Published:Updated:

ரிஷப ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ரிஷப ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
ரிஷப ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

குருப்பெயர்ச்சிப் பலன்கள். ரிஷபம் குரு பகவான் இதுநாள்வரை ஆறாம் வீட்டில் அமர்ந்து, அளவற்ற துன்பங்களையும், ஆறாத வடுக்களையும் உங்களுக்குக் கொடுத்ததோடு அவமானங்களையும் தந்து வந்தார். பணக்கஷ்டத்தையும் கூடவே கொடுத்தார். 
அஷ்டமாதிபதியான குரு பகவான், ஆறாவது வீட்டில் இருந்தது ஒரு சிலருக்கு வேண்டுமானால், அதாவது அவரவர்களின் லக்னத்தைப் பொறுத்து லாபத்தைத் தந்திருக்கலாம். ஆனால், மொத்தமாகப் பார்க்கும்போது பலருக்கும் கஷ்டத்தையே கொடுத்து வந்தார்.

 இப்போது குரு பகவான் 4.10.18 முதல் 28.10.19 வரை ராசிக்கு 7 -ம் வீட்டில் அமர்ந்து உங்களின் ராசியைப் பார்க்கிறார். 7 - வது வீடு அருமையான வீடு.  உங்களின் ராசியை அவர் நேருக்கு நேராகப் பார்ப்பதால், உங்களுக்கு மனதில் உற்சாகமும் தெம்பும் கூடும். முக அழகு கூடும். எதிலும் உங்கள் கை ஓங்கும். 

உங்களுக்கு ஏற்பட்ட வீண்பழிகள் விலகும். சமூகத்திலும் குடும்பத்திலும் உங்கள் மரியாதை உயரும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்துகொள்வார்கள். 

குழந்தைபாக்கியம் கிடைக்காமல் இது நாள் வரை அவதிப்பட்டு வந்தவர்களுக்கு, புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காதுகுத்து போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 
அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடன்களையெல்லாம் அடைத்து முடிப்பீர்கள். வங்கிக் கடனுதவியும் உடனடியாக உங்களுக்குக் கிடைக்கும். அஷ்டமச் சனி உங்களைப் பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், குரு பகவான் 7 -ம் இடத்துக்கு வருவது, உங்களுக்கு எல்லாவிதத்திலும்  நல்ல பலன்களைத் தரும். 

பழைய பிரச்னைகள் யாவும் தீரும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். புதிதாகத் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் சிலருக்குக் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்புகள் வரும். 
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்களுடைய செல்வாக்கு பலவிதத்திலும் அதிகரிக்கும். பார்த்தும் பார்க்காமலும் போன நண்பர்கள் உங்களைத் தேடிவந்து பேசுவார்கள். 

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதாவது 13.3.19 முதல் 18.5.19 வரை குரு பகவான் அதிசாரத்தில் ராசிக்கு 8 - ம் வீட்டில்  ஆட்சி பெற்று இருக்கப் போகிறார். அந்த காலகட்டத்தில் கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். 
குருப் பெயர்ச்சியின் இந்த ஓர் ஆண்டு காலத்தில், ரிஷப ராசிக்கு யோகமான சனி மற்றும் புதனின் நட்சத்திரங்களில் செல்வதால், எல்லா வகையிலும் உங்களுக்குப் பலவித யோகங்கள்  வந்து சேரும்.  

வியாபாரிகள் இதுவரை தேங்கிக் கிடந்த பொருள்களையெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உங்களின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்காத நல்லவர்கள் பங்குதாரராக வருவார்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள், இனி அச்சமில்லாமல் பணிபுரியலாம்.  உங்களின் முழுத்திறமையும் வெளிப்படக்கூடிய பொற்காலம் என்பதால், மூத்த அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கூடுதல் பொறுப்புகளும் சம்பள உயர்வும் உங்களைத் தேடி வரும்.

மாணவ மாணவிகளுக்கு இதுநாள் வரை  படிப்பில் இருந்த அயர்ச்சியெல்லாம் விலகும். அதிகாலையில் எழுந்து படித்து சாதனைகள் படைப்பார்கள். கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெறுவார்கள். 

பெண்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களைத் தரும். சிலருக்கு வேலை கிடைக்கும். புதிதாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பும் பெண்களுக்கு ஏற்படும்.    

கலைத்துறையினர்  இதுநாள்வரை வாய்ப்புகளை எதிர்பார்த்து இருந்த நிலை போய், தானாக அவை உங்களைத் தேடி வரும்.வருமானமும் உயரும். பிரபல கலைஞர்களின் நட்பு கிடைக்கும்.    

பரிகாரம்
 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு அருகிலுள்ள தேவதானம் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை ஏதேனும் ஒரு சனிக்கிழமை சென்று துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு நல்லபலன்கள் ஏற்படும். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள். 
இந்த குரு மாற்றம் உங்களை குபரேனாக மாற்றும்.