள்ள புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.

ஆண்டு பிறக்கும்போது சூரியன் 6-லும், புதன் 5-லும் அமர்ந்திருப்பதால் அரசு காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஆனால், சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், வாகன விபத்து, சளித் தொந்தரவு, அலர்ஜி, தொண்டை வலி வந்து போகும். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன மோதல்கள் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும்.  

வருட ஆரம்பத்திலிருந்து 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 6 மற்றும் 9-ஆம் இடங்களுக்கு உரிய குருபகவான் 4-ல் இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு, தாயின் உடல் நலனில் சிறியளவில் பாதிப்புகள் ஏற்படலாம். சொத்து வாங்குமுன் வழக்கறிஞரிடம் கலந்து ஆலோசிக்கவும். பொதுவாக எந்தச் சொத்து வாங்கினாலும் வாழ்க்கைத் துணைவரின் பெயரில் வாங்குவது நல்லது.

14.2.18 முதல் 10.4.18 வரை, விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் செல்வதாலும்; 3.10.18 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு அமர்வதாலும் புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகன் அல்லது மகளுக்கு, தடைப்பட்ட திருமணம் கூடிவரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

1.1.18 முதல் 13.1.18 வரை சூரியனும், சனியும் 6-ல் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சொந்த ஊரில் மரியாதை கூடும். பணபலம் அதிகரிக்கும். 10.3.18 முதல் 2.5.18 வரை உள்ள காலகட்டத்தில் செவ்வாயுடன் சனி சேர்வதால், மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். 3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாயுடன் கேது சேர்வதால், வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படக்கூடும். 1.1.18 முதல் 13.1.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் சலசலப்பு இருக்கும். வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பதால் முன்கோபம், மன சஞ்சலம் வந்து செல்லும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வரக்கூடும்.

வியாபாரத்தில், விளம்பர யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டுத் தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். பதிப்பகம், கன்ஸ்ட்ரக்ஷன், மூலிகை வகைகளால் லாபம் அடைவீர்கள்.  உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வெளிமாநிலம், வெளிநாடு செல்லவேண்டி வரும். ஆனாலும் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது.    

மாணவ மாணவியர்களே, நீங்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வியைத் தொடருவீர்கள். கலைத்துறையினரே, அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களின் நீண்ட காலக் கனவுகளை நனவாக்குவதாக அமையும்.

பரிகாரம்: கோவைக்கு அருகில் உள்ள ஈச்சனாரி எனும் ஊரில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை, சதுர்த்தி திதி நாளில் தரிசித்து வணங்கி வாருங்கள்; கிரக தோஷங்கள் நீங்கி, நன்மைகள் அதிகரிக்கும்.

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

சிம்மம்

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

நீதி நியாயத்துக்குக் குரல் கொடுப்பவர்களே! உங்கள் ராசிக்கு 10-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறக்கிறது. உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புதுப் பதவி, பொறுப்புகள் தேடி வரும். உங்கள் யோகாதிபதியான செவ்வாய் 3-ல் வலுவுடன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க விரும்புவீர்கள். பூமி தொடர்பான பிரச்னை முடிவுக்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தாயின் உடல்நலம் சீராகும்.

உங்கள் ராசிநாதன் சூரியன் சனியுடன் சேர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், அரசாங்கக் காரியங்கள் தாமதமாகி முடியும். பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. உஷ்ணம் தொடர்பான நோய்கள் வந்து செல்லும்.

 புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான குருபகவான் 3-ம்  வீட்டில் மறைந்திருப்பதால், புதிய முயற்சிகள் தாமதமாக முடியும். வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் நட்புகொள்ள வேண்டாம். 14.2.18 முதல் 10.4.18 வரை விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் குரு செல்வதாலும்,  3.10.18 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதாலும்,   இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவடையும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சொத்துகள் வாங்கும்போது தாய்ப்பத்திரத்தைச் சரிபார்க்கவும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை.

