Published:Updated:

பூமிக்காரகனான விருச்சிகத்துக்குள் பிரவேசிக்கிறார் குரு... என்னென்ன மாற்றங்கள் நிகழும்? - குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

குருபகவான் அக்டோபர் 4-ம் தேதி துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

பூமிக்காரகனான விருச்சிகத்துக்குள் பிரவேசிக்கிறார் குரு... என்னென்ன மாற்றங்கள் நிகழும்? - குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
பூமிக்காரகனான விருச்சிகத்துக்குள் பிரவேசிக்கிறார் குரு... என்னென்ன மாற்றங்கள் நிகழும்? - குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

குருப்பெயர்ச்சிப் பொதுப் பலன்கள் 4.10.2018 முதல் 28.10.2019 வரையிலான காலகட்டத்துக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள். நவகிரகங்களில் பூரண சுபகிரகம் என்ற சிறப்பினுக்கு உரியவர் குருபகவான். இவரே பிரகஸ்பதி, தேவகுரு என்றெல்லாம் அழைக்கப் படுகிறார். வேத சாஸ்திரங்களுக்கும் கல்வி கேள்விகளுக்கும் காரகத்துவம் வகிக்கும் குருபகவானே புத்திரகாரகனும் ஆவார்.

குரு, தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்துக்கு அதிக வலு சேர்க்கிறார். அதனால்தான், `குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்கிறார்கள். சிறப்பு மிக்க குருபகவான் அக்டோபர் 4-ம் தேதி துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சி நம்முடைய ராசிக்கு என்ன செய்யப்போகிறார் என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்படுவது இயல்புதான். 

`இப்போது இருக்கும் வேலையிலேயே இருக்கலாமா? வேறு வேலைக்குப் போகலாமா? வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்குமா? புத்திரக்காரகனாக குரு பகவான் இருப்பதால் இந்த ஆண்டு பிள்ளைகளோட கல்வி, வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்? வியாபாரத்தை முடக்கிப் போட்டாரே, பணத்தட்டுப்பாடும் ஏற்பட்டதே. இனியாவது நல்லது நடக்குமா?' எனப் பலவிதமான கேள்விகள் ஒவ்வொருவருடைய மனதிலும் ஏற்படுவது இயல்புதான்.  

தற்போது விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18 - ம் தேதி வியாழக்கிழமை (4.10.18) `பிரகஸ்பதி' எனும் குரு பகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார். இந்த விருச்சிக ராசியில் 28-10.19 வரை ஓராண்டுக்கும் சில வாரங்கள் கூடுதலாக அமர்ந்து பலன் தரவிருக்கிறார்.பொதுவாக விருச்சிக ராசி  ஸ்திர ராசி என்பதாலும் செவ்வாய் ஆட்சி பெறும் ராசி என்பதாலும், வலிமை மிக்கதாகத் திகழ்கிறது. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் திடீர் மாற்றங்கள், திடீர்ப் புரட்சிகள் ஏற்படும்.

பூமிக்காரகனான விருச்சிக ராசிக்குள் குரு வருவதால் உலகெங்கும் நிலநடுக்கங்கள், இயற்கைச் சீற்றங்கள், வெள்ளப்பெருக்கு போன்ற பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் எடுப்பது நல்லது.   

விருச்சிகத்தின் அதிபதியான செவ்வாய் ரத்தம், மருத்துவம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையதென்பதால், குரு அவருடைய வீட்டுக்குள் வரும்போது மருத்துவத் துறையில் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழும். ஆராய்ச்சிகள் மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழும். மருத்துவர்களுக்கு வருமானம் அதிகமாகும். மருத்துவத் துறையில் அறுவைச் சிகிச்சை சாதனங்கள் அதிகரிக்கும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களில் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவார்கள். 

காலபுருஷ (மேஷத்திலிருந்து) சக்கரப்படி குரு 8 -ம் வீட்டில் இருப்பதால், ரியல் எஸ்டேட் துறை மேலும் தொய்வடையும். இயற்கைச் சீற்றத்தால் சூறாவளிக்காற்று, புயல், மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள் பாதிக்கப்படலாம். 

ரசாயனப் பொருள்கள், உணவுப் பொருள்கள் பெருமளவில் சேதமடையும்.

ரசாயனத் தொழிற்சாலைகளைச் சீரமைக்க வேண்டி வரும். இன்சூரன்ஸ் தொழில் பெரிய அளவில் வளர்ச்சி பெறும். எல்லோருமே காப்பீட்டுத் திட்டத்தில் சேருவார்கள். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். பெண்கள் உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது.

வெளிநாட்டுப் பணம் பெரிய அளவில் இந்தியாவில் முதலீடு செய்யப்படும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். எந்தத் துறையிலும் காலையில் ஒரு மாதிரியாகவும் மாலையில் ஒரு மாதிரியாகவும் நிலைமை மாறிக்கொண்டே இருக்கும். எதையும் உறுதியாக கணித்துக்கூற முடியாமல் போகும். ஷேர் - மார்க்கெட் மற்றும் தேர்தல் கணிப்புகள் பொய்யாகும். 

உலக நாடுகளே வியக்கும் வகையில் பல விசித்திரமான ஆய்வுகளை இந்தியா மேற்கொள்ளும். ஏவுகணைகளை விண்ணில் ஏவுவார்கள்.அணுஉலைகள், அணுகுண்டுகள், அணுவைப் பிளத்தல் பற்றிய ஆராய்ச்சிகள் நம் நாட்டில் அதிகரிக்கும். மக்களிடையே மூர்க்க குணம் பெருகும். 

கச்சா எண்ணெய் விலை அதிகமாகும். சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை உயரும். ரஷ்யாவின் கை மீண்டும் ஓங்கும். அமெரிக்காவின் வல்லரசு அந்தஸ்து கொஞ்சம் கொஞ்சமாக வலு குன்றும். அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்புகள் மேலும் வலுவடையும். வாஷிங்டன் டி.சி, கலிபோர்னியா, சான்பிரான்சிஸ்கோ, சிரியா ஆகியவை பாதிக்கும். 

 தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும். செவ்வாயின் உக்கிரமான வீட்டில் குரு வந்து அமர்வதால், எல்லோரிடமும் ஒரு சிறு கோபம் இருந்துகொண்டே இருக்கும். பிரபலங்கள், ஆன்மிகவாதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் தங்கள் தங்கள் துறைசார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் வீண்பழியைச் சுமக்க வேண்டி வரும்.