Published:Updated:

மிதுன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

மிதுன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video
மிதுன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

குருப்பெயர்ச்சிப் பலன்கள்! மிதுனம். குரு பகவான்  இதுவரை உங்கள் ராசிக்கு 5 - ம் வீட்டில் அமர்ந்து உங்களின் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றினார். குடும்ப வருமானத்தையும் உயர்த்தி, பிள்ளைகளால் பெருமையையும் ஓரளவு நிம்மதியையும் தந்தார். பிள்ளைகளுடைய திருமணத்தையும் நல்லவிதமாகவே நடத்தி முடிக்க உதவிகரமாக இருந்தார். 


அப்படிப்பட்ட குரு பகவான் 4.10.18 முதல் 28.10.19 வரை  உங்கள் ராசிக்கு 6 - ம் வீட்டில் மறைகிறார். 6 -ம் வீடு மறைவு ஸ்தானம் என்பதால், கணவன் - மனைவி இருவருக்குமிடையே சச்சரவுகள் வர வாய்ப்பு உண்டு. அதனால், ஒருவருக்கொருவர் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். 

வீட்டுக்குப் புதிதாக நண்பர்களையோ, உறவினர்களையோ அழைத்து வரவேண்டாம். மற்றவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழகினால், வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சற்று இடைவெளி விட்டே பழகுவது நல்லது.

13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 7 - ம் வீட்டில் செல்வதால்,  அந்தக் காலக்கட்டத்தில் செல்வாக்கு கூடும். திடீர் பணவரவு உண்டு. வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கும்.  பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள்.

குரு பகவான் 6 - ம் வீட்டில் இருக்கும் இந்த ஓர் ஆண்டும் பிள்ளைகள் விஷயத்தில் அடிக்கடி செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில்  உயர் கல்விக்காகவோ வேலை கிடைத்தோ, பெற்றோரைப் பிரிந்திருக்கும் நிலைமையும் சிலருக்கு ஏற்படலாம்.

குரு 6 -ம் வீட்டில் இருப்பதால், சட்டச் சிக்கல்களை உண்டு பண்ணும் வாய்ப்பு உள்ளது. அதனால், கொடுக்கல் வாங்கல் மற்றும் ஜாமீன் கையெழுத்துப் போடுவதில் கவனமாக இருப்பது நல்லது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரி, சொத்து வரி போன்றவற்றை முறையாகச் செலுத்திவிடுங்கள்.   

வீடு விற்பதாக இருந்தாலும், வீடு வாங்குவதாக இருந்தாலும் கவனமாக இருக்கவும். 6 - ம் வீட்டில் இருக்கும் குரு, சொந்த வீடு, மனையை விற்க வைக்கும். அப்படி விற்கும்போது  முதலில் ஒரு தொகையைக் கொடுத்து எழுதிக் கொண்டுவிட்டு, பிறகு பாக்கித்தொகைக்கு அலையவிடும் வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவேண்டும் புதிதாக வீடு, மனை வாங்குபவர்கள், தாய்ப்பத்திரத்தை வாங்கி, சரிபார்த்த பிறகே வாங்க வேண்டும்.  

வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த ஓராண்டு சுமாராகவே இருக்கும். தொழில் போட்டி அதிகமாகும். புதிய முதலீடுகளில் ஈடுபடவேண்டாம். புதிய பங்குதாரர்களைச் சேர்க்கவேண்டாம். இருந்தாலும் சுக்கிரன், புதனின் ஆதிக்கம் அவ்வப்போது இருப்பதால் திடீர் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகமாகும். என்னதான் உண்மையாக உழைத்தாலும், உயரதிகாரிகளின் பாராட்டைப் பெற முடியாமல் போகும். பதவி உயர்வுக்கான போட்டித்தேர்வுகளை எழுதி வெற்றியும் பெறுவீர்கள்.

மாணவ, மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது. பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது நல்லது. குறிப்பாக கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு இந்தப் பயிற்சி முக்கியமாகத் தேவை.

பெண்களுக்கு, அவர்கள் தொடங்கும் வேலைகளில் அலைச்சல் திரிச்சல் இருக்கும். சிரமம் பார்க்காமல் வேலைகளைத் தள்ளிப் போடாமல் செய்வது நல்லது. உடல்  நலனில் கவனம் தேவை. 

கலைத்துறையினருக்கு முடங்கிக் கிடந்த சீரியல்கள், படங்கள் வெளியாகும். பணப்பற்றாக்குறை இருந்தாலும் வருமானத்துக்கு குறைவிருக்காது.

பரிகாரம்:  நல்ல பலன்களைப் பெற மதுரை மாவட்டம், சோழவந்தான் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஇளங்காளியம்மன் கோயிலுக்கு ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் சென்று குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுங்கள்.
இந்த குரு மாற்றம் அமோகமாக அமையும்.