புத்தாண்டு பிறக்கும்போது சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் சாதுர்யமாகப் பேசிக்  காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வருடம் முடியும் வரை சனி பகவான் 5-ல் இருப்பதால், முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்படக்கூடும். மகளின் திருமணத்துக்காகக்  கடன் வாங்கவேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். பூர்வீகச் சொத்து விஷயத்தில் கவனம் தேவை. சொத்துப் பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்க்கவும்.

1.1.18 முதல் 13.1.18 வரை சூரியனுடன் சனி சேர்ந்திருப்பதால் செலவுகளும் வேலைச்சுமையும் அதிகரிக்கும். 10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாயும் சனியும் சேர்ந்திருப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். உங்கள்மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். 3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாயும் கேதுவும் சேர்ந்திருப்பதால் வி.ஐ.பி-களுக்கு நெருக்கமாவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. 14.1.18 முதல் 7.2.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் வந்து போகும். மற்றவர்களுடன் பக்குவமாகப் பழகுவது நல்லது. ஆண்டு முழுவதும் கேது 6-ல் இருப்பதால், லட்சியத்தை நோக்கி முன்னேறுவீர்கள். புறநகர்ப் பகுதியில் வீடு அல்லது மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். ஆனால், ராகு 12-ல் தொடர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரிகளே, போட்டிகளைச் சமாளித்து முன்னேறுவீர்கள். கூடுதல் லாபம் கிடைக்கும். பணியாளர்களிடம் வியாபார ரகசியங்களைப் பகிரவேண்டாம். சினிமா, சிமென்ட், பெட்ரோ கெமிக்கல், மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும். மாணவ மாணவியருக்கு, படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.  கலைத்துறையினரே, புதிய வாய்ப்புகளால் அதிகம் சம்பாதிப்பீர்கள். 

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, புதிய முயற்சிகளில் வெற்றியைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: தசமி திதி நாள்களில் காஞ்சிபுரத்துக்குச் சென்று, அருள்மிகு காமாக்ஷி அம்மனைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள். மன சஞ்சலங்கள் நீங்கி,  மங்கல வாழ்வு ஸித்திக்கும்.

கன்னி

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

மற்றவர்களுக்காக தியாகம் செய்பவர்களே! உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், தொலைநோக்கு சிந்தனையும், சூழல் அறிந்து செயல்படும் சாமர்த்தியமும் அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் உருவாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.  

புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 4 மற்றும் 7-ம் இடங்களுக்குரிய குருபகவான்  2-ம் வீட்டில் நிற்பதால், இதமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அனுபவபூர்வமான முடிவுகளால் எல்லோரையும் கவருவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு ஷேர் மூலமாகவும் அதிக பணம் வரும். தாய்வழிச் சொத்து கைக்கு வரும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். 14.2.18 முதல் 10.4.18 வரை, குருபகவான் விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் சஞ்சரிக்கிறார்; 3.10.18 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 3-ம் வீட்டில்  சென்று மறைகிறார். இந்தக் காலகட்டத்தில் வேலைகளைப் போராடித்தான் முடிக்கவேண்டி வரும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது.

ஆண்டு முழுவதும் ராசிக்கு 4-ல் சனி தொடர்வதால், தாயின் உடல்நலனில் கவனம் தேவை. புறநகரில் உள்ள மனைகளை கவனமுடன் கண்காணிக்கவும். எவருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். 1.1.18 முதல் 13.1.18 வரை சூரியனுடன் சனி சேர்ந்திருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது.  10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாயுடன் சனி சேர்வதால், தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்கவேண்டி வரும்.

3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாயும் கேதுவும் இணைந்திருப்பதால், மன இறுக்கம் வந்து நீங்கும். மகனின் படிப்பு, உத்தியோகத்துக்காகச் சிலரது சிபாரிசை நாடுவீர்கள். 8.2.18 முதல் 2.3.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் அதிகமாகும்.

புத்தாண்டு முழுவதும் ராகு லாப வீட்டில் தொடர்வதால் சவாலான காரியங் களையும் எளிதாக முடிப்பீர்கள். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசு காரியங்கள் சுமுகமாக முடியும். சிலர் சொந்தத் தொழில் தொடங்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், கேது 5-ல் தொடர்வதால், சில நேரங்களில் மன இறுக்கம் உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது. சிலர் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய நேரிடும்.

வியாபாரிகளே, போட்டிகளைச் சமாளித்து லாபம் சம்பாதிப்பீர்கள். அர்த்தாஷ் டமச் சனி தொடர்வதால் சின்னச் சின்ன நஷ்டங்களும் ஏற்படும். வியாபாரத்துக்காகக் கடனுதவி பெறுவதிலும் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.  உணவு, மருந்து, கட்டுமானப் பொருள்கள், நெல் மண்டி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வெடிக்கும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். புது வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களால் சில நெருக்கடிகள் ஏற்படலாம்.

மாணவ மாணவியரே, உயர்கல்வியில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினரே, கனவுகள் நனவாகும். உங்களின் படைப்புகள் பாராட்டப்படும். மூத்த கலைஞர்களை விமர்சனம் செய்ய வேண்டாம்.  

மொத்தத்தில்  இந்தப் புத்தாண்டு அதிக செலவுகளையும் கடின உழைப்பையும் தருவதாகத் திகழ்ந்தாலும், தன்னம்பிக்கையால் சாதிக்க வைப்பதாக அமையும்.


பரிகாரம்:  திருவாரூர் மாவட்டம், திருக்கண்ண மங்கையில் அருளும் பக்தவத்சலப் பெருமாளை, ஏகாதசி நாளில் துளசி சமர்ப்பித்து வழிபடுங்கள். செல்வ வளம் பெருகும்.

துலாம் 

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர்களே!  ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், மனோபலம் அதிகரிக்கும். அரசாங்கத் தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஷேர் லாபம் தரும். ஆனால், சனியும் சேர்ந்திருப்பதாலும், ராசிக்குள் செவ்வாய் இருப்பதாலும் சிறு சிறு விபத்துகள், மறைமுக எதிர்ப்புகள், சோர்வு வந்து செல்லும்.

3-ம் வீட்டில் சனி வலுவாக இருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாழ்க்கைத் தரம் உயரும். பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்த்தவர் களும் நண்பர்களாவார்கள். கடன்களை அடைக்க வழி பிறக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பிரிந்துசென்ற உறவுகள் மீண்டும் தேடி வரும்.

வருடம் பிறக்கும்போது ராசிக்கு 8-ல் சந்திரன் இருப்பதால், எளிதான விஷயங் களைக்கூடப் போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஒருபுறம் பணம் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாதபடி செலவுகளும் ஏற்படும். பணிச் சுமை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை ஜன்ம குரு தொடர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். சிலர் உங்களுக்குள் பிரிவை உண்டாக்க முயற்சி செய்யக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். 14.2.18 முதல் 10.4.18 வரை, குரு விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் செல்வதாலும், 3.10.18 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்வதாலும் குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். 

1.1.18 முதல் 13.1.18 வரை சூரியனும் சனியும் சேர்வதால் பணவரவு அதிகரிக் கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயம் அடைவீர்கள். 10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாயுடன் சனியும் இணைவதால், மூத்த சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. என்றாலும் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரக்கூடும். பூர்வீகச் சொத்துகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். 3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாயுடன், கேது சேருவதால் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரிய நேரிடலாம். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். 3.3.18 முதல் 28.3.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.

வருடம் முழுவதும் ராகு 10-லும் கேது 4-லும் இருப்பதால், மனதில் வீண் பயம், முடிவெடுப்பதில் தயக்கம் ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். முன்பின் தெரியாதவர்களின் உதவிகளை ஏற்க வேண்டாம்.

வியாபாரிகளே, சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். 3-ல் சனி இருப்பதால் தைரியமாக முதலீடு செய்வீர்கள். பண உதவிகளும் கிடைக்கும். ஸ்டேஷனரி, கல்வி நிலையங்கள், உணவகம் மற்றும் தங்கும் விடுதி, டிராவல் ஏஜென்சி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். ராகு 10-ல் இருப்பதால் அடிக்கடி விடுப்பில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். மாணவ மாணவியரே, படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைக்கும். கலைத்துறையினரே, முடங்கிக்கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்குச் சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். 

மொத்தத்தில் புத்தாண்டின் தொடக்கம் சிறு சிறு பிரச்னைகளைத் தந்தாலும்,  அதன் பிறகு சனிபகவான் உங்களுக்குச் செல்வாக்கு, கௌரவத்தை அதிகம் தந்து சுறுசுறுப்பாக இருக்கச் செய்வார்.

பரிகாரம்: கடலூர் மாவட்டம் திருமாணிக் குழியில் கோயில் கொண்டிருக்கிறார் வாமனபுரீஸ்வரர். சதுர்த்தசி திதி நாளில்  இந்த ஈஸ்வரனை தரிசித்து வாருங்கள்; தடைகள் நீங்கும்.

விருச்சிகம் 

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்காதவர்களே! உங்கள் ராசிக்கு 7-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், புதிய பாதையில் பயணிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். சொத்து வாங்குவீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும்.  பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். பணவரவு கணிசமாக உயரும்.

ஆண்டு பிறக்கும் நேரத்தில் சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12-ல் இருக்கும்போது வருடம் பிறப்பதால் செலவுகள் அதிகரிக்கும். சிலர் வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். வருடம் முடியும்வரை சனி 2-ல் இருப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது.  குடும்பத்தில் அடிக்கடி சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் நட்பு வேண்டாம். வழக்குகளால் நிம்மதி குறையக்கூடும். அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். வருடத் தொடக்கத்திலிருந்து 13.1.18 வரை சூரியனும் சனியும் சேர்ந்திருப்பதால் உடல் உஷ்ணம், ரத்த அழுத்தம், காரியங்களில் தடைகள் வந்து போகும். மூத்த சகோதர வகையில் பிணக்குகள் வரும். வீடு, மனை வாங்குவதற்கு முன்பு சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.  10.3.18 முதல் 2.5.18 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் இணைந்து பலவீனமடைவதால், சகோதர வகையில் சங்கடங்கள், பணப்பற்றாக்குறை, சொத்துச் சிக்கல்கள் வந்து செல்லும்.

3.5.18 முதல் 30.10.18 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்வ தால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். 29.3.18 முதல் 21.4.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் அலைச்சல், செலவினங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும்.

இந்த வருடம் முழுக்க ராகு 9-ம் வீட்டில் நிற்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்யவும். முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். ராசிக்கு 3-ல் கேது நிற்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் ஏற்படும். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிரபலங்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். ஷேர் மூலம் லாபம் வரும். வழக்குகள் சாதகமாகும். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். 3.5.18 முதல் 30.10.18 வரை ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் இணைவதால் தன்னம்பிக்கை குறையும். பொறுமை அவசியம். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடாதீர்கள். சேமிப்புகளில் எச்சரிக்கை தேவைப்படும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை, தனம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குரு பகவான், 12-ல் மறைந்திருப்பதால், கடன்கள் கவலை தரும். வீடு கட்டும் பணி தடைப்பட்டு முடியும். 14.2.18 முதல் 10.4.18 வரை விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் குரு அதிசார வக்கிரத்தில் செல்வதாலும், 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்குள் அமர்வதாலும், வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும். சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு சரியாகும். கணவன் மனைவிக்குள் அனுசரணை தேவை.

 வியாபாரிகளே, பற்று - வரவு சுமாராகவே இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதில் அவசரம் வேண்டாம். பங்குதாரர்கள் முரண்டு பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். கமிஷன், சிமென்ட், மருந்து வகைகளால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளும் ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். சக ஊழியர்களால் சலசலப்புகள் ஏற்படும். அதிக சம்பளத்துடன் புது வேலை வந்தாலும்  பலமுறை யோசித்து ஏற்பது நல்லது. மாணவ மாணவியரே, கணிதம், அறிவியல் பாடங்களில் கவனம் தேவை. கலைத்துறையினரே, உங்களின் படைப்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை உங்களுக்கு உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம்:
திருச்சி மாவட்டம் உறையூரில் வீற்றிருக்கும் வெக்காளி அம்மனை, வெள்ளிக் கிழமையில் சென்று வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு 

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்


உறுதியான சிந்தனை கொண்டவர்களே! உங்கள் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய், லாப வீட்டில் நிற்கும் வேளையில் புத்தாண்டு பிறக்கிறது. வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

ஆண்டின் தொடக்கத்தில் சூரியனும் சுக்கிரனும் ராசிக்குள்ளேயே இருப்பதால், அரசால் அனுகூலம் உண்டாகும். வி.ஐ.பி-களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வருடம் முழுவதும் சனி ராசிக்குள் இருந்து ஜன்மச் சனியாகத் தொடர்வதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வழக்குகளால் கவலை ஏற்படக்கூடும். வருமானம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். முக்கிய காரியங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை உங்கள் ராசிநாதனும் சுகாதிபதியு மான குரு பகவான், லாப வீட்டில் இருப்பதால், சவாலான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன்கள் அடைபடும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும்.கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட திருமணம்  கூடிவரும். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் 14.2.18 முதல் 10.4.18 வரை விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் செல்வதாலும், 3.10.18 முதல், வருடம் முடியும் வரை உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதாலும் இந்தக் காலகட்டத்தில் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.

ஆண்டின் தொடக்கம் முதல் 13.1.18 வரை சூரியனும் சனியும் சேர்ந்திருப்பதால் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னையில் இப்போது தலையிட வேண்டாம்.  10.3.18 முதல் 2.5.18 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய், சனியுடன் சேர்ந்து பலவீனமடைவதால் மனதில் இனம் தெரியாத குழப்பம் வந்து போகும். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். வீடு, மனை வாங்குவதில், விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். 3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாய், கேதுவுடன் இணைவதால் சில நேரங்களில் மனதில் வெறுமையும் விரக்தியும் ஏற்பட்டு நீங்கும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். 22.4.18 முதல் 15.5.17 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். மற்றவர்களின் வீட்டு விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

இந்தப் புத்தாண்டு முழுவதும் ராகு 8-லும் கேது 2-லும் அமர்ந்திருப்பதால், எதையும் ஒருமுறைக்குப் பலமுறை அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. குடும்பத்தாரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுங்கள். சில அவசியச் செலவுகளுக்காகக் கடன் வாங்க நேரிடும்.
வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும் அதேநேரம் போட்டிகளும் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணி அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டாம். சிலருக்குக் கடையை மாற்றவேண்டிய நிலை ஏற்படக்கூடும். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். வி.ஐ.பி-களின் உதவியோடு பெரிய நிறுவனங்களுடனான ஒப்பந்தம் வாய்க்கும். என்டர்பிரைசஸ், மூலிகை, ரியல் எஸ்டேட், கடல்வாழ் உயிரினங்களால் ஆதாயம் அடைவீர்கள்.   உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு தக்க சமயத்தில் கிடைக்காது. மாணவ - மாணவியரே! பாடங்களில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்க்கும் கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்க சிபாரிசும், செலவும்  தேவைப்படும். கலைத்துறையினரே, உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யவும். சம்பள விஷயத்தில் அதிக கண்டிப்பு வேண்டாம்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான சூட்சுமங் களைக் கற்றுத்தருவதாக அமையும்.

பரிகாரம்: திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில் உள்ளது முறப்பநாடு. இங்கு அருள்பாலிக்கும் கயிலாசநாதரையும், வீரபைரவரையும் அஷ்டமி நாளில் சென்று வணங்கி வழிபடுங்கள்; சந்தோஷம் பெருகும்.

மகரம் 

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

தன்மானத்தைப் பெரிதாக நினைப்பவர்களே! சந்திரன் 5-ல் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிகம் உழைப்பீர்கள். புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சமயோசித புத்தியால் பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கட்டட வேலைகளைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

ஆண்டு முழுவதும் ராசிக்குள் கேதுவும் 7-ல் ராகுவும் தொடர்வதால், எதிலும் ஒருவித சலிப்பு ஏற்படக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் அடுக்கடுக்கான செலவுகளும் ஏற்படும். கடன்களை நினைத்து கவலை வந்து போகும். கணவன்  மனைவிக்கு இடையில் வீண் சந்தேகம் மற்றும் ஈகோ பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகம் மற்றும் வியாபாரத்தின் காரணமாக குடும்பத்தை விட்டுத் தற்காலிகமாகப் பிரிந்து செல்ல நேரிடும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 3 மற்றும் 12-க்கு உடைய குருபகவான், 10-ம் வீட்டில் நிற்பதால், வேலைச்சுமை அதிகரித்தபடி இருக்கும். அடிக்கடி டென்ஷன் உண்டாகும். சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வந்து செல்லும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

14.2.18 முதல் 10.4.18 வரை விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் செல்வதாலும், 3.10.18 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதாலும் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிரச்னைகளை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் செல்வாக்கு உயரும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி, அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைத் தந்து முடிப்பீர்கள்.

ஆண்டு முழுவதும் ராசிநாதனும் தனஸ்தானாதிபதியுமான சனிபகவான் 12-ல் விரயச் சனியாகத் தொடர்வதால், வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தன்னம்பிக்கை குறையும். மற்றவர்களது ஆலோசனையை அப்படியே ஏற்காமல், நீங்களும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்து சில முடிவுகள் எடுப்பது நல்லது. சுபச் செலவுகள் அதிகமாகும்.

1.1.18 முதல் 13.1.18 வரை சூரியனும் சனியும் சேர்ந்திருப்பதால், அரசு காரியங் களில் அலட்சியம் வேண்டாம். கடன் பிரச்னைகள் அதிகரிக்கும். 10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால், உங்களுடைய தனித் தன்மையை இழந்துவிடாதீர்கள். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சொத்துக்குரிய ஆவணங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.  3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாய், கேதுவுடன் இணைவதால் எவரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். 16.5.18 முதல் 10.6.18 வரை சுக்கிரன் 6 -ல் மறைவதால், சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும்.

வியாபாரிகளே, அனுபவம் இல்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையை அதிகரிப்பீர்கள். பங்குதாரர்களின் கோபதாபங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம். ஏற்றுமதி - இறக்குமதி, கட்டுமானம், பவர் புராஜெக்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும், மேலதிகாரி குறை கூறவே செய்வார். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்கவேண்டி வரும். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரும். மாணவ மாணவியரே, கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது.கலைத்துறையினரே, படைப்புகளால் புகழ் பெறுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, `தன் கையே தனக்கு உதவி' என்பதை  உங்களுக்கு உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம்:
தூத்துக்குடி மாவட்டம், கழுகு மலையில் அருளும் முருகப்பெருமானை, சஷ்டி நாள்களில் சென்று வழிபடுங்கள்; சோதனைகள் விலகும்.

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

கும்பம்

அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர்களே! உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டுக்குரிய சூரியன், லாப வீட்டில் வலுவாக இருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். வாஸ்துப்படி வீட்டை மாற்றி அழகுபடுத்துவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.  

புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை குருபகவான் 9-ம் வீட்டில் வலுவாக இருப்பதால், முடியாத வேலைகளையும் சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள். தொழிலதிபர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தினமும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 14.2.18 முதல் 10.4.18 வரை, குரு பகவான் விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் செல்கிறார்; 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்கிறார். சிறு சிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். உங்கள்மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சி செய்வார்கள்.

ஆண்டு முழுவதும் சனிபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சிலர், வாஸ்துப்படி வீட்டை மாற்றி அழகுபடுத்துவீர்கள். அடகில் இருந்த நகை மற்றும் வீட்டுப் பத்திரங்களை மீட்பீர்கள். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.  வீடு அல்லது மனை வாங்கவேண்டும் என்ற ஆசை இப்போது நிறைவேறும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

1.1.18 முதல் 13.1.18 வரை சூரியன் சனியுடன் சேர்வதால் இக்காலகட்டத்தில் போராட்டங்களைச் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். 10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால், சின்னச் சின்ன காரியங்களும் தடைப்பட்டு முடிவடையும். செலவுகள் துரத்தும். மற்றவர்களுக்கு ஜாமீன் தரவேண்டாம். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரத்தைச் சரிபார்க்கவும்.

3.5.18 முதல் 30.10.18 வரை ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் இணைவதால், சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமல்போகும். விமர்சனங்கள் செய்வதைத் தவிர்க்கவும். சகோதர வகையில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். 11.6.18 முதல் 4.7.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், வாகனப் பழுது ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.

புத்தாண்டுத் தொடக்கம் முதல் வருடம் முடியும் வரை ராகு 6-ல் தொடர்வதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதி யைத் தந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புதுப் பதவிகள் தேடி வரும். கேது 12-ல் இருப்பதால், கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.

வியாபாரிகளே, இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு வகைகள், ஃபைனான்ஸ், தோல் பொருள்கள், ஆட்டோ மொபைல் வகைகளால் ஆதாயம் உண்டாகும். பங்குதாரர் கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். வெளிநாட்டு நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். மாணவ மாணவியரே, தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும்.  கலைத்துறையினரே, உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, திடீர் யோகங்களையும் வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்:
திருவாரூர் அருகிலுள்ள ராஜமன்னார்குடியில் அருளும் வாசுதேவப் பெருமாளையும், செங்கமலத் தாயாரையும் சனிக்கிழமையில் சென்று வணங்கி வாருங்கள்; வாழ்க்கை செழிக்கும்.

மீனம்

2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

கடந்து வந்த பாதையை மறக்காதவர்களே! உங்கள் ராசிக்கு 3-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய இடத்தை விற்று, புதுச் சொத்து வாங்குவீர்கள். எனினும், ஆண்டு முழுவதும் ராகு 5-ல் இருப்பதால், பிள்ளைகளின் போக்கு கவலை தருவதாக அமையும். தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்தின் பொருட்டு செலவு உண்டு.

கேது உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால், பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்கள் மிகுந்த அன்புடன் நடந்துகொள்வார்கள். செல்வாக்கு கூடும். புத்தாண்டின் தொடக்கத்திலிருந்து 2.10.18 வரை உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவான் 8-ல் இருப்பதால், பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் துரத்தும். 14.2.18 முதல் 10.4.18 வரை, குரு விசாக நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் செல்வதாலும், 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் சென்று அமர்வதாலும், எதிலும் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மோதல் போக்கு மாறும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

செவ்வாய் 8-ல் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சொத்து விஷயங்களை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு சரியாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அளவோடு பழகவும். வருடம் முழுவதும் சனி பகவான் 10-ல் தொடர்வதால், திறமைகள் வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். புதுப் பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஆண்டின் தொடக்கம் முதல் 13.1.18 வரை சூரியனுடன் சனி சேர்ந்திருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

10.3.18 முதல் 2.5.18 வரை சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால், எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும்.   3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் இணைந்திருப்பதால், பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்களைத் தந்து முடிக்க வழி பிறக்கும். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

5.7.18 முதல் 1.8.18 வரை சுக்கிரன் 6-ல் நிற்பதால் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பழைய கடன்களைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.

வியாபாரிகளே, புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சொந்த இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கி அதிக லாபம் ஈட்டுவீர்கள். உணவு, ஷேர், சிமென்ட், செங்கல், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புதுச் சலுகைகளுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மாணவ மாணவியரே, சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பாடங்களை ஆர்வத்துடன் படிப்பீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கலைத்துறையினர்களே, அரசால் கௌரவிக்கப் படுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, தொடக்கத்தில் ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தாலும், வருடத்தின் பிற்பகுதி உங்களை உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்:
திருவண்ணாமலை மாவட்டம், எறும்பூர் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் திரிபுரசுந்தரி உடனுறை பட்சீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபடுங்கள்; வளம் உண்டாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism